இன்னும் 50 ஆண்டுகளில் எண்ணெய் வளம் முழுமையாகத் தீர்ந்துபோகும் என்கிறது பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம்
ஆற்றல் மூலங்கள், அவற்றின் உற்பத்தி, சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றைப் பற்றிச் சமூகம் எதிர்கொள்ளும் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உலகளாவிய வகையில் உணர வேண்டும் என்பதற்காகவே, ஆண்டுதோறும் அக்டோபர் 22 ‘உலக ஆற்றல் நாள்’ எனக் கொண்டாடப்படுகிறது. சமீப காலமாக காற்றாலைகள் மூலம் மின்உற்பத்தி, சூரியஒளி மின்உற்பத்தி போன்றவை இந்தியாவில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்படியொரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் டாக்டர் ஹரால்டு ஹியூன்சக் என்ற விஞ்ஞானி, ‘உலக ஆற்றல் பேரவை’ என்ற அமைப்பை 2008-ல் நிறுவினார். அது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயலாற்றுகிறது. அது லாபநோக்கமற்ற அமைப்பு.
உலகளாவிய வகையில் கையாளப்படும் பெட்ரோலிய உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளைப் பற்றி, அந்த அமைப்பு தீவிரமான விவாதங்களை நிகழ்த்துகிறது. உலகில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் வளக் கையிருப்பு இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பயன்படும், அது தீர்ந்த பிறகு மாற்றாக எவற்றையெல்லாம் பயன்படுத்த முடியும் என்ற விவாதங்கள் இப்போது தீவிரம் அடைந்துவருகின்றன. எதிர்காலத்தில் ஆற்றல் தேவைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்று ஏற்பாடுகளைக் கண்டறிவதில் விஞ்ஞானிகள் முழுமூச்சாக முனைந்துள்ளனர்.
50 ஆண்டுகளில் தீர்ந்துபோகும்
2014-ல் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம், உலகில் மிஞ்சியிருக்கிற பெட்ரோலியத்தின் அளவை 1,687.9 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிட்டது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) இன்றைய உற்பத்தி வேகத்தில் அது இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாகத் தீர்ந்துபோகும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.
அமெரிக்காவின் எண்ணெய் ஆய்வகத்தில் உள்ள இயந்திரப் பொறியாளர் கழகம், இன்று பூமியின் முக்கியமான எண்ணெய் வயல்களின் அடியில் 1.3 டிரில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில்தான் எண்ணெய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், இன்று நுகரப்படும் அளவில் அதைப் பயன்படுத்திக்கொண்டே போனால், இன்னும் 40 ஆண்டுகளில் அது தீர்ந்துவிடும் என்றும் கூறுகிறது. ஆனால், வேறுவிதமான ஆற்றல் மூலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 2040 வாக்கில் எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 15 மில்லியன் பீப்பாய்களாகக் குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) இன்று நுகரப்படும் அளவில் அது ஐந்தில் ஒரு பங்குதான். அந்தக் காலகட்டத்தில் உலகின் மக்கள்தொகை இன்று இருப்பதைப் போல இரு மடங்காகியிருக்கும். தொழில்துறையும் மேலும் விரிவடைய வாய்ப்புள்ளதால், எண்ணெயின் தேவையும் அதிகரிக்கக் கூடும்.
பாறை இடுக்குகளில் எண்ணெய்
பிற எண்ணெய் நிறுவனங்களோ, பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் மதிப்பிடுவதைவிட அதிகமாகவே நிலத்தடி எண்ணெய் இருப்பதாக வாதிடுகின்றன. அமெரிக்காவில் 44.2 பில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் எண்ணெய் இருப்பு உள்ளது என பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் மதிப்பிடுகிறது. இது பழைய மதிப்பீடுகளைவிட 26% அதிகம். அமெரிக்க ஆற்றல் தகவல் நிர்வாகம் தனது முந்தைய மதிப்பீட்டைவிட 15% அதிகமாக அதாவது, 33.4 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் நிலத்தடியில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
திடீரென நிலத்தடி எண்ணெய் இருப்பு அதிகரித்ததாகக் கூறுவதற்குக் காரணம்? மாக்கல் பாறைப் படிவங்களின் இடுக்குகளில் எண்ணெய் பெருமளவில் தேங்கியிருப்பது, அவற்றின் கிடைத்தளத்தில் துளையிட்டுச் சோதித்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. கிடைத்தளத்தில் துளையிடும் உத்திகள் மேலும் செம்மையாக்கப்படும்போது, நிலத்தடி எண்ணெய் இருப்பைப் பற்றிய மதிப்பீடுகள் உயர்ந்து இன்னும் பற்பல ஆண்டுகளுக்குத் தேவையான அளவில் எண்ணெய் இருப்பதாகத் தெரியவரலாம்.
ஆழ்கடல் அக்கறை
மாக்கல் பாறைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதில் உள்ள முக்கியமான சிக்கல் என்ன வென்றால், தற்போது அது லாபகரமானதாக இல்லை. அதை எடுப்பதற்குச் செலவாகும் ஆற்றல் - அதிலிருந்து கிடைக்கக்கூடியதைவிட அதிகமாக இருக்கிறது. வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற நிலை. மாக்கல் படலங்களில் இயற்கை வாயு மூலக்கூறுகள் பாறை இடுக்குக ளுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப் பிய்த்தெடுத்தால்தான் அவை தரைப் பரப்புக்கு வரும். அது சிக்கலும் செலவும் மிகுந்த செயல்முறை.
எண்ணெய் விலை வானளாவிய வகையில் உயர்ந்துகொண்டிருப்பதால், அரசுகளும் எண்ணெய் நிறுவனங்களும் முன்னர் கட்டுப் படியாகாதவை என்று கைவிடப்பட்ட முறைகளில் மீண்டும் கவனத்தைச் செலுத்திவருகின்றன. ஆழ்கடலின் தரைகளில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதில் அக்கறை அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்துக்கு வடக்கே உள்ள வட கடல் பகுதியில் எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்ட பின், அங்குள்ள எண்ணெய்க் கிணறுகளிலிருந்து சுமார் 40 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
கூடும் விலை உயர்வு
தற்போது மிச்சமுள்ள எண்ணெய் வளத்தில் மிகப் பெரும்பகுதி சவுதி அரேபியாவில் உள்ளது. அங்கு 261.8 பில்லியன் பீப்பாய்களும், இராக்கில் 112.5 பில்லியன் பீப்பாய்களுமாக எண்ணெய் புதைந்து கிடக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 97.8 பில்லியன் பீப்பாய்களும், குவைத்தில் 96.5 பில்லியன் பீப்பாய்களும், ஈரானில் 89.7 பில்லியன் பீப்பாய்களுமாக நிலத்தடி எண்ணெய் இருப்பு மதிப்பிடப்பட்டுள்ளது. வட கடல் பகுதியில் 4.9 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மிஞ்சியுள்ளது. சமீபத்தில் பிரேசில் நாட்டில் ஐந்து முதல் எட்டு பில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்படும் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவையெல்லாம் நீண்ட காலத்துக்கு எண்ணெய் கொடுத்துக்கொண்டிருக்காது. இப்போதே எண்ணெயை எடுப்பதற்கான செலவும் சிரமமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
1998-ல் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 10 டாலர்கள். இன்று அது 150 டாலர்களுக்கு மேல் உயர்ந்துவிட்டது. அதன் காரணமாக, மக்கள் போக்குவரத்துக்கும் சரக்குப் போக்குவரத் துக்குமான செலவும் வேகமாக உயர்ந்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துவருகிறது. உணவு தானியங்களை அறுவடை செய்ய உதவும் இயந்திரங்களுக்கான எரிபொருள் செலவு கடந்த ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
மாற்று ஆற்றல் மூலங்கள்
இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, மாற்று ஆற்றல் மூலங்களை விரைவாகக் கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகரித்த செலவு மட்டுமின்றி, சுற்றுச் சூழலுக்கு ஏற்படுகிற பாதிப்பும் கவலை உண்டாக்குகிறது. புதைபடிவ எரியன்களை எரிப்பதால், ஆண்டுதோறும் 21.3 பில்லியன் டன்கள் எடையுள்ள கரியமில வாயு உற்பத்தியாகிறது. அதில் சுமார் பாதி அளவைத்தான் தாவரங்களும் கடலும் உட்கவர் கின்றன. மீதமுள்ள கரியமில வாயு, உலகளாவிய வெப்ப நிலையை உயர்த்துவதுடன் தரைப்பரப்பு வெப்ப நிலையையும் அதிகமாக்குகிறது.
கடல் நீரிலிருந்தும் பாறைகளிலிருந்தும் ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன. அது வளிமண்டலத்தை மாசுபடுத்தாமல் ஆற்றலை வழங்கக்கூடிய எரியன்.
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago