இன்றும் நம்முடைய மனதில் கணக்கிடும் முறை (MENTAL ACCOUNTING) மிகவும் வியக்கத்தக்கது.
உதாரணமாக ஒருவர் உங்களுக்கு சினிமாவிற்கு 4 டிக்கெட் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதன் விலை 500 ரூபாய். உங்களிடம் கார் இல்லை, வெளியில் நல்ல மழை, ரெகுலராக செல்வது போல பஸ்ஸில் போக முடியாது, போனால் போகிறது என்று போகாமல் விட்டுவிடுவோம். காட்சி மாறுகிறது, நீங்கள் 4 டிக்கெட் 500 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளீர்கள், அதை இழப்பதற்கு மனமில்லை எனவே இன்னும் 300, 400 ரூபாய் கொடுத்து ஆட்டோவிலோ அல்லது கால் டாக்ஸியில் போய் விடுவோம்.
ஏனென்றால் நம்முடைய 500 ரூபாய் என்றால் இழப்பதற்கு மனமில்லை. டிக்கெட் நீங்கள் வாங்கினால் அதற்கு ஒரு விலை, மற்றவர் கொடுத்தால் இன்னொரு விலை, இது எந்த ஊர் நியாயம்?
மற்றொரு உதாரணம், நாம் ஒரு லேப் டாப் வாங்கச் செல்கிறோம், அதனுடைய விலை 40,000 ரூபாய். பில் போடும் முன்பு கடைக்கு வந்த ஒருவர் சொல்கிறார், 1 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு கடையில் இது 39,500, நாம் 2.5% டிஸ்கௌன்ட்டிற்காக அவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமா என்று பெரும்பாலும் அந்தக் கடையிலேயே வாங்கிவிடுவோம். அதே சமயம் ஒரு PEN DRIVE ன் விலை ரூ.1000, அது வேறு கடையில் 40% டிஸ்கௌன்ட் என்றவுடன் விழுந்தடித்து கொண்டு ஓடிவிடுவோம்.
500 ரூபாய் 40,000 ரூபாயோடு ஒப்பிடும்போது நமக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அதைவிட குறைவான 400 ரூபாய் 1000 த்துடன் ஒப்பிடும்போது பெரிதாகத் தெரிகிறது. ஆனால் இந்த 2 தள்ளுபடியையும் நமதாக்கி கொள்ளவேண்டுமானால் நாம் செலவிடும் நேரம் ஒன்றே!
இரண்டு மாதம் முன்புதான் நம் வீட்டில் 40” புதிய கலர் TV வாங்கியுள்ளோம், நமக்கு குலுக்கலில் அதே மாதிரி ஒரு TV பரிசாகக் கிடைக்கிறது அதன் விலை 40,000 ரூபாய். நம்மிடம் யாராவது விலைக்கு கேட்டல் நாம் ரூபாய் 35,000 முதல் 38,000 வரை கொடுக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். மாறாக நம்முடைய நண்பருக்கு இதே மாதிரி விழுந்தால் நமக்கு அதை 25,000 அல்லது 30,000 ரூபாய்க்கு தரவேண்டும், ஏனெனில் அது நண்பருக்கு தேவை இல்லை என்று எண்ணுவோம்.
எனக்கு ஒரு செய்தி முன்பு எப்போதோ படித்தது மனதிற்கு வருகிறது. ஒருவன் ஆற்றில் கால் தவறி விழுந்து விட்டான், அவனுக்கு நீச்சலும் தெரியாது, நீச்சல் நன்கு தெரிந்த ஒருவர் “உன் கையை கொடு”. நான் மேலே தூக்கி விடுகிறேன் என்று எவ்வளோவோ சொல்லியும் அவன் கையை கொடுக்கவில்லை. சிறிது யோசனைக்கு பின்பு, “இந்தா என் கையை பிடித்துக்கொள்” என்றவுடன் கையை லபக் என்று பிடித்து கொண்டான். வார்த்தையில் கூட எதையும் பிறரிடம் தருவதில்லை, ஆனால் யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளவேண்டும்... நல்ல கொள்கை!
மேலும் சிலர் நகைச்சுவையாய் சொல்வார்கள். உங்கள் வீட்டிற்கு நான் வந்தால் எனக்கு என்ன தருவாய் என்றும் அதே சமயம் என் வீட்டிற்கு நீ வந்தால் எனக்கு என்ன கொண்டு வருவாய் என்பார்களாம்.
இதில் இருந்து தெரிவது என்னவென்றால் எந்த ஒரு பொருளும் நம் கையில் இருந்தால் அதற்கு மதிப்பு அதிகம், மற்றவர்கள் கையில் இருந்தால் அது குறைவு. ஆனால் நடைமுறை வாழ்வில் பணம் யாரிடம் இருந்தாலும் ஒன்றே.
நாம் ஒரு ஹோட்டலுக்கு டீ சாப்பிட செல்கிறோம், அப்போது அந்த டீ கீழே கொட்டிவிடுகிறது, நாம் வேறு டீ வாங்கிக்கொள்வோம். அதே சமயம் டீக்கு என வைத்துள்ள பணம் தவறி கீழே விழுந்து விட்டது. அப்போது நாம் டீ குடிப்பதைத் தவிர்த்துவிடுவோம். ஏனெனில் டீக்கு என வைத்துள்ள பணத்தை நாம் தொலைத்துவிட்டோம், அது அந்த டீ குடித்ததற்கு சமம் என நினைக்கிறோம்.
இன்று நிறைய பேருக்கு போனஸ் என்று ஒரு தொகை அவர்களுடைய சாலரியை தவிர வருட முடிவில் கிடைக்கிறது. அந்த போனஸ் தொகை என்பது அவர்கள் நமக்கு சும்மா தரவில்லை, நம்முடைய செயல்பாடு, மற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டை ஒட்டித்தான் பெரும்பாலும் போனஸ் தரப்படுகிறது. ஆனால் நாம் அந்த பணத்திற்கு சாலரிக்கு கொடுக்கும் மதிப்பை ஒரு போதும் தருவதில்லை மாறாக அது நமக்கு கிடைத்த பரிசு என்று நினைத்து அந்த பணத்தை பெரும்பாலும் விரயம் செய்கிறோம் என்றால் அது மிகையாகாது.
பொதுவாக ஹோம் லோனில் நாம் வாங்கும் பணத்தை போன்று 2.5 மடங்கு வட்டியுடன் சேர்த்து நாம் பணம் கட்டுவோம். அதாவது 20 லட்சம் என எடுத்துக்கொண்டால் 48 லட்சம் மொத்தமாக செலுத்துவோம். இதை பார்க்கும் பலர் என்னுடைய எல்லா பணமும் வட்டியிலே போய்விடுகிறது அதை சீக்கிரம் அடைக்கவேண்டும் என்று முன்பாகவே லோனை முடித்து விடுவார்கள்.
அதே சமயம் நான் மாதம் 10,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் போட்டால் இன்னும் 20 வருடங்களில் 15% கூட்டு வட்டியில் அந்த தொகை 1.51 கோடி, உடனே அதற்கு 20 வருடத்தில் என்ன வேல்யு இருக்கப்போகிறது. உங்கள் பணம் 6 மடங்கு பெருகுவது கண்ணிற்குத் தெரியவில்லை ஆனா நீங்கள் கட்டக்கூடிய 2.5 மடங்கு கண்ணை உறுத்துகிறது.
மேலே சொன்னவை ஒவ்வொரு சூழ்நிலையில் எப்படி ஒருவர் மனநிலை வேறுபடுகிறது என்பதற்கு உதாரணங்கள். இதோடு நம்முடைய முதலீட்டு முறையை ஒப்பிட்டு பார்த்தால் நாம் எவ்வளவு தவறுகள் தெரியாமால் செய்கிறோம் என்பது புலப்படும். ரியல் எஸ்டேட், பங்கு சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் உள்ளவை, ஆனால் நாம் ஒவ்வொரு வருடமும் மற்ற குறுகிய கால முதலீடுகளுடன் ஒப்பிட்டு, நாம் அதில் போட்டிருக்கலாம் அல்லது இதில் போட்டிருக்கலாம் என்று நினைப்பது தவறு.
மேலும் இன்சூரன்சில் போட்ட பணம் 5% வட்டிக்கு மேலே கிடைக்கவிட்டாலும் அதை பெரிதாக எடுத்துகொள்வதில்லை மாறாக எனக்கு அது கம்மியாக இருந்தாலும் அது பாதுகாப்பானது என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம்.
உதாரணமாக நாம் 1 லட்ச ரூபாய் க்கு, 5 பங்குகள் வாங்கினால் அதில் 2 லாபகரமாக இருக்கும் அதே சமயம் 3 நஷ்டத்தில் இருக்கும். ஆனால் மொத்தத்தில் 10% லாபம். நம் மனது 3 பங்கு ஏன் நஷ்டத்தில் உள்ளது என்று தான் என்னுமே தவிர மொத்தத்தில் நம்முடைய முதலீடு லாபத்தில் உள்ளதை நினைப்பதில்லை. மாறாக மியூச்சுவல் ஃபண்டில் 30 அல்லது 40 பங்குகள் வாங்கி அதனுடைய மதிப்பை NAV மூலம் தெரியப்படுத்துகிறார்கள். அதிலும் சில பங்கு லாபத்திலும் சில பங்கு நஷ்டத்தில் இருந்தாலும் NAV மூலம் பார்ப்பதால் நம்மை அது பாதிப்பதில்லை.
சாராம்சம்
பணம் எந்த உருவில் நமக்கு கிடைத்தாலும் அதன் மதிப்பு ஒன்றே. அதனால் எல்லா பணத்தையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கவேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு நாம் பணத்தை எதற்காக முதலீடு செய்கிறோம் அதனுடைய குறிக்கோள் என்ன, அது குறுகிய கால முதலீடா அல்லது நீண்ட காலமா? அது உத்திரவாத வட்டியை அல்லது சந்தையின் போக்கிற்கேற்ப மாறுபட்டு, கொஞ்ச காலம் காத்திருந்தால் அதிக ரிடர்ன் கிடைப்பதற்கு எவ்வளவு சதவிகித வாய்ப்பு உள்ளது முதலியவற்றை அறிந்த பின்பே முதலீட்டை தேர்வு செய்யவேண்டும்.
இன்று எல்லாமே, தலை கீழ், நம்மில் நிறைய பேர் இதைப்பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்து கொள்ள விரும்பாமலும் முதலீடு செய்து (அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லாமல்) தம்முடைய செயலுக்கு அடுத்தவரை பலிகடாவாக்குவது மிகவும் தவறு. இதைப் புரிந்து கொண்டால் எல்லோராலும் எளிதாக பணம் செய்ய முடியும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
padmanaban@fortuneplanners.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago