மாற்றத்தின் வித்தகர்கள் 1 - கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன்

By சமஸ்

உலகில் நீ விரும்பும் மாற்றமாக நீயே மாறிவிடு! - காந்தியின் வாழ்க்கைச் செய்திகளிலேயே மகத்தானது இதுதான். உண்மையில் இந்த உலகின் உயிரியக்கத்துக்கும் மகத்தான மாற்றங்களுக்கும், தான் விரும்பும் மாற்றமாகவே மாறியவர்கள்தான் ஆதார சுருதியாக நிற்கிறார்கள். அவர்களில் பலர், சின்ன விஷயங்களிலிருந்து மாற்றங்களை முன்னெடுக்கத் தொடங்கியவர்கள். மிக யதார்த்தமாகத் தன் வாழ்வின், தொழிலின் ஒரு பகுதியாக மாற்றங்களைக் கையாள்பவர்கள். பிரமாண்டங்களை வெறுப்பவர்கள். விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருப்பவர்கள். தான் ஏதும் விசேஷமாகச் செய்யவில்லை என்ற உணர்வோடு, வெகுளியாகச் சிரிப்பவர்கள். நமக்குப் பக்கத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அன்றாடம் நாம் மிகச் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டே கடக்கும் அசாதாரணர்கள். ஆச்சர்யமாக, ஏதோ ஒரு வகையில் காந்தி சொல்லும் இயல்போடும் இயற்கையோடும் எளிமையோடும் தங்களைப் பொருத்திக்கொண்டவர்கள். அவர்களுடைய அணிவகுப்பே இந்த ‘மாற்றத்தின் வித்தகர்கள்’. நாம் ஏற்கெனவே பார்த்த முகங்கள்... பார்க்காத பரிமாணங்களில்... இனி புதன்தோறும்!

கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன். 10 ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்ட முதல் செய்தியே இன்றைக்கும் அசரடிக்கவைக்கக் கூடியது.

“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார். படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”

அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள். விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது” என்கிற பாலுஜி, இரு ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார்.

ஒருவர் ராதாகிருஷ்ணன். இன்னொருவர் அகிலா.

“ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே மூத்தவர். இங்கே படிச்சவர். சுகாதாரத் துறையில தஞ்சாவூர் பக்கத்துல உள்ள வல்லத்துல வேலை செய்றார். தினமும் 100 கி.மீ. பயணம் செஞ்சாலும் இங்கே ஒரு நாள் விடாம வந்துபோதிக்கிறார். அகிலா இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே சின்ன பொண்ணு. ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டே, இங்கே உள்ள பிள்ளைகளுக்கு இந்தி கத்துக்கொடுக்கிறார். இங்குள்ள 38 ஆசிரியர்களும் இப்படித்தான்” என்கிற பாலுஜி அடுத்தடுத்து சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை.

“இங்கே வர்ற நிறைய பேர் ஏதோ காசு வாங்காம கல்வி கொடுக்குறதுதான் பெரிய காரியம்னு நெனைக்குறாங்க. அது இல்லை. இங்கே நாங்க எதைக் கல்வியா கொடுக்குறோம்கிறதுதான் முக்கியம்னு நாங்க நெனைக்கிறோம். பணம்தான் உலகம்னு ஓடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில, பணம் மட்டும் வாழ்க்கை இல்லைனு சொல்லிக்கொடுக்குறோம். அறம்தான் உண்மையான வாழ்க்கையோட ஆதாரம்னு சொல்லிக்கொடுக்குறோம். இங்கே படிச்ச ஒரு மாணவர் சுங்கத் துறையில ஒரு பெரிய பதவிக்கு, நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைச்சுப் போனார். கொஞ்ச நாள்ளேயே அந்த வேலை வேணாம்னு சொல்லி ஒதுங்கிட்டார். காரணம் என்ன தெரியுமா? லஞ்சம் வாங்காம, லஞ்சம் வாங்குறதைத் தடுக்காம அங்கே வேலை பார்க்க முடியாதுங்கிற சூழல். எங்க பிள்ளைங்க ஒருபோதும் தவறான பாதையில போக மாட்டாங்க. பணத்துக்குப் பின்னாடி ஓட மாட்டாங்க. இதைச் சொல்லிக்கொடுக்குறதுதான் முக்கியம்னு நெனைக்குறேன்” என்று சொல்லும் பாலுஜி எங்கிருந்து இந்த அறவுணர்வைப் பெற்றார்? எப்படி அதை அணையாமல் காக்கிறார்?

பாலுஜியின் பதில்: காந்தி. “செம்பியன்மாதவிங்கிற குக்கிராமத்துல உள்ள காந்தியடிகள் நடுநிலைப் பள்ளிதான் எனக்குள் காந்தியை விதைச்சுது. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துன தாளாளர் ஆர்.என்.ராமசாமியும் ஆசிரியர் வி.ராமச்சந்திரனும் படிப்பைவிட முக்கியம் அறம்னு சொல்லி எங்களை வளர்த்தாங்க. நல்ல விஷயங்களை அடுத்தவங்களுக்குப் போதிக்கிறதைவிட முக்கியம், நாம பின்பற்றுவதுனு சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ அவங்க எங்களுக்குச் சுட்டிக்காட்டின வழிகாட்டி காந்தி. தான் உண்மைனு நினைச்ச அறத்துக்காகக் கடைசிவரைக்கும் வாழ்ந்தார் காந்தி. அந்த வைராக்கியம் வந்துடுச்சுன்னா எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அறம் நம்மையும் காப்பாற்றும்!”

சமஸ் - தொடர்புக்கு: writersamas@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்