அக்டோபர் 11, உலகப் பெண் குழந்தைகள் தினம்
முத்துசாமி என்ற கவிஞரின் பாடலில் இப்படி வரும்: “பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா பத்து மாதமாப் போராட்டம், இதுவும் பொண்ணாப் பொறந்தா கொன்னுப்புடுவேன்னு புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்” எனும் பாடல் நெஞ்சைப் பிழிந்தெடுக்கும். மிகவும் படித்த, உயர் நடுத்தர வர்க்க ஆண்களிடையேகூட இன்றும் பலர், பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு வழங்கிக் கொண்டாட விரும்புவதில்லை. பிரசவ காலத்து உடல்நிலை, உளவியல் தன்மை எதைப் பற்றியும் கவலையின்றி அப்போதும் பெண் பிள்ளை பெற்றவளைக் கரித்துக் கொட்டும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். “குழந்தைக்கு என்ன பெயர்?” என்று கேட்டால், “ஆமாம் பெயர் வைக்கிறாங்க…” என்று அலுத்துக் கொள்பவர்களும் உண்டு.
எப்போதும் இரண்டாம் இடம்
பெண் சிசுவைப் பிறக்க விடக் கூடாது என்ற பழமை யான கண்ணோட்டத்துக்கு நவீனக் கண்டுபிடிப்புக் கருவியும் துணைபோவதுதான் துயரம். தப்பித் தவறிப் பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து, மறைய வேண்டியிருக்கிறது. உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை, இரண்டாம் இடத்தை, கசப்பைச் சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே மரபார்ந்த பாகுபாடுகளைத் தின்றுதான் வளர்கிறாள்.
நேற்று உலகப் பெண் குழந்தைகள் தினம்! பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள்குறித்த அக்கறையில் ஐ.நா. சபை 2011-ல் எடுத்த முடிவின்படி அக்டோபர் 11, 2012-ல் முதலாவது சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
18 வயது நிறைவதற்குமுன் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படும் பெண் குழந்தைகள் குறித்தும்-ஆமாம், அவர்கள் குழந்தைகள்தான்! - பெரும் அக்கறையை இந்த உலகம் காட்ட வேண்டியிருக்கிறது. உலக நாடுகளில் இதிலும் நமது நாட்டுக்கு முதலிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சதவீதக் கணக்கு குறைந்துவருகிறது என்றாலும், நிம்மதிப் பெருமூச்சு விடும் அளவுக்கு அது குறைந்துவிடவில்லை.
ஐந்து வயதில் மணம் முடிக்கப்பட்டு, ஆறரை வயதுக்குள் கணவனை இழந்து, பிறகு தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்து(!) மறைந்த ஒரு மூதாட்டி எங்கள் குடும்பத்திலேயே இருந்ததைப் பார்த்திருக்கிறேன். “நான் வாழ்க்கைப்பட்ட இடம் (ஊர்) சுமங்கலி, ஆனாலும், நான் அமங்கலி” என்று பட்டம்மாள் என்ற பட்டா சித்தி சொல்லிக்கொண் டிருந்ததை இன்றும் என் தந்தை வேதனையோடு நினைவுகூர்வதுண்டு.
பழி யார் மீது?
இளவயதுத் திருமணம் மிகவும் கொடுமையானது. பக்குவமான உடலும், மனமும் அமையும் முன் மணவாழ்க்கைக்கு விரட்டப்படுவது கொடுமை. அதைவிடவும் கொடிய விஷயம், பெண் குழந்தைகளை வெறி பிடித்த ஆண்கள் தங்களது காம இச்சைக்கு உட்படுத்தும் அராஜகம். கடந்த வாரம்கூட பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் பாலியல் வக்கிரம் புரிந்த மனிதனைப் பற்றிய செய்தி வந்திருந்தது. வீட்டுக்குள்ளேயே, சுற்றுப்புறத்துக்குள்ளேயே, நெருங்கிய உறவினரிடையே, ஏன், பெற்ற தகப்பனிடமிருந்துகூட இத்தகைய அச்சுறுத்தலைப் பெண் குழந்தைகள் பலரும் எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகளுக்குப் பொறுப்பையும் பழியையும் அவர்கள் உடையணியும் முறை, நவீன பாணியில் பழகும் தன்மை என்று எதன்மீதாவது போட்டுவிட்டு யாரும் தப்பிக்க முடியாத புகார்கள் கணக்கற்றவை.
சக மனிதரிடம் மோசமாக நடந்துகொள்வதற்கு முதல் காரணத்தை, பாதிக்கப்பட்டவரிடம் தேடுவதை விடுத்து, அந்தச் செயலைச் செய்தவரிடமிருந்து எப்போது நாம் தேடப்போகிறோம்?
கேளிக்கையின் சாலை வழியெங்கும் பெண்களை எப்படியும் பார்க்க, ரசிக்க, மலினப்படுத்த உள்நெஞ்சில் பொங்கி வழியும் ஆர்வத்தை, உயிரியல் வேட்கையை விடாது தூண்டிக்கொண்டிருக்கிறது நவீன சந்தைப் பொருளாதாரம். அதன்வழி சிந்தனையைச் செலுத்து பவர்களுக்குப் பெண்கள் உடல்ரீதியாக எப்போதும் ஆண்களுக்கானவர்கள் என்ற வெறி மிகுந்துவிடுகிறது. பெண்களுக்கும் அவஸ்தைகள் உண்டு, வலியும் வேதனையும் மிகுந்த நாட்கள் உண்டு, சோர்வாகக் கடக்க நேரும் பருவமொன்று உண்டு என்பதெல்லாம் சராசரி ஆண்மனத்தில் பதிவாவதில்லை. மண வாழ்க்கையிலும் பொதுவெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான விதைகள் அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே ஊன்றப்படு கின்றன.
உலகப் பெண் குழந்தை தினம் இவற்றுக்கு நேரெதிராக ஆரோக்கியமான பார்வையை முன் வைக்கத் துடிக்கிறது. இயற்கையின் இயல்பான மலர்ச்சியோடு பெண் குழந்தைகளைக் கொண்டாடக் கேட்கிறது. சமத்துவக் கண்ணோட்டத்தோடு அணுகக் கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. மாசற்ற அன்பின் பார்வையை, களங்கமற்ற அரவணைப்பை, உள்ளார்ந்த நெகிழ்ச்சியுறுதலைப் பழகிக்கொள்ள அறைகூவல் விடுக்கிறது. பெண்மையைப் புனிதப் படுத்துவதாகச் சொல்லி, கீழ்மைப்படுத்திய காலங் களுக்கு விடைகொடுத்து, அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும் வண்ணம் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.
- எஸ்.வி. வேணுகோபாலன், எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago