மீண்டும் கரை தொடுமா காவிரி?

By தங்க.ஜெயராமன்

தண்ணீர் தன் வசம் என்று தெரியச்செய்வது அதிகாரத்தின் அடையாளம்

எங்கள் கோயிலில் “ஆனி பிறந்துவிட்டால் ஆறு கரை புரளும், ஆறெல்லாம் மீன் புரளும்” என்று பாடுவோம். இன்னும் சில நாட்களில் ஆனி பிறக்கும். அணைக் கதவு திறக்காது, ஆறும் கரைபுரளாது. காவிரியில் தண்ணீர் வரத்து இல்லை. காவிரிப்படுகை இருந்ததுபோல் இல்லை. கண்ணுக்குப் படுவதும், கணக்குக்கு எட்டுவதுமாகச் சில மாற்றங்கள். பயிரிடும் பரப்பு சுருங்கும். உற்பத்தி குறையும். வருமானம் குன்றும். ஆனால், கணக்குக்கு எட்டாத மாற்றங்களால் ஒரு கலாச்சாரம் தானாகவே இற்றுப்போகிறது. காவிரியோடு நாம் கொண்ட உறவை வேறு வகையில் சித்தரிக்கப் பழகுகிறோம்.

தெற்கிலிருந்து வடக்காகப் பயணித்தால் பாமனியாற்றிலிருந்து பழைய கொள்ளிடம் வரை உத்தரியத்தின் விசிறி மடிப்பை விரித்ததுபோல் அடுக்கடுக்காக ஆறுகள். கடக்கும்போதெல்லாம், இடமும் வலமுமாகத் திரும்பி ஆறு நிறைந்து ஓடும் நீரைப் பார்ப்போம். ஒண்டிக்கொண்டிருக்கும் மனித இனத்தின் சந்தடி ஓடிக்கொண்டேயிருக்கும் நீருக்குத் தொந்தரவு போல் தெரியும். கிழக்கிலிருந்து மேற்கே சென்றால், நமது சாலை ஒரு ஆற்றங்கரையிலிருந்து மறு ஆற்றுக்குத் தாவும், கரைவழியே ஏறிக் கொஞ்சம், இறங்கிக் கொஞ்சம் என்று பயணம். எப்போது பொழியுமோ.. எங்கே பொழியுமோ என்று எதிர்த்து வரும் நீர் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் பார் அடங்கியே ஓடும். இப்போது அதே கரையில் நாம் பயணித்தால், இது ஆறா, காட்டாற்றுப் பகுதியில் காணும் அறுத்தோடியா என்று ஐயம். நடந்து கடக்க வேண்டும் என்றால், சருக்கையில் இறங்கி மறுகரையின் செங்குத்தான ஏற்றத்தில் ஏற வேண்டும். ஆற்றின் வயிற்றில் பிடி மணல் இல்லை. ஈளையும் சுக்கானும் கரைந்து களியின்மேல் சாம்பலாகப் பூத்துக் கிடக்கிறது. தாம்பாளமாக இருந்த ஆறுகள் இவை. பொதிமணலில் மிதந்து ஓடியது தண்ணீர். இறங்கி நடந்தால், இட்ட அடியும் எடுத்த அடியும் மணலில் ‘கருக் கருக்’ கென்று வாங்கி, மறுகரை எட்டுவதற்குள் கால் ஓய்ந்துவிடும். சிலிர்த்து ஓடிய தண்ணீர் மணலைக் கொழித்துக் கொழித்து பூமணலாக, தூவாளியாக, பொன் மினுக்கும் கருமணலாக, பெருவட்டாக விட்டுச் சென்றிருக்கும். படிந்த மணற்பரப்பில் நடக்கும்போது அடிவைத்து உடைக்க மனம்வராது. இப்போது செருமி விளைந்திருக்கும் சீமைக் காட்டாமணிக்குள் ஒற்றையடிப் பாதையாக நெளிகிறது நதியின் தடம்.

