காலத்தின் வாசனை: ஜவ்வாதுப் பூனையும் ரஹீம்பாய் அத்தர் கடையும்!

By தஞ்சாவூர் கவிராயர்

ஒரு காலத்தில் தஞ்சாவூர் அய்யங்கடைத் தெருவில் வாசனைத் திரவியங்கள் விற்கும் கடைகள் நிறைய இருந்தன. 50 வருடங்களில் தஞ்சாவூர் பல உன்னதங்களை இழந்துவிட்டது. அவற்றுள் இந்த வாசானாதி திரவியக் கடைகளும் அடங்கும்.

அபூர்வமாக அப்துல் ரஹீம் அத்தர் கடை மட்டும் மிச்சமிருக்கிறது. 1922-ல் ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கடைக்கு, இப்போது 94 வயசு.

வாசிப்பா? வாசனையா..?

எளிமையான கடை. உட்கார்வதற்காக ஒரு பாய் விரிந்து கிடக்கிறது. கடை முதலாளியும் சின்னதொரு பாயில்தான் குந்தியுள்ளார். அவருக்கு முன்னால் ஒரு பெரிய சந்தனக் கல். அதில் பெரிதாக ஒரு சந்தன உருண்டை. சந்தனம் கேட்டு வருபவர்களுக்கு அதிலிருந்து கொஞ்சம் எடுத்து, அதில் பச்சைக் கற்பூரம் தூவி, வாசனைத் தைலம் கலந்து பிசைந்து உருட்டித் தருகிறார் கவுஸ் பாய்.

ரோஜாப்பூ அத்தர், தாழம்பூ அத்தர், மல்லி அத்தர், வெட்டி வேர் அத்தர் என்று அத்தரில்தான் எத்தனை வகைகள்? இப்படிப் பல வகைகள் இருந்தாலும் ‘சுவாஹ்’ என்கிற அத்தர்தான் ரொம்பவும் விசேஷமானதாம். விலை உயர்ந்த இந்த அத்தரை வீணை தனம்மாள் விரும்பி வாங்கிப் போய், வீணையி னுடைய நரம்புகளில் தடவி வாசிப்பாராம். வீணை பாலசந்தரும் வாங்கிப்போவது உண்டாம். வாசிப்பா? வாசனையா..? கேட்பவர்களைக் கிறுகிறுக்க வைத்துவிடுவார்கள்.

அகர் பத்தியை அழைத்து வந்தவர்கள்

மராட்டிய மன்னர்கள் தஞ்சைக்கு வந்தபோது தங்களுடன் வைத்தியர்கள், அரக்கு வளையல் செய்பவர்கள், வாசனாதித் திரவியங்கள் தயாரிப்பவர்களை எல்லாம் கூடவே, பீஜப்பூரில் இருந்து அழைத்துவந்திருக்கிறார்கள்.

சரபோஜி மகாராஜா அகர்பத்தி தயாரிக்கும் தொழில்முறைக் கலைஞர்களை ஆதரித்து, தஞ்சாவூர் கீழவாசலில் அத்தர் மொஹல்லாவில் குடியிருக்க வைத்துள்ளார். அத்தர் மொஹல்லா மசூதி இன்றும் இருக்கிறது. அவர்கள் குடியிருந்த தெருவுக்கு கந்தப் பொடிக்காரத் தெரு என்றே பெயர்.

அதிசய அகர்பத்தி

ஒரு நீண்ட கண்ணாடிக் குழாயை எடுத்துக் காட்டினார் கவுஸ் பாய். அதனுள்ளே ஈர்க்குச்சியை விடவும் மெலிதான நீண்ட அகர்பத்தி வைக்கப்பட்டு, குழாய் இறுக்கமாக மூடப்பட்டிருந்தது.

‘‘150 வருடங்களுக்கு முன்னால் என்னுடைய முன்னோர்கள் தயாரித்த அகர் பத்தி இது. புனுகுப் பூனையின் புனுகு சுரக்கும் பையில் இருந்து தயாரித்தது. திறந்தால் வாசனை சொல்லி மாளாது. இது என்னிடம் இருப்பதைக் கேள்விப்பட்டு, எங்கிருந்தோ ஒரு வெள்ளைக்காரன் வந்து, சில லட்சங்கள் தர்றதா சொல்லி, இந்த பத்தியைக் கொடுக்கச் சொன்னான். நான் தர மாட்டேன்னுட்டேன்!’’

10 ரூபாயைக் கொடுத்து சந்தனம் கேட்ட பெண்ணுக்கு சந்தனத்தை உருட்டி, தாமரை இலையில் வைத்து மடித்துக் கொடுத்தபடியே சிரித்தார் கவுஸ் பாய்.

அகர் என்று ஒரு வகை மரம். அசாமில் வளர்கிறது. ஊது என்பது அகர் மரத்தின் இடுக்குகளில் சுரக்கும் பிசின். மரத்தின் சக்கைதான் ஊதுபத்தி. உயர்ந்த வகை ஊதுபத்திகள் நாகணம் தேவதாரு குச்சி, சந்தனச் சிறாய், அகர், ஜாதிப் பத்திரி, ஜடாமாஞ்சில், அகில், இனியூரம் பட்டை, பூலாங்கிழங்கு மைரா இவற்றைக்கொண்டு செய்யப்படுகிறது.

கடவுளுக்குப் பிடித்த வாசனை

ஜவ்வாது, கஸ்தூரி, புனுகு முதலிய வாசனைத் திரவியங்களால் செய்யப்படாத எந்த பூஜையையும் இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்று சாஸ்திரங்களில் குறிப்பாக வைணவ சம்பிரதாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று வகை வாசனைத் திரவியங்களால் திருப்பதி ஏழுமலையானுக்குக் காலம் காலமாக அபிஷேகம் செய்யப்பட்டுவருகிறது. பலரும் நினைப்பதைப் போல் புனுகு என்பது அந்தப் பூனையின் கழிவு அல்ல. வால் பகுதியில் உள்ள சிறிய தோல் பையில் ஒரு வகை மெழுகு அவ்வப்போது திரளும். அதற்குப் பேருதான் புனுகு. இப்போதெல்லாம் புனுகுப் பூனையை யாரும் வீட்டில் வளர்ப்பதில்லை. ஏனெனில், புனுகுப் பூனையை வளர்ப்பது இந்திய காட்டுயிர் சட்டத்தின்(1972)படி குற்றம்.

வாசனையின் கொக்கரிப்பு

ரஹீம் பாயின் பேரன்களில் ஒருவரான முகம்மது ஃபாரூக், தமது குடும்பங்களில் ஜவ்வாதுப் பூனைகளும் புனுகுப் பூனைகளும் வளர்த்த காலத்தை நினைவுகூர்ந்தார்.

‘‘எங்கள் தாத்தா ஜவ்வாதுப் பூனையின் வால் பக்கம் இருக்கும் தோல் பையிலிருந்து ஜவ்வாது எடுப்பதில் கில்லாடி.

நாம் முதல் தடவை ரோஜாவை முகரும்போது ஒரு வாசனை வருமல்லவா… அதை நம்முடைய மூளை பதிவுசெய்து வைத்துக்கொள்ளும். மறுபடியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் ரோஜாவைப் பார்த்தால், ஞாபகத்திலிருந்து அந்த வாசனையைக் கிரகித்து, முகராமலேயே உணர வைக்கும் ஆற்றல் மனசுக்கு உண்டு. வாசனை என்பது ஞாபகங்களால் ஆனது…’’ - இப்படி வாசனையைப் பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்துவைத்திருக்கிறார் ஃபாரூக்.

என்ன நினைத்தாரோ என்னவோ, கவுஸ் மீண்டும் வாயைத் திறந்து ‘‘இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு சிந்தடிக் ரசாயனமும், ஆல்கஹாலும் கலந்த சென்ட் வகைகள்தான் ரொம்பப் புடிக்குது. அதெல்லாம் தோலுக்குக் கெடுதல் செய்பவை!’’ என்றார் வருத்தத்துடன்.

ரஹீம் பாய் அத்தர் கடையின் பெயர்ப் பலகையில் ஒரு சேவல் படம் வரையப்பட் டிருந்தது.

புதிது புதிதாக எத்தனை வாசனைகள் வந்தால்தான் என்ன? அசலான வாசனையைத் தேடி வந்துகொண்டிருக்கும் வாசனைப் பிரியர்கள் இருக்கும் வரையில்… அந்தச் ‘சேவல்’ கூவிக்கொண்டே இருக்கும். அது வாசனைக் கொக்கரிப்பு!

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்