ஆடி மாதம் மொய் விருந்து மாதம். சின்ன வயதில் மொய் விருந்துக்குச் சென்றது உண்டு. எனினும், அதன் சமகாலப் பொருத்தப்பாடு என்னவென்பதை அங்கு தங்கிப் பார்த்து எழுத வேண்டும் என்று ஓர் எண்ணம் உண்டு. ஒருவித கேலி தொனிக்க வெளிவரும் இது தொடர்பிலான ஊடகச் செய்திகள், இந்த எண்ணத்தைச் சமீபகாலமாகவே அதிகரித்துவந்தன. முன்திட்டம் ஏதும் இல்லாமல் ஆலங்குடி புறப்பட்டேன்.
புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை இடையேயுள்ள சின்ன ஊர் ஆலங்குடி. வண்டி புதுக்கோட்டையைத் தாண்டியதுமே சாலையோரங்களில் மொய் விருந்துப் பதாகைகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. எல்லாம் பத்துப் பதினைந்து அடி நீளப் பதாகைகள். கருணாநிதி கும்பிடு போட்டு அழைக்கிறார். ஜெயலலிதா இரு விரல் காட்டிச் சிரிக்கிறார். ராகுல், பிரியங்கா சூழ சோனியா குடும்பத்தோடு வரவேற்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா கூடவே மொய் விருந்து நடத்துபவர்களும் சிரிக்கிறார்கள். திருவிழாவுக்குக் கட்டுவதுபோல வழிநெடுக மின் கம்பங்களில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு ராமராஜன் பாடிக்கொண்டிருந்தார்.
ஆலங்குடியைச் சென்றடைந்தபோது காலை 10 மணி இருக்கலாம். அங்கிருந்து பயணத்தில் நண்பர் சுரேஷ் சேர்ந்துகொண்டார். அந்த நேரத்திலேயே கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளையும் சொள்ளையுமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். மொய் விருந்துச் சடங்கில் விருந்து என்பது ஆட்டுக்கறிச் சாப்பாட்டைக் குறிப்பது. “விருந்துன்னா முன்னாடியெல்லாம் மதியம்தானே நடக்கும்?’’ என்றேன்.
‘‘காலைல 9 மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுருவாக. ஒரே நாள்ல நாலஞ்சு விருந்துக நடக்குது. காலையிலயே ஆரம்பிச்சாதானே, நாலு எடத்துக்கும் போவணும்னு நெனக்கிறவகளால போய்ச் சேர முடியும்?’’ என்றார். ‘‘ஒரு நாளைக்கு நாலு விருந்தா? அப்படின்னா, ஒரு வீட்டுக்கு இந்த மாசத்துல எத்தனை பத்திரிகை வரும்?’’ என்றேன். அவர் வீட்டுக் கூரையில் செருகியிருந்த அழைப்பிதழ்களை உருவிப் போட்டார். மலைப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட இருநூறு, முந்நூறு அழைப்பிதழ்கள்!
‘‘ஊரைச் சுத்தி இருக்க பத்து ஊர்லேருந்தும் பத்திரிகை வரும். விருந்து வைக்கிறவுகளுக்குத் தெரிஞ்சவக, தெரியாதவக பேதம் கெடையாது. பள்ளிக்கூடப் பசங்ககிட்ட பத்திரிகையக் கொடுத்து நூறு, இருநூறு காசைக் கொடுத்துட்டா பேப்பர் போடுற மாதிரி எல்லா வீட்டுலயும் அவக போட்டுட்டுப் போயிடுவாக. நீங்க விருப்பப்படுற விருந்துக்குப் போய் மொய் வைக்கலாம். இப்படி வருஷத்துக்கு நூறு பேருக்கு நீங்க மொய் வெச்சீகன்னா, அஞ்சு வருஷம் கழிச்சு, நீங்க இப்படி ஒரு விருந்து வைக்கும்போது, அதுவரைக்கும் நீங்க மொய் வெச்ச ஐந்நூறு பேரும் உங்களுக்கு மொய் வைப்பாக. கூடவே, புதுசா உங்களை விரும்பி வர்றவங்களும் மொய் வைப்பாக. பத்திரிகை வர்ற விருந்துக்கெல்லாம் போகணும்னு இல்ல. ஆனா, உங்களுக்கு மொய் செஞ்சவகளுக்கு அவசியம் போய்த் திரும்பச் செய்யணும். இங்கெ நீங்க புரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான அம்சம், பொதுவா நாடு முழுக்க வீட்டு விசேஷங்களுக்குப் போய் சாப்பிட்டுட்டு நூறு, இருநூறுன்னு மொய் எழுதிட்டு வர்ற மாதிரி இல்ல இந்த மொய் விருந்து. இங்கே விசேஷமே மொய்க்குத்தான். மொய்ங்கிறது ஒரு வகைக் கடன், ஒரு வகை கொடுக்கல் வாங்கல்!’’ என்றார்.
ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். பொதுவாக, எல்லோர் வீட்டிலும் மொய் விருந்து நோட்டு என்றே வருஷ வாரியாக நோட்டுகள் இருந்தன. நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் மொய் செய்திருந்தால், நான் திரும்பச் செய்யும்போது குறைந்தது ஆயிரத்து நூறு செய்ய வேண்டுமாம். வருஷக் கணக்கில் உங்கள் பணத்தை நான் வைத்திருப்பதற்கும், அதைப் பயன்படுத்திச் சம்பாதிப்பதற்கும் உங்களுக்குக் கொடுக்கும் சிறிய லாபப் பங்காக இதைக் கருதலாம். இந்தப் பழைய மொய் ஆயிரத்து நூறு தவிர, புதுக் கணக்கு என்ற பெயரில் ஐந்நூறோ ஆயிரமோ செய்கிறார்கள். பொருளாதார உறவு தொடர வேண்டும் என்று இதற்கு அர்த்தமாம். இனி மொய் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்கள் முன்னதாக வைத்த மொய்ப் பணத்தை மட்டும் திருப்பிச் செய்தால் போதுமானது.
ஐந்தாறு இடங்களில் மறுநாள் மொய் விருந்துகள் நடந்தன. நாங்கள் வடகாட்டில் நடந்த ஒரு விருந்திலிருந்து தொடங்கினோம். பொதுவாக, இந்த விருந்துகளைக் கிராமச் சமூகக் கூடத்திலோ, கோயில் இடத்திலோ நடத்துகிறார்கள். இதற்கு வாடகை உண்டு. அது கிராமப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும். நாங்கள் பங்கேற்ற விருந்து, முத்துமாரியம்மன் கோயிலை ஒட்டியுள்ள இடத்தில் நடந்தது. திருவிழாபோலக் கூட்டம். குளிர்பான வண்டிக்காரர்கள், ஐஸ்கிரீம் வண்டிக்காரர்கள் எல்லாம் நின்றார்கள்.
அந்த விருந்தை 10 பேர் சேர்ந்து நடத்தினார்கள். அதாவது, 10 பேருக்கும் சேர்த்து ஒரே அழைப்பிதழ்; ஒரே பந்தல்; ஒரே இடத்தில் சாப்பாடு. வாசலில் 10 பேரும் வரிசையாக நின்று வரவேற்கிறார்கள். உள்ளே சாப்பிடப் போகச் சொல்கிறார்கள். பந்தலுக்குள் ஒருபுறம் விருந்து நடக்க, மறுபுறம் 10 பேருக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் மேஜைகளில் மொய் வசூல் ஜரூராக நடக்கிறது. நீங்கள் யாருக்காகச் சென்றீர்களோ அவருக்கான மேஜையில் உங்கள் மொய்யைச் செலுத்திவிட்டு வர வேண்டியதுதான்.
தனித் தனியே விருந்து வைத்தால் செலவு அதிகம் என்பதால், பெரும்பாலும் இப்படிக் கூட்டு விருந்துகளாகவே நடத்திவிடுவதாகத் தெரிவித்தார்கள். கறி விருந்து என்றாலும், பெரிய தடபுடல் இல்லை. இலை நிறையச் சோறு போடுகிறார்கள். முதலில் கறிக்குழம்பு. அளவாக அதில் ஒரு கரண்டி மட்டும் கறி. அதிகபட்சம் 25-50 கிராம் இருக்கலாம். அடுத்து, ரசம், மோர். தொட்டுக்கை, அப்பளம், ஊறுகாய். சைவர்களுக்குத் தனியாக விருந்து நடக்கிறது. அங்கே கறிக் குழம்புக்குப் பதில் சாம்பார். ஒரு கரண்டி கறிக்குப் பதில் ஒரு கரண்டிக் கூட்டு!
இந்த விருந்தை நடத்தித் தர பொதுவில் ஒரு பொறுப்பாளரைப் போடுகிறார்கள். இதேபோல, ஒவ்வொருவர் சார்பிலும் மொய் எழுத மூன்று பேரைப் போடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் சம்பளம் உண்டு. உதாரணமாக, அன்றைய விருந்தில் மொய் எழுதியவர்களுக்குத் தலா ரூ.800 கொடுக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பின் பொறுப்பாளர் கணக்கை ஒப்படைக்கிறார். செலவுத் தொகையை 10 பேரும் பகிர்ந்துகொள்கிறார்கள். 100 ரூபாய் செலவு என்றால், 10 பேரும் ஆளுக்கு 10 ரூபாய் தர வேண்டும் என்றில்லாமல், அவரவருக்கு விழுந்த மொய்த் தொகை விகிதாச்சாரப்படி இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதிகம் மொய் பெற்றவர் கூடுதலாகவும் குறைவாக மொய் பெற்றவர் குறைவாகவும் பங்கு கொடுக்கிறார்கள்.
அன்றைய விருந்தில் மொத்தம் 25 ஆடுகள் அடிக்கப்பட்டதாகவும் 5,000 இலைகள் விழுந்ததாகவும் சொன்னார், விருந்துப் பொறுப்பாளர் விஜயராஜ். அன்றைய தினம் ரூ.1.5 கோடி வசூலானதாகவும் ரூ.4.25 லட்சம் செலவானதாகவும் சொன்னார். இதில் கோயிலுக்கான கட்டணம் ரூ.16 ஆயிரம். அடுத்தடுத்து, நாங்கள் விருந்துக்குச் சென்ற அத்தனை இடங்களிலும் ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. அழைப்பிதழ், மொய்க்கு அப்பாற்பட்டு, எவர் வேண்டுமாலும் இந்த விருந்துகளில் சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். பக்கத்தில் பள்ளிக்கூடங்கள் இருந்த இடங்களில் பிள்ளைகளை அழைத்துச் சாப்பிடவைத்து அனுப்பினார்கள்.
ஊர் மக்களிடம் பேசும்போது, மொய் விருந்து வைத்துதான் அவர் வியாபாரத்தில் இப்படி உயர்ந்தார், இவர் இவ்வளவு பெரிய தோட்டம் வாங்கினார் என்று நிறைய வெற்றிக் கதைகள் சொன்னார்கள். துயரக் கதைகளுக்கும் பஞ்சம் இல்லை.
கீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கே.செல்வம். ‘’நமக்குச் சொந்த நிலம்கூடக் கெடையாதுங்க. நமக்கெல்லாம் எந்த பேங்கு கடன் கொடுக்கும்? கடுமையா உழைப்பேன். நாணயமா இருப்பேன். ஊருல நம்மளப் பத்தித் தெரியும். மொய் விருந்து வெச்சப்ப 10 லட்ச ரூபாய் வந்துச்சு. இன்னைக்கு ஒரு சொந்த வீட்டுல உட்கார்ந்திருக்கேன்; பொண்ணை நல்ல எடத்துல கல்யாணம் முடிச்சுருக்கேன்னா அதுக்கு மொய் விருந்து முக்கியமான காரணம்’’ என்றார்.
பனசக்காட்டைச் சேர்ந்த விவசாயி அ.ஜெயபாலன் இது வரை மூன்று முறை மொய் விருந்து வைத்திருப்பதாகச் சொன்னார். ‘‘வானம் பாத்த பூமி இது. எங்களுக்கு நெலம் இருந்துச்சு. தண்ணி வசதி இல்ல. மொய் விருந்து வெச்சு கிடைச்ச பணத்துல நாலு லட்ச ரூபாய் செலவழிச்சு மோட்டார் போட்டோம். விவசாயத்துல வந்த பணத்தை வெச்சு, முதல் விருந்துல பட்ட கடனை அடைச்சோம். அடுத்தடுத்து விருந்து நடத்தினப்போ கெடைச்ச பணத்துல ஆட்டோ வாங்கி விட்டிருக்கோம். இப்ப நல்லா இருக்கோம்’’ என்கிறார்.
குளமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கே.பிரபாகரனின் கதை மாறுபட்டது. ‘‘மொய் விருந்து வெச்சப்போ அஞ்சு லட்ச ரூவா மொய் வந்துச்சு. ஏற்கெனவே எனக்கு இருந்த ஒரு லட்சம் கடனை அதுல அடைச்சேன். அப்புறம் வீடு கட்டினேன். போதுமான வருமானம் இல்லாத சூழல்ல, இப்ப நான் வெச்ச மொய் விருந்தே எனக்கு எதிரியாயிடுச்சு. வாங்கின மொய்யைத் திருப்பி வைக்க முடியல. பலர் வீடு தேடி வந்து பணம் கேட்க ஆரம்பிச்சாங்க. ஊருல ஏச ஆரம்பிச்சாக. அவமானத்தைத் தவிர்க்க வழி தெரியல. நிலத்தை வித்து மொய் செஞ்சேன். இன்னும் ரெண்டு லட்சம் கடன் இருக்கு. தொழில்ல முதலீடு பண்ணத் திராணி இருந்தா மொய் விருந்து வைக்கணும். அப்படி இல்லன்னா, எல்லாருக்கும் சிறுகச் சிறுக மொய் செஞ்சிட்டு, ஒரே ஒரு விருந்து நடத்தி அத வசூலிச்சிக்கிட்டு அதோட விட்டுறணும். நானும் விருந்து வைக்கிறேன்னு சொல்லி வெச்சி, பணத்தை வசூலிச்சிட்டு வீடு வாங்குறேன், காரு வாங்குறேன்னு செலவழிச்சோம், நாசமாப்போயிடுவோம்’’ என்றார் பிரபாகரன்.
மொய்ப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களை அவமானப்படுத்தி, விலக்கிவைக்கும் கொடுமைகள் தொடர்பாகக் கேட்டபோது, பூசி மெழுகினார்கள். “காலம் மாறுறதுக்கு ஏத்த மாதிரி சூழலும் மாறுதுங்க. இப்ப அந்த மாதிரி கொடுமையெல்லாம் குறைஞ்சுட்டுவருது. ஆனா, கடனைத் திருப்பித் தராட்டி அரசாங்கத்து பேங்குகாரனே ஆளை விட்டு ஆளைத் தூக்கச் சொல்ற காலத்துல, கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னு பேசுறது பெரிய குத்தமான்னு யோசிங்க. இது எப்படியெல்லாம் எத்தனை பேருக்கு உதவுதுன்னு பாருங்க. எந்த பேங்கும் கடன் கொடுக்க முன்வராத மக்களுக்கு இது உதவுது. விவசாயமும் வியாபாரமும் படுத்துக்குற ஆடி மாசத்துல, உள்ளூர்ல பணப் பரிவர்த்தனைக்கும் வியாபாரத்துக்கும் உதவுது. இந்த மாசத்துல இந்தச் சுத்துப்பட்டு கிராமத்துல மட்டும் ரெண்டாயிரம், மூவாயிரம் ஆட்டை அடிக்கிறோம். விவசாயிக்குக் காசு போவுது. மளிகைக் கடைக்காருக்குக் காசு போவுது. காய்கறிக் கடைக்காருக்குக் காசு போவுது. சமையல்காருக்குக் காசு போவுது. அச்சகத்துக்குக் காசு போவுது. கோயிலுக்குக் காசு போவுது’’ என்று அடுக்கினார்கள்.
இந்தியக் கிராமங்களின் எல்லா அம்சங்களிலும் பிணைந்திருக்கும் சாதி, இந்த மொய் விருந்தில் எப்படியான செல்வாக்கு செலுத்துகிறது? அடிப்படையில், இந்த மொய் விருந்தின் மையம் சாதியிலிருந்தே தொடங்குகிறது. அவரவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே விருந்தில் பங்கேற்பதிலும் மொய் வைப்பதிலும் பெரும்பான்மை வகிக்கிறார்கள். எனினும், பிற சாதி சார்ந்த விலக்குகள் ஏதும் இல்லை.
சமீப காலமாக சாதிக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் சேர்ந்து விருந்து நடத்தும் வழக்கம் உருவாகிவருவதாகச் சொன்னார் சுரேஷ். குறைகள், விமர்சனங்களைத் தாண்டி, மொய் விருந்துகள் உள்ளூர் பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதையும் எல்லாச் சமூகங்களுமே இதை அவரவர் வசதிக்கேற்ப புதிய விதிகளோடு வடிவமைத்துக்கொள்வதையும் உணர முடிந்தது.
முன்பு அதிகம் மொய் விருந்துகளுக்குப் பேர் போன பேராவூரணி பகுதியில் இப்போது விருந்துகள் குறைந்துவருவதையும் முன்பு வழக்கத்தில் குறைவாக இருந்த ஆலங்குடி பகுதியில் அதிகரித்துவருவதையும் சுட்டிக்காட்டினார் சுரேஷ். அடுத்த சில நாட்களில் கரூர், செட்டிப்பாளையம் செல்ல வேண்டியிருந்தது. அங்கே பொருளியல் அறிஞர் எஸ்.நீலகண்டனைச் சந்தித்தேன். அவரிடம் இதுகுறித்துப் பேசும்போது, கொங்குப் பகுதியில் முன்பு அதிகம் மொய் விருந்துகள் நடந்துவந்ததையும் இப்போது குறைந்துவிட்டதையும் அவர் சொன்னார். ‘‘ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி தேவைப்படும் சூழலில், உள்ளூர் சமூகங்கள் இப்படியான நிதித் திரட்டலில் இறங்குகின்றன. ஒரு அளவிலான வளர்ச்சியை எட்டியதும் அதை நிறுத்திவிடுகின்றன. எப்படியும் இதுபோன்ற விஷயங்களைத் தேவைகளே தீர்மானிக்கின்றன’’ என்றார் நீலகண்டன்.
ஊர் திரும்பும்போது இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்த நிலையில், நம்முடைய விசேஷ வீடுகளில் இப்போது மாறிவரும் சூழல் ஞாபகத்துக்கு வந்தது.
சென்னையில் இப்போதெல்லாம் பெரும்பாலான திருமணங்களில் மொய் வாங்குவதில்லை. பத்தாண்டுகளுக்கு முன் திருச்சியில் இருந்த காலத்தில் நிறைய அழைப்பிதழ்களில் ‘மொய் தவிர்க்கவும்’ எனும் குறிப்பு இடம்பெற்றிருக்கும். இப்போது அதுவேகூட காலாவதி ஆகிவிட்டது. புதிய தலைமுறையினர் மொய்யை ஒரு இழிவாகக் கருதுவதைப் பார்க்க முடிகிறது. விசேஷங்களில் உறையில் வைத்து பணத்தைக் கொடுக்கும்போதும்கூட சங்கடத்தில் அவர்கள் நெளிகின்றனர். அதேசமயம், அன்பளிப்புப் பொருட்கள் அவர்களுக்கு உவகை அளிக்கின்றன. எல்லாம் மேற்கத்திய, காலனிய, நுகர்வியத் தாக்கத்தின் வெளிப்பாடு.
ஒரு திருமணத்தின்போது, பால் காய்ச்சும் பாத்திரத்தில் தொடங்கி, படுக்கும் பாய் வரை எல்லாப் பொருட்களையும் சீர் பொருட்களாக மணமக்களுக்கு வழங்கும் வழக்கத்தைக் கொண்ட நம் சமூகத்தில், ஒரு புது மணத் தம்பதிக்குப் பெரும்பாலும் இந்த அன்பளிப்புப் பொருட்கள் தருவதெல்லாம் சுமையைத் தவிர, வேறு இல்லை. சரியாகச் சொல்வதானால், குப்பை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் திருமணங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது சுவர்க் கடிகாரங்கள் மட்டும் ஐந்துக்குக் குறையாமல் அன்பளிப்பாக வந்துசேர்வதைக் கவனித்திருக்கிறேன்.
மொய் விருந்துகளில் விழும் மொய்யும் நம்முடைய விசேஷ வீடுகளில் விழும் மொய்யும் அடிப்படையில் ஒன்று இல்லை. அங்கே விழும் மொய் கடன். இங்கே விழும் மொய் அன்பளிப்பு. இந்தியாவில் வருசத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் திருமணங்களுக்காக செலவிடப் படுகிறது. இதில், பத்தில் ஒரு பங்குக்கு இணையான தொகை ‘அன்பளிப்பு’க்காகச் செலவிடப்படுகிறது. அன்பளிப்பைப் பணமாகவே கொடுப்பதில் / ஏற்பதில் என்ன இழிவு இருக்கிறது?
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
28 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago