‘மித்’ என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் எது?

By அரவிந்தன்

முகநூல் எனத் தமிழ் எழுத்தாளர்களால் வழங்கப்படும் ஃபேஸ்புக்கில் தமிழ் சார்ந்த விவாதங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. முகநூலில் பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பவனாகவே பங்குபெறும் எனக்கு ஒரு சில விஷயங்களில் மட்டும் நேரடியாகப் பங்குபெறுவதற்கான உந்துதல் ஏற்படும். மொழி சார்ந்த விவாதங்கள் அவற்றில் ஒன்று. ஒருநாள் காலையில் தொன்மம் என்னும் சொல் குறித்துக் கவிஞர் பெருந்தேவி போட்டிருந்த பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது.

“ ‘மித்’(myth) என்கிற சொல்லுக்கு இணையான வார்த்தை தமிழில் இல்லை / உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்” என்று தொடங்கும் அந்தப் பதிவைச் சற்றே சுருக்கி இங்கே தருகிறேன்.

“தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பில் நிச்சயம் பிரச்சினை இருக்கிறது. ‘தொல்’, அது சுட்டும் பழமை, வரலாற்றுக்கும் ‘மித்’துக்குமான இடைவெளியை அழித்து, இரண்டையும் ஒன்றாக்கிவிடக்கூடிய தவறான, அபாயமான சாத்தியத்தை வலுப்படுத்துகிறது. ‘பழமை’ என்ற சுட்டுதல், ஒருவகையில் மரபுபோன்ற அதன் அதிகாரப் பிடிமானத்தைக் குறித்தாலும்கூட, ‘பழமை’ என்கிற கருத்தாக்கம் ‘இன்றைக்கு’ சமூக, பண்பாட்டு அறிவுப்புலத்தில் கொண்டிருக்கும் பொருண்மையான மதிப்பை அதிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. மேலும், காலப்போக்கில் ‘மித்’தின் சொல்லாடலில் நேர்ந்திருக்கக்கூடிய மாற்றங்களைக் கணக்கில்கொள்ள மறுக்கிறது. ‘புனைவு’ என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், அந்த மொழிபெயர்ப்பு தட்டையாக, ‘மித்’கொள்ளும் பண்பாட்டு, சமூகத் தள அதிகார இயங்கியல் பரிமாணத்தைக் குறைத்துவிடுகிறது” என்றார் பெருந்தேவி.

இதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், “மிதோஸ் என்பதையும் வைத்துப் பார்க்கலாம். இதற்கு ஆக்யானம் என்னும் சொல்லும் ஒப்புமைக்கு வரும். ‘தொன்மம்’ சரியில்லைதான். ஏனெனில், நவீன கால ‘மித்’கள் நமக்கு நிறைய இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார். “ஆக்யானம், சம்ஸ்கிருதத்தில் இருக்கலாம். தமிழில் நான் தேடுகிறேன்” என்று பெருந்தேவி பதிலிட்டிருந்தார். “மாயை என்று சொல்லலாமா?” என்று ராம்ஜி யாஹூ என்பவர் கேட்டிருந்தார்.

“‘மித்’ என்பதற்கு யதார்த்தத்தை மீறிய, மரபுவழிவந்த, தொல்கதை (traditional, ancient story) என்று அர்த்தம் கொள்கிறேன். அப்படியென்றால், அதற்கு ஈடான சொல்லாக ‘புராணம்’ என்பது சரியாக வரலாம் என விக்கி பக்கம் சொல்கிறது” என்று ஜ்யோவ்ராம் சுந்தர் கூறினார். “மொழிபெயர்க்கும்போது முழுமையான ஒப்புதல் இல்லாமல் நான் பயன்படுத்துகிற சொற்களில் இந்த ‘தொன்ம’மும் ஒன்று” என்பது மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமியின் வாக்குமூலம். “ ‘மித்’ என்பதை ‘புனைவில் பொதியப்பட்ட உண்மை’ என்பதாக எடுத்துக்கொள்கிறேன்” என அகநாழிகை பொன். வாசுதேவன் குறிப்பிட்டார்.

“காதை என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்குக் கதை என்ற பொருள் இருந்தாலும், நவீன ‘மித்’களை நவீன காதைகள் என்று சொல்லலாம் (modern myths then can be called)” என்று வெங்கடேஷ் சக்கரவர்த்தி குறிப்பிட்டார். இவற்றுக்கு எதிர்வினையாற்றிய பெருந்தேவி, “தமிழ் எழுத்துச் சூழலில் ‘தொன்மம்’ என்கிற மொழிபெயர்ப்பு எப்போதிலிருந்து புழக்கத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவல். கதிர்மகாதேவனின் ‘தொன்மம்’புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அதில் இச்சொல்லின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டிருப்பதாக ஞாபகத்தில் இல்லை. நண்பர் பொ.வேலுசாமி அவர்களுக்கு இவ்வார்த்தையின் பயன்பாடு குறித்துத் தெரிந்திருக்கலாம் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.

இந்த உரையாடலில் நானும் கலந்துகொண்டேன். எதிர்பார்த்ததைவிடவும் சற்றே நீளமாகிவிட்ட அந்தப் பதிவை இங்கே தருகிறேன்:

“தவறான கருத்து என்னும் பொருளில் மித் பயன்படுத்தப்படும்போது மாயை அல்லது பொய் என்னும் எளிய சொற்களே போதும். ஆனால், புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போது, புராணிகம் என்னும் சொல் பொருத்தமாக இருக்கும். இந்துப் புராணிகம், கிரேக்கப் புராணிகம் என்று இந்தச் சொல்லாக்கத்தைப் பல பின்புலங்களிலும் பயன்படுத்தலாம். இங்கே இதிகாசங்களையும் புராணங்களாகவே கொள்ள வேண்டும். புராண, இதிகாச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் பொது/ஆழ்மன வெளியில் ஊறிப்போன புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போதும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

“ஒரு சொல் கலைச்சொல்லாகத் தொழிற்படும் போது, அது அச்சொல்லின் வேர்ச்சொல் மற்றும் நேரடிப் பொருளின் எல்லைகளைத் தாண்டிய பொருளைத் தரக்கூடியது என்பது தெரிந்ததுதானே. எனவே, புராணிகம் என்னும் சொல்லாக்கம் மித் என்னும் சொல்லுக்கு நெருக்கமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

“இச்சொல் வடமொழிச் சொல் என்பதை வைத்து இதைத் தவிர்க்க வேண்டியதில்லை. தொனி, நவ, தரிசனம் என்பன போன்ற பல வடமொழிச் சொற்கள் தமிழ் இலக்கியச் சொல்லாடல்களில் இயல்பாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தமிழில்தான் வேண்டும் என்றால், தொன்மம் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். புராணிக என்பதும் தொல் என்பதும் பழைய என்று பொருள்படும் சொற்களே. தொன்மம் என்னும் சொல்லின் போதாமைகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், ‘மித்’என்னும் சொல்லுக்கு ‘தொன்மம்’தான் தமிழில் இணைச்சொல் என்று முடிவுசெய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், அந்தப் பயன்பாடே அச்சொல்லின் வலிமையைக் காலப்போக்கில் கூட்டிவிடும். சொல்லின் பொருள் என்பது முற்றிலும் புறவயமானது அல்லவே. காலம், இடம், பண்பாடு ஆகிய காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டும் விஸ்தரிக்கப்பட்டும் உருக்கொள்ளும்/ உருமாறும் சங்கதிதானே. பொருள் என்பது மிகுதியும் பொருள்கொள்ளுதல் என்பதாகவே உள்ளது. விவாதங்களில் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே முக்கியம். பொருளுக்கும் பொருள்கொள்ளுதலுக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறியலாம்.”

இதற்குப் பதிலளித்த பெருந்தேவி, “உங்கள் கூற்றில் அர்த்தமிருக்கிறது என்றாலும் ‘ஆதர்சமான’ வாசகர்/உரையாடுபவர் குழுமத்தை நீங்கள் எண்ணத்தில் கொண்டு பேசுவதாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே ‘மித்’என்பதும் ‘வரலாறு’என்பதும் ஒன்றையொன்று ‘அபாயகரமாக’பதிலீடுசெய்து உயிர், உடைமை விரயங்களை, வன்முறையை ஏற்படுத்தும் சூழலில், தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பு இத்தகைய பதிலீடுகளின் சாத்தியத்தை இன்னும் வலுப்படுத்தும் என்பதே என் புரிதல்” என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த நான், “செட் தோசை 30 ரூபாய் என்று சொல்லும்போது, செட் என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பது சராசரி வாடிக்கையாளருக்குப் புரியவே செய்கிறது. மைசூர்பாகுக்கும் மைசூருக்கும் தொடர்பில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். எனவே, கலைச்சொல்லாக்கத்தில் சொல்லின் நேர்ப்பொருள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றின் வாசகர்கள் குறித்து நாம் சில அனுமானங்களைக் கொள்ளத்தான் வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரை புராணிகம் என்னும் சொல்லும் தொன்மம் என்னும் சொல்லும் நீங்கள் எழுப்பும் பெரும்பாலான கேள்விகளின் சோதனைகளைக் கடந்து நிற்கின்றன என்றே தோன்றுகிறது” என்று குறிப்பிட்டேன்.

முகநூல் உரையாடல் இத்துடன் தற்காலிகமாக முடிவுபெற்றது.

அரவிந்தன் - தொடர்புக்கு: aravindan.di@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்