நவீன எழுத்தறிவின்மையை நோக்கி…

வாசிக்கவும் எழுதவும் அறியாதிருத்தல் எழுத்தறிவின்மை என்று சொன்ன காலம் போய்விட்டது. ஒற்றை மொழியின் வரி வடிவத்தை மட்டும் வாசிக்கவும் எழுதவும் அறிந்திருத்தல் இந்த நூற்றாண்டின் எழுத்தறிவின்மையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலம் மட்டுமே வழக்கில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவர்கள் குழந்தைகளுக்குப் பல மொழிகளின் வரிவடிவங்களைக் கற்பிக்கும் முயற்சி வேகம் பெற்று வருகிறது. இத்தருணத்தில் நம் குழந்தைகளின் தலையில் ஒற்றை ரோம வரிவடிவத்தை மட்டும் ஏற்றி, நவீன எழுத்தறிவின்மையை நோக்கி, அவர்களைத் தள்ளுவதற்குச் சிந்திக்கிறார் ஜெயமோகன்.

கிழிந்துபோன பையா?

தமிழ் வரிவடிவத்தைக் கைவிட அதென்ன கிழிந்துபோன பையா? “வரிவடிவம் காலந்தோறும் மாறிவந்திருக்கிறது” என்கிறார். உண்மைதான். அது ஒரு வரலாறு. மக்களுக்கு இருப்பதைப் போல எழுத்துகளுக்கும் வரலாறு இருக்கிறது. தமிழ் முதல் எழுத்து - அ. அ-வின் முதுகில் ஒரு கோடு இருக்கிறது. இந்தி அ-விலும் இது போல் உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளின் முதல் எழுத்தில் இந்தக் கோடு இருப்பதாக மொழியியலாளர்கள் கூறுகின்றனர். ஆதிமனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டின் அடையாளம் இது எனச் சிலர் கருதுகின்றனர்.

எழுத்து என்பது வெறும் கோடா?

ஒரு கோடு சற்று நீள்வதற்கும் வளைவ தற்கும் வளைந்து மற்றொரு கோட்டைத் தொடுவதற்கும் பிடித்திருக்கும் ஆண்டுகளைப் பார்த்தால் - இந்த மாற்றத்தின் பின்னால் இருக்கும் தொடர்ச்சியான உழைப்பையும் சிந்தனையையும் புரிந்துகொள்ள முடியும். கைகழுவி உதறிவிட்டுப் போகக் கூடிய சொத்தா அது? இரண்டு வரிவடிவங்களையும் கற்பது சிக்கலா; சிரமமா? குழந்தைகளின் அறிவாற்றல், கற்கும் திறன்குறித்து அறியாத பேச்சு இது. இவர் முன்வைக்கும் யோசனை குழந்தையின் மீது கொண்ட அக்கறையில் உதித்ததா? இல்லை… இது ஒரு விதமான மேல்தட்டு மேதாவித்தனம். இந்த மேதாவித் தனம் புதிதல்ல. தமிழில் எஃப் (F) ஓசை இல்லை என்று சொல்லி ‘துக்ளக்’ இதழ், தமிழில் ஆங்கில எஃப் சேர்த்து எழுதித் தோற்ற கதை தமிழகம் ஏற்கெனவே அறிந்த ஒன்றுதான். பன்மையை அழித்து ஒரே ஒன்றைக் கொண்டாடும் வன்முறை இது. ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தீர்வு வரிவடிவத்தில் இல்லை. வாய்ப்புகளில் இருக்கிறது. ஆம், வாய்ப்புகள்தான் தீர்வு.

வாய்ப்பு வேண்டும்

கல்லூரி ஆங்கில வகுப்பறையில் மிரண்டு தடுமாறிய மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்த மூன்று மாதத்தில் - தெளிவான ஆங்கிலத்தில் ஆட்சியருக்கு அறிக்கை அளிப்பதைக் கண்டு வியந்திருக்கிறோம். ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குச் சென்ற ஆசிய, ஆப்பிரிக்க,லத்தீன் அமெரிக்க மக்களில் பெரும்பான்மையோர் ஆங்கில மொழி வல்லமையோடு அங்கு போக வில்லை. அங்கு போன சில மாதங்களிலேயே ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றார்கள். தமிழுக்கும் தேவை இப்படிப்பட்ட வாய்ப்புகள்தானே அன்றி, வரிவடிவத் திணிப்பு அல்ல!

- மாடசாமி, கல்வியாளர், மூத்த எழுத்தாளர் - தொடர்புக்கு: aruvi.ml@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்