நீங்கள் எல்லோருக்குமான பொது இயக்கமாக விசிகவை முன்னிறுத்துகிறீர்கள். சமூக நல்லிணக்கம் பேசுகிறீர்கள்.எவ்வளவோ இடங்களில் உங்கள் கட்சியினரின் சுவர் விளம்பரங்களில், ‘அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்; திமிறி எழுவோம், திருப்பி அடிப்போம்’ போன்ற வாசகங்களை அரிவாள் படத்துடன் சகஜமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளச் சொல்கிறீர்கள்?
25 ஆண்டுகளுக்கு முன் அந்த வாசகங்களை எழுதியவனே நான்தான். ‘அடங்கமறு… அத்துமீறு’ என்கிற முழக்கங்களை எழுதியபோது ஒரு சாதிய விடுதலை முழக்கமாக நினைத்தே எழுதினேன். அடிப்படையில் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான முழக்கங்களே அவை. அதை எழுதியவன் ஒரு தலித் என்பதாலேயே இன்று அவை தலித் அல்லாதோருக்கு எதிரான முழக்கங்களாகப் பார்க்கப்படுகிறது என்றால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? அதேசமயம், இப்படி அரிவாள் படங்களோடு அவற்றை சுவர் விளம்பரங்களில் வரைவார்கள் என்பது நாங்கள் எதிர்பார்க்காதது. நீங்கள் குறிப்பிடுவது உண்மை. கடந்த காலத்தில் தன்னியல்பாகப் பல இளைஞர்களிடம் இப்படியான வெளிப்பாடு வந்தபோது எனக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. அதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. அவ்வாறு விளம்பரங்கள் எழுதுவதோ, துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் அச்சிடுவதோ கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் அறிவுறுத்தியிருக்கிறோம். இன்றைக்கு எங்கள் இயக்கத்தில் அப்படியான தொனியில் யாரும் எழுதுவதில்லை.
சாதி ஆணவக் கொலைகளின்போது பரப்பப்படும் பல விஷயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. உதாரணமாக, உடுமலை சங்கர் கொலைக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் சிலர், ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிப்பிட்டு
‘இனி எங்கள் சாதியைச் சேர்ந்த ஆண்களை வெட்டுவோம், பெண்களைக் கட்டுவோம் என்று பேசினால், இப்படித்தான் வெட்டப்படுவீர்கள்’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இப்படியான சொல்லாடல்கள் தலித்துகள் மத்தியில் இருக்கின்றனவா? இதற்குப் பின்னால் விசிக இருக்கிறதா?
மிக அபத்தமான, ஆபத்தான, அபாண்டமான அவதூறு இது. எந்தவொரு குறிப்பிட்ட சாதியையும் இழிவுபடுத்தும் வகையிலோ, ஆத்திரமூட்டும் வகையிலோ நானோ விசிகவோ பேசியதில்லை. தலித்துகள் அப்படிப் பேசும் இயல்பினரும் இல்லை. விசிகவை தலித் அல்லாதோர் மத்தியில் ஒரு பொது எதிரியாகக் கட்டமைக்கும் வேலையைப் பலர் இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான பேச்சுகளுக்கும் அவதூறுகளுக்கும் பின்னே நிறைய அரசியல் சதிகள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியே இது. சக சமூகங்களின் இணக்கத்தை எதிர்பார்ப்பவர்கள் நாங்கள்; வெறுப்பைப் பரப்பும் காரியத்தில் எப்படி ஈடுபடுவோம்?
சமூகங்களிடையேயான இணக்கம் தொடர்பாகத் தொடர்ந்து பேசுகிறீர்கள். சாதி ஒழிப்புப் போராட்டங் களைத் தாண்டி ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கத்துக்காக எடுக்கக் கூடிய முயற்சிகளில் தலித் இயக்கங்கள் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகின்றன? நீங்கள் இதைக் கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா?
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். தலித்து களால் பிற சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியலைக் கையாள முடியாது. இயல்பிலேயே அதற்கு வாய்ப்பில்லை. பிற சமூகத்துக்கு எதிராகப் பேசுவது, செயல்படுவது என்பது இந்தக் கட்டமைப்பில் இயலாத ஒன்று. இங்கே நடப்பது என்ன வென்றால், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதே நல்லிணக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. தலித் வெறுப்பு கூடாது, தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கூடாது என்று பேசுவதும், செயல்படுவதுமே நல்லிணக்கத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு அரசியல் கட்சியானது ஏனைய அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படுவது என்கிற அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியும், பேண முடியும். விசிகவைப் பொறுத்தவரையில், எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரான வெறுப்பு அரசியலை ஒருபோதும் முன்வைத்ததில்லை. சமூக நல்லிணக்கத்துக்காக எந்த நிலைக்கும் நாங்கள் செல்லத் தயாராக இருக்கிறோம். கடந்த காலத்தில் பாமகவுடன் நாங்கள் முயற்சித்த உறவுகூட ஒரு உதாரணம். உண்மையில், பலராலும் நாங்கள் கட்டம் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதே யதார்த்தம்.
சாதியப் பிரச்சினைகளில் பெரும்பாலும் தலித்துகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், சில இடங்களில் தலித்துகள் தரப்பிலும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படியான தருணங்களில் ஏனைய சமூகங்கள் ஒரு தலித்தின் தவறை வரலாற்றுப் புரிதலின் அடிப்படையில் அணுக வேண்டும் என்பது சரி. நீங்கள் உள்ளுக்குள் அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறீர்களா? இதுபோன்ற சூழல்களில் உங்கள் தோழர்களிடம் நல்லிணக்கம் சார்ந்து எப்படிப் பேசுகிறீர்கள்?
ஒரு தலித் தவறிழைக்கும்போது, அதைக் கண்டிக்காமல் நாங்கள் கடந்து போகவே முடியாது. இது தவிர்க்க முடியாத ஒரு கடமை. எதற்கும் கட்டுப்படாமல் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்றிருந்தால், மிக மோசமான ஒடுக்குமுறை இந்தச் சமூகத்தின் மீது விழும். ஒரு தலித் இளைஞன் தவறு செய்தால், அவன் மீது காவல் துறையில் புகார் கொடுக்கலாம். சட்ட நடவடிக்கைகள் எடுக்க முயற்சிக்கலாம். ஆதிக்க சாதிகளைப் பொறுத்தவரையில் தலித் பிரச்சினைகளில் அவர்கள் காவல் துறையை நாடுவதே இல்லை. எடுத்த எடுப்பிலேயே அவர்களாகவே தண்டனையைத் தீர்மானித்துவிடுவார்கள். அவ்வளவு மோசமான சாதிய சமூக இறுக்கம் இங்குள்ளது. இந்தச் சூழலில் தலித்துகள் ஒரு அத்துமீறலில் ஈடுபட்டால், நாங்கள் எப்படி அதை வேடிக்கை பார்த்திருக்க முடியும்? தன்னியல்பாகவே அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டிய, கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்திருக்கிறோம்; உணர்த்துகிறோம்.
விசிக கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுகிறதா? கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும்கூடச் சொல்லப்படுகிறது…
இங்கே கட்டப் பஞ்சாயத்து செய்வதற்குக்கூட ஒரு சமூகப் பின்னணி தேவை என்பதுதான் யதார்த்தம். அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் ஆதரவும் அதற்குத் தேவை. சமூகப் பின்னணி இல்லாமல், அரசியல் செல்வாக்கு இல்லாமல், அதிகாரிகளின் துணை இல்லாமல் இப்படிப்பட்ட கட்டப் பஞ்சாயத்துகளில் எவராலும் ஈடுபட முடியாது. இயல்பாகவே தலித்துகளுக்கு இந்தப் பின்னணி எதுவும் கிடையாது. உழைத்துச் சம்பாதித்து வாழ வேண்டும் என்று கருதுகிற ஒரு பொது ஒழுக்கத்தை நீங்கள் தலித் மக்களிடம் பார்க்க முடியும். குறுக்குவழியில் சம்பாதிக்க இயல்பிலேயே இவர்கள் அறிந்திருக்கவில்லை. விசிக தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பொருளாதாரரீதியாகக் கடுமையான அழுத்தத்தைச் சுமந்தே அரசியலில் நீந்திவருகிறோம். உண்மையில், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் பெரிய பெரிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பெரிய சாதிப் பின்னணியைக் கொண்டவர்கள், அரசிலும் அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்கள். இது ஊரறிந்த உண்மை. நாங்கள் செய்வதெல்லாம் தலித்துகள் எங்கே ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே அவர்களுக்குத் துணையாகக் கேள்வி கேட்பது. விசிக மீது திட்டமிட்டுப் பரப்பப்படும் அபாண்டமான பழிகளில் இதுவும் ஒன்று. கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களே இதன் பின்னணியில் இருக்கிறார்கள்.
ஒருபுறம் அம்பேத்கர், ஒருபுறம் பிரபாகரன். உங்களிடம் சித்தாந்தக் குழப்பம் இருக்கிறதோ? எதற்காகக் கேட்கிறேன் என்றால், ஒரு இயக்கம் முன்னிறுத்தும் வரலாற்றுப் பிம்பங்கள் அந்த இயக்கத்தின் அணுகுமுறையோடு மறைமுகத் தொடர்புடையது. காந்தியுடன் எவ்வளவோ முரண்பட்டாலும்கூட அம்பேத்கர் சத்தியாகிரக வழியையே போராட்ட வழியாகக் கொண்டிருந்தார். பிரபாகரனோ ஆயுதத்தின் மூலமாகவே எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று நம்பியவர்…
குழப்பம் எல்லாம் ஒன்றுமில்லை. அம்பேத்கர் ஒரு போராளி. பிரபாகரன் ஒரு போராளி. இருவரின் வழிமுறைகளும் வெவ்வேறாக இருக்கலாம். அடிப்படையில் ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் மூன்றையும் எதிர்த்துப் போராடியவர்கள் என்பதே வரலாறு.
அம்பேத்கர் வாழ்ந்த காலத்தைவிடவும் இப்போது நாளுக்கு நாள் அவர் விரிந்து பரவ முக்கியமான காரணம், ஜனநாயக அரசியல்மயப்படுத்தப்பட்ட போராட்டப் பாதையை அவர் தேர்ந்தெடுத்தது. கையில் ஆயுதம் வைத்திருக்கிறோமா காகிதம் வைத்திருக்கிறோமா என்பதல்ல; நெகிழ்வுத்தன்மையற்ற அணுகுமுறை சமாதானத்தை அடைய உதவுவதில்லை என்பதையே வரலாறு நமக்குச் சொல்கிறது. உங்களுடைய அம்பேத்கர்-பிரபாகரன் முரண்பாட்டை சாதாரணமாகக் கடக்க முடியவில்லையே…
பிரபாகரனின் கால் நூற்றாண்டுப் போராட்டமே உள்நாட்டைத் தாண்டி விவாதிக்கப்படாத ஈழத் தமிழர் பிரச்சினையைச் சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. அனைத்துலக நாடுகளும் விவாதிக்கும் பிரச்சினையாக அதை உருமாற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒடுக்கப்படும் ஒவ்வொரு சமூகமும், தனக்கேற்ற போராட்டப் பாதையை இயல்பாகத் தேர்ந்தெடுக்கும். இந்தியாவில் அப்படித்தான் தலித் சமூகம் அம்பேத்கரியப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நான் முன்னரே சொன்னதுபோல, போராட்டம் என்பது தீர்வை நோக்கிச் செல்லும் வழிதானே தவிர, போராட்டமே தீர்வாகிவிடாது. எந்த வடிவப் போராட்டத்துக்கும் இது பொருந்தும். நெகிழ்வுத்தன்மையும் சமூகங்களிடையேயான இணக்கமான சூழலுமே சமாதானத் தீர்வை உருவாக்கும் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
ஒருகாலத்தில் சாதி ஒழிப்புக் குரலின் மையமாக தமிழ்நாடு இருந்தது. பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திருந்தால், இன்னும் எவ்வளவோ தூரம் நாம் பயணித்திருக்க முடியும். பெரியாருக்குப் பிந்தைய இந்த நான்கு தசாப்தங்களில் மீண்டும் நாம் பின்னோக்கி நகர்வதாகவே தெரிகிறது. அரை நூற்றாண்டாக ஆட்சியிலிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா?
சாதி என்பது நீண்ட காலமாக நிறுவப்பட்டிருக்கிற, ஒரு தகர்க்க முடியாத கட்டமைப்பு. கட்டித்தட்டிப் போயிருக்கிற, எளிதில் தகர்க்கவே முடியாத வலுவான அமைப்பாக மாறியிருக்கிறது. இடையில் சில நூறாண்டுகள் சாதிக்கு எதிரான கருத்துகள் இங்கே அரும்பியுள்ளன. வள்ளுவர் சாதி இல்லை என்கிறார். அவ்வையார் சாதி இல்லை என்கிறார். சித்தர்கள் சாதியை எதிர்த்திருக்கிறார்கள். இப்படித் தொடர்ச்சியாக சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகள் பேசப்பட்டிருக்கின்றன. எனினும், சாதியை ஒழிக்க முடியவில்லை. அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் இந்த நூற்றாண்டில் சாதி அமைப்புக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். ஆனாலும், சாதி அமைப்பின் செதில்களைப் பெயர்க்க முடிந்திருக்கிறதே தவிர, சாதியைக் கொல்ல முடியவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரியார் இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் பார்ப்பனிய எதிர்ப்பு வலுப்பெற்றது. திமுக அதை எதிரொலித்தது. அவ்வளவுதான். தமிழகத்தின் சாதிய மறுஎழுச்சிக்கு திமுக, அதிமுகவின் மீது மட்டும் பழி சுமத்த முடியாது. மாறாக, இப்போது அடைந்திருக்கும் சமூகநீதி வெற்றிகளில் திராவிடக் கட்சிகளின் பங்கும் இருக்கிறது.
நீங்கள் திராவிட இயக்கச் செயல்பாடுகளை ஆக்கபூர்வமாக அணுகுவதால் கேட்கிறேன்.. சாதி ஒழிப்பில் திராவிடக் கட்சிகள் தீவிரம் காட்டியிருந்தால், விசிகவுக்கு இங்கே வேலையிருந்திருக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா? அதாவது, தேர்தல் அரசியலில் ஈடுபட்ட திமுகவும் பெரியாரின் திராவிடர் கழகம் அளவுக்குச் சாதி ஒழிப்பில் அக்கறை காட்டியிருந்தால் திருமாவளவன் இருக்கும் இடம் இன்றைக்கு வேறாக இருந்திருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
இந்தியாவில் தோன்றியுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தலித் அல்லாத சமூகங்களைச் சார்ந்தவர்களால் உருவாக்கப் பட்டவை. எனவே, தலித் அல்லாத சமூகங்களின் நலன்க ளையே அவை முதன்மையாக்குகின்றன. வாக்குவங்கி அரசியலுக்காகவே தலித் சமூகத்தின் நலன்கள் அவ்வப்போது பேசப்படுகின்றன. தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்தவர்களே அக்கட்சிகளில் பெரும்பான்மையாகவும், அடிப்படையான சக்திகளாகவும் இருக்கின்றனர். தலித் அல்லாத சமூகங்களாலேயே அவை வழிநடத்தப்படுகின்றன. கட்டிக் காப்பாற்றப்படுகின்றன. எனவே, அவர்கள் தங்களுடைய நலன்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தலித்துகளின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க முடியும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே, விசிக போன்ற இயக்கங்கள் தோன்றுவது ஒரு வரலாற்றுத் தேவை.
ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் கூட்டணியிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்குவதில், பழகுவதில் இருவரும் எப்படி? அங்கு சாதிய மேலாதிக்கத் தன்மையைப் பார்த்திருக்கிறீர்களா? இருவருக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகள் என்ன?
(தொடர்ந்து பேசுகிறார் திருமாவளவன்..)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago