நல்ல தமிழ் எங்கே கிடைக்கும்?

தொலைபேசி அழைப்பு குரல் கொடுத்தது.

காலையிலிருந்தே எதிர்பாராத மழை.

முதலில் மெல்லச் சிணுங்கி அப்புறம் அறைய ஆரம்பித்துவிட்டது.

முதல் நாள் காலையில் கூடிய எங்கள் முக்கூட்டில், “நாளைக்கு இந்நேரம் தஞ்சையில் இருப்போம்” என்றார்கள் நாயக்கரும் அமரநாதனும்.

நானோர் மொனண்டி. அதனால் என்னைக் கூப்பிடவில்லை.

ஒரு ரயில் நின்று புறப்படும் நேரம்தான் எங்கள் சந்திப்பு. இதை நாங்கள் முக்கூட்டு, நல்ல காலை என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறது. மழை அடித்த அடிப்பில் அவர்கள் சரியான படிக்கு நனைந்திருப்பார்கள். வந்திருக்க வேண்டாமே என்று தோன்றியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

மதியானம் ஆகியும் மழை விடவில்லை. நான் பேசியின் கூவலை நிறுத்த எடுத்தேன். அமரநாதன்தான்.

“நல்லா நனைஞ்சீங்களா?” என்று கேட்டேன். “சொட்டு மழை கிடையாது... இங்கே’’ என்றார்.

இப்படி எடக்கு பண்ணுறது இந்த மழைக்கு வழக்கம்தான். கூப்பிட்டால் கோபித்துக்கொண்டு போவதும், அழையா விருந்தாளியாக வந்து படுத்துவதும் வாடிக்கைதான்.

“மதியச் சாப்பாடு ஆச்சா?” - கேட்டேன்.

“திவ்யமா ஆச்சு.”

சாப்பிட்டால் வெத்தலைப்பாக்கு போட வேண்டுமே? தஞ்சைக் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு வெத்திலை பாக்குக் கடைக்குப் போனார்களாம். பாக்குப் பொட்டலம், தளிர் வெத்திலை, வாசனைச் சுண்ணாம்பு என்று அருமையாக அமைந்ததாம். அந்த ஜோரில் கிளம்பியிருக்கிறார்கள். கடைக்காரரின் அன்பான குரல்.

‘‘அண்ணாச்சி... எந்த ஊரு நீங்கன்னு சொன்னீங்கன்னா, உங்க ஊருக்கே வந்து துட்டை வாங்கிக்கிடுவேனே…”

பேசியில் நண்பர் சொன்ன இந்தச் செய்தியைக் கேட்டதும், ‘அட, எப்பேர்ப்பட்ட பணபாடான பேச்சு. மெனக்கிட்டு தஞ்சாவூருக்கே போயி, அந்தக் கடைக்காரரைப் பாராட்டலாமே’ என்று தோன்றியது.

மக்களிடம் பண்பு என்று இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், அதை அவர்கள் வெளியிடும் பாங்கைப் பார்த்தீங்களா?

அண்ணாச்சி என்று அவர் விளித்ததனால் அவர் இவரைத் தெக்கத்திக்காரர் என்று நினைத்திருக்கலாம். வட்டகைதோறும் வட்டகைதோறும் மரியாதைச் சொற்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன . ஒரே மக்கள்... ஒரே மொழி... மண் மட்டும் வேற வேற. ஏன்ம, என்று கேட்பவருக்கும் அது அப்படித்தாம் என்பதே பதில். பல நாக்குகள் கொண்ட தமிழ் அம்மைக்கு இதயம் மட்டும் ஒன்றே!

நல்ல தமிழ் எங்கே கிடைக்கும்? - கேட்டார் நண்பர் ஒரு நாள்.

“அப்போ கெட்ட தமிழ் என்று ஒன்று இருக்கிறதா?” என்று கேட்டுப் பற்களை நொறுநொறு என்று கடிப்பது உங்களுக்குக் கேட்கவில்லை என்றாலும், எனக்குக் கேட்கிறது. என் மனக்கண் முன்னே ஒரு காட்சி விரிகிறது:

மேடையில் ரசிகமணி டி.கே.சி. உட்கார்ந்திருக்கிறார்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து. கையில் மைக்கைப் பிடித்துக்கொண்டு ஒரு பண்டிதமணி ரசிகமணியைத் தாக்கிப் பேசுகிறார். ரசிகமணியை வாங்குவாங்கென்று வாங்குகிறார். ‘நீரெல்லாம் ஒரு மனிதர். உமக்கு மீசை ஒரு கேடா?’ என்று கேட்டு, ரசிகமணியைக் கோபத்தோடு பார்க்கிறார். ரசிகமணி அதை ‘‘ஆஹா... என்ன அருமையான கோபம்...” என்று ரசித்து அனுபவித்து தலை இசைத்து முறுவலிக்கிறார்.

மைக்கை இவர் மேலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, ‘‘வெட்கமில்லை உமக்கு? சிரிப்பு ஒரு கேடா?’’ கேட்டார். சபை பதறியது. இது என்ன நாகரிகமின்மை என்று. பண்டிதர் ரசிகமணியின் மேலே விழுந்து குதறவில்லை. வார்த்தைகள் நெருப்புத் துண்டுகளாக வந்து விழுகின்றன.

எல்லோரும் ரசிகமணியின் முகத்தைப் பார்க்கிறார்கள். அவரோ, ஒரு ராக வாசிப்பில் அபூர்வ சங்கதிகள் வந்து விழும்போது ‘பேஷ்’ என்று அனுபவிப்பதுபோல அனுபவிக்கிறார்.

கடைசியில், ரசிகமணி அவர்கள் எழுந்து சொன்னார்.

“ஒரு மனிதனை மோசமாகத் தாக்கிப் பேசும்போதுகூட தமிழ் மொழி என்னமாக வந்து உதவுகிறது... பார்த்தீர்களா?” என்று வியந்து பாராட்டினார்.

நம்மை யாராவது இப்படித் திட்டினால், அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் நம்மைப் பார்த்து’ என்னய்யா அவர் அப்படித் திட்டுகிறார். கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே..” என்றால், “தமிழில் அல்லவா திட்டினார் என்னை...” என்று சொல்வோமா?

கெட்ட தமிழ் என்று கிடையாது என்றாலும் நல்ல தமிழ் என்று இருக்கவே செய்கிறது. நவீனம் பரவாத, உள்தள்ளிய தமிழ்க் கிராமங்களுக்குப் போக வேண்டும். எழுதப் படிக்கத் தெரியாத கிழவர்களோடு உட்கார்ந்து பேச வேண்டும். பேசும்போதே நீங்கள் நாட்டுப்புறக் கதைகள் சொல்ல வேண்டும். உற்சாகமாகிவிடுவார்கள்.

பால் கறக்கும் மாடுகளுக்கு பறப்பதற்குப் பால் தரும் உணர்வு ஏற்படுவதுபோல அவர்களுக்கும் கதை சொல்லும் உணர்வு ஏற்பட்டு அவர்களும் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். நீங்கள் சாமர்த்தியசாலி என்றால் அவர்களுக்குத் தெரியாமல் ஒலிப்பதிவும் செய்துகொள்ளலாம். இந்த நாட்டார் சொல்கதைகளுக்கு லட்சணமே அவர்கள் சொல்லும் சொல்மொழிதான். குழந்தைகளுக்கு அழகு அவர்கள் பேசும் மழலை மொழி என்பதுபோல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்