மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மங்கள்

By சாரி

கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு கோபுரங்களுக்கு வரவில்லை. விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும் சொல்லவில்லை. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ரேடாரிலிருந்து விலகிவிட்டது. விமானத்தின் கட்டுமானத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் அப்படியே இரு துண்டுகளாக உடைந்திருக்கும் என்பது சிலரின் அனுமானம். விமானிகள் தவறு செய்திருக்கலாம்; பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்வோரும் உண்டு.

பொதுவாக, விமான விபத்துகள் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. விமானத்தில் எரிபொருள் தீர்ந்துபோவது, இயந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்படுவது, நடுவானில் மற்றொரு விமானத்தின் மீது மோதிவிடுவது, நடுவழியில் மலை அல்லது உயரமான கட்டிடங்கள் மீது மோதுவது, விமானி தூங்கிவிடுவது, விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டளைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விபத்தில் சிக்குவது, புயல் - மழையில் சிக்குவது, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வெடிவைத்துத் தகர்க்கப்படுவது என்று பல காரணங்களைப் பட்டியலிடலாம். ஆனால், விபத்து ஏன் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக எதுவுமே கிடைக்காமல் - ஏன் விமானமே சிக்காமல் - நடந்த விபத்துகள் பல உண்டு.

உலகைச் சுற்ற நினைத்தவர் பயணம்

அட்லான்டிக் கடலின் மீது பறந்து, உலகைச் சுற்றிவரப் புறப்பட்ட அமீலியா இயர்ஹார்ட் 1937 ஜூலை 2-ம் தேதி விமானத்துடன் காணாமல் போனார். அவருக்கு வழிகாட்டியாக பிரெட் நூனன் என்பவரும் விமானத்தில் உடனிருந்தார். மத்திய பசிபிக்கில் ஹௌலேண்ட் தீவுக்கு அருகில் அவருடைய விமானம் காணாமல் போனது. எவ்வளவோ தேடியும் அவரும் கிடைக்கவில்லை, விமானமும் சிக்கவில்லை. அமெரிக்க அதிபர் பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் உளவாளியான அவரை ஜப்பானியர்கள் சிறைப்பிடித்துவிட்டனர் என்றனர் சிலர். ஜப்பானியத் தீவில் மலை மீது விமானம் மோதி, இயர்ஹார்ட் மட்டும் உயிர் பிழைத்துக் கீழே விழுந்திருப்பார், மணல் நண்டுகள் அவரைத் தின்றிருக்கும் என்றனர் சிலர். விபத்துக்குப் பிறகு உயிர் தப்பிய அவர், நியூஜெர்சிக்குச் சென்று பெயரை மாற்றிக்கொண்டு ரகசியமாக வாழ்கிறார் என்றனர் சிலர். வேற்றுக்கிரக வாசிகள் அவருடைய விமானத்தை மறித்து, அவரைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் சிலர் நம்பினர்.

பெர்முடா முக்கோணம்

அமெரிக்க விமானப் படையில் புதியவர்களுக்குப் பயிற்சி தருவதில் அனுபவம் வாய்ந்தவர் சார்லஸ் டெய்லர். 1945 டிசம்பர் 5-ல், ஐந்து விமானங்களில் பயிற்சி விமானிகளை வழிநடத்திச் சென்றார். ஃப்ளோரிடா மாகாணத்தின் லாடர்டேல் கோட்டையிலிருந்து விமானங்கள் புறப்பட்டன. ஒன்றரை மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு, இளம் பைலட்டுகள் டெய்லரிடம் மன்றாடினர். தரையில் உள்ள எதுவுமே சரியாகத் தெரியவில்லை, தளத்துக்குத் திரும்பிவிடலாம் என்றனர். கடற்படைத் தளத்தை ரேடியோ மூலம் தொடர்புகொண்ட டெய்லர் தன்னிடமுள்ள இரு திசைகாட்டிக் கருவிகளும் பழுதாகிவிட்டன என்று அச்சத்துடன் கூறினார். விமான தளத்துக்குத் திரும்புவதற்குப் பதிலாக ஆறு விமானங்களும் திசை தவறி ஆளுக்கொரு மூலையாக எங்கோ பறந்தன. அப்போது பருவநிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. டெய்லர், ஐந்து பயிற்சி பைலட்டுகள் ஆகியோருடன் விமானப் படைக் குழுவினர் எட்டுப் பேரும் அந்த விமானங்களில் இருந்தனர். அவர்களுடைய கதி என்னவானது என்று பார்த்து வர உடனே அனுப்பப்பட்ட மற்றொரு போர் விமானமும் அதேபோலக் காணாமல் போனது. இந்த மர்மத்தைத்தான் ‘பெர்முடா முக்கோண மர்மம்’ என்கின்றனர். இன்றுவரை இந்த மர்ம முடிச்சு அவிழவில்லை. பெர்முடா பலி கொண்டது இத்துடன் ஓயவில்லை.

