சென்னையின் அடையாளங்களுள் ஒன்று சென்னைப் புத்தகக் காட்சி. தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் புத்தகக் காட்சியில் ஏராளமான வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். ஆண்டுதோறும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவற்றைக் களையும் வகையிலான ஏற்பாடுகளைக் கையாண்டும் புத்தகக் காட்சியை ‘தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்’(பபாசி) மேம்படுத்திவருகிறது. என்றாலும், ஒவ்வோர் ஆண்டும் பழைய பிரச்சினைகளுடன் புதிய பிரச்சினைகள் சேர்ந்துகொள்வது வாடிக்கையாகிவிட்டது.
அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தினாலே பெரும்பாலானோர் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்பதே யதார்த்தம். ஆனால், அந்த அடிப்படை வசதிகளில் பேணப்படும் கவனமின்மை வாசகர்களை வருத்தம் கொள்ளச் செய்துவிடுகிறது. கழிப்பிடப் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன. மேலும், கழிப்பிடத்தில் இரவில் சரிவர மின்விளக்குகள் எரிவதில்லை.
புத்தகக் காட்சியில் நூற்றுக்கணக்கான அரங்குகள் உள்ளபோது, அவற்றுக்குச் செல்ல முறையான வழிகாட்டி அவசியம். இம்முறை இதற்கான பிரத்யேக மொபைல் ஆப்பை பபாசி வெளியிட்டிருக்கிறது என்றபோதும், அனைவரும் இன்னும் மொபைல் ஆப் பயன்படுத்தும் நிலையை எட்டவில்லை. அரங்க வழிகாட்டியில் அரங்குகள் அகர வரிசையில் இல்லை என்பதால், அரங்குகளைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு வரிசையின் தொடக்கத்திலும் அந்த வரிசையில் இருக்கும் பதிப்பகங்களின் பட்டியலை முந்தைய புத்தகக் காட்சிகளில் வைத்திருப்பார்கள். இந்த முறை அந்தப் பட்டியல் இல்லை என்றும், இதனால் அரங்குகளைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது என்றும் வாசகர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். பணப் பிரச்சினையைக் கையாள ஸ்வைப்பிங் இயந்திரத்தையும் மொபைல் ஆப்பையும் பயன்படுத்த வசதி செய்யப்பட்டிருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை. ஆனாலும் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சினை இருப்பதால் பணப் பரிவர்த்தனைகளின் இடையில் பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடுகிறது என்கிறார் ‘புலம்’ பதிப்பாளர் லோகநாதன். இந்த நெட்வொர்க் சிக்கல் புத்தக விற்பனையை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துவிடுகிறது என்பதை அவர் கவலையுடன் குறிப்பிடுகிறார். வாசகர்கள் பணத்தைவிட கார்டுகளைப் பயன்படுத்தவே விரும்புகிறார்கள் என்பதால், அதில் சிக்கல் ஏற்படும்போது அவர்கள் புத்தகம் வாங்கும் எண்ணத்தை விட்டுவிடுகிறார்கள் என்கிறார் அவர்.
திருச்சியிலிருந்து இந்தப் புத்தகக் காட்சிக்கு வந்திருந்த வாசகர் தாமோதரக் கண்ணனிடம் பேசினோம். “புத்தகக் காட்சியில் மைதானம், போக்குவரத்து போன்ற ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஸ்வைப்பிங் இயந்திரம் அனைத்து ஸ்டால்களிலும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நிலைமை அப்படி அல்ல. மேலும், ரூ. 300-க்கு மேல் புத்தகங்களை வாங்கினால் மட்டுமே கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்ற விதியை சில ஸ்டால்கள் கூறுகின்றன. எந்த விலை கொண்ட புத்தகங்களை வாங்கினாலும் கார்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தால் சௌகரியமாக இருக்கும். ஸ்டால்களின் இடைவெளியில் முன்பெல்லாம் இருக்கைகளைப் போட்டிருப்பார்கள். இதனால் வயது முதிர்ந்தவர்கள் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். இந்த முறை அப்படி இருக்கைகள் போடப்படாதது சிரமத்தைத் தருகிறது. அதுபோல் குடிநீரும் வைக்கப்படவில்லை. புத்தகக் காட்சிக்கு உள்ளே காபியின் விலை ரூ.30 என்பது ஒரு அதிர்ச்சி என்றால் (அதுவும் சின்ன கப்), அது காபியா அல்லது டீயா என்பதைப் பகீரதப் பிரயத்தனத்துக்குப் பிறகே கண்டறிய வேண்டியதிருக்கிறது” என்கிறார்.
அதேபோல், “தரைவிரிப்பு பல இடங்களில் தடுக்குகிறது. தரைவிரிப்புக்கு அடியில் உள்ள பலகைகளும் முறையாகப் போடப்படவில்லை. வயதானவர்கள், குழந்தைகளெல்லாம் இதனால் இடர்ப்படுகிறார்கள். மேலும், சென்ற ஆண்டுகளில் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்துக்கு ‘நம்ம ஆட்டோ’வை ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்போது அதுவும் இல்லாததால் ஆட்டோ பிடிக்கவே மக்கள் அஞ்சுகிறார்கள்” என்று தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார் கிருஷ்ணன் என்ற வாசகர். எவ்வளவோ சிரமங்களுக்கு இடையேதான் பபாசி புத்தகக் காட்சியை வருடந்தோறும் நடத்திவருகிறது; பெரும்பாலான குறைகள் ஆண்டுதோறும் திரும்பத் திரும்பக் கூறப்படுபவை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்! அவற்றைக் களையும்போது புத்தகக் காட்சி இன்னும் மெருகேறும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago