குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நாளாக, நவம்பர் 19-ம் தேதி கடைப்பிடிக்கப் படுகிறது. இத்தருணத்தில் பின் வரும் தகவல்களைப் பாருங்கள்.
# பாலியல் வன்முறைக்கு அதிகம் உள்ளாவது, 5 முதல் 12 வயது வரையிலான சிறார்கள்தான்.
# 53.22% குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட வன்முறைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
# 21.9% குழந்தைகள் கொடுமை யான வன்முறைக்கு ஆளாகியிருக்கி றார்கள்;
# பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு நிகழ்ந்த வன்முறை குறித்து யாரிடமும் சொல்வதில்லை.
இந்தியாவில் 2007-ம் ஆண்டு, 12,500 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட விரிவான ஆய்விலிருந்து கிடைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்தான் இவை.
‘குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை’குறித்த விழிப்புணர்வைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு ஏற்படுத்திவரும் துளிர் அமைப்பின் திட்ட அலுவலர் நான்ஸி, ‘குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை’பற்றி பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
‘குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை’என்றால் என்ன?
உடலில் காயங்களை ஏற்படுத்துதல், மனரீதியாக அவர்களைத் துன்புறுத்துதல் (உன்னைத் தொடுவதற்கு அனுமதிக்காவிட்டால், உன்னிடம் பேச மாட்டேன் என்பது போன்று), ஒருவர் தன்னுடைய அந்தரங்க உறுப்புகளையோ பிறருடைய அந்தரங்க உறுப்புகளையோ தொடுமாறு குழந்தைகளைத் தூண்டுவது, பாலியல் ரீதியிலான காட்சிகளைப் பார்க்கத் தூண்டுவது… இப்படிப்பட்ட காரணங்களால் குழந்தைகளின் ஆரோக்கியம், தன்மதிப்பு, வாழ்வாதாரம், முன்னேற்றம் போன்றவையெல்லாம் பாதிக்கிறது என்றால், அவைதான் ‘குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்’என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது.
எங்கெல்லாம் இந்த வன்முறை நடக்கிறது?
வீடு, பயணிக்கும் வாகனங்கள், பள்ளி, விளையாட்டு மைதானங்கள், நீச்சல்குளங்கள் போன்ற தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் இடங்கள் என எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட வன்முறைகள் நடக்கின்றன. எனவே, பாதுகாப்பான தொடல்கள் (குட் டச்) எவை, பாதுகாப்பற்ற தொடல்கள் (பேட் டச்) எவை என்பதை உங்களின் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டியது மிகமிக அவசியம்.
உன் உடல், உன் உரிமை
உன் உடம்பு, உன் உரிமை என்பதை அறிவுறுத்தும் புகைப்படங்களுடன் கூடிய கையேட்டைப் பள்ளிச் சிறுவர்களிடம் நாங்கள் அளித்துவருகிறோம். குழந்தைகளின் பாதுகாப்புக்கான யோசனைகளை யுனிசெஃபின் உதவியுடன், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கிவருகிறோம். ஏழு மாவட்டங்களில், பள்ளிகளின் முகப்பிலேயே பாதுகாப்பான தொடல், பாதுகாப்பற்ற தொடல்களை விளக்கும் படங்களைக் கொண்ட அறிவிப்புப் பலகைகளை வைத்திருக்கிறோம். குழந்தைகளுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டியவை இவை. எந்த வயதிலிருந்து இதைச் சொல்வது என்ற தயக்கமே வேண்டாம். இரண்டு வயதுக் குழந்தைகூடப் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படும் காலம் இது. இரண்டு வயதுக் குழந்தைக்கு என்ன சொல்வது என்ற தயக்கம் இருக்கலாம். இரண்டு வயதுக் குழந்தை தன்னுடைய அந்தரங்க உறுப்பைப் பற்றிப் பேசும்போதோ, உடை அணியாமல் இருக்கும்போதோ, “ஷேம்… ஷேம்” என்று சொல்வதை நிறுத்துங்கள். உங்களின் இந்தப் பேச்சு, தன் உடல் பற்றிய தயக்கத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்கும். தயக்கம் உருவாகும்போது, அதுகுறித்து பேசத் தயங்குவார்கள்.
குழந்தைகளுக்கு எப்படிப் புரியவைப்பது?
அந்தரங்க உறுப்புகள் எவை என்று ஒரு குழந்தை கேட்டால், பதில் சொல்வதற்கு நிறையப் பெற்றோர்களுக்கே தயக்கம் இருக்கும். இது தேவையில்லாத தயக்கம். “உன் உள்ளாடையால் மறைக்கப்படும் உறுப்புகள்தான் அந்தரங்க உறுப்புகள்” என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும். மருத்துவக் காரணங்களுக்காக, ஆரோக்கியத்துக்காக (அம்மா, அப்பா, மருத்துவர் தவிர) வேறு காரணங்களுக்காகப் பிறர் அவற்றைத் தொடுவதோ பார்ப்பதோ, அவற்றைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை. இதுதான் தொடுதல் விதி. இதைச் சொல்வதற்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது. குழந்தைகளின் வயதுக்கேற்ப இதைச் சொல்லிப் புரிய வைக்கலாம். “நான் உன்னைத் தொட்டதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது… ரகசியமா உனக்குள்ளேயே வெச்சுக்கோ… என்று யாராவது சொன்னால், குழந்தைகளே… உடனே அதை நீங்கள் நம்பும் பெரியவர்களிடம் சொல்லிவிடுங்கள்” என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
பெற்றோர்களுக்கு நாங்கள் சொல்வது, முதலில் குழந்தை சொல்வதை நம்புங்கள். குழந்தைமீது எந்தத் தவறும் இல்லை என்பதைப் பரிவோடு சொல்லுங்கள். நீங்கள் ஆவேசப்பட்டாலோ ஆத்திரப்பட்டாலோ முழுக்க என்ன நடந்தது என்பதைக் குழந்தை சொல்லாது. குழந்தைகள் முதலில் தங்களுக்கு நேர்ந்ததை வேறு யாருக்கோ நடந்ததுபோல்தான் சொல்வார்கள். நீங்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்பதை வைத்துதான் தங்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல அவர்கள் முயற்சிப்பார்கள். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், அவ்வளவுதான், அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள்.
என்னென்ன விஷயங்களில் குழந்தை மீது பாலியல் ரீதியான வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கக் கூடும் என்பதை உணர்ந்து, எச்சரிக்கை நடவடிக்கையாக, தகுந்த ஆலோசகரை நாடலாம். குழந்தைகளிடம் கீழ்க்கண்ட செய்கைகள் காணப்பட்டால் நீங்கள் உடனே எச்சரிக்கை அடைய வேண்டும்.
# விளையாட்டுப் பொருள்களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்துவது
# வயதுக்கு மீறிய பாலியல் ரீதியான செயல்களைப் புரிவது
# மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல் தனிமையில் இருப்பது
# பள்ளி சார்ந்த நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்
# குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளில், உடலில் காயங்கள் காணப்படுதல்.
மேற்கண்ட சில அடையாளங்கள் காணப்படும் குழந்தைகள் எல்லாமே வன்முறைக்கு ஆளாகியிருக்கும் என்ற அவசியம் இல்லை. ஒரு குழந்தை, இன்னொரு குழந்தையைப் பார்த்தும் சில நடவடிக்கைகளைப் பின்பற்றும் வாய்ப்பிருக்கிறது.
குழந்தைகள் மீதான வன்முறை குறித்துப் பலகாலமாக நம்மிடையே உலவும் தவறான நம்பிக்கைகள் என்ன, உண்மை என்ன?
# பெண் குழந்தைகள்தான் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பது தவறு. ஆண் குழந்தைகளும் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
# அறிமுகமில்லாத நபர்களால்தான் இந்த வன்முறை நடக்கின்றது என்பது தவறு. குழந்தைகளுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களால்தான் இந்த வன்முறைகள் அதிகம் நிகழ்கின்றன.
# இந்த வன்முறைகளைச் செய்பவர்கள் ஆண்கள் மட்டுமே என்று நினைப்பது தவறு. பெண்களும் உண்டு.
# மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை என்பது தவறு. அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான்.
நெடுநாள் வடு
வன்முறை நடந்த உடனேயே குழந்தைகள் சொல்லிவிடுவதில்லை. பல நாள்கள், மாதங்கள், ஆண்டுகள் கழித்துகூட, தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறை குறித்துப் பேசுவது உண்டு. 60 வயது நபர் ஒருவர், அவருக்குச் சிறுவயதில் ஏற்பட்ட வன்முறை குறித்து எங்களிடம் பேசியிருக்கிறார்.
எச்சரிக்கை
குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பதை அதிகம் விரும்புபவர்களுக்கு பீடோஃபில் என்று பெயர். இவர்கள் கனவில் மிதப்பவர்கள். இவர்களைவிட, சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொண்டு செயல்படுபவர்கள்தான் ஆபத்தானவர்கள். இவர்கள், குழந்தைகளின் மீது வன்முறை நிகழ்த்துவதற்கு முன் அதற்கு முன்னேற்பாடாக, குழந்தைகளின் அன்பைப் பெறுவார்கள். அதற்காக, குழந்தைகளுக்குப் பல சலுகைகளை அளிப்பார்கள். உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தில் இருக்கும் பல குழந்தைகளில், ஒரு குழந்தையை மட்டும் ‘நீதான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’என்று புகழ்வார்கள். குழந்தையின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவார்கள். இதுபோன்ற பசுத்தோல் போர்த்திய புலிகளிடம்தான் நாம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சட்டம் என்ன சொல்கிறது?
குழந்தைகளைப் பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2012, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடக்கும் வன்முறைகளை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளாகக் கருதுகிறது; ஊடகம், பத்திரிகை போன்ற மக்கள் தொடர்புச் சாதனங்களில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர், புகைப்படம், முகவரி போன்றவற்றை வெளியிடுதல், அவர்களின் பிரத்தியேக அடையாளங்களைக் குறிப்பிட்டுப் பதிவு செய்தல் போன்றவற்றைத் தண்டனைக்கு உரிய குற்றம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. பள்ளிகளில் குழந்தைகள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டால் பள்ளி நிர்வாகமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் சொல்கிறது.
தமிழ்நாடு அரசின் பாடநூல்களில்…
பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில் 3-ம் வகுப்புப் பாடத்திலேயே “இப்படி நடந்தால்…” என்னும் பாடத்தை வைத்திருக்கிறார்கள். இந்தப் பாடத்தில், காணக்கூடாத காட்சியைப் பார்க்கும் வகையில் ஒருவர் தன்னைப் பலவந்தப்படுத்தியதை ஒரு சிறுமி தன்னுடைய ஆசிரியையிடம் சொல்வாள். அவளுடைய ஆசிரியை அன்போடு அரவணைத்து அந்தச் சிறுமியைத் தேற்றுவார். இப்படியாக, பாதுகாப்பான தொடல்களையும் செயல்களையும் குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் அந்தப் பாடம் அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து 8, 10, 12-ம் வகுப்புகளிலும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை அளிக்கும் பல்வேறு பாடங்களைச் சேர்த்திருக்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளால் சிறாரிடம் தற்காப்பு உணர்வும் விழிப்புணர்வும் பெருமளவில் ஏற்படும் என்று நாம் நம்பலாம்.
தொடர்புக்கு:puravi69@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago