தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டின் உயர் கல்விக்கான முதல் கலந்தாய்வு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன்19-ல் தொடங்கி நடந்துவருகிறது. ஆனால், இன்னமும் மருத்துவப் படிப்புகளுக்கான வழிமுறைகளும், சேர்க்கைக்கான விதிமுறைகளும் இதுவரை தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டு நீட் அடிப்படையில்தான் சேர்க்கை இருக்கும் என்பதை, தமிழக சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்காகப் பதிலளிக்கும்போது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சூசகமாகச் சொல்லியிருக்கிறார். அரசு இன்னும் அதற்கான, முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டிருக்கிறது. கால்நடை மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பெருவாரியான மாணவர்களின் இலக்காக இருக்கக்கூடிய இந்த நான்கு தொழில் படிப்புகளின் விதிகளை வரையறுக்கும் அதிகாரமும், முடிவெடுக்கும் அதிகாரமும் வெவ்வேறு துறைகளின் கீழ் வருகின்றன. இவை நான்கும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் துறைகள் என்பது மட்டுமே பொது விதியாக உள்ளது. ஆனால், இந்த நான்கு துறைகளும் மாணவர்களின் நலன்களுக்காக மட்டுமே இயங்குகின்றன என்பதை யாராவது அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது.
அசாதாரண சூழல்
மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை குறித்துக் கடந்த ஐந்து மாதங்களாக நிலவிவரும் அசாதாரணமான சூழலை இப்பல்கலைக்கழகங்கள் கட்டாயம் அறிந்திருக்கும். ஆனால், அச்சூழலைக் கணக்கில்கொள்ளாமல், வேளாண்மைப் பல்கலைக்கழகம் தன்னுடைய கலந்தாய்வைத் தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் என்னுடைய இரண்டு மகள்களுடன் கலந்து கொண்டேன். சென்ற ஆண்டும் என்னுடைய மூத்த மகளுக்காக இந்தக் கலந்தாய்வில் கலந்துகொண்ட அனுபவத்தின் அடிப்படையில், பாதிக்கப்படும் மாணவர்களின் நிலை பற்றிச் சொல்லியாக வேண்டியுள்ளது. அதிக மதிப்பெண்கள் பெறுவது ஒருவிதத்தில் தண்டனையாக மாற்றப்படுகிறது இந்தக் கலந்தாய்வில்.
தமிழகத்தில் வேறெந்தக் கலந்தாய்வும் நடைபெறாத சூழலில், 200/200 கட் ஆஃப் எடுத்துள்ள மாணவர்களும் வேளாண்மைப் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா, தங்களின் நீட் மதிப்பெண் என்ன, அப்படியே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் தமிழக அரசின் சேர்க்கை விதிகள் என்ன என்பது தெரியாத நிலையில், பெற்றோர்களும் மாணவர்களும், கிடைப்பதில் ஒரு இடம் எடுத்து வைப்போமே என்று சேர்கிறார்கள். இந்த ஆண்டு முதல் நாள் காலை கலந்தாய்விலேயே கோவை, மதுரை ஆகிய முதல் இரண்டு முக்கியக் கல்லூரிகளின் இருக்கைகள் நிரம்பிவிட்டன. 197.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள என்னுடைய மகளுக்கு திருநெல்வேலி கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், அவள் விரும்பியது, அருகிலுள்ள கோவை கல்லூரி. என் பிள்ளைக்கு மட்டும் அல்ல; பலர் இப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு மதிப்பெண் பெற்றும் கோவை கிடைக்காத காரணம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. மருத்துவம், கால்நடை, மற்றும் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்த பிறகு, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இக்கலந்தாய்வு நடந்திருந்தால் 195 மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்களுக்கும் கோவைப் பல்கலைக்கழகமே கிடைத்திருக்கும். தமிழகத்தின் சூழ்நிலையைக் கணக்கில்கொள்ளாமல் பல்கலைக்கழகம் தங்களின் வழக்கமான நடைமுறையைத் தொடங்கி, மாணவர்களுக்கு இழைத்துள்ள அநீதி இது.
இக்கலந்தாய்வில் கலந்துகொண்ட பெரும்பான்மை யான மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குச் செல்லக்கூடும். வருடா வருடம் இது நடப்பதுதான். என்றாலும் இந்த ஆண்டு பெருவாரியாக நடக்க வாய்ப்புள்ளது. முந்தைய ஆண்டுகளில் மாணவர்களுக்கு தங்களுக்கு என்ன படிப்பு கிடைக்கும் என்ற முன் அனுமானம் இருக்கும். 5% மாணவர்களால்தான் நிச்சயம் கிடைக்குமா என்ற முடிவுக்கு வர இயலாமல் போகும். இந்த ஆண்டு எல்லோருக்குமே அந்த நிலை.
காலி இடங்களை நிரப்புவதில் குழப்பம்
இதில் பிரச்சினை என்னவென்றால், பிற படிப்புகளுக்காகச் செல்லும் மாணவர்களால் உண்டாகும் காலி இடங்களுக்கு நிர்வாகம் இரண்டாம்கட்ட கலந்தாய்வை நடத்தும். இந்தக் கலந்தாய்வில் ஏற்கெனவே கலந்துகொண்டு, ஒரு கல்லூரியைத் தேர்வு செய்துகொண்ட மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. தர வரிசைப் பட்டியலில் அடுத்துள்ள மாணவர்களுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்படியெனில், தரவரிசைப் பட்டியலில் பின்னால் இருந்து கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்குக் கோவையும் மதுரையும் கிடைக்கும். ஆனால், அதைவிட அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் ஒரு மாணவர் வேறெங்கோ ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பார். குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கோவையில் படித்துக்கொண்டிருப்பார்கள். இடையில் உண்டாகும் வெற்றிடங்களை, அந்த வாய்ப்பை நழுவவிட்ட அடுத்த மாணவர்களுக்கு வழங்காமல் இருப்பது அந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் புறந்தள்ளுவதாகத்தானே அர்த்தம்?
பல்கலைக்கழகம் இரண்டு விதமான முடிவுகளை மேற்கொண்டு மாணவர்களுக்கான நியாயத்தை வழங்கியிருக்க முடியும். ஒன்று, தமிழகத்தின் இந்த ஆண்டுச் சூழலை மனதில்கொண்டு, கலந்தாய்வை ஜூலையில் நடத்த ஒப்புதல் பெற்றிருக்கலாம். அல்லது கலந்தாய்வில் உண்டாகும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான சரியான விதிமுறைகளை உருவாக்கியிருக்கலாம். சிலைடிங் முறைப்படி முன்னுக்கிருப்பவர் நகர்ந்தவுடன் பின்னால் இருப்பவர் என்று. இவையெதுவும் செய்யாமல், விதிமுறைகள் என்ற ஒற்றை வார்த்தையில் மாணவர்களின் எதிர்காலத்தைப் புறந்தள்ளும் அதிகாரத்தைப் பல்கலைக்கழகங்களுக்கு யார் கொடுத்தது?
தமிழக அரசு உடனடியாக இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நியாயத்தை வழங்க வேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையில் இன்றைய சூழலில் மருத்துவப் படிப்பே முதலிடம் இருக்கிறது. எனவே, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை முதலில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அடுத்து, கால்நடைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு. அடுத்து இன்ஜினீயரிங். அதற்கடுத்து வேளாண்மைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு. இவ்வடிப்படையில் கலந்தாய்வுகள் நடைபெறும்போது, மாணவர்கள் தங்களின் தரவரிசைப் பட்டியலின்படி தங்களுக்கான சரியான ஒதுக்கீட்டைப் பெற முடியும். மருத்துவப் படிப்புக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கான இடம் கிடைத்தவுடன் சென்றுவிடுவார்கள். ஆனால், வேளாண்மைப் படிப்பையே படிக்க வேண்டும் என்று விரும்பி வந்த ஒரு மாணவனோ மாணவியோ, கோவையில் இடம் கிடைக்காமல் ஏதோ ஒரு மூலையில் உள்ள கல்லூரியில் அடைபட்டுக் கிடப்பார்கள். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பல்கலைக்கழகம் தனக்குத்தானே இழைத்துக்கொள்ளும் அநீதியுமாகும் இது!
- அ.வெண்ணிலா, கவிஞர், ஆசிரியர்,
தொடர்புக்கு: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago