பொருளாதாரச் சிக்கலை எப்படி எதிர்கொள்கிறது ரஷ்யா?

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், தொழில்துறையில் சுணக்கம், பொருளாதாரத்தில் மந்த நிலை - இவைதான் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளின் பொதுவான பிரச்சினைகள். இவற்றை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் அணுகுகின்றன. பொருளாதார அளவில் உலகின் எட்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா என்ன செய்கிறது?

மிகவும் துணிச்சலான ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது ரஷ்யா. அரசு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, தன்னுடைய பட்ஜெட்டில் எல்லா இனங்களிலும் 10 சதவீத அளவுக்கு குறைத்துக்கொள்ள துணிகரமாக முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் அக்டோபர் முதல் தேதி ஒப்புதல் தந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"பணவீக்க விகிதத்துக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறது" என்று கூறுகிறார் பிரிட்டிஷ் பொருளாதார மேதை ஜான் மேனார்டு கீன்ஸ். "வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றால் பணவீக்கத்தை அனுமதிக்க வேண்டும், அரசு தன்னுடைய செலவை அதிகப்படுத்தினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும், வேலைவாய்ப்புகளும் உருவாகும்" என்று அவர் கூறுகிறார். ஆனால் பணவீக்கமும் இருந்து வேலையில்லாத் திண்டாட்டமும் தொடரும் நிலையே இந்தியா போன்ற நாடுகளில் நிலவுகிறது.

இந்த நிலையில், பணவீக்க விகிதத்தை ஓரளவுக்கு மேல் அனுமதித்தால் நிலைமை கையை மீறிப் போய்விடும் என்பதால் ரஷ்யா மாற்றி யோசிக்கிறது. ஓரிரு ஆண்டுகளுக்குப் பத்தியமாக இருந்தால் பின்னர் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்திவிடலாம் என்று ரஷ்யப் பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு யோசனை கூறியுள்ளனர். அரசும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

ரஷ்யாவில் எப்போதும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பட்ஜெட் தயாரித்துவிடுவார்கள். எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கான பட்ஜெட்டில்தான் 10% குறைத்துக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள். ரஷ்ய மக்களின் நுகர்வுக் கலாச்சாரத்தால் பொருளாதாரம் மீட்சி பெறும் என்ற எதிர்பார்ப்பில் முன்னர் இருந்தபோதிலும், பொருளாதார நெருக்கடி இருப்பதால் செலவுகளை எல்லாத் துறைகளிலும் குறைத்துக்கொள்வது என்று தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறார்கள். இது மேம்போக்கான சிக்கன நடவடிக்கை அல்ல. 2014-ல் அரசின் வருவாய், அதற்கு முந்தைய ஆண்டைவிட 3.5%-ம் 2015-ல் 7%-ம் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய, திருத்தப்பட்ட பட்ஜெட்டின்படி ராணுவ வீரர்களுக்கான ஊதியம் அடுத்த ஆண்டு உயராது. எதிர்காலத்தில் ஓய்வுபெறுவோருக்கான ஓய்வூதிய நிதியத்துக்குக் குறைந்த அளவே சந்தா செலுத்தப்படும். அந்த நிதி இப்போதுள்ள ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் தருவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும். ரஷ்ய மக்கள்தொகையில் முதியோர்தான் அதிகம், எனவே அதிக நிதி ஓய்வூதியத்துக்கே செலவாகிறது.

ரஷ்ய அரசின் வருவாயில் 50%, கச்சா பெட்ரோலிய எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிலிருந்தே கிடைத்துவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யர்களின் உற்பத்தித் திறனைவிட அதிக அளவில் ஊதிய உயர்வு கிடைத்துக்கொண்டே வந்தது. இதனால் புதினுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்தது. ஆனால் அது பொருளாதாரத்துக்கு பாதிப்பாக அமைந்துவிட்டது. எனவே, இப்போது ஊதியத்தை முடக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை விட ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) 1.2% ஆகவும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.5% ஆகவும் வளர்ச்சி அடைந்தது.

சைபீரிய பாலைவனத்தில் உள்ள ரயில் பாதையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புகளை ஏற்படுத்த, நாட்டின் கையிருப்பு செல்வ நிதியத்திலிருந்து 171 பில்லியன் டாலர் தொகை செலவிடப்படும் என்று அதிபர் புதின் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்தபடி ஏதும் செய்யவில்லை. எனவே பொருளாதாரம் மீட்சி பெறவில்லை.

ரஷ்ய மக்கள் தாராளமாகச் செலவுசெய்து பொருளாதாரத்தை நிமிர்த்திவிடுவார்கள் என்று இனியும் எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவுசெய்து, வளர்ச்சித் திட்ட வடிவத்தையே மாற்றிவிட்டார் தலைமைப் பொருளாதார அறிஞர் விளாதிமிர் திகோமிரோவ். விலைவாசியைக் குறைப்பதே தங்களுடைய முதல் நோக்கம் என்று ரஷ்ய மத்திய (ரிசர்வ்) வங்கியும் அரசும் அறிவித்துள்ளன.

வெளிநாடுகளிடம் கடன் வாங்குவதை புதின் அறவே வெறுக்கிறார். மேற்கத்திய நாடுகளிடம் முன்பு கடன்வாங்கிவிட்டுப் பட்ட இன்னல்கள் போதும் என்கிறார் அவர். "பொருளாதார மந்த நிலை ஏற்பட்டவுடனேயே சொந்தமாக நிதி திரட்ட முடியாவிட்டால் வெளிநாடுகளிடமிருந்தாவது கடன் வாங்கி வளர்ச்சியைப் பராமரிக்க நினைப்பதுதான் வழக்கம். ஆனால் நாங்கள் நீண்ட கால நன்மைக்காகச் சில தியாகங்களைச் செய்ய முடிவு செய்திருக்கிறோம்" என்று விளக்கினார் திகோமிரோவ்.

ஆனால் இந்த முடிவு புதிதல்ல. ஏற்கெனவே 1990-களில் போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளால் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டதுதான். உள்நாட்டு ஆதாரங்களைக் கொண்டே பொருளாதார வளர்ச்சி பெறுவது என்ற அப்போதைய முடிவால் நாட்டின் வளர்ச்சி வேகம் குறைவாகவே இருந்தாலும் வெளிநாட்டுச் சந்தைகளால் அவற்றைச் சேதப்படுத்த முடியவில்லை. சில நாடுகளில் அப்போது பொருளாதாரச் சுணக்கம்கூட சிறிது காலத்துக்கு ஏற்பட்டது. ஆனால், வெகு விரைவிலேயே பொருளாதாரம் புத்துயிர் பெற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

இப்போதைய தங்கள் முடிவால் பொருளாதார வளர்ச்சி 3% ஆகத்தான் சில ஆண்டுகளுக்கு இருக்கும், ஆனால் பணவீக்க விகிதம் இப்போதுள்ள 6%-லிருந்து 5.5% ஆகவோ அல்லது 4.5% ஆகவோ குறைந்துவிடும் என்று ரஷ்ய அரசு மக்களுக்குத் தெரிவித்துள்ளது.

தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்