இரு ஆண்டுகளுக்கு முன்பு கானகப் பயணம் நிமித்தம் களக்காடு சென்றிருந்தபோதுதான் அந்தக் குடும்பத்தைக் காண நேர்ந்தது. கணவரின் உயிரற்ற உடலை மடியில் கிடத்தி, அவரது மார்பில் கோபத்துடன் அடித்துக்கொண்டிருந்தார் மனைவி. அழுகையினுடே ஆத்திரமாக வெளிப்பட்டன வார்த்தைகள். “குடிச்சிக் குடிச்சி நீ போய்ச்சேர்ந்துட்ட. இதுங்களை எப்படிக் கரையேத்துவேன். மூணுமே பொட்டப்புள்ளைங்க. உன்னை மட்டுமே நம்பி வந்தேன். சொந்தபந்தம்னு யாருமில்லையே. ஊரெல்லாம் கடன் வேற வாங்கி வெச்சிருக்க...” அருகில் விவரம் புரியாத வயதில் மூன்று பெண் குழந்தைகள் அழுதுகொண்டிருந்தன. இறந்த வாலிபருக்கு வயது 35 இருக்கலாம். டாஸ்மாக் பணியாளர் என்றார்கள். கனத்த மனதுடன் கடந்து சென்றேன்.
டாஸ்மாக்கில் பணிபுரியும் தோழர் சாஸ்தா மூலம் அந்த குடும்பத்தினரைக் கண்டுபிடித்தேன். குடிசையின் மண்ணை மழை கரைத்துக்கொண்டிருந்தது. அதற்குள்ளாக ஒடுங்கியிருக்கிறார்கள் அவர்கள். மொத்தம் நான்கு ஜீவன்கள். இறந்துபோன பணியாளரின் பெயர் முருகன். கடைசியாக, கூடங்குளம் மதுக் கடையில் விற்பனையாளராக இருந்திருக்கிறார். உயிர் இழந்ததும் அதே மதுக்கடை வாசலில்தான்.
மனைவி சுபிதாவின் விரல்கள் அனிச்சையாக பீடி சுற்றிக் கொண்டிருக்கின்றன. மூத்த பெண் சரிதா எட்டாம் வகுப்பு படிக் கிறார். இரண்டாவது பெண் நர்மதா ஐந்தாவது படிக்கிறார். கடைக்குட்டி சந்தியா இரண்டாம் வகுப்பு. அப்பாவைப் பற்றிப் பேச்செடுத்ததும் அழுகை முட்டுகிறது மூத்த பெண்ணுக்கு. “இப்பவும்கூட ராத்திரி தூக்கத்துல திடீர்னு எழுந்து உட்கார்ந்து அப்பா, அப்பான்னு அழறாங்க. கனவுல வந்துடறாருபோல. சமாதானம் பண்ணவே முடியலை. அவர் உசுரோட இருந்தப்ப இந்தப் புள்ளைகிட்டதான் ரொம்பப் பாசமா இருப்பார்” என்கிறார் சுபிதா.
7 வருஷம் சொக்கத்தங்கமா இருந்தாரு!
ரேஷன் கடையில் தற்காலிகப் பணியாளராக இருந்தவர் முருகன். டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதுக்கடைகள் ஆரம்பிக்கப் பட்டபோது, அரசு வேலை ஆசையில் சேர்ந்தார். ஆனால், அதுவே அவரது உயிரைப் பறிக்கும் என்பது அப்போது அவருக்குத் தெரியவில்லை. திருமணமான புதிது அது. “சொந்த அத்தை மகன்தாங்க. ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டோம். அப்பெல்லாம் அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. வீட்டுல பீடி சுத்துவமே தவிர, பீடிகூடப் பிடிக்க மாட்டாரு. டாஸ்மாக்குல வேலைக்குப் போறேன்னு சொன்னப்ப வேண்டாம்னு ஒத்தக் கால்ல நின்னேன். அரிசி, பருப்பு பிடிச்ச கையில சாராய பாட்டில் பிடிக்க வேண்டாம் சாமின்னு கெஞ்சுனேன். என் அப்பா குடிச்சே செத்ததால எனக்குப் பயம். சாராயக் கடைக்கு வேலைக்குப் போகக் கூடாதுன்னு ஒரு வாரம் சண்டை போட்டேன். மனுஷன் கேட்கவே இல்லை. வேற வழியில்லாம, குடிப்பழக்கம் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டுதான் வேலைக்கு விட்டேங்க. சும்மா சொல்லக் கூடாது, ஏழு வருஷம் சொக்கத் தங்கமாத்தான் இருந்தாரு.
ஒருநாள் நான் பயந்த மாதிரியே நடந்துருச்சு. முதல்முறையாக் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தாரு. சட்டையைப் பிடிச்சு உலுக்கிக் கேட்குறேன். என்னமோ கடையில ஷார்ட்டேஜ், பணம் பிரச்சினைன்னு அழுவுறாரு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கப் பழகிட்டாரு. தினமும் வீட்டுல சண்டை. பல நேரத்துல குடிச்சிட்டு ரோட்டுல விழுந்துகிடப்பார். புள்ளைங்களோட போயித் தூக்கிட்டு வருவோம். நடுவுல மார்வலி வந்து ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ‘இனிமே குடிச்சா செத்துப்போயிடுவே’னு டாக்டர் சொல்லிட்டார். அப்புறமும் மனுஷன் திருந்தலை. நான் பயந்த மாதிரியே செத்துட்டாரு.
நானும் குழந்தைகளும் பீடி சுத்தினாத்தான் வயித்தைக் கழுவ முடியும். புள்ளைங்களுக்கு மாசம் மூவாயிரம் ரூபா படிப்புச் செலவு ஆகுது. கடன்காரங்க தொந்தரவு வேற தாங்க முடியலை. ஒவ்வொரு நாளும் ஏன் விடியிதுன்னு பயமா இருக்குங்க” என்பவரால் அழுகையை அடக்க முடியவில்லை.
கூடங்குளத்தில்…
மதுவின் பிடியில் விழுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். முருகனுக்குக் கடன்தான் காரணமாக இருந்திருக்கிறது. முருகன் வேலை பார்த்த கடையில் ஒருநாள் கணிசமான தொகை ஒன்று குறைந்திருக்கிறது. அதை சரிசெய்யக் கந்து வட்டி வாங்கியிருக்கிறார். வட்டி நாளுக்கு நாள் எகிறி, கடன் மூன்று லட்சமாகிவிட்டது. கவலையை மதுவிடம் கடத்தியிருக்கிறார். அது பிரச்சினைகளைப் பல மடங்கு அதிகரிக்க வைத்திருக்கிறது. இடையே வள்ளியூர், நாங்குநேரி என்று பணியிடம் மாறியவரை கடைசியாகக் கூடங்குளத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். இவர் சென்ற இரண்டாவது நாள் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம். ஊரே கொதித்துக்கொண்டிருந்தது. கடையைப் பூட்டிவிட்டு வாசலிலேயே அமர்ந்து இருநாட்களாகக் குடித்துக்கொண்டிருந்தவர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். போதையில் கிடக்கிறார் என்று இரண்டு நாட்கள் விட்டிருக்கிறார்கள். மூன்றாவது நாளும் எழவில்லை என்ற போதுதான் உயிர் போனது உறைத்திருக்கிறது.
முருகனின் பழைய கதையைக் கேட்டால் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக இருக்கிறது. ஆரம்பத்தில் களக்காடு மதுக் கடையில் பணியில் இருந்திருக்கிறார். அப்போது உள்ளூரில் ஓர் இயக்கத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். பல்வேறு சமூகப் பணிகளுடன் மது ஒழிப்பிலும் ஆர்வம் செலுத்தியிருக்கிறார். குறிப்பாக, டாஸ்மாக்கில் பணிபுரியும் சக ஊழியர்களிடம் குடிப் பழக்கத்தைக் கைவிட வலியுறுத்துவாராம்.
“எங்களுக்கெல்லாம் அவன் அறிவுரை சொல்லுவான். ‘மத்த வங்களுக்குக் குடிக்கணும்னு நினைச்சா முதல்ல காசு வேணும். அடுத்ததா கடைக்கு வரணும். ஆனா, நமக்கு அப்படி இல்லை. கைக்கு எட்டுற தூரத்துல இருக்கிறான் எமன். நாமெல்லாம் குடிக்க ஆரம்பிச்சா சீக்கிரம் செத்துடுவோம்’னு சொல்வான். ஆனா, அவனே இப்படி ஆவான்னு கனவுலகூட நினைக்கலைங்க” என்று கலங்குகிறார் சக பணியாளரான சாஸ்தா.
(தெளிவோம்)
டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago