கும்பல் கொலைகள்: குற்றவாளிகள் யார்?

By வெ.சந்திரமோகன்

சில செய்திகளை அவ்வளவு எளிதாகத் தாண்டி வர முடிவ தில்லை. ரணமாக அறுக்கும் சில சம்பவங்கள் பற்றிய நினைவுகள் மனதைத் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் சமீபத்தில் ‘குழந்தைக் கடத்தல்காரர்கள்’ எனும் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்படியான ஒன்று. கண்களில் மரண பீதியும் மன்றாடலுமாகக் கையெடுத்துக் கும்பிடும் ஷேக் ஹலீம். ரத்தம் வழியும் அந்தப் படம். மனதைப் பிசைந்துகொண்டே இருக்கிறது.

அதே நாளில் ஜார்க்கண்டின் சிங்பம் மாவட்டத்தில் மேலும் மூன்று பேர் குழந்தைக் கடத்தல்காரர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டிருக் கிறார்கள். அந்தப் பகுதியில் குழந்தைக் கடத்தல்காரர்கள் உலவுவதாக வெளியான வாட்ஸப் வதந்திதான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று சொல்லப் பட்டாலும், அடித்துக் கொல்லப்பட்ட ஹலீம் கால்நடை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர் என்று இப்போது தெரியவந்திருக் கிறது. இதன் பின்னணியில் பசுப் பாதுகாவலர்கள் இருப்பதாகப் பேசப்படு கிறது. உண்மையில், குழந்தைக் கடத்தல் தொடர்பான எந்தப் புகாரும் வரவில்லை என்று மறுநாள் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள். ஆனால், கொலைவெறிக் கும்பல்களிடமிருந்து அப்பாவிகளை மீட்க போலீஸாரால் முடியவில்லை.

தொடரும் அச்சுறுத்தல்கள்

இவை ஒற்றைச் சம்பவங்கள் அல்ல. 2015-ல் உத்தர பிரதேசத்தின் தாத்ரி நகரில் வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்பட்ட அக்லாக் ஒரு தொடக்கம். குஜராத்தின் உனாவில் பசுவைக் கொன்று தோலுரித்ததாகச் சொல்லி தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மத்திய பிரதேசம் மந்த்சோர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சியைக் கொண்டுசென்றதாக இரண்டு முஸ்லிம் பெண்கள் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் நடத்திய தாக்குதல் என்று மிக நீண்ட பட்டியல் இது.

மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் இப்படியான கும்பல்கள் பலம் பெற்றுவிட்டன. ஹரியாணா, மகாராஷ்டிரம் என்று பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இப்படியான கும்பல்கள் தார்மிகப் பலம் பெற்றிருக்கிறார்கள். வெவ்வேறு வார்த்தைகளில் இதை மறுப்பதற்கு ஆட்கள் இருந்தாலும் உண்மை இதுதான். இல்லையென்றால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்றி ராத அஸ்ஸாமின் நாகாவ் மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னர் ‘கால்நடைத் திருடர் கள்’ எனும் பெயரில் இருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

தங்கள் அடிப்படைக் கொள்கையை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டும் இவர்களுக்கு பாஜக சார்பில் மறை முகமாகவும், சில சமயம் நேரடியாகவும் ஆதரவு வழங்கப்படுகிறது. சமீபத்தில் ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில், பசுக்களை வாகனத்தில் ஏற்றிவந்த பேலு கான் எனும் முதியவர் நெடுஞ்சாலையில் பலர் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்களை பகத் சிங்குடன் ஒப்பிட்டுப் பேசும் வலதுசாரித் தலைவர்கள் மிகுந்த அச்சத்தை ஊட்டுகிறார்கள். அந்த முதியவரை இழுத்துத் தள்ளி உதைக்கும் காட்சிகளை ஒரு முறை பாருங்கள். மனித உயிர்கள் பசுவை விட மலிவானவையா எனும் கேள்வி முகத்தில் அறையும்.

மனிதத்தின் மீதான அறை

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி களாகச் சித்தரிக்கவும் அதிகாரவர்க்கம் தயங்குவதில்லை. பேலு கானும் அவரது இரண்டு மகன்களும் கால்நடைத் திருடர்கள் என்று ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா கூறியிருந்தார். ஆனால், பேலு கானின் மகன்கள் மீது இப்படியான வழக்குகள் பதியப்பட்டு, விசாரணைக்குப் பிறகு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டார்கள் என்று பின்னர் தெரியவந்தது. அவர்கள் மீது பொய்ப் புகார் கொடுத்ததும் பசுப் பாதுகாவலர்கள்தான் என்பது வேறு விஷயம். இன்னொரு சம்பவத்தில் உத்தர பிரதேசத்தில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தி அதில் ஏறிக்கொள்ளும் ‘பசுப் பாதுகாவலர்’ ஒருவர், அருகில் அமர்ந்தபடி ‘பசுதான் எங்கள் தாய்’ என்று சொல்லச் சொல்லி ஓட்டுநரை அறைகிறார். தொடர்ந்து பல்வேறு முழக்கங்களை வலுக்கட்டா யமாகச் சொல்லச் சொல்லி அறை விழுந்துகொண்டேயிருக்கிறது. வசவுச் சொற்களும் தொடர்கின்றன. வாகனம் சென்றுகொண்டேயிருக்கிறது.

இணைய வன்முறை

இதுபோன்ற சம்பவங்கள் தரும் அதிர்ச்சியைவிட, இந்தக் காணொலிப் பதிவுகளுக்குக் கீழே காணக் கிடைக்கும் பின்னூட்டங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவை. “ஆம், அப்படித்தான் செய்வேன். அடிப்பேன், உதைப்பேன், எரிப்பேன்” என்று ஒருவர் எழுதியிருக்கிறார். இணைய வெளியில் நடக்கும் கும்பல் கொலைகள் என்றே இவற்றைச் சொல்லலாம்.இப்படியானவர்கள் சாலையில் இறங்கினால் கும்பல் கொலைகளுக்குக் குறைவே இருக்காது. அஸ்ஸாமில் கும்பல் கொலையில் ஈடுபடும் காட்சியைப் பார்த்தால் ஏதோ எல்லோரும் கூடித் திருவிழா நடத்துவதுபோல் இருக்கிறது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களை அடித்துக் கொல்வதையே கொள்கையாகக் கொண்ட ‘கு க்ளக்ஸ் க்ளான்’ எனும் வெள்ளையின வெறியர் கும்பல்கூட அடையாளம் தெரியாதபடி முகமூடி அணிந்திருப்பார்கள். ஆனால், இங்கு அத்தனை பேர் மத்தியிலும் படுகொலைகளை நிகழ்த்துபவர்களுக்கு கேமராக்கள் பற்றி எந்த அச்சமும் இல்லை. நமக்குக் காணக் கிடைக்கும் காணொலிகளில் பெரும்பான்மை யானவை, குற்றவாளிகளாலேயே ஆர்வத்தின் பேரில் எடுக்கப்பட்டவைதான்.

காஷ்மீரில் ராணுவ ஜீப்பின் முன் பகுதியில் இளைஞர் ஒருவரைக் கட்டி, 28 கிலோ மீட்டர் தொலைவு கொண்டுசென்ற சம்பவத்துக்குக் காரணமான ராணுவ மேஜர் லீத்துல் கோகயைப் பாராட்டி விருது வழங்குகிறது ராணுவம். ஒரு இளைஞரை மனிதக் கேடயமாக ராணுவமே பயன்படுத்துவது சரியா என்று கேட்க அது தயாராக இல்லை. காஷ்மீரில் நடக்கும் போரைப் புதுமையான வழிகளில் எதிர்கொள்வோம் என்கிறார் ராணுவத் தளபதி பிபின் ராவத். ராணுவத்துக்கு எப்போதுமே பக்கபலமாக இருப்போம் என்கிறார் அமித் ஷா. மறுபுறம், கும்பல்கள் என்னென்னவோ காரணம் சொல்லிப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்டவற்றை இறைச்சிக் காக விற்பதைத் தடை செய்து உத்தர விட்டிருக்கிறது மோடி அரசு. சந்தைக்கு மாடுகளைக் கொண்டுசெல்பவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட சிவப்பு நாடா நடைமுறைகள் நடைமுறைச் சாத்தியம் இல்லாதவை. அப்படியே வைத்திருந் தாலும், அதிகாரிகளை முந்திக் கொண்டு அவற்றைச் ‘சரிபார்க்க’வும், ‘விதிமீறலில் ஈடுபடுபவர்’களைத் தெருவி லேயே வைத்து அடித்துக் கொல்லவும் தயாராகிக்கொண்டிருக் கிறார்கள் பசுப் பாதுகாவலர்கள்.

எங்கே சென்றுகொண்டிருக்கிறது இந்தியா?

-வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்