கிரண்பேடி x நாராயணசாமி - அதிகாரப் போட்டியா, அதிகார அபகரிப்பா?

By ஆர்.முத்துக்குமார்

புதுச்சேரி அரசியலில் அதிகாரப் போட்டி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கே அதிக அதிகாரம் என்கிறார் முதல்வர் நாராயணசாமி. இல்லை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட எனக்கே வானளாவிய அதிகாரம் என்கிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. மக்கள்நலத் திட்டங்களை அறிவிப்பது, பார்வையிடுவது என்று ஆரோக்கிய அரசியலாகத் தொடங்கிய போட்டி, தற்போது முதல்வர் உத்தரவை துணைநிலை ஆளுநர் ரத்துசெய்யும் அதிகார அரசியலாக மாறிப்போயிருக்கிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட கிரண்பேடி, திடீரென புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் ஆரம்பித்தன.

வியூகத்தின் குறியீடு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வரை சட்டத்தின் துணையுடன் நிர்வாகரீதியாக முடக்கிவிட்டு, கிரண்பேடி மூலமாகச் செய்யும் அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டால், அதை பாஜகவின் சாதனையாக மடைமாற்ற முடியும். புதுச்சேரியில் தேர்தல் லாபம் கிடைத்தால், அது தமிழகத்திலும் லேசாக எதிரொலிக்கக்கூடும் என்பது பாஜகவின் வியூகமாக இருக்கும் என்ற பேச்சு அடிபட்டது.

துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றதும் அதிரடிகளை நிகழ்த்தினார் கிரண்பேடி. அனைத்து அரசு ஊழியர்களும் காலை 9 மணிக்கு அலுவலகம் வந்துவிட வேண்டும். அரசு அதிகாரிகள் மாலை 5 முதல் 6 வரை அலுவலகத்தில் இருந்து மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்க்க வேண்டும். அவசர ஊர்தியைத் தவிர வேறெந்த வாகனத்துக்கும் சுழல்விளக்கு அனுமதியில்லை என்றெல்லாம் உத்தரவிட்டார். முதல்வர் உள்ளிட்ட பிரமுகர்களுக்காகப் போக்குவரத்து தடைபடக் கூடாது என்று உத்தரவிட்டார். முக்கியமாக, தனது காலில் விழுந்து ஆசிபெற்ற சட்டமன்ற உறுப்பினரின் காலில் தானே விழுந்து, அந்தச் செயலை இனிமேல் செய்யக் கூடாது என்று அவர் கண்டித்தது ஊடகங்களால் வரவேற்கப்பட்டது.

தவிர்க்கப்பட்ட முதல்வர்

அதன் நீட்சியாக, புதுச்சேரியில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் உடனடி அனுமதி என்றார். அந்த இடத்தில்தான் சிக்கல் முளைத்தது. மாநில அரசின் நிர்வாகத்திலும் கொள்கை முடிவுகளிலும் துணைநிலை ஆளுநரின் வழியே மத்திய அரசு தலையிடுகிறது என்ற விமரிசனம் எழுந்தது.

இந்நிலையில்தான், கிரண்பேடி நடத்திய வாட்சப் குரூப்புக்கு ஓர் அரசு அதிகாரி ஆபாசப் படம் ஒன்றை அனுப்பிவிட, பெரும் சர்ச்சை வெடித்தது. உடனடியாக அந்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்தார் கிரண்பேடி. இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், அரசு ரகசியங்கள் வெளிநாடுகளுக்குக் கசியும் வாய்ப்புள்ளதால், அனைத்து அரசு அதிகாரிகளும் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார் முதலமைச்சர் நாராயணசாமி. விஷயம் கேள்விப்பட்ட கிரண்பேடி, முதல்வரின் உத்தரவை உடனடியாக ரத்துசெய்வதாக அறிவித்தார்.

மாநில முதல்வரும் துணைநிலை ஆளுநரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகப் பங்கேற்கக் கூடியவர்கள். விரோதம் பாராட்டிக்கொள்ளாதவர்கள். அப்படியிருக்க, முதலமைச்சரின் உத்தரவு குறித்தும் அதன் யதார்த்த நிலை குறித்தும் துணைநிலை ஆளுநர் நேரடியாகப் பேசியிருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் உத்தரவை அதிரடியாக ரத்துசெய்திருப்பதன் மூலம், சொல்ல விரும்பியது என்ன?

யாருக்கு என்ன அதிகாரம்?

இந்தியாவில் மாநில ஆளுநரைக் காட்டிலும் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். மாநிலத்தில் ஆளுநர் என்பவர் பெயரளவில் ஆட்சிக்கான தலைவர். ஆனால், யூனியன் பிரதேசங்களில் அதிகாரங்களுடன் கூடியவர். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 8, மற்றும் யூனியன் பிரதேசச் சட்டம் 1963ன்படி யூனியன் பிரதேச அரசும் அமைச்சரவையும் பரிந்துரை செய்யும் அமைப்புகள் மட்டுமே.

துணைநிலை ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர், தனக்குச் சரியெனப்படுவதைச் சட்டப்படி செய்ய துணைநிலை ஆளுநருக்கு உரிமை உண்டு. யூனியன் பிரதேச நிர்வாகத்தில் அவரது முடிவே இறுதியானது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 239-ம் பிரிவும் யூனியன் பிரதேச சட்டங்களின் உட்பிரிவுகளும் சொல்கின்றன.

நிர்வாக முடிவுகள் தொடர்பாக யூனியன் பிரதேச முதல்வர் - துணைநிலை ஆளுநர் இடையே கருத்துவேறுபாடுகள் முளைக்கும் பட்சத்தில், இதுவிஷயமாகக் குடியரசுத் தலைவரின் ஆலோசனையைக் கேட்கவும், அவரிடமிருந்து உரிய உத்தரவு அல்லது ஆலோசனை வரும்வரை தான் விரும்பிய முடிவைத் தாற்காலிமாகச் செயல்படுத்தவும் துணைநிலை ஆளுநருக்கு உரிமை உண்டு என்கிறது அரசியல் சட்டப்பிரிவு 239 AA (4).

துணைநிலை ஆளுநருக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் யூனியன் பிரதேசங்கள் மீது அதிகப்படியான உரிமை இருக்கிறது. யூனியன் பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும், எந்த மாதிரியான நிர்வாக மாற்றங்களையும் அது கொண்டுவரலாம். அங்கு யார் ஆட்சி தொடர வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா, குடியரசுத் தலைவர் ஆட்சியா என்பதை முடிவெடுக்கும் அதிகாரமும்கூட மத்திய அரசுக்கு உண்டு.

சுயாட்சி x கூட்டாட்சி

ஒற்றை வாக்கியத்தில் சொல்வதென்றால், யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ரப்பர் ஸ்டாம்ப்; துணைநிலை ஆளுநரும் மத்திய அரசுமே மெய்யான ஆட்சியாளர்கள்.

ஆக, மக்களின் தீர்ப்பை அடியோடு நிராகரிக்கும் இத்தகைய அதிகாரங்களுக்கும், அவற்றை முன்வைத்த அரசியல் செயல்பாடுகளுக்கும் எதிராகத் தீவிரமாக விவாதித்து, மத்திய அரசுடன் வீரியமிக்க அரசியல் உரையாடலை நடத்த வேண்டிய தருணம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக, புதுச்சேரியை நாமா ஆளப்போகிறோம் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ளாமல், கூட்டாட்சித் தத்துவத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயலுக்கு எதிராகப் போராட வேண்டியது மாநில சுயாட்சி பேசுவோரின் ஜனநாயகக் கடமை!

- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். | தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்