அந்தச் சிறுவனுக்குப் பதினோரு வயது. முகத்தில் மீசை அரும்புவதன் அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான். நல்லவேளையாகக் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மனநல ஆலோசனைக்காக என் முன் அமர்ந்திருந்தான்.
“ஏம்ப்பா மருந்தைக் குடிச்சே?”
“டீச்சர் திட்டிட்டார் சார்.”
“திட்டினதுக்கா சாக நினைச்சே?’’
“ஃப்ரெண்ட்ஸ் எல்லார் முன்னாலயும் திட்டிட்டார் சார்.”
அந்த வாரத்தில் அவன் மூன்றாவது சிறுவன்.
இன்னொரு நிகழ்ச்சி. அவர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். “தூக்கமே வரவில்லை டாக்டர்.’’ என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால், மன அழுத்தம் தாங்காமல், ஏற்கெனவே தினம் மூன்று மாத்திரைகள் போட்டுத்தான் தூங்குகிறார் அவர். “நான் பரவாயில்லை. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் தினம் ஐந்து தூக்க மாத்திரைகள் போட்டுக்கொள்கிறார். அவரைவிட நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எல்லாம் இந்த பசங்க தரும் டென்ஷன்தான் டாக்டர். லேசா ஏதாவது சொன்னாலே பொசுக்குனு தூக்குல தொங்கிடறாங்க. யாரையும் எதுவும் சொல்ல முடியவில்லை” என்றார்.
இரண்டும் ஒரே பிரச்சினையின் இருவேறு பக்கங்களே. இன்றைய இளம்வயதினர், சிறு ஏமாற்றத்தை, அவமதிப்பை, தோல்வியைக் கூடத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய சுய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
என்னுடைய சிறுவயதைப் பற்றிச் சற்று நினைத்துப் பார்த்தேன். இவன் வயதில் தற்கொலை என்பதை சினிமாவில் வில்லனால் ஏமாற்றப்பட்ட கதாநாயகனின் தங்கை விஷம் குடிக்க முயன்று, கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டுக் கதாநாயகனால் முறியடிக்கப்படும் ஒரு செயலாக மட்டுமே அறிந்திருந்தேன்.
என் தந்தையின் தலைமுறையினரைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் “கண்ணை மட்டும் விட்டுட்டு உடம்புல எங்க வேணாலும் அடிங்க சார்” என்று சொல்லியே சேர்ப்பார்கள். அவர்கள் எத்தனையோ அடிவாங்கினாலும், தற்கொலை என்பது எந்த மொழிச் சொல் என்றுகூட அறிந்திருக்க மாட்டார்கள். மிஞ்சிமிஞ்சிப்போனால், ஊரைவிட்டு ஓடிப்போவார்கள்.
குழந்தைகளைக் கண்டிக்கக் கூடாது; திட்டக் கூடாது; அடிக்கவே கூடாது என்பதெல்லாம் சிறுவர்களுடன் பழகுவதன் பாலபாடமாகவே போதிக்கப்பட்டிருக்கிறது. எள்முனையளவு மூளை இருக்கும் எவருமே இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால், இது பிரச்சினையின் ஒரு பகுதிதான். குழந்தைகளை அடிக்கும், காரணமின்றித் தண்டிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனால், சிறுவயதிலேயே தற்கொலை முயற்சிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் முரணை நாம் எப்படி விளக்குவது?
நம்முடைய குழந்தைகளுக்கு கராத்தே, குதிரையேற்றம், ஸ்பானிஷ் மொழியெல்லாம் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால், ஏமாற்றத்தைத் தாங்கக் கற்றுக்கொடுக்கிறோமா? இல்லை என்றே தோன்றுகிறது. ஏமாற்றமெனும் சிறு ஊசிகூட வீங்கிப்போன பலூன் போன்ற ஈகோவை நொடிப்பொழுதில் உடைத்துவிடுகிறது. தன்னைப் பற்றிய பிம்பத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கக் காரணங்கள் எவை?
கூட்டுக் குடும்பம் என்பது பலவிதமான மனிதப் பறவைகள் வசிக்கும் கூடாக இருந்தது. அம்முறை சிதைந்து, ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளே இருக்கும்போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் அதிகம். பிறருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் இல்லாமல் தன்முனைப்பாகவே வளர்கிறார்கள்.
கூட்டுக் குடும்ப முறை மறைந்தது மட்டுமின்றி, குடும்பத்துக்குள்ளேயே கூடியிருந்து உரையாடும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது. இன்று ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாகத்தான் இருக்கின்றனர். நண்பர்கள் மத்தியிலும் அப்படியே. நான்கு சிறுவர்கள் ஒன்றாக இருந்தாலும், ஆளுக்கொரு செல்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள விஷயங்களையே பெரும்பாலும் பகிர்ந்துகொள்கின்றனர்.
இதன் விளைவாக எல்லாத் தேர்வுகளிலும் முதல் மாணவனாக வர வேண்டும், எல்லாப் போட்டிகளிலும் முதல் பரிசு பெற வேண்டும் என்கிற தன்முனைப்பு வெறியாக மாறுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதல் பரிசு கிடைக்காமல் கதறி அழுகிறவர்களைத்தான் நாளும் காண்கிறோம்.
வாழ்வே பொருள்மயமாக மாறிப்போன சூழலில், ஒரு மாணவனின் இயல்பான ஆர்வம் பற்றி அறிந்துகொள்ளாமல் பள்ளிக்கூடங்கள் ஒரே மாதிரியான பிரதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியிருக்கின்றன. இரா.நடராசனின் கதையில் வரும் ஆயிஷாவைப் போன்றவர்களின் சிறகுகள் முளைக்கும் முன்னேயே கத்திரிக்கப்படுகின்றன. இச்சூழல், ஏமாற்றமெனும் காளான் எளிதில் முளைக்க உரம் போடுகின்றது.
எல்லாக் கோபங்களுமே ஏமாற்றங்களில்தான் பிறக்கின்றன. தன்மீது வரும் கோபம் தற்கொலை முயற்சியாக மாறுகிறது. பிறர்மீது வரும் கோபம் விதிமீறல், வன்முறை ஏன் கொலைவரை கொண்டுசெல்கிறது. பள்ளி மாணவன் ஆசிரியரைக் கொலை செய்வதும் கல்லூரி ஆசிரியரை மாணவர்களே வெட்டிச் சாய்ப்பதும் சமுகத்தைப் பீடித்திருக்கிற பெருநோயின் அறிகுறிகள். ஆசிரியர்கள், மாணவர்கள் என்று இரு தரப்பினரையுமே மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது இந்த நிலைமை.
விளம்பரம் ஒன்றில், ஒரு சிறுவன் இரண்டாம் பரிசு பெற்றதை இனிப்போடு கொண்டாடுவான். அந்தப் போட்டியில் கலந்துகொண்டதே இரண்டு பேர்கள் என்பதுதான் வேடிக்கை! இதுபோன்று ஏமாற்றங்களையும் தோல்விகளையும் ரசிக்கக்கூட வேண்டாம். குறைந்தபட்சம் ஏற்றுக்கொள்ளவாவது நம் குழந்தைகளைப் பழக்குவோம். அந்தத் தலைமையாசிரியரும் ஓரிரு தூக்க மாத்திரைகளைக் குறைத்துக்கொள்வார்.
- ஜி. ராமானுஜம், மனநல மருத்துவர், தொடர்புக்கு: ramsych2@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago