கிராமப் பொருளாதாரத்துடன் ஒரு குஸ்தி-2

குஸ்தி கற்றுத்தரும் பயிற்சிக்கூடங்களின் நுழை வாயில்களில் எல்லாம் ‘தலீம்’ என்ற வார்த்தையைப் பார்க்க முடியும். இது ஓர் உருது வார்த்தை (இதன் பொருள் கல்வி பயிலும் இடம்). இந்தப் பெயர் தாங்கிய அறிவிப்புப் பலகையில் இடம்பெற்றிருப்பது ஹனுமானின் சிலை வடிவம். பயில்வான்களின் இஷ்ட தெய்வம் ஹனுமான். என்ன அற்புதமான கலாச்சாரப் பிணைப்பு!

பாகிஸ்தான் - ஹிந்துஸ்தான் என்று நமது தேசம் பிரிவதற்கு முன்னாலிருந்த கலாசாரம் இப்போதும் தொடர்கிறது. பஞ்சாபில் இருந்த குஸ்திப் பயிலகங்கள் அனைத்தும் தலீம்கள் என்றே அழைக்கப்பட்டன. நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் மரபு இது. கோலாபூர் சமஸ்தானத்தை ஆண்ட சாஹு மகராஜ் அனைவரும் அறிந்த சமூகச் சீர்திருத்தவாதி. குஸ்தியில் ஆர்வம் மிகுந்தவர். அந்நாளைய பிரிக்கப்படாத இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் குஸ்தி பயில்வான்களை வரவழைத்துப் போட்டிகளை நடத்தி உற்சாகப்படுவார், அனைவரையும் உற்சாகப்படுத்துவார். பஞ்சாபிலிருந்து ஏராளமான பயில்வான்கள் கோலாபூருக்கு வருவார்கள். அந்தப் பாரம்பரியம் இப்போதும் தொடர்கிறது. பாகிஸ்தான், ஈரான், துருக்கி போன்ற நாடுகளிலிருந்தும் - சில வேளைகளில் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்கூட - குஸ்தி வீரர்கள் கோலாபூருக்கும் இதர மகாராஷ்டிர நகரங்களுக்கும் வந்து போட்டிகளில் பங்கேற்பார்கள்.

“நாடு, மதம், இனம் என்ற பேதங்களைப் பார்க்காமல் அயல்நாட்டு வீரர்களின் வீரத்தையும் திறமையையும் நுட்பத்தையும் ஆழ்ந்து கவனித்து உற்சாகப்படுத்து வார்கள், பாராட்டுவார்கள் குஸ்தி ரசிகர்கள். வெளிநாட்டு வீரர்கள் போட்டிக்கு வந்தால், போட்டி நடைபெறும் களத்தில் மட்டுமல்லாமல், அவர்கள் போகுமிடமெல்லாம் பின்தொடர்ந்து சென்று அவர்களுடைய நடை, உடை, பாவனைகளைக் கவனிப்பார்கள். இளம் குஸ்தி வீரர்கள் அவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே தாங்களும் உலகப் புகழ் பெற வேண்டும் என்று விரும்புவார்கள்” என்கிறார் வினய் கோரே.

மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினரான வினய் கோரே முன்னாள் அமைச்சரும்கூட. வாரணா கூட்டுறவுச் சர்க்கரை ஆலை பால் பண்ணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். வாரண நகரில் நடைபெறும் சர்வதேச குஸ்தி போட்டிகளை நடத்தும் குழுவில் முக்கியப் பங்கு வகிக்கிறார். மகாராஷ்டிரத்திலேயே குஸ்திக்காக மிகப் பெரிய மைதானம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள வாரண நகரில்தான் இருக்கிறது. மூன்று லட்சம் பேர் வரை இந்த மைதானத்தில் போட்டிகளைப் பார்க்கலாம். ஆண்டுதோறும் டிசம்பர் 13ம் தேதி இங்கு போட்டிகள் நடத்தப்படு கின்றன.

விமானத்தில் வந்த குஸ்தி வீரர்கள்

சில வேளைகளில் விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டு குஸ்தி வீரர்களால் உரிய நேரத்தில் வரமுடியாமல் போவதுண்டு. ஒரு முறை, “பாகிஸ்தான் நாட்டு குஸ்தி வீரர்களும் வருவார்கள்” என்று அறிவிக்கப்பட்டு ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டுவிட்டனர். சில நாள்களுக்கு முன்னாலேயே விசா கிடைப்பதில் சிக்கல் என்று தெரிந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளோடு தொடர்புகொண்டு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திலும் பேசி குஸ்தி வீரர்கள் வருவதற்கு விசா தர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒருவழியாகப் போட்டி நடைபெறும் நாளில் விசா வழங்கப்பட்டது.

