தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்?

By சமஸ்

பொதுவாக, ஊடகவியல் வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லும் முதல் பாடமாக இது அமையும். “எது செய்தி? மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல; மாறாக நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி!” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த ‘மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல’ எனும் மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், அதுவும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது; ஆனால் ஐயா, இதுவும் ஒரு முக்கியமான செய்தி!” என்று அவர் ஊடக நிறுவனத்திடம் வாதிடுவார்.

எப்போது இப்படி ஒரு ஊடகரால் வாதிட முடியும் என்றால், அவர் சிந்திக்கும்போது. சிந்திப்பதற்கான நிதானத்தில் அவர் இருக்கும்போது. அதற்கான அவகாசம் அவருக்கு வாய்க்கும்போது. சதா ஓடிக்கொண்டிருப்பவர்களால் எப்படி சிந்திக்க முடியும்? தான் சிந்திப்பதற்கே நேரம் எடுத்துக்கொள்ளாதவர்களால், சமூகத்தை எப்படிச் சிந்திக்கச் செய்ய முடியும்?

1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி சுடப்பட்டபோது காலை 9.20 மணி. அடுத்த பத்தாவது நிமிஷம் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதே, அவர் மரணம் அடைவது நிச்சயமாகிவிட்டது. அகில இந்திய வானொலி அடுத்த ஒன்றரை மணி நேரம் கழித்தே, ‘இந்திரா சுடப்பட்டார்’ என்ற செய்தியை வெளியிட்டது. இந்திரா இறந்துவிட்டதை மருத்துவர்கள் 2.20 மணிக்கு அறிவித்தார்கள். அகில இந்திய வானொலியோ மாலை 6 மணிச் செய்திகளில்தான் அத்தகவலை வெளியிட்டது; கூடவே அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்றார் எனும் தகவலோடு. ஏனென்றால், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பிரதமரோ, முதல்வரோ உயிரிழக்கும்போது கூடவே அந்த அரசும் கலைந்துவிடுகிறது. நாட்டை வழிநடத்த அடுத்து ஒரு தலைமை தேவை. அதற்கான அவகாசத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். தவிர, சம்பவம் நடந்த வேகத்தில் செய்தி வெளியிடப்பட்டால், நாடு முழுக்க வெடிக்க வாய்ப்புள்ள கலவரங்களில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான அவகாசம் அளிக்கப்பட வேண்டும் (அடுத்த மூன்று நாட்களில் மட்டும் 3000 பேர் கொல்லப்பட்டார்கள்).

இந்தப் பிரக்ஞையும் சுயக்கட்டுப்பாடும் எப்போது சாத்தியம் என்றால், சிந்திப்பதற்கான அவகாசம் மூளைக்குக் கிடைக்கும்போதுதான் சாத்தியம். 2016 டிசம்பர் 4 மாலை ‘ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்’ எனும் தகவல் வந்தடைந்தது முதலாக டிசம்பர் 6 மாலை ஜெயலலிதாவின் சடலம் மண்ணுக்குள் இறக்கப்படுவது வரையிலான தமிழக ஊடகங்களின் அமளியை இங்கே நினைவுகூர்வோம். இரவு பகல் பாராமல் அப்போலோ மருத்துவமனையின் வாயிலிலேயே காத்துக் கிடந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் அங்கு குவித்த ஊடகங்கள் உச்சபட்சமாக அங்கு சாதிக்க விரும்பியது என்ன? நண்பர் சஞ்சீவி சொல்லிக்கொண்டிருந்தார், “இரவு பகல் பாராமல் செய்தியாளர்கள் வதைக்கப்படுகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து ஜெயலலிதா இறந்திருந்தால் அதற்குள் இரண்டு மூன்று காட்சி ஊடகச் செய்தியாளர்களின் உயிர் போயிருக்கும்” என்று. ‘முதல்வர் காலமானார்’ எனும் செய்தி மருத்துவர்களால் அறிவிக்கப்படுவதற்குப் பல மணி நேரங்கள் முன்னரே, தொலைக்காட்சிகள் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, திரும்பப் பெற்றது, வெளிப்படையாக ஒரு மரணத்துக்காகக் காத்துக் கிடந்ததன் அப்பட்டமான வெளிப்பாடுதானே?

அது ஒரு சந்தர்ப்பம். ‘பரபரப்பு வியாதி பார்வையாளர்களை மட்டும் பீடிப்பதல்ல; மாறாக நம்மையும் தின்றுகொண்டிருக்கிறது’ என்று ஊடக நிறுவனங்கள் உணர்ந்துகொள்வதற்கும்; நம்முடைய அன்றாட வாழ்க்கையையும் இயல்பையும் எவ்வளவு மோசமானதாக இன்றைய பணிக் கலாச்சாரம் மாற்றிக்கொண்டிருக்கிறது என்று ஊடகர்கள் உணர்ந்துகொள்வதற்குமான சந்தர்ப்பம்! ஊடகங்கள் துளி யோசித்தாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன அல்லது வாய்ப்புகளை உருவாக்கின. அடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டம். அதற்கடுத்து, ஆளும் அதிமுகவுக்குள் நடந்த பிளவும் அதிகாரச் சண்டையும்.

முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விலகிய நாள் முதலான 10 நாட்களாகத் தமிழக அரசு நிர்வாகத்தில் என்னென்ன நடந்திருக்கின்றன, என்னென்ன நடக்கவில்லை? தெரியாது. வரலாறு காணாத வறட்சிப் பாதிப்பு இப்போது தமிழக விவசாயிகளை எந்த நிலையில் தள்ளியிருக்கிறது? தெரியாது. மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களை மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்ட அடிப்படையில் மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) எழுதச் சொல்லும் மத்திய அரசின் முடிவிலிருந்து மாறுபட்டு, தமிழகச் சட்டப்பேரவை ஒரு சட்டம் இயற்றியதே, அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததா? தெரியாது. அடுத்து, பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வை அறிவித்திருக்கிறதே மத்திய அரசு, என்ன செய்யப்போகிறோம்? தெரியாது.

அரியலூர், சிறுகடம்பூரைச் சேர்ந்த பதினாறு வயது சிறுமி நந்தினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவமும் தொடர்ந்து, சென்னையில் ஏழு வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் எவ்வளவு துச்சமாக அணுகப்பட்டன? இதே சென்னையில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் எவ்வளவு பரபரப்பாக அணுகப்பட்டது? இதெல்லாம் நம் மனசாட்சியின் முன்னின்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். பிரச்சினைகள் அல்ல; அந்தந்த நேரத்தின் பரபரப்புக்கான தேவைதானே ஊடகங்களை வழிநடத்துகிறது?

தமிழகத்தின் வறட்சி தொடர்பில் ஒரு தொடரை ‘தி இந்து’வில் திட்டமிட்டோம். தொடர்ந்து, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடர்பில் தொடர் கட்டுரைகள் வெளியிடத் திட்டமிட்டோம். மக்களின் கவனம் முழுக்க அதிமுக உட்கட்சி சண்டையில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது அவை வெளியானால், எதிர்பார்க்கும் எந்தத் தாக்கத்தையும் சமூகத்தில் உருவாக்காது என்று கருதி இப்போது தள்ளிவைத்திருக்கிறோம். காட்சி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் முன்னத்திஏர்களாக உருமாறிவிட்ட நிலையில், மக்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்பப் பின்னத்திஏர்களாகப் போக வேண்டிய நிலைக்கு அச்சு ஊடகங்கள் இன்று தள்ளப்பட்டிருக்கின்றன.

பிரெஞ்சு சிந்தனையாளர் பியர் பூர்தியு ஒன்று சொல்வார், “காட்டுவதன் மூலம் மறைப்பது.” ஒன்றை மறைப்பதற்காக மற்றொன்றைக் காட்டுவது ஆளும் அமைப்புகளின் உத்தி. பரபரப்புக்காக ஊடகங்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி, மக்களின் கவனத்தையும் அதிலேயே உறைய வைக்கும்போதும் அதுவே நடக்கிறது. நாட்டின் ஏனைய முக்கியமான மக்கள் பிரச்சினைகள் பல இருட்டடிக்கப்படுகின்றன. மேலும், இவர்கள் திரும்பத் திரும்பக் காட்டும் அந்தப் பிரச்சினையிலும்கூடச் செய்தியைத் தாண்டிய உள் அரசியல் நோக்கி இவர்களால் விவாதத்தைக் கொண்டுசெல்ல முடிவதில்லை.

சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வந்த அடுத்த கணம் சசிகலா என்ன செய்யப்போகிறார், பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார், பழனிச்சாமி என்ன செய்யப்போகிறார் என்றுதான் ஊடகங்கள் நகர்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்ப்புக்குள்ளோ, இருபது வருஷங்களாக அது இழுக்கடிக்கப்படக் காரணமான இந்திய நீதித் துறையின் தாமதத்தின் பின்னுள்ள சங்கதிகளுக்குள்ளோ, ஜெயலலிதாவின் பிம்ப அரசியலின் பின்னிருந்த சக்திகள், பிம்ப அரசியல் மேலும் தொடர்வதால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பிலோ யாரும் நகரவில்லை. ‘உடனுக்குடன் செய்திகள்’ கலாச்சாரத்தில், உடனுக்குடன் விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுவதால், யூகங்களே விமர்சனங்கள் என்றாகிவருகின்றன. ஆக, மக்கள் நாள் முழுவதும் செய்தியைப் பார்த்தாலும் அரசியலை நோக்கி அவர்களை அது நகர்த்துவதில்லை; மாறாக செய்தியே ஒரு பொழுதுபோக்காகிவிடுகிறது. அரசியலையும் அது பொழுதுபோக்காக்கிவிடுகிறது.

ஃபேஸ்புக்கில், “இப்போதெல்லாம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ‘பிரேக்கிங் நியூஸ்’ ஏதும் வரவில்லை என்றால், கைகள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன” என்று எழுதியிருந்தார் நண்பர் ஒருவர். அது பொய் அல்ல. நம்முடைய கைகள் நம்மைத் தாண்டி ரிமோட் கன்ட்ரோலைத் தேடுகின்றன. பரபரச் செய்திகளைச் சதா நம் மூளைகள் தேடுகின்றன. ரிமோட் கன்ட்ரோலை நாம் இயக்குவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்; மாறாக, ரிமோட் கன்ட்ரோலே நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறது. நம்மை என்றால், பார்வையாளர்களை மட்டும் அல்ல; ஊடகங்களையும்தான்!

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்