தேர்தல் செலவை அரசே ஏற்கலாமா.. ஒரு விவாதம்!

By அனுராதா ராமன்

அரசே ஏற்க வேண்டும்!

யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தேசியத் தலைவர்.

ஒரு நல்ல அரசியல் கட்சியோ, நல்ல வேட்பாளரோ கையில் பணமில்லை என்பதற்காகத் தேர்தல் களத்திலிருந்து தூக்கி எறியப்படும் நிலை கூடாது. வெளிப்படையாகவும் நெகிழ்வுத்தன்மையுடனும் புதிய வழியைக் கண்டறிந்து தேர்தல் செலவுக்கு அரசு பணம் கொடுக்க வேண்டும்.

இதற்கு நான் கூறும் எளிய யோசனை இது: ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர் பெறும் ஒவ்வொரு வாக்குக்கும் தலா ரூ.100 வீதம் அவருடைய வங்கிக் கணக்கில் அரசால் பணம் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பணத்தை வேட்பாளருக்கும் கட்சிக்கும் இடையில் சமமாகப் பகிர்ந்தும் வங்கிக் கணக்கில் சேர்க்கலாம். பதிவான வாக்குகளில் 1%-க்கும் அதிகமாக வாங்கிய வேட்பாளருக்கு மட்டுமே இப்படி அளிக்க வேண்டும். இதனால் பணம் வாங்குவதற்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடும் பொழுதுபோக்கு வேட்பாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.

அதேபோல அரசு பணம் தருவதற்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கலாம். வேட்பாளர் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்யலாம் என்று அரசு நிர்ணயிக்கிறதோ அதைப் போல இரு மடங்குத் தொகையை அதிகபட்ச வரம்பாகக் கொள்ளலாம். இதனால் ஒரு வேட்பாளரோ அவருடைய கட்சியோ தேவைக்கு அதிகமாகப் பணம் பெறுவதைத் தடுத்துவிட முடியும். வேட்பாளரின் அனுமதிக்கத்தக்க செலவில் ஏதேனும் ஒன்றை இந்தத் தொகைக்கு ஈடாகக்கூடக் கருதலாம். அதே போல கட்சிக்கும், அடுத்த தேர்தல் வரை செலவை ஈடுகட்ட வாய்ப்பு தரலாம்.

இப்படிச் செய்வதால் அரசுக்கு அதிக செலவு ஏற்பட்டுவிடுமா? அரசுக்கு ரூ.5,000 கோடி செலவாகும். இது மத்திய அரசின் ஐந்தாண்டு மொத்த வரவு-செலவுக் கணக்கில் வெறும் 0.05% தான். கறுப்புப் பணம் என்னவாகும், மறைந்துவிடுமா? மறையாது, ஆனால் அதையே நம்பியிருக்க வேண்டிய நிலை வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இருக்காது.. குறையும்.

ஏற்கெனவே பணத்தில் திளைக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதற்காக இப்படி அரசுப் பணத்தைக் கொடுக்க வேண்டும்? வெள்ளைப் பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது எனும்போது, முறைகேடாகப் பணம் ஈட்டுகிறவர்களிடம் ஏன் நன்கொடை வாங்குகிறீர்கள் என்று கட்சித் தொண்டர்களால் தலைமையைப் பார்த்துக் கேட்க முடியும். கட்சிக்குள் உள்கட்சி ஜனநாயகம் வலுப்படும். பணமூட்டைகளின் செல்வாக்கு குறையும். இப்படிச் செய்யலாமா? ஏன் கூடாது? விஜய் மல்லையா போன்றவர்கள் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் பாதிதான் இந்தத் தொகை. அரசு கொஞ்சம் பணம் செலவழித்தால் ஜனநாயகத்தின் தரத்தை உயர்த்த இது பேருதவி புரியும்.

தேர்தல் செலவா.. கட்சி செலவா?

மணீஷ் திவாரி, காங்கிரஸ் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர்.

தேர்தல்களுக்கு அரசு பணம் செலவழிக்க வேண்டும் என்ற அரூபமான விருப்பம், உண்மையில் பலன் தராது. ஆனால், அது பலருடைய மனங்களிலிருந்து அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்துவிடாது. இந்திய அரசியல் கட்சிகள், மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உள்ளதைப் போல உயர் பதவிகளுக்குச் சிலர் போட்டி யிடுவதற்கான மேடையாக மட்டுமே இங்கு செயல்படுவதில்லை. தொடர்ந்து ஊட்டச்சத்து தேவைப்படும் நிரந்தர சேனையாகவே இங்கு கட்சிகள் செயல்படுகின்றன.

சமூகத்தில் தங்களுக்கென்று தனி அடையாளம் இல்லாதவர்களும், சமூக அந்தஸ்து இல்லாதவர்களும்கூட ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து கட்சி நிர்வாகியாகப் பதவிபெற்று, அதைச் சமூக அந்தஸ்தாக மாற்றிக்கொள்வது இங்கே நடைபெறுகிறது. கட்சிகளில் முழு நேர நிர்வாகிகள், உறுப்பினர்கள், பகுதி நேரத்தினர் என்று பலதரப்பட்டவர்கள் உள்ளனர். எனவே, இந்தியாவில் அரசியல் நன்கொடைக்கு இருவிதமான பலன்கள் இருக்கின்றன.

பஞ்சாயத்துத் தேர்தலிலிருந்து நாடாளுமன்றம் வரையிலான தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளவும், கட்சிகளின் தேர்தல் அல்லாத பிற நடவடிக்கைகளுக்கான செலவுகளைச் சந்திக்கவும் நன்கொடை தேவைப்படுகிறது.

வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி அளிப்பவர்கள் பலதரப்பட்டவர்கள். நண்பர்கள், ஒரு சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், தொண்டு நிறுவனங்கள், பெரிய தொழில்நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு அரசுகள், தங்களைக் கைது செய்யாமல் காப்பாற்றிக்கொள்ள விரும்பும் குற்றச் செயல் கும்பல்கள் என்று பலரும் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்கொடை தருகின்றனர். அரசியல் கட்சிகளுக்குப் பணம் தருவதில் நேர்மை வேண்டும், வெளிப்படைத்தன்மை வேண்டும், பொறுப்பேற்பு இருக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்துகிறவர்கள் மேலே கூறப்பட்ட யதார்த்தமான உண்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள சட்ட ஏற்பாட்டின்படி ஒரு வேட்பாளர் தன்னுடைய தேர்தல் செலவுக் கணக்கை மட்டும்தான் காட்ட வேண்டும், அதுவும் தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் வரம்புக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இந்த உச்ச வரம்பை வேட்பாளர்கள் எப்படியோ மீறுகின்றனர். எவ்வளவு நிதி திரட்டினர், அது எங்கிருந்து வந்தது என்று தெரிவிக்க வேண்டிய கடமை வேட்பாளர்களுக்கு இல்லை. இது மாற்றப்பட வேண்டும். செலவுக் கணக்குடன் இனி நன்கொடை பற்றிய தகவல்களும் தொகை எவ்வளவு, அளித்தவருடைய பான் எண் என்ன, ஆதார் எண் என்ன என்ற விவரங்களுடன் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று கொண்டுவரலாம்.

அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் நன்கொடையில் 69% எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என்றே தெரியாமல் இருப்பதைச் சமீபத்திய செய்தி தெரிவித்தது. 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29 (சி) பிரிவு அரசியல் கட்சிகளின் நிதி திரட்டல் திரைமறைவாக நடத்தப்பட விதிவிலக்கு அளிக்கிறது. இந்த விதிவிலக்கையே உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ய வேண்டும். இந்த சட்ட ஓட்டையை நாடாளுமன்றம் நிச்சயம் அடைக்காது. இது இப்படியே தொடர வேண்டும் என்றுதான் ஆதிக்கச் சக்திகள் விரும்பும். ஒவ்வொரு நன்கொடையாளரும் அவர் எவ்வளவு சிறிய தொகையை அளித்தாலும் பெயர் பதிவிடப்பட வேண்டும். அந்த விவரங்களை வருமான வரித் துறையும் பிற முகமைகளும் விசாரித்துச் சரிபார்க்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டால்தான் இதில் உள்ள ஊழல்களைக் களைய முடியும்.

அரசுக்கு இது பெரிய செலவல்ல!

எஸ்.ஒய். குரேஷி, முன்னாள் தேர்தல் ஆணையர்.

தேர்தலில் ஊழல் நடக்காமல் தடுக்க அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் செலவுக்குப் பணம் கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தலுக்குப் பணம் கொடுப்பதற்கும் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. தேர்தலுக்கு அல்ல - அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்.

தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்று கணக்கு வைத்துக் கொள்வது கடினமான வேலை. எனவேதான் தேர்தல் செலவுக்குப் பணம் தருவதை எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறேன். இங்கு பிரச்சினை கறுப்புப் பணம்தான், வெள்ளைப் பணம் அல்ல. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும், ஊடகங்களில் தங்களுக்குச் சாதகமான செய்திகளைப் பிரசுரிக்க வைக்கவும், வேறு வகையிலும் எப்படி எல்லை மீறுகிறார்கள் என்று இடைவிடாமல் கண்காணித்துவிட முடியாது. ஆனால், இந்த முயற்சிகளை ஓரளவுக்கு வெற்றிகரமாக மேற்கொண்டுவருகிறோம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளர் அதிகபட்சம் ரூ.28 லட்சம் செலவிட வேண்டும் என்று உச்ச வரம்பு வைத்திருக்கிறோம். இது எப்படி மீறப்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். பணம் இல்லாமல் அரசியல் இல்லை என்பதும் தெரியும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் தரப்படுவதைக் கண்காணிப்பது, தேர்தல் செலவைக் கண்காணிப்பதைவிட எளிது. தேர்தல் செலவுக்கு அரசு பணம் கொடுக்க வேண்டும் என்பதைவிட, தேர்தல் நடந்து முடிந்த பிறகு, அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்து தேர்தலில் செலவு செய்ததற்குப் பணம் கொடுக்கலாம். ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.100 என்று கணக்கிடலாம். பெற்ற வாக்குகள் கணக்கை மாற்ற முடியாது என்பதால், கட்சிக்குத் தர வேண்டிய பணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுவிடலாம்.

கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் மொத்தம் 55 கோடிப் பேர் வாக்களித்தனர். ஒரு வாக்குக்கு ரூ.100 என்று கணக்கிட்டால் மொத்தம் ரூ.5,500 கோடி வருகிறது. இது போதுமானதா என்று கேட்டால், ஆம் என்பேன். கடந்த 5 ஆண்டுகளில் எல்லா அரசியல் கட்சிகளும் திரட்டிய நன்கொடைத் தொகையும் இதற்கு ஈடானது.

கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் இந்தத் தொகையை காசோலைகள் மூலம் அவற்றின் கணக்குகளில் சேர்த்துவிடலாம். இதை அமல்படுத்த முடிவு செய்தால், தனி நன்கொடைகளை நாம் தடை செய்துவிடலாம். எல்லா அரசியல் கட்சிகளின் வரவு-செலவையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் மூலம் ஆய்வு செய்யலாம்.அரசியல் கட்சிகளுக்கு மக்கள் ஏன் பணம் தர வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். அரசின் நிர்வாகத்தில் நேர்மையும் வெளி்ப்படைத் தன்மையும் ஏற்பட இது நாம் கொடுத்தாக வேண்டிய சிறிய விலை. தேர்தலில் புரளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை சாதாரணம்.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேசக் கழகம்’ என்ற அமைப்பு, மொத்தம் 180 நாடுகளில் ‘அரசியல் நிதி கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வை’ மேற்கொண்டு 2012-ல் அறிக்கை வெளியிட்டது. அதில் 71 நாடுகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் அவற்றுக்கு அரசே நிதி தருவது தெரியவருகிறது. ஐரோப்பாவில் 86% நாடுகளும் ஆப்பிரிக்காவில் 71% நாடுகளும் ஆசியாவில் 58% நாடுகளும் இதை அமல் செய்கின்றன. இந்த நாடுகளில் இது நன்றாக அமலாகிறது என்றால், இந்தியாவில் ஏன் இதை அமல்படுத்தக் கூடாது?

அனுராதா ராமன்

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில் சுருக்கமாக: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்