வாசிப்பதால் என்ன கிடைக்கும்?

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி. ஆனால், நம் சமூகம் இப்படி நினைப்பதில்லை. பள்ளிப் படிப்பு வேலைக்கான உத்தரவாதம் என்று நம்புகிறார்கள்; ஆனால், வாசிப்பது வாழ்க்கைக்கான ஊட்டம் என்று யாரும் கருதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளி, கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வாசிக்கும் பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என்றால், முதலில் குடும்பத்தினரும், பிறகு பிறரும் இந்தப் பழக்கத்தை ஒரு பிறழ்வு என்றே கருதுகிறார்கள்.

காதலுக்கு எதிரியா?

இன்றைக்கு நம் சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை. கணவன் வாசிக்கும் பழக்கம் உடையவனாக இருந்தால், மனைவிக்கு அது பிடிப்பதில்லை. வீணான பழக்கம் என்று அவள் கருதுவாள். மனைவிக்குப் புத்தகங்களில் ஈடுபாடு இருந்தால், கணவன் அதைப் பழித்துப் பேசுவான். மனைவிக்குப் பயந்து, வாங்கிய புதுப் புத்தகத்துக்கு அழுக்கான செய்தித்தாளைத் தேடி எடுத்து, அட்டை போட்டு, மறைத்து எடுத்துச்செல்லும் கணவன்களை எனக்குத் தெரியும். அஞ்சலில் அனுப்ப வேண்டிய புத்தகமாக இருந்தால், தன் முகவரி அல்லாத வேறு ஒன்றைத் தந்து, புத்தகத்தை அங்கே அனுப்பும்படி சொல்லும் கணவன்களையும் தெரியும். அதேபோல் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் புத்தகம் வாங்க நினைத்து, கணவனைப் பார்க்கும் மனைவியைக் கண்ணால் ஜாடைசெய்து தடுக்கும் கணவன்களையும் பார்த்திருக்கிறேன்.

புத்தகங்களை விரும்பிப் படிக்கும் தம்பதியரை அரிதாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் குழந்தைகளும் பெரும்பாலும் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர் புத்தகங்களை வாசிக்கும்போது, குழந்தைகளின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கான சாத்தியங்கள் கூடுகின்றன.

தன்னல வாழ்க்கை

கிட்டத்தட்ட எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகளும் அக்கறைகளும் ஆர்வங்களும் தங்களைச் சுற்றியே அமைகின்றன. இவற்றில் எதுவுமே சமூகத்தின் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்குவதில்லை. ஆனால், பொதுவாக யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை. இதனாலேயே பல நடைமுறைச் சிக்கல்கள் அவரவர் வாழ்க்கையில் தோன்றுகின்றன. இப்படித் தோன்றும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சரிவரக் கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தைத் தாண்டிப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்க உதவுவதுதான் வாசிப்புப் பழக்கம். இது மிகக் குறுகிய நோக்கம் என்றாலும் பயனுள்ளது.

ஆனால், இதைவிட முக்கியமான உந்துதல் வாசிப்புக்குப் பின்னால் செயல்படுகிறது. அணுவில் தொடங்கி அண்டம் வரையிலான மாபெரும் இயக்கத்தைப் பற்றிய பிரமிப்பு; நம் உடலைப் பற்றி, நம் பரிணாம வளர்ச்சியைப் பற்றி, உலகைப் பற்றி, பிரபஞ்சத்தைப் பற்றிய பிரமிப்பு; நாம் அனைத்துடனும் தொடர்புகொண்டிருக்கிறோம், அந்தத் தொடர்பைப் பற்றிய பிரமிப்பு. நம் இயக்கம் முழுவதற்கும் அடிநாதமாக இருக்கும் ஒழுங்கைப் பற்றிய பிரமிப்பு. இந்தப் பிரமிப்புதான் அறிவியல் தொடங்கி இலக்கியம் வரை வெவ்வேறு வடிவங்களில் தோன்றி நம்மை ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பையும் பிரமிப்பையும் வாசிப்பு தக்கவைக்கிறது; நம் அன்றாட ஊட்டச் சக்தியாக அதை மாற்றுகிறது.

இலக்கியம் மட்டும் வாசிப்பு அல்ல

இலக்கியத்தை வாசிப்பது மட்டும் வாசிப்பு என்று பரவலாக மக்கள் நினைக்கிறார்கள். வாசிப்பு எந்தத் துறையைச் சார்ந்தும் இருக்கலாம். தன் தொழில் தொடர்பாக வாசிப்பதை நாம் வாசிப்பு என்று கொள்ள முடியாது. பல துறைப் புத்தகங்களையும் வாசிக்கும்போதுதான் ஒருவருடைய வாசிப்பு வளமானது என்று நாம் கூறலாம். இலக்கியம் ஒரு பகுதிதான். வரலாறு, பொதுமக்களுக்கான அறிவியல், வாழ்க்கை வரலாறு, அரசியல், இசை என்று வாசிப்பு பல துறைகளையும் உள்ளடக்கியிருக்கும்போதுதான் நம் உலகம் கொஞ்சம்கொஞ்சமாக விரிவடைகிறது.

முக்கியமான புத்தகங்கள்தான் வாசிப்பா?

ஒருவர் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் நினைவுவைத்துக்கொள்வதில்லை; ஒவ்வொரு நாளும் விசேஷமான நாளாக அமைவதில்லை. விசேஷ நாட்களை, நம்மைத் தொடும் தருணங்களை மட்டுமே நினைவில் இருத்திக்கொண்டு, அவற்றை நம் வாழ்க்கைப் போக்கின் முக்கியப் புள்ளிகளாகக் கொள்கிறோம். வாசிப்பும் அவ்வாறானதுதான். வாசிக்கும் எல்லாப் புத்தகங்களும் முக்கியமானவை அல்ல; ஆனால், அவற்றின் வழியேதான் முக்கியமான புத்தகங்களை, நமக்கு ஊட்டம் அளிக்கும் புத்தகங்களை, நாம் சென்றடைய முடியும்.

ஒருவர் முக்கியமான புத்தகங்களை மட்டுமே படித்துக்கொண்டிருப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இன்னொரு பார்வையில், சாதாரணப் புத்தகம் என்பதுகூட அற்பமானது அல்ல. ஒவ்வொரு புத்தகத்தின் மூலமும் உணர்வுகள், மொழி, பண்பாட்டு அடையாளங்கள், உலக நடப்பு என்று பல விஷயங்கள் நமக்குள் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. இதை நாம் பிரக்ஞைபூர்வமாக உணர்வதில்லை. இந்த அலைச் செறிவுகள்தான் மேலும் ஆழமான, பன்முகப்பட்ட எழுத்துகளை வாசிக்கும்போது அடிஉரமாகச் செயல்படுகின்றன.

புத்தகங்களை எங்கே வைக்க வேண்டும்?

வாசிப்பு நம் அன்றாட வாழ்க்கையின் அம்சமாக மாற வேண்டுமானால், எப்போதும் நம்மைச் சுற்றிப் புத்தகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கண்ணில் படும்படி புத்தக அலமாரியை அமைக்க வேண்டும். புத்தகங்களுக்கு அட்டை போட்டு அடுக்கக் கூடாது. புத்தகங்கள் நம் கண்ணில் படும்படி இருந்தால், நம்மை அறியாமலேயே நம் கவனம் அவற்றை ஆழ்மனதுக்குச் செலுத்தும். இது, நம்மைச் சுற்றி எப்போதும் இசையோ ஓவியங்களோ இருப்பது போன்றது. நாம் வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், இசையும் வண்ணங்களும் கலையின் ஒழுங்கும் நம்மை வந்து சேர்ந்துகொண்டேயிருக்கும். வாசிப்பு என்பது புத்தகங்களை ஒரு முறை வாசிப்பது மட்டுமல்ல; மிக முக்கியமான புத்தகங்களை நாம் அடிக்கடி வாசிக்க வேண்டும்.

இப்படி மீண்டும் வாசிப்பது முதல் பக்கத்தில் தொடங்கி வரிசையாகப் படித்துக்கொண்டுபோவது அல்ல. மீண்டும் வாசிப்பது என்பது விட்டுவிட்டு, சில நிமிடங்களே நாம் ஓய்வாக இருக்கும்போதுகூட நிகழ்வது. இப்படி மீண்டும் படிப்பதற்கு, நம் ஆழ்மனம் சில நேரங்களில் நம்மை உந்தும். இது பெரும்பாலும், நம் அன்றாட வாழ்க்கை உணர்வுகளின் போக்குடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட புத்தகங்களாகத்தான் இருக்கும் என்பது என் அனுபவம்.

வளமாகும் கணங்கள்

இந்த மாதிரியான நேரங்களில் நாம் நமக்கு மிக முக்கியமாகப் பட்டவற்றையே நாடுவோம், சில வரிகள், சில பத்திகள் போதும் நம்மை அப்புத்தகங்களுடன் இணைக்க. இது ஓர் இசை நம் மனதில் இசைக்கும் நேரங்களை ஒத்தது. அப்போது, நாம் படிப்பது தாகூரின் கீதாஞ்சலியின் சில வரிகளாக இருக்கலாம்; ஜே.கே-வின் சில வரிகளாக இருக்கலாம்; ந.முத்துசாமியின் கதைகளாக இருக்கலாம்; அன்டோனியோ மச்சாடோவின் கவிதை, டபிள்யூ.ஜி. செபால்டின் செறிவான மொழி, காம்யுவின் மனச் சலனப் பதிவுகள்… எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு முக்கியமான புத்தகமும் நம்முடன் நெருங்கிவந்து நம் வாழ்க்கையின் கணங்களை வளமாக்கச் செய்வதை உணர்வது அற்புத அனுபவம். புத்தக அலமாரியின் முன் நிற்கும்போது மனம் புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் நம் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

அவசியம் இருக்க வேண்டிய மூன்று புத்தகங்கள்

தமிழராகிய நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணில் படும்படி மூன்று புத்தகங்கள் எப்போதும் இருக்க வேண்டும். ஒன்று, நல்ல தமிழ் அகராதி; இரண்டாவது, ஆங்கில அகராதி; மூன்றாவது, அட்லஸ். இந்த மூன்றையும் தினமும் ஒரு தடவையாவது புரட்டிப் பார்ப்பது நாம் வாழ்கிறோம் என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வதாக அமையும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, வீட்டில் படிப்பதற்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட வேண்டும். பல லட்சங்கள் கொடுத்து குடியிருப்பை வாங்குகிறோம். ஆனால், குடும்பத்தில் படிக்க நினைக்கும் ஒருவர் அமைதியுடன் படிக்க ஏற்பாடு செய்வதில்லை. இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- எஸ். ராமகிருஷ்ணன், பதிப்பாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: rams.crea@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்