மெரினா போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த வன்முறைகளில் போலீஸாரும் பங்கெடுத்த காட்சிகளை வாட்ஸ்அப்பிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பார்த்த பலர் அதிர்ந்துபோனார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால், காலங்காலமாகப் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகள், தொழிற்சங்க இயக்க அனுபவம் உள்ளவர்கள், ஜனநாயக இயக்கங்கள் சார்பில் வீதியில் இறங்கியவர்களுக்கு இது புதிதாகவே இருந்திருக்காது.
காவல் துறையின் வன்முறையை நான் நேரடியாகப் பார்த்தது 1991-ல். இராக்குக்கு எதிரான வளைகுடாப் போர் தொடுக்கப் பட்டதைக் கண்டித்து, சென்னை மாநகர அனைத்துத் தொழிற்சங்க ஐக்கிய மேடையின் சார்பில் கண்டனப் பேரணி, ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாகப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. முறைப்படி காவல் துறை முன் அனுமதி பெற்று, அண்ணா சாலை கலைக் கல்லூரி அருகிலிருந்து ஊர்வலம் புறப்பட இருந்தது.
பாதுகாப்பு வேள்வி?
அப்போது, எந்த முன்னறிவிப்பும் இன்றி, அமைப்பாளர்களை அழைத்துக் கூடப் பேசாமல், என்ன ஏதென்று சொல்லாமல், அனைவரையும் திடீரென்று கலைந்துபோகு மாறு காவல் துறை கட்டளையிட்டது. ஏனென்று கேட்கப் போனவர்களை நோக்கி காவல் துறையின் லத்திகள் உயர்ந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கையிலிருந்த கொடி கள், கம்புகள், தட்டிகள், பதாகைகள் பிடுங்கப்பட்டன. தொடர்ந்து தடியடி, கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சு!
அப்போதுதான் பார்த்தேன். ஸ்பென்சர் கட்டிடத்துக்கு எதிராக, ஒரு சிறிய கட்டிட முகப்பில், ஒரு சிறிய இடைவெளிக்குள் ஐம்பது பேரோடு கலந்து நின்று கொண்டிருக்கையில், ஆள் அரவமற்றுப் போயிருந்த அந்த நெடுஞ்சாலையில் எங்களுக்கு மிக அருகே... நேர் எதிரே, தட்டிகளைச் சுமந்துவந்திருந்த ஒரு புத்தம் புதிய சைக்கிள் ரிக்ஷாவைக் காவல் துறையினர் அடித்துத் துவம்சம் செய்தனர். எங்கள் கண்ணெதிரே அது திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. கேட்பாரின்றிக் கிடந்த ஒரு மோட்டார் சைக்கிளை இழுத்து வந்து, அதையும் தங்களது சட்ட - ஒழுங்குப் பாதுகாப்பு சத்திய வேள்வியில் போட்டு போலீஸ் காரர்கள் எரித்ததைப் பார்த்து அதிர்ந்து போனதை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது.
விடை கிடைத்தது
இன்றுபோல் அப்போதெல்லாம் தொலைக் காட்சி சேனல்கள் இல்லை. புகைப்படக்காரர்கள் எப்போதோ விரட்டி அடிக்கப்பட்டிருந்தனர். எந்த சாட்சியப் பதிவுகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டுவிடாதபடிக்கு, ஏன் இந்த வேலையைச் செய்தனர் என்ற கேள்விக்கு மறுநாள் காலைதான் விடை கிடைத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் படு பயங்கரமான ஆயுதங்கள், அமில பல்புகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும், நெடுஞ்சாலையில் கொடும்பாவி எரித்ததாகவும், பொது வாகனங்களுக்குச் சேதம் விளைவித்துத் தீ வைத்து எரித்ததாகவும் அவற்றை அடக்கவே காவல் துறையினர் லேசான தடியடிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர் என்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அமெரிக்கத் தூதரகத்தின் நிர்ப்பந்தத்தினால்தான் அந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்க முடியும் என்று பின்னாட்களில் புரியவந்தது. அப்போது ஆட்சியில் இருந்தது திமுக அரசு. நகைமுரண் என்னவெனில், அடுத்த சில நாட்களிலேயே சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு, 356-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டது. அதற்கு எதிராக வும் இதே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் வீதியில் இறங்கினர் என்பது வரலாறு!
ஆதிப் போராட்டம்
உலகத் தொழிலாளர் போராட்டங் களுக்கெல்லாம் ஆதிப் போராட்டம் என்று வருணிக்கத்தக்க மே தினப் போராட்ட வரலாறும் இத்தகையதுதான்! எட்டு மணி நேர வேலை என்ற உரிமை முழக்கத்துக்காக 1886 மே முதல் நாள் அன்று அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பல்லாயிரம் பேர் திரண்டபோது, தேவையற்ற வன்முறையைக் காவல் துறை உருவாக்கித் தடியடி நடத்தியது. அதைக் கண்டித்து, மே 3-ல் மீண்டும் ஒரு கண்டன இயக்கத்தைத் தொழிலாளர் நடத்தினர். அதிலும் காவல் துறை முதலாளிவர்க்கத்துக்கு ஆதரவான நிலையெடுத்து, தொழிலாளரைக் கடுமையாகத் தாக்கியது.
எனவே, பன்மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மே 4-ல், ‘ஹே மார்க்கெட்’ சதுக்கத்தில் தொழிலாளர் ஆவேசத்துடன் திரண்டபோது, சார்ஜெண்ட் ஒருவர் தாக்கப்பட்டதாக ஜோடனை செய்து, தொழிலாளர் போராட்டத்தில் கண்மூடித் தனமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர் காவல் துறையினர். அப்போது பெருகிய குருதியில் நனைத்தெடுத்த ஆடைகளிலிருந்தே தொழிலாளருக்குச் செங்கொடி உருவானது என்பார்கள்.
முன்பெல்லாம் காவல் துறை அத்து மீறல்களுக்குச் சாட்சியம் இருந்ததில்லை. துரதிர்ஷ்டவசமாக, மிக எளிய மக்களுக்கும் இன்று வசப்பட்டுவிட்ட செல்போன் தொழில் நுட்பம் அவர்களை அநியாயமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது!
- எஸ்.வி. வேணுகோபாலன்,
எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago