நண்பகல் 12 மணி. உச்சி வெயில். பூசாரி பூமலைக்குக் கண்கள் சிவந்து உக்கிரம் ஏறிவிட்டிருந்தது. கோயிலுக்கு வெளியே ஒரே களேபரம். சிவனாண்டியைச் சுற்றி குடும்பமே கதறிக்கொண்டிருந்தது.
“இவ்வளவு தூரம் வந்துட்டு மனசு மாறிட்டியே தாத்தா.” இளம் பெண் ஒருவர் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். முதிர்ந்த பெண் ஒருத்தி அவர் காலில் விழுந்து கதறிக்கொண்டிருந்தார். எட்டி உதை விட்டார் சிவனாண்டி. உதிர்ந்த சருகுபோல இருந்த அந்தப் பெண், விழுந்த வேகத்தில் மயக்கமானார். “அப்பத்தா” என்று பதறி ஓடியது சின்னப் பெண். “மாமா, நீங்களே இப்படிப் பண்ணலாமா?” இளைஞர் ஒருவர் சமாதானப்படுத்தினார். சிவனாண்டி எதையும் கேட்கும் நிலையில் இல்லை. “ஏமாத்திக் கூட்டிட்டு வந்தா நான் கோயிலுக்குள்ள வந்துடுவனா?” இடுப்பில் சொருகியிருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டார். லுங்கி அவிழ்ந்து தரையில் விழுந்தது. தீர்ந்துபோன பாட்டிலை வெறிகொண்டு வீச, சில்லுசில்லாகச் சிதறியது.
ஊற்றிக் கொடுக்கும் அம்மா
இவ்வளவு நடந்தும் அக்கம்பக்கம் யாரும் கண்டு கொள்ளவில்லை. பக்கத்து டீக்கடையில் அமைதியாக டீ குடித்துக்கொண்டிருந்தார்கள். “ஒரு பிளாஸ்டிக் டம்ளரும் ஊறுகாய் பாக்கெட்டும் கொடுப்பா”- நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் வாங்கிக்கொண்டு ஒதுக்குப் புறமான மரத்தடிக்குச் சென்றார். அங்கு ஒரு பெரிய குடும்பமே சுற்றுலாவுக்கு வந்த தினுசில் வட்டமாக அமர்ந்துகொண்டிருந்தது. நடுத்தர வயதுப் பெண்மணி, குவார்ட்டர் பாட்டிலைத் திறந்து, டம்ளரில் மதுவையும் தண்ணீரையும் ஊற்றி மதுவைக் குடிக்கக் கொடுத்தார். அந்தப் பையனுக்கு வயது 16 இருக்கும். அம்மாவின் கையில் இருந்த மது பாட்டிலைப் பிடுங்கி அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான். அடித்தொண்டையை பலமாகச் செருமியவன், எச்சிலை அம்மாவின் முகத்தில் காறித் துப்பினான். கூடவே, ஒரு கேவலமான வார்த்தையையும் உதிர்த்தான். சகஜம் என்பதுபோல அந்தக் குடும்பம் சலன மில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தது.
ஆட்டோ ஒன்று வந்து நிற்கிறது. சுடிதார் அணிந்து, கல்லூரிப் பெண் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணுடன் தம்பதி இறங்கினர். கவுரமான தோற்றம். அவசர நடையில் ஒதுக்குப்புறமான இன்னொரு இடத்துக்குச் சென்றார்கள். அப்பா தனது கைப்பையைத் திறந்து ஸ்பிரைட் பாட்டிலை எடுத்து, மகளிடம் கொடுத்தார். மடக் மடக் என்று சரித்துக்கொண்டது அந்த சின்னப் பெண். பார்க்கச் சகிக்காமல் எதிர்ப் பக்கமாகத் திரும்பி முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதார் அம்மா. லேசான தள்ளாட்டத்துடன் இருந்த அந்தப் பெண்ணைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள்.
தெனந்தெனம் செத்துக்கிட்டிருக்கோம்
அந்தப் பக்கம் சிவனாண்டியின் ஆட்டம் அதிகரித் திருந்தது. காரின் இரண்டு கண்ணாடிகள் உடைந்திருந்தன. கோயிலுக்குள்ளே இருந்த பூசாரி வேகமாக வந்தார். ஓங்கி ஓர் அறைவிட்டார். பெட்டிப் பாம்பாய் அடங்கினார் சிவனாண்டி. அவர் வாயில் எலுமிச்சையைத் திணித்து, மாப்பிள்ளையிடம் ஒரு கயிற்றைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார். மாப்பிள்ளை கயிற்றைக் கையில் கட்டிவிட, அப்படியே சாந்தமாகி என்னைப் பார்த்துச் சிரித்தார் சிவனாண்டி.
“என்ன தம்பி, அசலூரா?”
“ஆமாங்க ஐயா, சென்னை.”
“இங்க எதுக்காக வந்திருக்கீங்க?”
“குடிப் பழக்கத்தைப் பத்தி எழுத வந்திருக்கேன்...”
அந்தக் குடும்பமே கொல்லென்று சிரித்தது. சற்று நேரத்தில் சூழல் இலகுவாகி என்னிடம் பேசத் தொடங்கினார்கள்.
“குடியில எங்க தாத்தாவைவிட நீங்க பெரிய ஆராய்ச்சி யாளரோ?”- கிண்டலாகக் கேட்டது அந்தச் சின்னப் பெண்.
“ஏய் புள்ள பேசாம இரு... வாய்த்துடுக்கு அதிகம்” - பெரியவர்தான் அடக்கினார்.
“இந்தா தம்பி குங்குமம்.”
கொஞ்ச நேரத்துக்கு முன்பு தாண்டவமாடிய சிவனாண்டியா இவர்? “பத்து வருஷத்துக்கு முன்னாடி பழக்கத்துக்காகத் தொட்டது. ஏழு ரிக் வண்டியை வித்துட்டேன். பஞ்சப்பள்ளி டேம்கிட்ட இருந்த 60 ஏக்கர் மல்லிப்பூ தோட்டமும் போச்சு. மூத்த பொண்ணைக் கைநீட்டி அடிச்சிட்டேன்னு தூக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டா. மாப்பிள்ளைதான் ஏதோ தலையெடுத்து தாங்குறாரு. அவமானமா இருக்கு தம்பி. இத்துனூண்டு இருக்கிற எங்க கிராமத்துக்கு மூணு டாஸ்மாக் கடை தேவையா? முதல்ல இழுத்து மூடச் சொல்லுய்யா அதை... தெனந்தெனம் செத்துக்கிட்டிருக்கோம்” - உணர்ச்சிவசப்பட்டுத் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். அப்படியே அவரைக் கைத் தாங்கலாக அணைத்துக்கொண்டு புறப்படுகிறது குடும்பம்.
தன்னோட மனசாட்சியா…
சங்ககிரி பக்கத்தில் இருக்கிறது பூமுனீஸ்வரர் கோயில். சன்னதியில் பூசாரி முன்பாகக் குடும்பத்துடன் அமர்ந் திருக்கிறார்கள். பூசாரி சொல்வதை அப்படியே திரும்பச் சொல்கிறார்கள்.
“தன்னோட மனசாட்சியா…”
“அம்மா, அப்பா சாட்சியா…”
“மக்கள் சாட்சியா…”
“சந்திரன், சூரியன் சாட்சியா...”
“அனைத்துத் தெய்வங்கள் சாட்சியா…”
“முப்பத்து முக்கோடி தேவர் அறிய...”
“நாப்பத்திரெண்டாயிரம் ரிஷிமார்கள் அறிய...”
“போதைக்குச் சம்பந்தப்பட்ட கள்ளு, கஞ்சா, சாராயம், பீரு, பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா, சீமைச் சாராயம், இருமலு டானிக், இன்ன பிற போதைப் பொருள் எதையும்...”
“ஜய வருடம், புரட்டாசி மாசம், 15-ம் தேதி நல்ல நேரமான ரெண்டு மணி முப்பதோரு நிமிஷத்துல பூமுனியப் பன் முன்னிலையில் போதை எண்ணத்தை மறக்கடிச்சுக் கொடுக்கோணும்.”
எதிரில் இருந்த அந்த இளைஞர் வரிசையாகச் சொல்லி முடித்தபின், தனக்கு முன்னே பற்றவைக்கப்பட்ட கற்பூரத்தில் படார் என்று அடித்துச் சத்தியம் செய்தார். அவர் கையில் கயிற்றைக் கட்டி, வாயில் எலுமிச்சையைச் சொருகி அனுப்பி வைத்தார் பூசாரி.
மாலை 6 மணி வரை கூட்டம் வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் குடிநோயாளிகள் வருகிறார்கள். நாள் முழுக்க அங்கு இருந்ததில் பரிச்சயமாகியிருந்தார் பூசாரி.
“எங்க முப்பாட்டன் காலத்துல இருந்தே இந்தக் கோயிலு இருக்கு. அந்தக் காலத்துல தொழில் விருட்சமாகணும், குழந்தை வரம் வேணும்னுதான் கயிறு கட்டிக்கிட்டுப் போவாங்க. இந்தப் பத்து வருஷத்துலதான் இது குடி நோயாளிகளுக்கான கோயில் ஆயிடுச்சு. தினமும் நூத்துக் கணக்குல வர்றாங்க. நிறையப் பேருக்கு பைத்தியம் முத்தி வர்றாங்கய்யா... பன்னிரண்டு வயசுப் பையனுக்கும் பதினஞ்சு வயசுப் பொண்ணுக்கும் கயிறு கட்டிவிட்டிருக்கேன். குடிநோயாளி ஆகுற வயசாய்யா அது? மொதல்ல கடை எல்லாத்தையும் மூடச் சொல்லுய்யா...”
(தெளிவோம்)
டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago