அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்றா?

By பி.ஏ.கிருஷ்ணன்

தமிழக அரசு பதிப்பித்த 10-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் ‘தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: ‘தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்துணையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்துகிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்பதனை, அதனை ஆராய்வோரே அறிவர்.’

பாடத்தில் தமிழருக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கனிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது.

இத்தகைய பாடங்கள் மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியவை.

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்பது கோட்பாடு (தியரி), சோதனை (எக்ஸ்பெரிமெண்ட்) கண்டறிதல் (ஃபைண்டிங்ஸ்) என்ற மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு. இயற்கையில் இருப்பதை, நடப்பதைப் பதிவுசெய்வது மட்டும் அறிவியல் ஆகிவிடாது. உதாரணமாக, ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்று செம்மண்ணைப் பற்றிப் புலவர் எழுதிவிட்டதால், அவர் மண்ணியல் அறிஞர் ஆகிவிட மாட்டார்.

அந்த வண்ணம் மண்ணுக்கு வந்தது Fe2o3 என்ற இரும்பு ஆக்ஸைடால் என்று சொல்பவர்கள்தான் அறிவியல்பூர்வமாகப் பேசுபவர்கள். இதேபோன்று, கற்பனையில் பிறந்ததெல்லாம் அறிவியல் ஆகிவிடாது. ‘வலவன் ஏவா வானூர்தி’ என்று எழுதிவிட்டதால், எழுதியவர் விண்ணியல் வல்லுனராக ஆகிவிட மாட்டார். அப்படி ஓர் ஊர்தி முன்னால் இருந்தது என்பதும் இதனால் உறுதியாகிவிடாது. பறப்பது என்பது மனிதனின் கனவுகளில் ஒன்று. இந்தக் கனவு நனவாவதற்கு அறிவியல் பல மைல்கற்களைத் தாண்ட வேண்டியிருந்தது.

உதாரணமாக, எரிபொருள் இல்லாமல் விமானம் பறந்திருக்க முடியுமா? அகக் கனற்சிப் பொறியில்லாமல் (இண்டெர்னல் கம்பஷன் என்ஜின்) விமானம் பிறந்திருக்க முடியுமா? ரப்பர், அலுமினியம் போன்ற பொருள்கள் இல்லாமல் அது உருவாக்கப்பட்டிருக்க முடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக பெர்னூலி கொள்கை தெரியாமல், நியூட்டனின் விதிகள் தெரியாமல், பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதல் இருந்திருக்க முடியுமா?

கேள்விகளுக்குப் பதில் இவ்வாறு வரலாம்: எங்களிடம் எல்லாம் இருந்தன, தொலைந்துபோய்விட்டன. தொலைந்துபோவது அவ்வளவு எளிதல்ல. மனிதன் தனக்குப் பயன்படக்கூடிய வகையில் இருந்த எந்தக் கண்டுபிடிப்பையும் தொலைத்துவிட்டதாகச் சரித்திரம் இல்லை. மேலும், இந்தப் பதிலை உலகில் இருக்கும் எந்த இனக் குழுவினரும் சொல்ல முடியும். அது அறிவியல்பூர்வமான பதிலாக இருக்காது.

நமது சாதனைகள்

இதனால், தமிழர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நான் கூறுகிறேன் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தமிழர்கள் அணைகளைக் கட்டியிருக்கிறார்கள். கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். உலகம் வியக்கும் செப்புச் சிலைகளை வடித்திருக்கிறார்கள்.

ஆனால், இவற்றையெல்லாம் ஆக்குவதற்கு அறிவியல் ஞானம் தேவையில்லை. தொழில்நுட்பம் போதுமானது.

மேற்கத்திய உலகில்கூட, நாம் இன்று அறிவியல் என்று சொல்லிக்கொள்ளும் நவீன அறிவியல் பிறந்தது 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோவுக்குப் பிறகுதான். அதற்கு முன்பும் இந்திய அறிஞர்களுக்கு அறிவியல் முறைகளைப் பற்றிய ஓர் அடிப்படை அறிவு இருந்திருக்க வேண்டும் என்பது நிச்சயம். இல்லாவிட்டால், 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் பாஸ்கரரிடமிருந்து லீலாவதி, பீஜகணிதம் போன்ற நூல்கள் பிறந்திருக்க முடியாது.

பாஸ்கரருக்கு நுண்கணிதம் (கால்குலஸ்) பற்றிகூட அடிப்படை அறிவு இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதன் உபயோகம் என்ன என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மேற்கில் நடந்ததுபோல, இங்கு அடித்தளத்தின்மீது கட்டுமானங்கள் வரவில்லை.

அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்றல்ல

அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே இன்று இருக்கும் பிணைப்பு பிரிக்க முடியாதது. அறிவியல் இல்லையென்றால், தொழில்நுட்பம் முன்னேற முடியாது. தொழில்நுட்பம் இல்லையென்றால், அறிவியலின் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், இரண்டும் ஒன்றல்ல. உதாரணமாக, நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிஞர். சமீபத்தில் பாரத ரத்னா பெற்ற சி.என்.ஆர்.ராவ் அறிவியல் அறிஞர்.

பண்டைய தமிழர்கள் கட்டடங்களைக் கட்ட முடிந்ததற்கும் செப்புச் சிலைகளை வடிக்க முடிந்ததற்கும் காரணம், தொழில்நுட்பத்தில் அவர்களுக்கு இருந்த அறிவுதான். அந்த அறிவு அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகக் கைவரப்பெற்றது. ஆங்கிலத்தில் ட்ரையல் அண்ட் எரர் என்று சொல்வார்கள். செய்துசெய்து பார்த்துத் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் முறையை நமது முன்னோர்கள் கையாண்டார்கள்.

‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’ என்பது வள்ளுவர் வாக்கு. பண்டைய தச்சருக்கு அவர் உருவாக்கிய வண்டி எவ்வளவு பளு தாங்கும் என்பதுபற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். ஆண்டுக் கணக்கில் தச்சு வேலை செய்வதால் அவரால் கண் பார்வையிலேயே எந்த வண்டியில் எவ்வளவு பளு ஏற்றலாம் என்பதையும் சொல்ல முடிந்திருக்கும். பளுவை எவ்வாறு வண்டியில் பரப்பி வைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அவருக்கு ‘தகைப்பு (ஸ்ட்ரெஸ்) என்றால் என்ன என்பது தெரிந்திருக்காது. ‘திரிபு’ (ஸ்ட்ரெயின்) பற்றியும் தெரிந்திருக்காது.

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், அறிவியலால் நிறுவப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் இன்றைய தொழில்நுட்பம் இயங்குகிறது. அன்று, அவ்வாறு இல்லை.

பழையனவும் புதியனவும்

இதைப் படிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வி எழலாம். அறிவியல் ஞானம் இல்லாத காலத்தில் கட்டிய தஞ்சை பெரிய கோயில் 1,000 ஆண்டுகளாகியும் அப்படியே நிற்கிறது. கடல்மல்லைக் கோயில் சந்திக்காத புயல்கள் இல்லை, ஆனாலும் நிமிர்ந்து நிற்கின்றது. மாறாக, தொழில்நுட்பம் வலுப்பெற்றிருக்கும் இந்நாளில், சில ஆண்டுகள் முன்பு கட்டிய அடுக்குமாடி வீடுகள் காற்றடித்தால் தள்ளாடுகின்றனவே என்பதே அந்தக் கேள்வி. இதற்கு எளிமையான ஒரு பதில் இருக்கிறது. பெரிய கோயிலைக் கட்டியவரும் கடலோரக் கோயிலைக் கட்டியவரும் மாமேதைகள். அவர்கள் இன்றிருந்தாலும் உலகமே பாராட்டும் கட்டடங்களை நமக்குத் தந்திருப்பார்கள். அவர்களுக்குத் தாங்கள் செய்யும் தொழில்மீது மரியாதை இருந்திருக்க வேண்டும். முழுமை அடையும்வரை மீண்டும் மீண்டும் முயன்றிருக்க வேண்டும். அன்றைய தொழில்நுட்பத்தின் உச்சத்தை அடைந்தவர்கள் அவர்கள். ஆனால், அவர்களுக்கும் அறிவியலுக்கும் தொடர்பு கிடையாது.

எனவே, மாணவர்களிடம் நம் முந்தையர் செய்த விந்தைகளைப் பற்றிக் கூறும்போது, அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே உள்ள தொடர்புகளையும் வித்தியாசங்களையும்பற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும். அதிகக் கருவிகளும் அடிப்படை அறிவியல் ஞானமும் இல்லாமலே முன்னோர்களால் அரிய சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. அவர்களின் வழிவந்த நமக்குத் தொழில்நுட்பத்தோடு அறிவியல் ஞானமும் இருக்கிறது. அவை உலகத்தின் சொத்துக்கள். அவற்றின் துணையால் நம்மாலும் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று அழுத்திச் சொல்ல வேண்டும்.

எங்களிடம் எல்லாம் இருந்தது என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்வதைத் தமிழர்கள் முதலில் விட வேண்டும்.

- பி. ஏ. கிருஷ்ணன் - ஆங்கிலம் - தமிழ் நாவலாசிரியர், பொதுத் துறை நிறுவன நிர்வாக இயக்குநர் (ஓய்வு), தொடர்புக்கு: tigerclaw@gmail.com.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்