மனத் திரையில் காவிரி

மாயூரத்தில் வண்டி ஏறும் ரயில் சிநேகிதர் அறிமுகத்துக்கான இரண்டே கேள்விகளுக்குப் பிறகு, “உங்கள் ஊருக்கு எந்த ஆறு பாசனம்?” என்பார். நீங்கள் சோழசூடாமணி, வீரசோழன், முடிகொண்டான், புத்தாறு, வளப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு என்று எதையாவது சொன்ன மறு கணமே, அவர் மனத்தில் நீங்கள் மூக்கு முழியோடு முழு உருவம் பெறுவீர்கள். அதுவரை அவருக்கு நீங்கள் பிடிபடாதவர்தான். வெளியூரிலிருக்கும் உள்ளூர்க்காரர் உங்களைக் கேட்கும் முதல் கேள்வி, “ஆற்றில் எவ்வளவு தண்ணீர் போகிறது?” என்பதாக இருக்கும். தேவாரம் பெற்ற தலங்களைக் காவிரிக்கு வடகரையில் இவை, தென்கரையில் இவை என்று காவிரியை வகிடாக்கித் தொகுத்தார்கள். அகத்திய காவிரி, காக்கா காவிரி, பழங்காவிரி, துலா காவிரி என்று அந்தந்த இடங்களில் ஆசைக்குப் பெயரிட்டுக் காவிரியைக் கொஞ்சியிருக்கிறார்கள். காவிரியின் கடைமடையில்தான் திருக்கண்ணபுரம். இருந்தாலும், கங்கைக்குமேல் நீர் மலியும் கண்ணபுரம் என்பார்கள். கற்பனையை, நினைவை, மனத் திரையை காவிரி நிறைத்திருந்தது. கண்கள் காணும் காவிரியைப் போல் மனத்திரையில் விரிந்திருந்த காவிரியும் வற்றிச் சுருங்கி வெறும் நீராதாரமாக, உற்பத்திக் காரணியாக, மாநிலங்களின் சர்ச்சைக்குக் காரணமாக மாறி இப்போது வேறொரு வெளிக்குள் வந்திருக்கிறது.

தண்ணீர் தன் வசம் என்று தெரியச்செய்வது அரசனின் அதிகாரத்துக்கு அடையாளம். ஆறும், மதகும், அணையும் சோழர்களின் கவனத்திலேயே இருந்ததற்கு இப்படிக் காரணம் காட்டுவார்கள். கரிகாலன் காலத்திலிருந்து நேற்றுவரை காவிரிப் பாசனம் அரசின் கையில். நாளைய நிலைமை வேறு. அரசால் பாசனத்துக்கு உறுதிதர இயலாது. முறைப்படுத்தவும் முடியாது. ஆறும் வாய்க்காலும், கன்னியும் பின்னிய காவிரிப் படுகையின் வலைப்பரப்பு வெள்ளத்தையும் தாங்காது வறட்சிக்கும் உதவாது என்பதாக மாறிக்கொண்டிருக்கிறது. தட்டுப்பாடு வரும்போது தேவை உள்ளவர்களின் மனநிலை என்னவோ அதுதானே மேலோங்கும்! மேல்மடைக்காரருக்கும் கீழ்மடைக்காரருக்கும் உள்ளூரில் உள்ள உறவு இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான உறவின் அசலான குறுஞ்சித்திரம். இது காவிரிப் படுகை விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும். விவரம் அறிந்தவர்கள் காவிரியை இனி நம்ப முடியாது என்கிறார்கள்.

பிரிக்கவில்லை, குலைத்துவிட்டோம்

ஆற்றில் வரும் தண்ணீர் வாய்க்கால் தலைப்பில் வாய்கூட வைப்பதில்லை. மிதந்து ஓட மணல் இல்லாததால் தண்ணீர் அறுத்து ஓடி ஆழமாக்கி ஆற்றைக் குறுக்கிவிட்டது. மதகுகளுக்குப் பின்புறமும் ஆறு ஆழமாகி ஓடவேண்டிய தண்ணீர் கிடைத்தண்ணீராகிறது. செப்பனிட முடியாது, புனரமைக்க வேண்டும். எப்போதாவது வரும் தண்ணீர் கடைமடையை அடைவதற்குள் முறை மாறி நின்றுவிடுகிறது. வாய்க்கால், கன்னி, காவல் என்று பொதுவில் இருப்பது எதுவுமே பயன்படாது. தனித்தனியாகத் துளைக் கேணியிலிருந்து, வாய்க்காலிலிருந்து, ஆற்றிலிருந்து இயன்ற வகையில் இறைத்துக்கொள்ள வேண்டும். நிலைமையின் நிர்ப்பந்தத்தால் ஒரே ஊரானாலும் நடவு, விதைப்பு, கோடைப் பயிர், குறுவை, சம்பா என்று தெறித்துச் சிதறிவிட்டது விவசாயம். ஒரு ஆண்டு இயன்றது மறு ஆண்டு இயலாது. சென்ற ஆண்டுபோல் இந்த ஆண்டு நடக்காது. அத்தைக்கு அத்தை, அவரவர்களாக ஒரு வழி காண வேண்டும். இது ஒரு பக்கம். மறுபக்கத்தில், அவரவர்களாக முன்பு செய்துகொள்ள முடிந்ததெல்லாம் இப்போது வணிக அமைப்புகள் வசம். எந்தப் பருவம், எந்தப் பயிர் என்று தெரியாத நிலையில் விதையை இருப்புவைக்க முடிவதில்லை. கடைச்சரக்காக வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நெற்களஞ்சியம் தனக்கு வேண்டிய அரிசியைத் தானே தயாரிப்பதில்லை என்ற முரண் பலருக்குத் தெரியாது. கிராமத்துக்குக் கிராமம் இருந்த அரவை மில்களே அநேகமாக அற்றுப்போய்விட்டன. விளையும் நெல் வெளிமாவட்டம் சென்று, அப்படியே களைந்து உலையில் போடும் அரிசியாகத் திரும்பிவருகிறது. நாற்றுவிடவும், நடவுக்கும், அறுவடைக்கும் இயந்திரங்கள். இது விவசாய வேலைகளை வர்த்தகமாக்கி, ஆங்காங்கே மையப்படுத்திவிடுகிறது. வண்டி, மாடு, ஏர் எல்லாம் விவசாயிகளுக்குச் சொந்தமாக இருந்ததுபோல் புதிய உற்பத்திச் சாதனங்கள் அவர்களுக்குச் சொந்தமல்ல. நிலவுடைமைக் காலம் கழிந்து அடுத்த கட்டமான முதலாளித்துவத்துக்கு விவசாயம் நகர்கிறது என்பது எளிமைப்படுத்திய விளக்கம். ஒன்றைப் பிரித்துத் திரும்பக் கட்டும்போது வரும் மாற்றங்களாக இவை தெரியவில்லை. பிரித்தவையல்ல, குலைத்துப்போட்டவை.

காவிரியை ஆளப் பிறந்தோமா?

காவிரிப் படுகைக்கான திட்டங்கள் அதன் சுற்றுச் சூழலுக்கும் விவசாயத்துக்கும் பொருந்துமா என்று பார்க்க வேண்டும். வயல்வரை புவிஈர்ப்பிலேயே தண்ணீர் ஓடுகின்ற சமவெளி இது. காலையில் தண்ணீர் கட்டிவைத்தால் மாலையில் இஞ்சிப்போகும் மண். காய்ந்தால் கலுங்குப்பட்டு எளிதில் சேறாகாது. கோடையில் பாலை, மழைக் காலத்தில் வெள்ளக்காடு. ஊர்களும், நகரங்களும் வெள்ளத்துக்கு ஒண்டிக்கொள்ள செயற்கையாகச் செய்த மேடுகள். நஞ்சையில் இங்கு கம்பி வேலிகளைப் பார்த்தால், வயலில் பெரிய இயந்திரங்களைப் பார்த்தால் அவை பாட்டுக்கு இடையில் விழுந்த பொருந்தா ஸ்வரமாகத் தெரிகிறது. பழமையின் மோகத்திலிருந்து விடுபட இயலாதவரின் ரசனைக் கோளாறு என்று சொல்வீர்களோ? பிற்காலச் சோழர்கள் கட்டிய பெருங் கற்கோயில்கள் இந்தப் பொருந்தாமையின் துவக்கம். காவிரி தன்போக்கில்கிளை விரித்து, ஓடி, ஊர்ந்து, கிடந்து, சுவறி தனதாக்கிக்கொண்ட நாடு. காவிரி ஒரு உடைமையல்ல. நாம் அதன் அங்கங்களில் ஒன்று. அங்கமாக இருந்த நாம் விலகி நின்று ஆளப் பிறந்தவர்களாக அதைப் பார்க்கிறோம். பழைய பண்பாடு இற்றுப்போனதற்கு இது அடையாளம். அணைகளைக் கட்டாமல் தண்ணீரை அதன் போக்குக்கு விட்டிருந்தால் என்ன என்று தோன்றுகிறது. வளர்ச்சியைப் பற்றிய நம் புரிதலும் அதன் போக்குமே மாறுபட்டிருக்கும். அணைகளைக் கட்டி ஆற்றைச் சிறை பிடிக்கிறோம். கண்ணம்பாடிக்கும், மேட்டூருக்கும் எண்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வேண்டிய மதகுகள் இருந்தன. ஆற்றின் போக்கில் தலையிட மனிதனுக்கு அவை அதிகம் இடம் தந்திருக்காது. அவை மட்டுமே இருந்தபோது பெரிய கேடு ஒன்றும் வந்ததாகத் தெரியவில்லை. அகத்தியரின் கமண்டலத்தில் காவிரி சிறையிருந்து மீண்டதாகப் புராணம். இப்போதும் சிறைமீண்டு, பொங்கிப், பிரளயமாக வரும். அணைக் கதவுகளை எப்போதுமே மூடாதீர்கள்!

- தங்க. ஜெயராமன், பேராசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்