குடிகாரர்களின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோவைத் தமிழகம் முந்திவிட்டது.
வெள்ளிக்கிழமை காலை. அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம். அருகமை அம்மன் கோயில் காற்றலைகளில் கானமழை பொழிந்துகொண்டிருந்தது. மாணவர்களும் மாதச் சம்பளக்காரர்களும் சில மாடுகளுமாகப் பேருந்துக்காகக் காத்திருந்தோம். எல்.ஆர் ஈஸ்வரியையும் மீறிய வலுத்த பெண் குரல் ஒன்று பச்சை, மஞ்சள், ஊதா நிற வார்த்தைகளில் திருப்பள்ளியெழுச்சி பாடத் தொடங்கியது. குரல் வந்த திசையில் ஒரு பொறுப் புள்ள ‘குடி’மகனுக்கு இடியுடன் கூடிய மழைபோல வசையுடன் கூடிய அடிகள் அன்னாரது இல்லத்தரசியால் வழங்கப் பட்டுக்கொண்டிருந்தன.
வசைகளின் தலைநகராம் நெல்லைச் சீமையைச் சேர்ந்த எனக்கே பல வார்த்தைகள் புதிதாக இருந்தன. தமிழில் இத்தனை புதிய கெட்ட வார்த் தைகள் உருவாகியிருப்பதை நினைத்து ஆச்சரியம் கொண்டேன். மாணவர்களுக்காக அரசாங்கம் கொடுத்த இலவச மடிக்கணினியை, குற்றம் சாட்டப்பட்ட நபர், யாருக்கும் தெரியாமல் ஒரு குவார்ட்டருக்காக விற்றுவிட்டார் என்பது வசை களினூடாகத் தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் மகள் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள கலைக்கல்லூரிக்குச் சென்றுவரப் பயன்படுத்திய சைக்கிளை (அதுவும் தமிழக அரசு கொடுத்ததுதான்) விற்றுக் குடித்த சாதனையைச் செய்தவர் இவரென் பதும் தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை மாலை. வின்சென்ட் சாலை சிக்னல்...
பச்சை விளக்குக்காகக் காத்திருந்தபோது கண்ட காட்சி இது. மூடிக்கிடந்த கடை வாசலில் ஒருவர் தன்னிலை மறந்து கிடக்கிறார். அவரை நெருங்கிய ஒருவர் விழுந்து கிடந்தவரின் சட்டைப் பைக்குள் கையை விட்டு, உள்ளே இருந்தவற்றை வெளியே எடுக்கிறார். ஒரு செல்பேசி, ரசீதுகள், சில ரூபாய் தாள்கள். செல்பேசியையும் பணத் தையும் எடுத்துக்கொண்டு ரசீதை அவரது முகத் திலேயே எறிந்துவிட்டு சாவகாசமாகக் கிளம்பி விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தப் பகல் கொள்ளையை மொத்த சிக்னலும் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. மேற்படி, நபர் முழு நேரத் தொழிலாக இதைச் செய்யும் பட்சத்தில், நாளொன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். மாதக் கடைசியில் எனக்கே இப்படிக் கிளம்பிவிடலாமா என்றிருக்கிறது. மூன்று பச்சை போர்டு கடைகளுக்குப் போனால் போதும். ஒரு கடை வாசலில் சராசரியாக நான்கு பேர் மண்ணாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். மிஞ்சிய வரைக்கும் லாபம். ரொம்ப தேவை என்றால் மத்தியப் பேருந்து நிலையம் போகலாம். அங்கே ‘காவல் துறை நமது நண்பன்’ எனும் நம்பிக்கையில் நாற்பது பேராவது கிடக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை இரவு. உக்கடம் பேருந்து நிலையம்...
பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என் வீட்டுக்குச் செல்ல நான் தெரிவுசெய்திருக்கும் சாலையையொட்டி 6 சோமபானக் கடைகள் இருக் கின்றன. அவ்வளவுதானா என வாசகர்கள் கேட்பது புரிகிறது. வீடு திரும்பும்போது கண்ணில் விழும் மழைப் பூச்சிகளைத் தவிர்க்கத் தலைக்கவசம் அணிந்து தப்பித்துக்கொள்கிறேன். குறுக்கே விழும் குடிமகன்களிடம் என்னால் தப்பிக்கவே முடிவதில்லை. உக்கடம் பேருந்துநிலையப் பின்புற வாசலைக் கடக்கும்போது எவ்வளவு நிதானித்தும் வளைத்தும் திருப்பியும்கூட ஒருவர் குறுக்கே விழுந்துவிட்டார். தடுமாறி எழுந்து நின்று, பல குத்துகள் வாங்கிச் சரிந்த குத்துச்சண்டை வீரர் தலையை உயர்த்துவது போலத் தலையை உயர்த்திப் பழரச மணம் கமழும் வாயால் “குடிச்சிருக்கீயா… போதையில வண்டி ஓட்டற டிரங்கன் மங்கீ…' என வாழ்த்தினார்.
வெள்ளிழமை நள்ளிரவு...
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என் குடும்பத்தை எழுப்பியது ஒரு செல்பேசி செய்தி! தனது அலுவலகத்துக்கு எதிரேயுள்ள கடையில் பழம் வாங்கச் சென்ற என் குடும்ப நண்பரை மரண வேகத்தில் வந்த பைக் மோதியது. மோதியது கல்லூரி மாணவன். தனக்கு முன்னால் முழு போதையில் காரை ஓட்டிச்சென்ற நண்பர்களைத் துரத்தி வந்திருக்கிறான். இவனும் முழு போதை. நண்பர் சம்பவ இடத்திலேயே மரணித்துவிட்டார். பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் நண்பரது மனைவியும் பிள்ளைகளும் மார்பில் அடித்துக்கொண்டு கதறியது இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. முப்பதாண்டு கால இல்லறத்தை முப்பது நொடிகளுக்குள் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது போதை.
மண்ணியல் நிபுணர்கள்
தமிழ்நாட்டுக்குப் புதிதாக வரக்கூடியவர்களுக்கு இயல்பாக ஏழக்கூடிய சந்தேகங்கள் என சில உருவாகியுள்ளன. ‘பகலில் எதிரி நாட்டு விமானம் ஏதும் வந்து குண்டு வீசிச் சென்றதா? பலர் வீதிகளில் விழுந்து கிடக்கிறார்களே’ என்பது அதில் பிரதானமான ஒன்று. என் ஆந்திர நண்பர், “தமிழர்கள் புதிய வகை நடனமொன்றை வீதியில் ஆடியபடியே செல்கிறார்கள்” என்கிறார். “நிறைய்ய மண்ணியல் நிபுணர்கள் உண்டே உங்களூரில். நிலத்தில் குப்புறக் கிடந்து மண்ணை முகர்ந்துகொண்டே இருப்பார் களே” என்கிறார் இன்னொரு வெளிமாநில நண்பர் கிண்டலாக.
இன்னொரு ரியோ டி ஜெனிரோ
உலகில் குடிவெறியர்கள் மலிந்த நகரங்களான ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, மெக்ஸிகோ நகரங்களைப் போலத் தமிழகமும் மாறி எவ்வளவோ நாட்களாகிவிட்டன. தனிநபர் மது நுகர்வுப் புள்ளிவிவரங்களை ஐ.நா. சர்வதேசச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுவருகிறது. தற்சமயம் நாடுகள் அளவில் நடைபெறும் இந்த ஆய்வு, மாநில அளவில் நிகழ்ந்தால் தமிழகம் நிச்சயம் ரியோ டி ஜெனிரோவைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
விளிம்பு நிலை மக்களில் பெரும்பான்மையான ஆடவர்கள் இன்று எந்த வேலையையும் செய்ய லாயக்கற்ற குடிநோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டனர். குடும்பத்துக்கும், கணவன் குடிப்பதற்கும் சேர்த்துச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்பட்டுப் பல நாட்களாயிற்று. குடிவெறியினால் நிகழும் பாலியல் குற்றங்கள் தனி அத்தியாயம் எனில், குடிநோய்க்கு ஆளாகி, தாம்பத்தியத் தகுதியை இழந்த ஆண்களால் குடும்பங்களில் பெருகிவரும் சமூகப் பிரச்சினைகளையும் கேள்விப்படுகிறோம். நம்மை ஆள்வோரின் கண்களுக்குத் தமிழ் நிலத்தின் இந்தக் காட்சிகள் தட்டுப்படுகின்றனவா என்பதுதான் என் கேள்வி. மன்னராட்சியின் எல்லா பந்தாக்களையும் ஆள்வோர் அப்படியே பின்பற்றுகிறார்கள். படைபரி வாரங்கள், தோரணங்கள், கட்டியங்கள், ஒற்றறிந்து சொல்ல உளவுத் துறை, கண்ணசைவுக்குக் காத்திருக்கும் அமைச்சர் குழாம், மாநாடுகளில் மணிமகுடம் சூட்டி வீரவாளும் செங்கோலும்கூட வழங்கப்படுகிறது. ஏன், நம் பழந்தமிழ் மன்னர்களைப் போல இவர்கள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வரக் கூடாது? ஒரேயொரு நாள், ஒரேயொரு இரவு இதைச் செய்தாலே, தமிழகம் குடிநோயாளிகளின் கூடாரமாக மாறியிருப்பதைத் தெரிந்துகொள்ளலாமே.
உண்மையில் இன்று தமிழர்க்குத் தேவை ‘குடிநோயாளிகள் மறுவாழ்வு மைய’ங்களே. தனியார் மையங்கள் நிரம்பிவழிகின்றன. குடல் வெந்துபோனவர்களுக்குச் சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. ‘வெள்ளை யானை’ நாவலில் ஜெயமோகன் சித்தரிக்கும் தாது வருஷத்துப் பஞ்சக் காட்சிகளைப் போல மருத்துவமனைகள் காட்சியளிக்கின்றன.
இந்தப் பாழ்நிலத்தின் புறக்காட்சிகளைக் காண்கிற சம காலத்தவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களின் நகரச் சித்தரிப்புகளைச் சுகமான பகற்கனவு என நினைத்துக்கொள்வார்கள் இல்லையா?!
- செல்வேந்திரன்,
தொடர்புக்கு: selventhiran.k@thehindu.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago