சென்னை நகரக் காவல் துறை கூடுதல் ஆணையரது மார்ச் 4-ம் தேதியிட்ட சுற்றறிக்கை அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது. டிசம்பர் 6-ம் தேதி உத்தரவின்படி, 60 நாட்களுக்குள் வீட்டு உரிமையாளர்கள் தங்களது குடித்தனக்காரர்களைப் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பாவிட்டால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 188-ன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அப்பிரிவின்படி, ஒரு பொது ஊழியர் சட்டப்படி வெளியிட்ட உத்தரவை மீறுபவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால், கூடுதல் காவல் துறை ஆணையர் ஒருவர் அத்தகைய உத்தரவைச் சட்டப்படி வெளியிட முடியுமா என்பதுதான் கேள்வி. இவ்வுத்தரவுகளை எதிர்த்துத் தொடுத்த பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு கொடுக்க மறுத்துவிட்டாலும், அவ்வழக்கின் இறுதித் தீர்ப்பில்தான் அதனது சட்டபூர்வத் தன்மை வெளிப்படும். இருப்பினும், நகரில் உள்ள குடித்தனக்காரர்கள்பற்றிய விவரங்களைச் சேகரிக்க காவல் துறைக்கு உரிமையுள்ளதா என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது.
சேமிப்புக் கிடங்காகும் காவல் துறை
தனி மனிதனின் சுதந்திரத்தைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காது. அவற்றையும் மீறும்படி தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது, தபால்களைத் தணிக்கைசெய்வது, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் பூர்வோத்திரங்களை விசாரிப்பது, அரசு மற்றும் காவல் துறையில் பணியில் சேர்பவர்களின் முந்தைய நடத்தை மற்றும் குணநலன்கள்பற்றிய விவரங்கள், விடுதிகளில் தங்கிச் செல்வோர்கள் பற்றிய முழு விவரங்கள், வெளிநாட்டவா்கள்பற்றிய முழுத் தகவல்கள் என்று தகவல் சேகரிப்புக் கிடங்காகிவிட்டது காவல் துறை.
அரசிடம் விவரம் இல்லையா?
காலனியாதிக்கக் காலத்தில், குற்றப் பரம்பரையினரது ஆண்களிடம் மட்டுமே கைரேகைகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டது வரலாறு. நாம் அதைக் காலனியாதிக்கத்தின் தவறு என்கிறோம். குடியாட்சியிலோ குடிமக்கள்பற்றிய பல தகவல்கள் அரசின் பல துறைகளால் பெறப்படுகின்றன. ஆதார் அட்டை வழங்கும்போது புகைப்படம் தவிர, கைரேகை மற்றும் ரத்தப் பிரிவு வரை தகவல் சேர்க்கப்படுகிறது. இத்தகவல்கள் அனைத்தையும் காவல் துறையினர் பெற்றுக்கொள்ளலாமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்பப் பங்கீடு அட்டைகள், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு ஆகியவற்றிலுள்ள தகவல்கள் அனைத்தும் அரசிடமே உள்ளது. தபால் பட்டுவாடா செய்யும் அஞ்சல் ஊழியர்களுக்கோ வீட்டில் இருக்கும் அனைவரது விவரங்களும் அத்துப்படி.
எங்கும் கண்காணிப்பு
பேரங்காடிகள், உணவு விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், தானியங்கிப் பணப்பட்டுவாடா மையங்கள், மருத்துவமனைகள், சாலைச் சந்திப்புகள் மற்றும் பல தனியார் நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அங்கு வருவோர், போவோர் அனைவரது புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவுசெய்துவருகின்றன. பல இடங்களில் “கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறீர்கள்” என்ற எச்சரிக்கைகூட இன்றி அவை சட்டவிரோதமாகப் பொருத்தப்படுகின்றன. விமான நிலையங்கள், மற்றும் பொது இடங்களில் குடிமக்களும், அவர்களது சாமான்களும் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அடிக்கடி நெடுஞ்சாலைகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முக்காடுச் சட்டம்
இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு சந்தேகப்படும்படி செல்லுபவர்களை வாரண்ட் இல்லாமலேயே கைதுசெய்ய காவல் துறைக்கு 1888-ம் வருடத்திய ‘தமிழ்நாடு நகர காவல் துறை' சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை முக்காடுச் சட்டம் என்றும் குறிப்பிடுவது உண்டு. மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், நகரத்தில் வேலை தேடி வந்த இளைஞர்கள், உணவு விடுதி ஊழியர்கள், நடைபாதைவாசிகள் என்று இச்சட்டத்தில் ஆயிரக் கணக்கில், கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கேவலங்கள் இந்நகரத்தில்தான் நடைபெற்றன. முதல்வர் எம்.ஜி.ஆர். தலையீட்டினால் முக்காடு கேஸுகள் போடுவது ஒழிந்தது. காவல் துறை நிலையாணைகளின்படி கேடிகளின் பட்டியல் (History Sheeters) காவல் நிலையங்களில் பராமரிக்கப்படுகின்றது. அப்பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் நுழைந்து எந்நேரமும் சோதனை செய்ய காவலர்களுக்கு அனுமதி உண்டு. இதையெல்லாம் பார்க்கும்போது நாம் ஒரு சுதந்திரக் குடியரசில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது.
சட்டப்படி அதிகாரம் பெற்ற செயல்கள் தவிர, சட்டத்துக்கு அப்பாற்பட்ட நபர்களும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளின் முழுத் தகவல்களும் பெற்றவர்களாய் உள்ளனர். சமீபத்தில், பத்திரிகை நிருபரொருவர் பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டுவதற்காக அனுமதி பெற்றிருந்தார். கட்டிட சாமான்களை உள்ளே கொண்டுவர பழைய சுற்றுச்சுவரை அவர் இடிக்க முற்பட்டபோது, அங்கிருந்த எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காரணம் கேட்டதற்கு, தங்களது கட்சி பிரச்சார வாசகங்கள் அச்சுவரில் எழுதப்பட்டிருந்ததால், சுவரை இடிக்குமுன் அதற்கு நஷ்டஈடு கேட்டிருக்கின்றனர். ஆளுங்கட்சி பிரதிநிதி ஒருவரோ, இடிப்பதற்கு முன் தன்னிடம் அனுமதி வாங்காததற்கு நஷ்டஈடு கேட்டிருக்கிறார். வீட்டைப் பழுதுபார்ப்பதற்கு செங்கல், மணல் மற்றும் கருங்கல் ஜல்லிகள் வீட்டினருகில் வந்திறங்கியவுடனேயே நகராட்சி உறுப்பினர்களின் பிரதிநிதிகள், கப்பம் கேட்பதற்கு அங்கே தவறாமல் ஆஜராகிவிடுகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் ஐயப்பன் மண்டலி நடத்துபவர்கள்வரை பகுதி மக்கள்பற்றிய விவரங்களை அறியாதவர்களே இல்லை. இத்தனை விவரங்களுக்கிடையே மற்றுமொரு தகவல் சேகரிப்பதன் உண்மை நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
ஸ்காட்லாந்து யார்டுடன் போட்டி
வீடுகளைப் பூட்டிக்கொண்டு வெளியூர் செல்லும் நபர்கள், காவல் துறையிடம் முன்தகவல் கொடுத்தால், இரவு ரோந்து செல்லும் காவலர்கள் அவ்வீடுகளின் மீது கண் வைத்திருப்பார்கள் என்று சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டதை நம்பி, தகவல் கொடுத்ததற்குப் பின்னும் வீடுகளில் உள்ள விலையுயர் பொருட்கள் களவாடப்பட்டதனால் யாரும் அவர்களை நம்புவதில்லை. பூட்டுடைத்து வீட்டுப் பொருட்கள் களவாடப்பட்டதுகுறித்த ஆயிரக் கணக்கான புகார்கள் இன்னமும் புலனறியப்படவில்லை. இப்பட்டியலில், புதிதாகச் சேர்ந்திருப்பவர் இந்திரா நூயி. பன்னாட்டுக் குளிர்பானமான ‘பெப்சி கோலா’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கே இந்தக் கதி. கடந்த வாரம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நடராஜன், அபிராமபுரத்தில் உள்ள தனது வீட்டில் அத்துமீறி இருமுறை வெளியாட்கள் நுழைந்துள்ளனர் என்று புகார் கூறியுள்ளார். அவரது வீட்டில் யாரும் வாடகைக்குக் குடியிருக்கவில்லை. இதற்கு காவல் துறை என்ன பதில் சொல்லும் என்று தெரியவில்லை.
இங்கிலாந்து நாட்டின் குற்ற நுண்ணறிவுத் துறை ‘ஸ்காட்லாந்து யார்டின்’ திறமையை உலகமே பாராட்டும். தமிழகக் காவல் துறையினர் அடிக்கடி தங்களை அதற்கு இணையானவர்கள் என்று மார்தட்டிக்கொள்வது உண்டு. துப்புத்துலக்காத குற்றங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளதனால், காவல் துறையினரிடம் துணிந்து தகவலளிக்க குடிமக்கள் தயாரில்லை என்பதே உண்மை. இந்தியச் சான்றியல் சட்டத்தின் பிரிவு 24-ன்படி காவலரிடம் கொடுக்கும் வாக்குமூலம் சட்டப்படி செல்லாதென்று கூறப்பட்டுள்ளதில் இருந்தே காவல் துறைபற்றிய சட்டத்தின் நம்பகத்தன்மை வெளிப்படும்.