ஸ்டென்டெக் மர்மம்

ஆர்ஜென்டீனாவின் போனஸ் அயர்ஸ் நகரிலிருந்து சிலியில் உள்ள சான்டியாகோ விமான நிலையத்துக்கு 1947 ஆகஸ்ட் 2-ல் ரெஜினால்ட் குக் ஒரு விமானத்தை ஓட்டிச்சென்றார். ஆண்டீஸ் மலைத் தொடரின் மீது பறந்த அந்த விமானம், சான்டியாகோ போய்ச் சேரவே இல்லை. ஆனால், விமானி ‘மோர்ஸ் கோட்’ என்ற தந்தி மொழியில் ‘ஸ்டென்டெக்’ (STENDEC) என்றொரு தகவலை அனுப்பினார். அதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றனர். நாசவேலையால் விமானம் வெடித்தது என்றும் வேற்றுக்கிரகவாசிகள் தாக்கிவிட்டார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். பனிப் பொழிவுகளின் ஊடே பறந்தபோது, பனிக்கட்டிகள் அதை அழுத்தி மலையில் புதைத்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கப்பட்டது.

மீண்டும் பெர்முடா

அசோரஸின் சான்டா மரியா விமான தளத்திலிருந்து பெர்முடாவுக்கு 1948 ஜனவரி 30-ல் புறப்பட்ட அந்த விமானத்தில், இரண்டாவது உலகப் போரில் தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் சர் ஆர்தர் கானிங்காம் உள்பட 25 பயணிகள் அதில் இருந்தனர். அப்போது பருவநிலை சரியாக இல்லாததால், பலத்த காற்றில் சிக்கிவிடாமல் இருக்கக் குறைந்த உயரத்தில் பறந்து செல்ல முடிவுசெய்யப்பட்டது. இந்த விமானத்துக்கு வழிகாட்டி விமானம் ஒன்றும் முன்னால் பறந்தது. சுமார் 12 மணி நேரம் பறக்க வேண்டிய நீண்ட பயணம் அது. பின்னால் சென்ற விமானம் பாதையைவிட்டு விலகிப் பறந்தது. பெர்முடா செல்வதற்கு முன்னதாக பெருங்காற்றில் சிக்கியது. காணாமல் போனது. வழிகாட்டி விமானம் போய்ச் சேர்ந்துவிட்டது. பின்னால் சென்ற விமானத்தின் சிதைவுகளைக் கூடக் காணவில்லை.

இதேபோல, பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு 1949 ஜனவரி 17-ல் புறப்பட்டது அந்த விமானம். புறப்பட்டபோது நீலவானில் எந்த மழை மேகமும் இல்லை. காற்றிலும் ஏதும் கோளாறு இல்லை. விமானம் எந்தத் தொல்லையும் இல்லாமல்தான் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களுக்கெல்லாம் விமான நிலையங்களுடன் தொடர்புகொள்வதில் அடுத்தடுத்துப் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. 20 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் எங்கே போனது, என்ன ஆனது என்று எவருக்குமே தெரியவில்லை. சுமார் ஒரு வார காலம் தேடிப்பார்த்துவிட்டு, தன் முயற்சியைக் கைவிட்டது அரசு.

அட்லி மர்மம்

பெர்முடாவில் 1948,1949-ல் நடந்த இரு விபத்துகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டு விமானங்களுமே பி.எஸ்.ஏ.ஏ. நிறுவனத் தயாரிப்புகள். “போர்ப் பயிற்சி பெற்ற ஒரு நாசக்காரரே இந்த இரு விபத்துகளுக்கும் காரணம். இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர வேண்டாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார்” என்று பி.எஸ்.ஏ.ஏ. நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டான் பென்னட் குற்றம்சாட்டினார். இதிலும் மர்மம் விலகவில்லை.

வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல்

பொதுவாக, இப்படிப்பட்ட விபத்துகளின்போது நம்பக்கூடியதும் நம்ப முடியாததுமாகப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் ஒருபுறமிருந்தாலும், இன்னும் மர்ம விமான விபத்துகள் தொடர்வதன் மூலம் நமக்குச் சுட்டிக்காட்டப்படுவது ஓர் உண்மையைத்தான். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறிவிட்டதாக நாம் கூறிக்கொண்டாலும், அதன் போதாமை உள்ள வெற்றிடம் இன்னும் பெரியதாக இருக்கிறது என்பதே அந்த உண்மை!

- சாரி, தொடர்புக்கு: rangachari.v@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்