சாதிப்பாரா சசிகலா?

By வெ.சந்திரமோகன்

ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான எதிர்வினையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா

காட்சி 1:

ராயப்பேட்டை

அதிமுக தலைமையகத்துக்கு சுமார் பதினைந்து பேருடன் வந்து நிற்கிறார் அந்தத் தொண்டர். உள்ளே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் சசிகலா. வந்த தொண்டருக்கு ஏனோ உள்ளே செல்ல மனமில்லை. தயங்கி நிற்கிறார். அருகில் இருப்பவர்களிடம் “ண்ணா.. தீபா மேடம் வூடு எங்காக்குது?” என்று கேட்கிறார். பதில் வந்ததும், அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். சற்று நேரத்தில் அந்தக் கூட்டம் அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள தீபா வீடு நோக்கிக் கிளம்புகிறது.

காட்சி 2:

அண்ணா சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது தொங்கும் பிரம்மாண்டமான பேனர் அது. ஜெயலலிதா படமும் உள்ள அந்த பேனரில், ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்து ஏதோ எழுதியபடி இருக்கிறார் சசிகலா. சாலையின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் கண்ணில் படும்படி வைக்கப்பட்டிருக்கிறது அந்த பேனர். அது பார்வையில் பட்டதும் சட்டென்று நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர் இரண்டு ஆண்கள். கிராமத்தவர்கள் போன்ற தோற்றம். “என்னாத்துக்குங்க இத்தாம் பெரிய பேனரை அவ்ளோ ஒயரத்துல வச்சிருக்காங்க?” என்று ஒருவர் கேட்கிறார். “அதான் சுவத்துல ஒட்டுற போஸ்டர்லல்லாம் சசிகலா மூஞ்சை மட்டும் கிழிச்சு வச்சுடுறாங்களே… எல்லாம் ஒரு சேஃப்டிக்குத்தான்” என்கிறார் மற்றவர். அர்த்தபுஷ்டியுடன் சிரித்தபடி நகர்கிறார்கள் இருவரும்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்த சசிகலா, கட்சிக்குள்ளும் வெளி யிலும் ஆதரவும், எதிர்ப்பும் கலந்த கலவை யான எதிர்வினையைச் சந்தித்துக்கொண்டி ருக்கிறார். அடிமட்டத்தில் ஆதரவு மிக மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைப் பொறுத்தவரை, இத்தனை நாட்கள் ஜெயலலிதாவிடம் காட்டிய மனப்பூர்வமான விசுவாசத்தைத் திடீரென்று இன்னொருவருக்கு மாற்றுவது என்பது பெரும் மனச்சிக்கலைத் தரக்கூடியது. குறிப்பாகப் பெண் தொண்டர்கள். ஜெயலலிதாவின் மறைவு தந்த சோகம் அகலாத நிலையில், அரசியல் காரணங்களை முன்வைத்து மின்னல் வேகத்தில் நிகழும் மாற்றங்கள் அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.

கூனிக் குறுகித் தன்னை வணங்கு பவர்களிடம் உண்மையில் இருப்பது பணிவு அல்ல என்பதை, ஜெயலலிதாவின் அருகில் இருந்தபோதே கவனித்துவந்தவர்தான் சசிகலா. எனவே, முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் தன் முன்னே பவ்யமாக நிற்பதை நம்பப்போவதில்லை. ஆனால், ஜெயலலிதாவின் பிம்பக் கட்டமைப்புக்குப் பெரிதும் உதவிய அந்த வழக்கத்தைத் தொடர்வதன் மூலம், பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கியிருக்கும் தனது அரசியல் வாழ்க்கையில் உயர்வைக் காணலாம் என்றே நம்புகிறார் போலும். மேலும், ஜெயலலிதாவின் தோற்றத்தைப் பிரதியெடுப் பதுபோன்ற நடை, உடை, பாவனைகள், ஒப்பனைகள் வேறு. உண்மையில், பாரம்பரியமான அதிமுக ஆதரவாளர்களும் பொதுமக்களும் சசிகலாவை எரிச்சலுடன் பார்க்கவே இது வழிவகுக்கிறது.

முதலில் பொதுச் செயலாளர் பதவி, பின்னர் முதல்வர் பதவி என்று இலக்கு வைத்து முன்னேறினாலும், மற்றவர்களின் வற்புறுத்தலின்பேரில் இவற்றையெல்லாம் செய்ய நேர்வதுபோல் காட்டிக்கொள்கிறார். பொதுச் செயலாளர் பதவியைக்கூட ‘டோர் டெலிவரி’ போல் போயஸ் இல்லத்துக்கே வரவழைத்துக் கொண்டதைத் தனது சாமர்த் தியமாக அவர் நினைத்துக்கொள்ளலாம். மக்கள் அப்படி நினைக்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அதிகரித்துவரும் ஆதரவு பற்றியும் அவருக்குக் கவலை இல்லாமல் இருக்காது. தொண்டர்களிடம் ஆதரவை இழந்துவிட்டால், அப்புறம் என்ன செய்தாலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது என்பதையும் அவர் அறிந்திருப்பார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே சசிகலாவின் உறவினர்கள் செலுத்திய ஆதிக்கம் விமர்சிக்கப்பட்டது. இன்றைக்கு, சசிகலாவே அதிகார மையத்தின் ஆதாரமாகிவிட்ட நிலையில், ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல தளங்களில் ஏற்படவிருக்கும் அழுத்தம் பற்றியும் மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். இவற்றுக்கிடையே முதல்வர் பதவியிலும் அமரத் தருணம் பார்த்துவருகிறார் சசிகலா. மறுபுறம், மத்திய அரசு தரும் நெருக்குதல். ஆளுநர் மூலம் நடந்துவரும் நகர்வுகள் இன்றைக்குத் தமிழகத்தில் ரகசியம் அல்ல. தமிழகத் தலைவர்களின் அறிக்கைகள் மூலமும், நிர்வாகரீதியான நடவடிக்கைகள் மூலமும் தமிழக அரசியலில் மறைமுகமான தலையீட்டைச் செய்துவருகிறது பாஜக. ஜெயலலிதாவால் கடுமையாக எதிர்க்கப் பட்ட பல விஷயங்களில் பாஜக அரசோடு உடன்பட்டுவிட்டது இன்றைய அதிமுக.

இவற்றுக்கு இடையில், அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்ற அன்று சசிகலா ஆற்றிய உரைதான், அதுவரை அவர் மீது இருந்த பிம்பத்தைச் சற்று மாற்றியமைத்ததுடன், ‘பிரச்சாரத்தில் பேசும் அளவுக்காவது தகுதியுடன் இருக்கிறார்’ என்று சமூக வலைதளங்களில் பேசவைத்தது. அதற்காக, அரசியல் அறிவுடன் இயங்கத் தகுதியுடையவர் என்று சசிகலாவைச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், இதுவரை அவர் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் அரசியல் நடவடிக்கைகள் யாவும் திரைமறைவிலானவை. பெருமளவில் தன் ஆதரவாளர்களுக்கும் குடும்பத் தினருக்குமான பேரங்கள் என்னதான் பிறர் உதவியுடன் தகவல்களையும், அறிக்கை களையும், உரைகளையும் தயார் செய்து கொள்ள முடியும் என்றாலும், ஒரு அரசியல் தலைவர் சுயமாகச் சிந்திக்கக் கூடியவராக, முக்கியப் பிரச்சினைகளின் போது தொலைநோக்குடன் முடிவெடுக்கக்கூடிய வராக இருக்க வேண்டும். சசிகலா முதல்வராகி விடுவார் என்று ஊகங்கள் வெளியாகும் போதெல்லாம், மக்களிடம் பதற்றம் ஏற் படுவதற்கான முக்கியக் காரணம் இதுதான். ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் அமர்வதற்கும், ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் தடுமாறியதில்லை. ஆனால், சமீபத்தில் ‘இந்தியா டுடே’ சார்பில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், அப்பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பு வருவதை வரவேற்றுப் பேசினார் சசிகலா. தமிழ் உட்பட அப்பத்திரிகையின் பிராந்திய மொழிப் பதிப்புகள் எப்போதோ நின்றுவிட்ட நிலையில், இவ்வாறு பேசியிருப்பது சசிகலாவின் பலவீனங்களைப் பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.

மிக முக்கியமாக, தமிழகத்தின் முக்கிய எதிர்க் கட்சியான திமுகவின் தலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை சசிகலா எப்படி எதிர்கொள்வார் என்பது இன்னொரு சவால். விவசாயிகள் தற்கொலைப் பிரச்சினை, ஜல்லிக்கட்டு வரை அறிக்கை, பதில் அறிக்கை என்று முன்பை விடத் தீவிரமாக இயங்குகிறார் ஸ்டாலின். ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் பற்றி முதல்வரிடம் ஊடகங்கள் கேள்வி கேட்க வேண்டும் எனும் அளவுக்கு அவர் செல்கிறார். இன்னொரு பக்கம், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் எனும் தகவல்கள் சசிகலா தரப்பைச் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. விரைவில் முதல்வர் பதவியில் அவர் அமர முயல்வதற்கான காரணமாகவும், அமரத் தயங்குவதற்கான காரணமாகவும் இந்தத் தீர்ப்புதான் சொல்லப் படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவு ஏற்படுத்தி யிருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு, திமுக பலம் பெற்றுவிடக் கூடாது என்று ஒரு தரப்பும், பாஜக கால் பதித்துவிடக் கூடாது என்று ஒரு தரப்பும், இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி மிச்சமிருக்கும் நிலையில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்று அதிமுகவினரும் எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் சசிகலாவின் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. இது நிலைக்குமா என்பதைக் காலம் அல்ல, மக்கள்தான் முடிவுசெய்வார்கள்!

- வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்