அறிவோம் நம் மொழியை: எழுவாயை எங்கே வைப்பது?

By அரவிந்தன்

இந்த வாக்கியத்தைப் பாருங்கள்: ‘இறந்துபோன சங்கரனின் தாயார் திருவல்லிக்கேணியில் வசித்துவந்தார்.’ இதில் திருவல்லிக்கேணியில் வசித்தது யார் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. இறந்தது யார் என்பது தெளிவாக இருக்கிறதா?

ஒரு வாக்கியத்தில் எழுவாயை எங்கே அமைப்பது என்பதில்தான் சிக்கல். இந்த உதாரணத்தைப் பாருங்கள்: ‘1995-ல் தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் திரைப்படமாக்கப்பட்டது’. ஜானகிராமன் 1964-ல் இந்த நாவலை எழுதினார். அது படமாக்கப்பட்டது 1995-ல். ஆனால் இந்த வாக்கியத்தைப் படிக்கும் ஒருவர் ஜானகிராமன் 1995-ல் நாவல் எழுதியதாகக் கருதிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாக்கியம், ‘தி.ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல் 1995-ல் படமாக்கப்பட்டது’ என்பதாக இருந்தால் எந்தக் குழப்பமும் வராது அல்லவா?

ஆண்டுகள், விவரங்கள், வர்ணனைகள் ஆகியவற்றை எங்கே பொருத்துவது என்பது முக்கியம். ‘சாகாவரம் பெற்ற பரசுராமரின் தந்தை ஜமதக்னி’ என்று எழுதினால், சாகாவரம் பெற்றவர் பரசுராமரா அவரது தந்தையா என்னும் குழப்பம் வரலாம். ‘பரசுராமர் சாகாவரம் பெற்றவர்; அவரது தந்தை ஜமதக்னி’ என்று எழுதலாம். அல்லது, ‘ஜமதக்னியின் மகன் பரசுராமர் சாகாவரம் பெற்றவர்’ என்று எழுதலாம். ‘மருத்துவர் பட்டம் பெற்ற தென்னரசுவின் தந்தை புவியரசு’ என்பதாகச் சமகால உதாரணமாக மாற்றியும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

இன்னொரு உதாரணம் பாருங்கள்: ‘இந்த அங்கீகாரம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஊக்கம்.’ எது தொடர்ந்து இயங்க வேண்டும்? அங்கீகாரமா? ‘தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான ஊக்க மருந்து இந்த அங்கீகாரம்’ என்று எழுதினால் எந்தக் குழப்பமும் இல்லை. இங்கே அங்கீகரம் என்னும் எழுவாய் இடம் மாறியதும் தெளிவு பிறக்கிறது.

‘அந்தக் கச்சேரிக்காக மயிலாப்பூர் சபா என்று அழைக்கப்பட்ட அரங்கத்தை ஒப்பந்தம் செய்தார்கள்.’ அந்தக் கச்சேரிக்காகத்தான் அது மயிலாபூர் சபா என அழைக்கப்பட்டதா? ‘மயிலாபூர் சபா என்று அழைக்கப்பட்ட அரங்கத்தை அந்தக் கச்சேரிக்காக ஒப்பந்தம் செய்தார்கள்’ என்று சொல்லும்போது பொருள் குழப்பமின்றித் துலங்குகிறது. எது, எங்கே, என்ன என்பனவற்றைக் கூடியவரையில் அருகருகே அமைத்துவிடுவதே நல்லது.

‘எல்லாமே சரியான தருணத்தில் மேற்கொள்வதில்தான் அடங்கி யுள்ளன’ என்ற வாக்கியத்தை ‘சரியான தருணத்தில் மேற்கொள் வதில்தான் எல்லாமே அடங்கி யுள்ளன’ என்று எழுதும்போது எது, என்ன, ஏன், எப்படி என்ற குழப்பங்கள் நேர்வதில்லை.

எல்லாம் சரி, இறந்துபோனது சங்கரனா அல்லது அவரது தாயாரா என்னும் வாக்கியத்தில் உள்ள குழப்பத்தை எப்படித் தீர்ப்பது என்று கேட்கிறீர்களா? விக்ரமாதித்தனாலும் பதில் சொல்ல முடியாத வேதாளத்தின் கேள்விபோலத்தான் இது. இந்த வாக்கியத்தை உடைக்காமல் இதற்குத் தீர்வு காண முடியாது (இறந்தது சங்கரன் என்றோ அல்லது அவரது தாயார் என்றும் அனுமானித்துக்கொண்டு இந்த வாக்கியத்தை ஒரே வாக்கி யத்தில் குழப்பமில்லாமல் எழுத முடியுமா என்று முயற்சிசெய்து பருங்கள்).

(மேலும் அறிவோம்…)

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்