குஸ்தி வீரர்கள் இஸ்லாமாபாதிலிருந்து தில்லிக்கும் அங்கிருந்து புணே நகருக்கும் விமானங்களில் வந்தனர். புணே நகரிலிருந்து வாரண நகருக்கு கார்களில் அழைத்துவரப்பட்டனர். போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து சுமார் 12 அல்லது 13 மணி நேரம் தாமதமாகிவிட்டது. அப்படியும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திலேயே பொறுமையாகக் காத்திருந்ததுடன் பாகிஸ்தான் வீரர்கள் வந்ததும் ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர். இதை வினய் கோரே அந்த உற்சாகம் குறையாமல் விவரித்தார்.

ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம்

மகாராஷ்டிரத்தின் எல்லா குஸ்தி பயில கங்களிலும் ஒழுக்கத்துக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. குஸ்தி போடுவதில் நெறிமுறைகளுக்கு உள்பட்டே செயல்பட வேண்டும். ‘முறையற்ற வழிகளில் மோதக் கூடாது. குஸ்திக்குச் செல்லும் இடங்களில் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டும். முடிவுகளை நடுவர்கள் எப்படிச் செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் வீரர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே போதிக்கப்படும். ஜாதி, மத, இன பேதம் பார்க்கக் கூடாது என்பதுதான் முதல் பாடம். பிற தேசங்களிலிருந்து வந்தாலும் அவர்களும் குஸ்தி வீரர்கள் என்பதால், அந்தக் கலைக்கு உரிய மரியாதையை அவர்களுக்கும் தர வேண்டும் என்று வீரர்களுக்குப் புகட்டப்படுகிறது. இதற்காக ஒரு சம்பவம் அடிக்கடி நினைவுகூரப்படும்.

பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த காமா பயில்வான், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானில் குடியேறினார். அவருடைய முழுப் பெயர் குலாம் முகம்மது. முஸ்லிமாக இருந்தாலும் இந்துக்களைத் தன்னுடைய சகோதரர்களாகவே கருதினார். ஒரு முறை தீவிரவாதிகள் குலாம் முகம்மதின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த இந்துக்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காகத் திரண்டு வந்தனர். இதை அறிந்த காமா பயில்வான், அந்த வழியில் போய் நின்றுகொண்டு, “என்னை மீறி யாரும் இங்கே போகக் கூடாது, போனால் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்” என்று உறுதிபொங்க அறிவித்தார். பயில்வானிடம் மோத அஞ்சிய விஷமிகள் வந்தவழியே திரும்பிச் சென்றனர். இதை எல்லா தலீம்களிலும் இளம் மாணவர்களுக்குச் சொல்வார்கள். “தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கத் தயங்கக் கூடாது, அப்பாவிகளைக் காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தவறக் கூடாது. குஸ்தி பயில்வான்கள் ஜாதி, மத அடிப்படையில் செயல்படக் கூடாது” என்று கற்றுத்தருவார்கள்.

‘‘தாங்கள் பலசாலிகள் என்பதற்காக குஸ்தி வீரர்கள் வன்செயல்களில் ஈடுபடக் கூடாது, கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி உடலைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது, மற்றவர்களுக்கு தொல்லை தரக் கூடாது, ஒழுக்கக் கேடுகளுக்குத் துணை நிற்கக் கூடாது’’ என்றெல்லாம் எல்லா தலீம்களிலும் ஆசிரியர்கள் அவ்வப்போது அறிவுரை கூறுவார்கள் என்று நினைவுகூர்கிறார் கோலாப்பூரில் தலீம் நடத்தும் அப்பாசாஹேப் கடம். ‘‘பிற மாநிலங்களைச் சேர்ந்த பயில்வான்கள் கெட்ட பெயரைச் சம்பாதித்ததைப்போல மகாராஷ்டிர பயில்வான்கள் பெயரைக் கெடுத்துக்கொண்டதில்லை’’ என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

விளையாட்டைப் பார்ப்பதில் மட்டுமல்ல; விருந்தோம்பலிலும் மராட்டியர்கள் சிறப்பானவர்கள். போட்டிகளைக் காண மூன்று லட்சம் பேர் ஒரு நகருக்கு வந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் என்ற சிந்தனையில், ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 10 பேர் முதல் 20 பேர் வரை சாப்பிட உணவு தயார் செய்துகொண்டு வருகிறவர்களை உபசரித்து உணவளிப்பார்கள். இதனால், சாப்பாட்டுப் பிரச்சினை இல்லாமல் ரசிகர்கள் படையெடுப்பார்கள். சில இடங்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்குக்கூட சாப்பாடு போடப்படும்.

முக்கலைகளின் சங்கமம்

மகாராஷ்டிரத்தில் குஸ்தி, கரும்பு வயல்கள், தமாஷா என்ற மூன்றும் பின்னிப் பிணைந்தவை என்கிறார் புணே நகரில் தலீம் நடத்தும் காகா பவார். தமாஷா என்பது நாட்டுப்புறக் கலைவடிவம். குஸ்திக்கும் தமாஷாவுக்கும் இரு ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே மக்களின் ஆர்வத்தாலும் பங்கேற்பவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டாலும்தான் சிறப்பாக அமைய முடியும்.

“மல்யுத்தம் என்றும் அழைக்கப்படும் குஸ்தியை ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கிவிடலாம் என்று பேசப்படுகிறதே?” என்று கேட்டபோது, பல ஆசான்களும் கோபத்துக்கு ஆளாகினர். “30 நாடுகளில் மட்டும் விளையாடப்படும் விளை யாட்டுகளையெல்லாம் சேர்ப்பார்கள், 122 நாடுகளில் விளையாடப்படும் மல்யுத்தத்தை நீக்கி விடுவார்களா?” என்று கோபம் பொங்கக் கேட்கிறார் கடம்.

ஒலிம்பிக்கில் நீக்குவார்களா, வைத்துக்கொள்வார்களா என்பதைவிட, மகாராஷ்டிரத்தில் இப்போது இந்த விளையாட்டின் மீது காட்டப்படும் அலட்சியம் குறித்துத்தான் அனைவருக்கும் கவலை, கோபமெல்லாம். எல்லோரும் ஒரே மாதிரியான புகார்களையே முன்வைக்கின்றனர். விவசாயத்தில் இப்போதும் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மல்யுத்தத்தை ஊக்குவிக்கின்றனர். மாநில அரசுகளும் உதவிகளைச் செய்கின்றன. காவல் துறையிலும் இதர படைகளிலும் நல்ல வேலையில் குஸ்தி வீரர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர். மகாராஷ்டிரத்தில் குஸ்தி பயிலும் மாணவர்கள் பயிற்சி முடிந்ததும் வேலை கிடைக்காமல் தொழிலாளர்களாகத்தான் எங்காவது போய் சேர்ந்துகொள்கின்றனர். பலர் சர்க்கரை ஆலைகளில் ‘வாட்ச்-மேன்’ வேலைக்குப் போகின்றனர். கல்வி அறிவு குறைவு என்பது காரணமாக இருந்தாலும், அவர்களைக் கௌரவமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் மாநில அரசிடம் இல்லை.

சந்தர்ப்பவாதம்

“மகாராஷ்டிர அரசியல்வாதிகள் இதில் காட்டும் ஆர்வமெல்லாம் சந்தர்ப்ப வாதம்தான். குஸ்தியைப் பார்க்கக் கூட்டம் திரள்கிறது என்பதால், அங்கே போய் தங்களுக்கு ஆதரவு திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அரசி யல் தலைவர்கள் சங்கங்களுக்கும் சம்மேளனங்களுக்கும் தலைவராகிறார்கள். போட்டி நடைபெறும் நாள்களில் மைதா னங்களுக்குச் செல்கிறார்கள். மகாராஷ்டிர மாநில மல்யுத்த சம்மேளனத்துக்கும் மத்திய அமைச்சர் சரத் பவார்தான் தலைவர். அது அவருக்கே நினைவில் இருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது” என்று குத்தலாகக் கூறுகிறார் ஒரு நிர்வாகி.

“இந்த தலீம்களில் பயிற்சிபெற்ற இருவர், இப்போது மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். நாங்கள் மும்பைக்குச் சென்றால் அவர்கள் எங்களைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொள்கின்றனர்” என்று வேதனையுடன் கூறுகிறார் மற்றொரு நிர்வாகி. மகாராஷ்டிரத்தின் கிராமப்புறக் கலாசாரத்துடன் ஆழ்ந்த தொடர்புள்ளது குஸ்தி. சமூகத்திலும் கலாசாரத்திலும் ஏற்படும் மாறுதல்களாலும், சிறு விவசாயிகள் நிலங்களை விற்க வேண்டிய பொருளாதாரச் சூழல் ஏற்பட்டுவிட்டதாலும், தொடர்ந்து ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையாலும், மாநில அரசின் பாராமுகத்தாலும் தேய்பிறையாகிவருகிறது இப்போது.

“கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்படும் சாதாரணக் காயத்தைக்கூட ஊடகங்கள் மிகப் பெரிய செய்திபோல பல முறை ஒளிபரப்புகின்றன. சிறந்த மல்யுத்த வீரர் இயற்கை எய்தினாலும் கண்டுகொள்வதே இல்லை” என்று வருத்தப்படுகிறார் அந்தால்கர்.

தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்