அரிதாகக் காவிரிக்கு உருவான கோயில் ஒன்று குடவாசலுக்கு அருகிலுள்ள திருச்சேறையில் உண்டு. சாரநாதப் பெருமாள் கோயிலின் குளத்து மேல்கரையில் வடக்குப் பார்த்துச் சிறியதாக இருக்கும். திருமணத் தம்பதியர்போல் பெருமாளும் காவிரியும் ஒரு உற்சவத்தில் இங்கு மாலைமாற்றிக்கொள்வார்கள். குளத்தில் நீர் அற்றுவிட்டது. மழைக்காலத்து நீர், இருக்க வேண்டிய மாதம் வரையில் இல்லை. காவிரியில் இப்போது வரவேண்டிய தண்ணீரும் குளத்துக்கு வரவில்லை. பாதாளமாகத் தெரியும் குளத்தின் வயிற்றில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் களிக்கிறார்கள். எல்லா இடத்திலும் இதுவேதான் நிலைமை. ஆனாலும், திருச்சேறையில் காவிரியையே சாட்சியாக்கி, வறட்சியை இப்படிக் குரூரமாக விரித்துக் காட்டுவது விக்கித்துப்போகும் சோகம். காஃப்காவின், காம்யுவின் நாவல்களில் வரும் அபத்த நிகழ்வுகளைப் போல் இருக்கின்றன இங்கு நடப்பவையெல்லாம்.
அந்திக் குளிர்
“வெயிலில் இப்போது இப்படித்தான் வியர்க்கும். ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் பொழுது குந்தும்போதே குளிரெடுக்கும்.” திருச்சேறைக்குத் தெற்கில் இருக்கும் விடையல் கருப்பூரில் நடுவயதைத் தாண்டிய பெண் ஒருவர் எனக்கு ஆறுதலாகச் சொன்னார். ஆற்றங்கரைக் கிராமங்களின் ஆனி மாத அந்திக் குளிர் இனி எப்போதுமே பழைய அனுபவம்தான். காவிரிப் படுகையின் அனுபவத்தைச் செறிவாக்கிய ஒன்று நிரந்தரமாக நின்றுபோகும். தென்மேற்கிலிருந்து காற்று வீசினாலும் அப்போதுபோல் தண்ணீர் சிலிர்க்கச் சிலிர்க்கத் தடவி வருவதற்கு இங்கு நீர்ப் பரப்பு எதுவும் விரிந்து கிடக்கப்போவதில்லை.
கொல்லைப்புறக் கேணியில் மழைக் காலத்தில்கூட தண்ணீர் ஊறுவதில்லை. ஐம்பது, அறுபது அடிகளில் நீர் இறைத்துக்கொண்டிருந்த துளைக் கிணறுகளை மேலும் துளைத்து இருநூறு அடிக்குக் கொண்டுசெல்கிறார்கள். கோடையின் நெல் வயல்களில் தண்ணீர் இஞ்சுவதும், சேறு இறுகுவதும், களை எடுத்து மாளாமலும் விவசாயிகள் நொந்துபோகிறார்கள். கோடை மழையே இல்லாமல் பயிர் திரங்கிவிட்டது. முடிந்தவர்கள் துளைக்கிணற்றை நம்பிப் பருத்திச் சாகுபடி செய்கிறார்கள். கடலிலிருந்து இருபது கிலோமீட்டர்வரையுள்ள நிலப்பகுதியில் இதுவும் சாத்தியப்படாது. துளைக்கிணறுகள் அங்கு இல்லை. கால் பங்குக்குமேல் காவிரிப் படுகை நிலத்தடி நீர் என்ற செழிப்பைப் படைத்ததல்ல. மயிலாடுதுறையிலும், அதற்கு மேற்கிலும் கோடை நெல்லும் குறுவையும் பயிரிட்டிருக்கிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப் படுகை இதே நேரத்தில் கண்ட துடிப்பும் பரபரப்பும் பழங்கதைகளாகிவிட்டன.
யாருக்கு முதல் உரிமை?
சென்ற தை மாதத்துக்கு முந்தைய தையிலிருந்து இப்போது ஆனிவரை சாகுபடி என்பதே இல்லாமலாகிவிட்டது. மேட்டூர் அணையின் இன்றைய நீர் மட்டம் இருபத்து இரண்டு அடி. அணைக்கு நீர்வரத்து நூற்று ஐம்பது கன அடி. அணையிலிருந்து ஐநூறு கன அடி வெளியேறுகிறது. காவிரி நீர் எப்போது வந்தாலும் அதற்கு விவசாயம் இனி முதல் உரிமை கோர முடியாது. குடிநீருக்கும் தொழிற்சாலைகளுக்கும் கேளாமலேயே அந்த உரிமை சென்றுவிடும். நமது வளர்ச்சியின் வேகம்!
மேற்கே சோனையின் அடையாளமாக இங்கு இரண்டு நாட்கள் வெள்ளை வெளேரென்று வானம் மூடிக்கிடந்தது. குடகுப் பகுதியில் மழை என்று ஊகித்து மகிழ்ச்சிகொள்ள மனம் துணியவில்லை. தென்மேற்கிலிருந்து வரும் காற்று பழைய வலுவோடு வீசவில்லை. மழை இரண்டொரு நாள் அதிரத் தூறியது. சில இடங்களில் அரைமனதாகத் திரண்டுவந்த மேகம் தரை நனைய பொடபொடத்துக் கரைந்துவிட்டது. இதற்குமேல் மேற்கில் மழை பொழிந்து, காவிரியும் பெருகி, கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தோடி, பிறகு மேட்டூரும் தொண்ணூறு அடியாக உயர்ந்து, இங்கு ஆறெல்லாம் எப்போது நனையப்போகிறதோ! அடுத்த மாதம், அதற்கடுத்த மாதமாவது தண்ணீர் வரும் என்று சாகுபடியைத் திட்டம் செய்துகொள்வதற்கான அடிப்படை எதுவுமே தென்படவில்லை. பொட்டலில் நடந்து சலித்த மாடு தலையைத் தூக்கி எங்காவது நிழல் தெரிகிறதா என்று பார்ப்பது போன்ற நிலைமையில் விவசாயம். நம்பிக்கையோ, இலக்கு என்றோ எதுவும் இருக்காது. ஆனாலும் அது நடந்துகொண்டேயிருக்கும்.
நூறு நாள் வேலை என்று ஒரு வேலை உறுதித் திட்டம் மும்முரப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்கள் குளம் குட்டைகளைத் தூர்வாரிக் கொட்டுகிறார்கள். பாய்மடையும் வடிகாலும் தொலைந்துபோன குளங்களில் இப்போது எங்கிருந்து தண்ணீர்வந்து நிரம்பப்போகிறது? இது வேலை கிடைப்பதை உறுதி செய்வதாக நிபுணர்கள் கூறுவார்கள். இன்றைய நிலைமையில் அறிவிக்கப்படாத ஒரு வகைப் பஞ்ச நிவாரணம் என்றுதான் இதனை விவரிக்கத் தோன்றுகிறது. தூர்வாரும் கைகள் நஞ்சையில் விவசாய வேலைக்கு பழகியவை. நடவுக்கும் அறுவடைக்கும் பழகி, நெல்மணியில் புழங்கியவை. மராமத்து வேலையும் மதிக்க வேண்டிய உடலுழைப்பு. ஆனாலும், அதைவிட தஞ்சைப் பகுதியில் விவசாய வேலைக்குக் கூடுதலான மதிப்பு. “நான் சம்சாரி” என்று விவசாயிகள் பெருமை பேசிய காலமும் இருந்ததே! சாகுபடிப் பருவத்தில் மராமத்து வேலைகளை உருவாக்க வேண்டியிருப்பதும், கட்டட வேலையும், காளாவை வேலையும் பழைய நிலையிலிருந்து பெரும் இறக்கம். அரசாங்கத்தின் பொது விநியோகத் திட்டம்தான் நிலைமையைக் கட்டுக்குள் வைத்துள்ளது.
தத்துவப் பொறி
துளைக் கிணற்றையே காணாத காலத்திலும் கொஞ்சம் குறுவை நட முடியும். குறுவையைப் பணப்பயிர் என்பார்கள். இன்று துளைக்கிணறு உள்ளவர்களும் நிம்மதியாகக் குறுவை பயிரிட முடியவில்லை. ஒரு நேரத்தில் நான்கு லட்சம் ஏக்கர் இங்கு குறுவை பயிரானது. இப்போதும் தொகுப்புத் திட்டங்களை வகுத்து குறுவை நடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கிறது அரசாங்கம். இது தீவிரம் ஆக ஆக நிலத்தடி நீர் மட்டம் கீழிறங்குவதும், பிற இன்னல்களும் அதிகரிக்கும். இந்த ஆபத்துகளுக்காகக் குறுவையைக் விட்டுவிட முடிந்ததில்லை. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்றிருக்கும் அரசாங்கம் குறுவையை விட்டுவிட அனுமதிக்காது. உற்பத்தியைப் பெருக்கும் திட்டங்களைத் தீட்டி விவசாயிகளைக் கவர்ந்துகொண்டே இருக்கும். ஆனால், வலையாக இருந்தாலும் நாமாகத்தானே அதில் விழுந்தோம் என்று நினைக்கவைக்கும் தத்துவப் பொறி ஒன்றில் நாம் சிக்கிக்கொண்டோம். அதுதான் விவசாயிகளின் தோல்வியும் அரசாங்கத்தின் வெற்றியும்.
வயலை ‘நஞ்சைத் திறப்பு’ என்று சொல்வதுண்டு. திறந்த வெளி. தண்ணீர்ச் சிக்கனம் என்று இப்போது குழாய் பதித்து, வயலுக்குக் கம்பி வேலி போடுகிறோம். இப்படியே இடர்பாடு வரும்போதெல்லாம் இயற்கைச் சூழலுக்கு ஒவ்வாத திட்டங்கள் ஓசையில்லாமல் உள்ளே வருகின்றன. தஞ்சைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதியாக அறிவிக்கக் கோரி போராடுகிறோம். விவசாயம் செய்யும் ஒரு பெண் ஊரில் பசும் பால் விற்க முடியவில்லை என்றார். ஆனால், ஏராளமாக பாக்கெட் பால் விற்கிறது. இங்கே விளையும் நெல் வெளியே சென்று சந்தைப் பொருளாக விலைவைத்து, “நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று அரிசியாக உங்களிடமே வந்தால் தஞ்சையை என்ன செய்து பாதுகாக்க முடியும்? இந்தப் பொருளாதார ஊடுருவலைக் கவனிக்கப் பழகவேண்டும். வறட்சி இங்கிருந்து போவது இருக்கட்டும். அது எப்போது இங்கே வந்தது என்று தெரிந்துகொள்ளவேண்டும். காவிரிப் படுகையின் பொருளாதாரம் விவசாயத்திலிருந்து விலகி தனித்து இயங்கத் தொடங்கியபோதே அதன் வறட்சியும் தொடங்கிவிட்டது. அது காவிரியில் நீர்வரத்து இல்லாமல் மட்டுமே நடந்ததல்ல!
- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது…’ என்ற நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago