இப்போதெல்லாம் யாரேனும் இறந்துவிட்டால், ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக சொல்வது வழக்கம் ஆகி விட்டது. ஆனால் சர்வதேச அரங்கில், மத்திய கிழக்கு பிரதேசத்தில், சீர்திருத்த முற்போக்கு எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்வதில், செயல்படுத்துவதில், உண்மையாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது.
ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அயதுல்லா அலி அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானி, (வயது 82) ஞாயிற்றுக்கிழமை டெஹரான் மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மதவாதம் பேசுகிற அடிப்படை வாதிகளுக்கு எதிரான மிதவாதக் குரல் அடங்கி விட்டது. ஈரான் நாட்டின் சீர்திருத்த முகமாக அறியப்பட்ட தலைவர் மறைந்து போனார்.
“தீவிரவாதக் கொள்கை உடையவர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியைத் தரலாம்;இதனால் ஈரான் நாட்டில் ஒரு 'சமமின்மை' ஏற்பட்டு இருக்கிறது” என்று சீர்திருத்தங்களை ஆதரிக்கும் ஒரு மத குருவை சுட்டிக் காட்டி 'நியூயார்க் டைம்ஸ்' கவலை தெரிவிக்கிறது.
ஈரானில் கொமேனியுடன் இணைந்து ஆட்சிக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலமுறை கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தார். இஸ்லாமிய மார்க்சிய குழு, மக்கள் 'முஜாஹிதீன்' உள்ளிட்ட குழுக்களுடன் சேர்ந்தும் மக்களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடினார்.
கடந்த 1980 -90க-ளில் ஈரான் நாட்டின் மிக சக்தி வாய்ந்த நபராக, அயதுல்லா கோமினியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்தான் ரஃப்சஞ்சானி. 1989 முதல் 1997 வரை இரு முறை ஈரானின் அதிபராகப் பதவி வகித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ஈரான் நாட்டில் பெரும் பதவிகளில் இருந்த, இருக்கிற பலரும் இவரால் 'வளர்க்கப்பட்டவர்கள்'தாம்.
தற்போதிய அதிபர் ஹசன் ருஹானி 2013-ல் வெற்றி பெறக் காரணமாக இருந்த ரஃப்சஞ்சானியின் மறைவு, அவரது எதிர்கால அரசியல் பயணத்துக்கு, மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஈரானின் மிக மூத்த தலைவர் அயதுல்லா கோமினி, ரஃப்சஞ்சானியின் மறைவு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “சரித்திரத்தின் மேடு பள்ளங்களை இனி வேறு யாருடன் நான் பகிர்ந்து கொள்வேன்..?” என்று
தனது 59 ஆண்டு கால நட்பை நினைவு கூர்ந்துள்ளார். ஆம். கடந்த சுமார் 60 ஆண்டுகளாக ஈரான் தேசத்தின் பயணத்தை, போக்கை நிர்ணயித்ததில் ரஃப்சஞ்சானியின் பங்கு மிக முக்கியமானது.
ஈரானின் பிரதான எதிரியான சவுதி அராபியத் தலைவர்களுடனும் சுமுகமான தொடர்பில் இருந்தவர்; மேலை நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனும் கூட இணக்கமான உறவு இருந்தால்தான் இஸ்லாமியக் குடியரசை
வளமான ஒன்றாக மாற்ற முடியும் என்று நம்பியவர்.
ஈரானியப் பொருளாதாரத்தில் தனியார் மயமாக்கலை பெரிதும் ஊக்குவித்தார். பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். இவற்றின் மூலம், நவீனக் கல்வி புகட்டி இளைஞர்களை அடிப்படை வாதத்தில் இருந்து, சீர்திருத்தக் கருத்துகளின் பக்கம் திருப்பினார்.
ஈரான் - இராக் யுத்தம் முடிவுக்கு வரக் காரணமாக இருந்தார். ராஜாங்க உறவுகளில் மத அடிப்படைவாதிகளின் கைகள் ஓங்கி விடாதபடி, பார்த்துக் கொண்டார்.
ஈரானியப் புரட்சியின் களப் போராளிகளில் ஒருவரான ஹஷேமி, மிதவாத - அடிப்படைவாதக் குழுக்களுக்கு இடையே தீவிர வேறுபாடுகள் எழும் போதெல்லாம், இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தீர்வு காண்பதில் வல்லவராக இருந்தார். இனி இப்பணியை செய்கிற ஆற்றல் படைத்த வேறு ஒருவர் இல்லை என்பதுதான், வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நேரத்தில் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கிற வல்லமை கொண்ட கரங்களுக்காக காத்துக் கிடக்கிறது இரானும் அகில உலகமும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago