உங்கள் குழப்பத்தை ஊர் குழப்பம் ஆக்காதீர்கள் ரஜினி!

By அரவிந்தன்

வெள்ளைத் தாமரைப் பூவின் இதழ்களிலிருந்து மேல் நோக்கி விரியும் அபான முத்திரை. இந்தப் பின்புலத்தில் நின்றுகொண்டுதான் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை தனது கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

‘பாபா’ முத்திரை எனப் பரவலாக நம்பப்படும் அபான முத்திரை, உடலைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ஆன்மிகரீதியில் தாமரை என்பதன் பொருள் வேறு. அரசியலில் அதன் பொருள் வேறு. அபான முத்திரையின் பயனாகச் சொல்லப்படும் தூய்மைப்படுத்துதல் என்பதற்கு உடல் சார்ந்து கொள்ளக்கூடிய பொருள் வேறு, அரசியல் சார்ந்த பொருள் வேறு. ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்தித்தபோது, பின்புலத்தில் இந்த இரு சின்னங்களும் இருந்ததை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

ரஜினியின் பேச்சும் அப்படித்தான். திரையிலும், அதற்கு வெளியிலும் அவர் பலமுறை இத்தகைய வசனங்களைப் பேசியிருக்கிறார். ‘என் வழி தனி வழி’, ‘வர வேண்டிய நேரத்துல வந்துடுவேன்’, ‘கடமையைச் செய்.. பலனை எதிர்பார்’, ‘நான் அரசியலுக்கு வந்தால் தூய்மையான அரசியலையே முன்னெடுப்பேன்’…

இதுபோன்ற வசனங்களைப் பரிசீலித்தால், ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அரசியல் விஷயத்தில் ஆழமான எந்தக் கருத்தும் ரஜினிக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அதை அவர் சொன்னதில்லை.

மாறிய ரஜினியின் குரல்

வணிகரீதியில் உச்ச நட்சத்திரமான ரஜினிக்கு அபரிமிதமான அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 1994-95 காலகட்டத்தில் மொத்தத் தமிழகமும் ஜெயலலிதாவின் அதிரடி கண்டு ஒடுங்கி நின்றபோது, ஜெயலலிதாவைப் பொது அரங்கில் நேரடியாக விமர்சித்தவர் ரஜினி. அப்போது சந்தையில் அவரது நிலை உச்சத்தில் இருந்தது. ‘பாட்ஷா’வுக்குப் பின் திரைக்கு வெளியில் வெளிப்படையாக அரசியல் பேசிய ரஜினி, ‘படையப்பா’வில் படத்துக்குள்ளும் அதைத் தொடர்ந்தார். ‘பாபா’வில் அது உச்சம் பெற்றது. ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதிலிருந்தே அவருடைய அரசியல் குரல் தேயத் தொடங்கியது. பல சமயங்களில் அரசுக்கு ஆதரவாகவும் அவர் குரல் வெளிப்பட்டது.

ரஜினிக்கும் உண்டு நெருக்கடி

கால மாறாட்டத்தில் திரையரங்கில் ரஜினி மாயம் மங்கத் தொடங்கியது. அவருடைய படங்களின் தொடக்கக் காட்சிகள் ஏற்படுத்தும் பரபரப்பு குறையவில்லை எனினும் பாட்ஷா, படையப்பா போன்ற படங்களுக்கு இணையான வீச்சும் தாக்கமும் இல்லை என்பது கண்கூடு. சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி ஆகிய படங்களுக்கான முதல் நாளின் ரசிக ஆரவாரம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. தமிழ்த் திரையுலகமே பெரும் தத்தளிப்பில் இருக்கும் நிலையில், எல்லா நட்சத்திரங்களும் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி ரஜினிக்கும் இருக்கிறது. ரஜினி படத்தால் நஷ்டம் என்னும் புலம்பல்கள் ‘சந்திரமுகி’க்குப் பிந்தைய ரஜினியின் எல்லாப் படங்கள் தொடர்பாகவும் எதிரொலித்துவருகின்றன. ரஜினி, எல்லாத் தரப்பினருக்கும் லாபம் தரும் படத்தைக் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. திரைத் துறையில் தன்னுடைய இடம் மெல்ல மங்கிவருவதை உணர்ந்துதான் தன் அரசியல் பிரவேசம் பற்றி அவர் பூடகமாகப் பேசுகிறாரா என்னும் ஐயத்தை அவர் பேச்சு ஏற்படுத்துகிறது.

தமிழக அரசியலில் ஸ்திரமின்மை நிலவும் இந்தச் சமயத்தில் ரசிகர்களைச் சந்தித்துள்ள ரஜினி, அரசியலைப் பற்றிப் பேசியிருப்பதும் ‘பணத்தாசை கொண்ட’ தன் ரசிகர்களைக் கண்டித்திருப்பதும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாதவை. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அரசியல் களத்தில் இல்லை, ஆளுங்கட்சி பிளவுபட்டுக் கலகலத்துப்போயிருக்கிறது. திமுகவைத் தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வலுவோடு இல்லை. புதிதாக ஒருவர் அரசியலுக்குள் நுழைய வேண்டுமென்றால், அதற்கு இதைவிடவும் சிறந்த நேரம் இருக்க முடியாது. இந்தச் சூழலையும் திரைத் துறையில் தனக்கான தனி இடம் மங்கிவருவதையும் கணக்கில் கொண்டே ரஜினி காய் நகர்த்துகிறாரா?

இருக்கலாம். ஆனால், ரஜினியின் அரசியல் பேச்சு வழக்கம்போலவே குழப்பமாக இருப்பதால் அவருக்கு உண்மையிலேயே அந்த எண்ணம் இருக்கிறதா அல்லது வழக்கமான பூச்சாண்டிதானா என்னும் ஐயமும் எழுகிறது. அரசியலுக்கு வந்தால் நியாயமான அரசியலையே முன்னெடுப்பேன் என்றும் அரசியலை வைத்துச் சம்பாதிக்க நினைக்கும் ரசிகர்களுக்கு அதில் இடம் இருக்காது என்றும் தெளிவாகச் சொன்ன அவர், கடைசியில் எல்லாம் ஆண்டவன் கையில் என்று வழக்கம்போலச் சொல்லிவிட்டார். எல்லாம் ஆண்டவன் கையில் என்றால் இதையெல்லாம் ஏன் பேச வேண்டும்? இதைக் குழப்பங்களின் குவியல் என்றும் சொல்லலாம். பிறரைக் குழப்பும் தந்திரம் என்றும் சொல்லலாம். தன் ரசிகர்களை அவர் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்?

‘வரும்… ஆனா வராது…’ இது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவைக் காட்சியொன்றில் ‘என்னத்தே’ கன்னையா பேசும் வசனம். தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் திரையில் அதீத சாகச நாயகனாகவும் விளங்கும் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வின் மிக முக்கியமான ஒரு நகர்வு, ‘வரும்… ஆனா வராது…’ என்னும் பரிகாசமாகவே ஆகிவிட்டது நகைமுரண்தான்.

சிந்தனையும் செயல்திட்டமும் எங்கே?

ரஜினி இதுவரை வெளிப்படுத்தியுள்ள அரசியல் கருத்தில் மாற்று அரசியலுக்கான சிந்தனையோ செயல்திட்டமோ இல்லை. எல்லாரும் பொதுவாகப் பேசுவதுபோலத் தூய்மை அரசியலைத்தான் அவரும் பேசுகிறார். தூய அரசியல் பற்றிப் பேசுவது எளிது. அதற்கான செயல்திட்டம் என்ன என்பதுதான் முக்கியம். அதற்கு, அரசியலில் ஊழல் செயல்படும் விதம் குறித்த ஆழமான புரிந்துணர்வு தேவை. இந்தப் புரிந்துணர்வோ அதன் அடிப்படையிலான செயல்திட்டமோ ரஜினிக்கு இருக்கும் என்று நம்புவதற்கான எந்த அடையாளத்தையும் அவர் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. தூய்மை என்பதைத் தாண்டி, அவர் பேசிய அரசியல் கருத்துகள் எல்லாம் தேசம், ஒற்றுமை, பண்பாடு குறித்தவை. இவை மென் இந்துத்துவ வகையைச் சேர்ந்தவை. எனவே, சித்தாந்தத் தளத்திலும் புதிதாகவோ நம்பிக்கை அளிக்கும் விதத்திலோ அவரது அணுகுமுறை இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை.

இத்தகைய கருத்தியலை முன்வைத்து அரசியல்செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. அல்லது பலரும் கருதுவதுபோல பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்புரிவதற்கான உரிமையும் இருக்கிறது. ஆனால், அதை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

தன் அசல் பார்வையை மறைப்பதற்கான முகமூடியாகத் தூய அரசியல் என்னும் கோஷத்தைப் பயன்படுத்த அவர் நினைக்கக் கூடாது. திடீரென்று ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு, அதன் பிறகு ஆண்டவனைக் கேடயமாகப் பயன் படுத்திக்கொண்டு தப்பித்துக்கொள்ளவும் நினைக்கக் கூடாது.

தமிழக அரசியல் என்பது திரை நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர் பலத்தை வைத்துப் பகடை ஆடும் களம் அல்ல. அது மக்கள் வாழ்வோடு தொடர்புகொண்டது. இன்று அது மிகத் தீவிரமான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில், திரையுலக நாயகர்கள் இங்கே வந்து கிச்சுகிச்சு மூட்டுவது, ஸ்திரத்தன்மை இல்லாத அரசியல் சூழலில் சிக்கித் தவிக்கும் மக்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. தெளிவான பேச்சு அல்லது மௌனம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காவிட்டால், ரஜினியின் அரசியல் என்பது நிரந்தரமான நகைச்சுவையாக மாறிவிடும்.

- அரவிந்தன்,

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்