உள்ளாட்சி: சென்னைக்காக உறிஞ்சுவது குடிநீர் அல்ல... விவசாயிகளின் ரத்தம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

அநேகமாக அத்தனை மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் வற்றிவிட்டது. சாலை விபத்துகளைப் போல விவசாயிகளின் மரண செய்திகள் சகஜமாகிவிட்டன. விவசாயத்தைத் தொடர்ந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. கிராமங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கக் கூடாது என்று போராடுகிறோம். ஆனால், அதே கிராமங்களின் உயிர் நாடியாக இருக்கும் நிலத்தடி நீரைப் பன்னாட்டு நிறுவனங்கள் வெறிகொண்டுச் சுரண்டுவதைப் பற்றி யாராவது பேசுகிறோமா?

சென்னை என்கிற பெருநகரத்தின் தண்ணீர் தேவைக்காக எத்தனை கிராமங்கள் பாலையாக்கப்படுகின்றன என்பது தெரியுமா? உண்மையில் சென்னைக்காக உறிஞ்சப்படுவது குடிநீர் அல்ல, விவசாயிகளின் ரத்தம்!

அங்கே நெல்லுக்கு பாய வேண்டிய தண்ணீர் இங்கே ஆடம்பரத் தோட்டங்களின் புல்வெளிகளில் பாய்கிறது. கிராமங்களில் கண்மாய் கள் காய்ந்துகிடக்க இங்கே நீச்சல் குளங்கள் நிரம்பி வழிகின்றன. கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் மடிந்துகிடக்க இங்கே கார்கள்கூட கிராமத்து தண்ணீரில்தான் கழுவப்படுகின்றன. எதையும் மிகைப் படுத்திச் சொல்லவில்லை.

சென்னை யின் பழைய மகாபலிபுரம் சாலையின் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கும் மட்டுமே, நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லோடு தண்ணீரின் விலை ரூ.800 முதல் ரூ.1,200 வரை. 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகள் ஓடுகின்றன. அத்தனையும் நமது கிராமங்களில் விவசாய கிணறுகளில் இருந்தும் நிலத்தடியில் இருந்தும் எடுக்கப்படுபவை. அத்தனையும் விதிமுறை மீறல்கள்.

கடந்த 2003-ல் இயற்றப்பட்ட நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2013-ல் ஒரு அரசாணை மூலம் நிலத்தடி நீரை எடுப்பது குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுவும் பின்பற்றப்படுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு இது. சென்னையில் அதிகாரிகள் சில தண்ணீர் லாரிகளைப் பறிமுதல் செய்துவிட்டார்கள். இதனால், டாங்கர் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தார்கள். உடனே பதறிபோனது ‘நாஸ்காம்’அமைப்பு.

‘எங்களுக்குத் தண்ணீர் வருவது தடைபட்டால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங் களுக்கு நாங்கள் செய்துவரும் சேவைகள் பாதிக்கப்படும்’ என்று அச்சம் தெரிவிக்கிறது அது. உடனே டாங்கர் லாரி உரிமையாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் முறைகேடான தண்ணீர் விநியோகத்தை உறுதிபடுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல, சென்னை குடிநீருக்காக தமிழக அரசே ஏராளமான கிராமங்களில் ராட்சஷ ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. வீராணம் ஏரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சென்னையின் குடிநீர்த் தேவைக்காக அனுப்பப்படுகிறது. விவசாயிகளின் தேவைக்கு போக உபரி நீரை மட்டுமே சென்னையின் குடிநீருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதை எல்லாம் அதிகாரிகள் மதிப்பதே இல்லை. உண்மையில் வீராணம் ஏரியின் தண்ணீரே அல்ல அது. சென்னையின் குடிநீர்த் தேவைகளுக்காகவே கும்ப கோணம் அருகில் இருக்கும் அணைக் கரை அணையில் இருந்து கொண்டு வரப்படும் காவிரி ஆற்றுத் தண்ணீர் அது. வறட்சியால் செத்துகொண்டிருக்கும் ஏராளாமான விவசாயிகளுக்கு பாத்தியப்பட்ட தண்ணீர் அது.

ஆனால் அதுவும் போதாது என்று கடலூர், நெய்வேலி, காட்டுமன்னார் குடி, சேத்தியாதோப்பு, வடலூர், காடம் புளியூர், திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிராமங்களின் நிலத்தடி தண்ணீரையும் ராட்சஷ மோட்டார்களால் உறிஞ்சு கிறது தமிழக அரசு. 45 இடங்களில் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறு கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 800 அடி ஆழம் கொண்டவை. இதனால், பல கிராமங்கள் பாலைவனமாகிவிட்டன. விவசாயம் பொய்த்துவிட்டது. மக்கள் குடிநீருக்கே வழியில்லாமல் தவிக் கிறார்கள். நிலத்தடி நீர் வற்றியதால் பல கிராமங்களில் கடல் நீர் உள்வாங்கி விட்டது.

சென்னையின் குடிநீருக்காக வீராணம் ஏரியின் தண்ணீரையும் உறிஞ்சியாயிற்று. கடலூர், தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலத்தடி தண்ணீரையும் உறிஞ்சியாயிற்று. இப்போது நெய்வேலியின் வாலாஜா ஏரி மற்றும் பெருமாள் ஏரியில் கைவைத்திருக்கிறார்கள்.

சரி, மேற்கண்ட தண்ணீர் பிரச்சி னைகளுக்கும் உள்ளாட்சி அமைப்பு களுக்கும் என்ன தொடர்பு? பிரச்சினையே உள்ளாட்சிகளிடம் இருந்து தான் தொடங்குகிறது. உணவு மற்றும் விவசாயக் கழகம் என்பது ஐ.நா அமைப்பின் ஓர் அங்கம். இந்தியாவின் புதுடெல்லி உட்பட பல்வேறு நாடுகளிலும் இதன் கிளை அலுவலகங்கள் இருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரத்தின் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் தனது அலுவலகத்தை அமைக்க இந்த அமைப்பு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி யிடம் அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.

அதற் கான காரணமாக அந்த உள்ளாட்சி அமைப்பு, ‘உங்கள் அலுவலகம் எங்கள் கிராமத்துக்கு வந்தால் எங்கள் மக்களின் குடிநீர்த் தேவைகள் பாதிக்கப்படும்’ என்றது. ஐ.நா அலுவலகம் தங்கள் பகுதியில் அமையாதா என்று பல ஊர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், சொந்த மக்களின் நலனே முக்கியம் என்று கம்பீரமாக நின்றது அந்த உள்ளாட்சி அமைப்பு.

உள்ளாட்சியின் உண்மையான பணியே இதுதான். எந்த ஒரு பெரிய கட்டுமானத்துக்கு அனுமதி அளிக்கும்போதும், ‘குடிநீர் உள்ளிட்ட தண்ணீர்த் தேவைக்கான ஆதாரம் என்ன?’ என்பதை கேட்க வேண்டும். அந்தப் பகுதியில் தண்ணீர் ஆதாரம் இல்லை என்றாலோ அல்லது அந்த இடத்தில் தண்ணீரை உறிஞ்சினால் உள்ளூர் மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்றாலோ அனுமதி அளிக்கக்கூடாது.

ஆனால், நமது உள்ளாட்சி அமைப்புகள் என்ன செய்தன தெரி யுமா? சென்னையின் புறநகரான நாவலூர் பேருந்து நிலையம் அருகே அமெரிக்காவின் சாண்டியாகோவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்று பிரம்மாண்டமான மென்பொருள் நிறுவன வளாகத்தைக் கட்டியிருக்கி றது. தண்ணீர் ஆதாரத்துக்காக அந்த நிறுவனம் சமர்ப்பித்திருக்கும் அதிமுக்கிய ஆவணம் என்ன தெரி யுமா? ஏகாத்தூரில் இருக்கும் ஸ்ரீமுருகன் டிரேடர்ஸில் வாங்கிய ரசீதுதான் அது!

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்