ஜனநாயக அடிப்படை
அமெரிக்க நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது திருத்தத்தின்படி, மக்களின் சுதந்திரத்தையும் இருப்பிடம் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் அவர்களது வீடுகளில் காவல் துறையினர் உரிய உத்திரவின்றி எந்தச் சோதனைகளையும் (அ) பறிமுதல்களையும் செய்ய முடியாதென்று கூறப்பட்டுள்ளது.
எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இல்லாவிட்டாலும், இங்கிலாந்து நீதிமன்றம் ‘ஒவ்வொரு குடிமகனின் வீடும் அவர்களது கோட்டையும் பாதுகாப்பு அரணுமாகும்' எனத் தீர்ப்பளித்துள்ளது.
குடிமக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது அதன் புனிதத்தைக் கெடுக்கும் செயல் என்றும் கூறியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன்படி, ஒவ்வொரு குடிமகனின் தனிமனிதச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அச்சுதந்திரம் சட்டப்படியான நடவடிக்கைகளின் மூலமே பறிக்கப்படும் என்ற உத்தரவாதமும் உள்ளது.
1975-ல் கோவிந்த் என்பவர் தொடுத்த வழக்கில் அளித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பிகள் இந்தியாவை ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக்க விருப்பப்படவில்லை என்பது நமது சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரத்தைப் படித்தாலே விளங்கும் என்று கூறியது. கேடிகள் பட்டியலில்கூட உரிய காரணமின்றி பெயர்கள் சேர்க்கப்பட்டால், அதில் நீதிமன்றங்கள் குறுக்கிடும் வாய்ப்புண்டு என்று 1981 மலக்சிங் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
காவல் துறை அதிகாரி ஒருவர் தான் சந்தேகப்படுவதற்குத் தக்க காரணங்கள் இருக்கிறதென்று பதிவுசெய்தால் மட்டுமே ஒருவரைக் கேள்வி கேட்கவும், அவரது இருப்பிடத்தை சோதனை செய்யவும் முடியும். இப்புதிய உத்தரவின்படி நகரத்தில் உள்ள குடித்தனக்காரர்கள் அனைவரையும் சந்தேகப்படும்படியான போக்கு உள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், காவல் துறை தேவையற்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள முற்படுவதற்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை எனத் தெளிவாகும்.
புதிய அதிர்ச்சி
சென்னை நகரத்தில் வாடகை வீடுகளுக்காக அலைபவர்கள் ஆயிரக் கணக்கில் உண்டு என்பதைப் பத்திரிகைகளின் வரி விளம்பரங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். வீட்டை வாடகைக்கு விடுபவர்கள்கூட பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே குடித்தனக்காரர்களைக் குடி அமர்த்துகின்றனர். இதுதவிர, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னும் வீட்டைக் காலி செய்யவில்லை என்றால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் வீட்டுக்குச் சொந்தக்காரர் 5,000 ரூபாய் செலுத்திவிட்டு, அங்குள்ள காவலர்கள் உதவியுடன் குடித்தனக்காரரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற காவலர்களுக்கு மேலுமொரு புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இன்னமும் சென்னை மாநகரத்தில் 41% மக்கள் குடிசைப் பகுதிகளிலும், நடைபாதைகளிலுமே வசிக்கின்றனர். இப்படி லட்சக் கணக்கான குடித்தனக்காரர்களைப் பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொண்டபின், அவற்றின் உண்மைத்தன்மையை அறிவதற்கென காவல் துறையினரிடம் எவ்வித உள்கட்டமைப்புமில்லை. எனவே, இது ஒரு வெட்டிவேலை. காவல் துறையினர் தங்களது நுண்ணறிவிப்புத் திறமையைப் பெருக்கி, தினசரி ரோந்துகளை முடுக்கிவிட்டு, ஏற்கனவே உள்ள தகவல்திரட்டுகளை உபயோகப்படுத்தி, குற்றப் புலனாய்வுகள் செய்ய முற்பட்டாலே பல குற்றங்களுக்குத் தீர்வுகாண முடியும்.
50 வருடங்களுக்கு முன் காவல் துறையினர், தங்களது துப்புத்துலக்கும் திறமைகளை விளக்கும் வண்ணம் ஒரு செய்திப் படமெடுத்துப் பொதுஇடங்களில் திரையிட்டனர். அப்படத்தின் பெயர் ‘உங்கள் நண்பன்’. காவல் துறை குடிமக்களின் நண்பனா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை!
சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago