கடந்த வாரம் முழுவதும் உலகெங்கும் வசிக்கும் மப்பு மன்னார்சாமிகள் உருகுவேவைக் குறித்து உருகித் தீர்த்தார்கள். பிறந்தால் உருகுவேவில் பிறக்கணும்டா என்று ஃபேஸ்புக்கில் சில நற்றமிழர்களும் தத்தமது அங்கலாய்ப்பைப் பதிவு செய்தார்கள். உலகிலேயே முதல் முறையாக கஞ்சா விற்பனையை சட்ட பூர்வமாக்கிய தேசம் என்னும் சிறப்பு உருகு வேவுக்கு வாய்த்துவிட்டதுதான் மேற்படி சிலாகிப்புகளுக்கும் அங்கலாய்ப்புகளுக்கும் காரணம்.
நல்லது. உருகுவேவில் இனி கஞ்சா வியாபாரம் சட்டபூர்வம். ஒளித்து மறைத்துச் செய்யவேண்டிய அவசியமில்லை. ஓப்பனா கவே செய்யலாம். பெட்டிக் கடையில் கூட கஞ்சா கிடைக்கும். செட்டியார், அரக்கிலோ கோதுமை, நூறு கடுகு, நூறு மிளகு, பாசிப்பருப்பு கால் கிலோ, மிளகா வத்தல் கால் கிலோ, கஞ்சா அம்பது கிராம், கடல மிட்டாய் நாலு.
இன்னார்தான் வளர்க்க வேண்டும், இன்னார்தான் விற்கவேண்டும் என்று யார் சொல்வது இனிமேல்? நீ உருகுவேவின் குடிமகனா? உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்த்தது போதும். இனி நீ உன்னிஷ்டத்துக்கு ஆறு கஞ்சா செடிகளை வளர்க்கலாம். சொந்த உபயோகத்துக்கு 480 கிராம் மட்டும் வைத்துக்கொண்டு (20 கிராம் TDS போலிருக்கிறது.) மிச்சத்தை நீ விற்கலாம்.
மகளிர் சுய வேலை வாய்ப்புத் திட்டம் மாதிரி இன்னொரு ஐடியாவும் இருக்கிறது. பதினைந்து முதல் நாற்பத்தி ஐந்து பேர் இதில் உறுப்பினர்களாகச் சேர முடியுமா? நீங்கள் மொத்தமாகச் சேர்ந்து கூட்டுப் பண்ணை முறையில் கஞ்சா விவசாயம் செய்யலாம். ஒரு பண்ணைக்கு 99 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம்.
கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியாகலாம். புகைப்பதைக் காட்டிலும் இதைப் படிப்பதில் தலைசுற்றல் அதிகம் இருக்குமென்றால், கொஞ்சம் தெளியவும். உருகுவே அதிபர் ஒன்றும் விவரங்கெட்டத்தனமாக இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வரவில்லை.
தென்னமெரிக்கக் கண்டத்தில் நாளது தேதியில் பஞ்சமின்றி, புரட்சியின்றி, கலவர களேபரங்களின்றி ஓரளவு சௌக்கியமாக இருக்கிற தேசம் உருகுவே. சுதந்திரம் சற்று அதிகம். அங்கே கஞ்சா உபயோகிப்பது சட்ட விரோதமில்லை. விற்றால்தான் தப்பு. வியாபாரம்தான் பிரச்னை. அதைத்தான் இப்போது திருத்தியிருக்கிறார்கள். பயிரிடலாம், விற்கலாம், வாங்கலாம், உபயோகிக்கலாம். என்னவும் செய்யலாம்.
இந்தப் புதிய அதிரடி சட்டத்துக்கான காரணம் மிகவும் நுணுக்கமானது. தென்ன மெரிக்க தேசங்களிலேயே மெக்சிகோவிலும் கொலம்பியாவிலும்தான் போதைக் கடத்தல்கா ரர்களின் அட்டகாசங்கள் அதிகம். ராட்சச போதைக் கடத்தல் கூட்டணிகளுக்கிடையே அடிக்கடி எழும் யுத்தம் மிகவும் பயங்கரமானது.
பல அப்பாவிகளை பலி கேட்பது. அரசாங் கங்களைக் கலைத்துப் போடுவது. கால காலமாக இந்த போதை மாஃபியாவை ஒழிக்க அந்த அரசுகள் மேற்கொண்ட எந்த முயற்சியும் பெரிய பலன் கொடுத்ததில்லை.
எல்லை தாண்டி தேசம் தேசமாக ஆக்கிரமிக்கும் இந்த பெரும் போதை மாஃபியாக்கள் உருகுவேவைக் குறிவைத்து காய் நகர்த்தத் தொடங்கியிருக்கும் நிலை யில் கஞ்சா வளர்ப்பு, விற்பனையை சட்டபூர்வமாக்கி ஜனங்களின் கையிலேயே கொடுத்துவிட்டால் யார் வந்து கள்ள பிசினஸ் பண்ணமுடியும்?
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை வளைத்துப் போடுவதில் இது ஆரம்பிக்கும். திருட்டுத்தனமான விவசாயம், அபாயக ரமான ஏற்றுமதி முயற்சிகள், ரகசிய வியாபா ரம், பாதுகாப்புக்கு ஆயுததாரிகள் என்று ஒன்றைத் தொட்டு ஒன்று இழுத்துக்கொண்டே போய் இறுதியில் ஊரைக் கெடுத்து நிற்கும்.
எதற்கு வம்பு? இனி யார் உருகுவேவுக்கு வந்து போதை மருந்து விற்க முடியும்? அல்லது மக்கள்தான் வெளியாட்களைப் பயிர் செய்து கொழிக்க விடுவார்களா? ஜனங்களுக்கு வேண்டுமானால் வீட்டிலேயே விவசாயம் செய்துகொள்வார்கள். கொத்துமல்லி, கருவேப்பிலை மாதிரிதான் இதுவும்.
இந்த ஒரு லாபம் தவிர இன்னொரு பெரிய திட்டமும் உருகுவே அரசாங்கத்துக்கு இதில் இருக்கிறது. உருகுவேவில் யாரெல்லாம் போதை வியாபாரிகள் என்பதை சர்வே சொல்லத் தேவையில்லை. எடுத்துக் கட்டாது. இப்போது சட்டபூர்வமாக்கிவிடும் நிலையில் அனைத்துப் பூனைக் குட்டிகளும் தானாக வெளியே வரும்.கஞ்சா வளர்க்க லைசென்ஸ் கேட்டு க்யூவில் நிற்கும். அள்ளிக் கொடுப்பதில் பிரச்னையே இல்லை. தேவைப்படும்போது கிள்ளி எறியவும் முடியுமல்லவா? அதுதான் விஷயம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago