"பத்திரிகைகள் அற்ற அரசாங்கமா அல்லது அரசாங்கம் இல்லாது பத்திரிகைகள் மட்டுமா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், தயக்கமின்றி நான் பின்னதையே தேர்வுசெய்வேன்" என்றார் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவரும் அந்நாட்டின் மூன்றாவது அதிபருமான தாமஸ் ஜெபர்ஸன்.
பேச்சு சுதந்திரத்தின் இன்றியமையாமையை இதைவிடச் சிறப்பாகச் சொல்ல முடியாது. மக்கள் விழிப்புடன் இருக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் நிரந்தரமானவையாக இருக்காது என்பதை அரசு இயந்திரங்களும் (நீதிமன்றங்கள் உட்பட) ஆளும் கட்சிகளும் நமக்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.
கருத்துக் கணிப்புகளைத் தடைசெய்வதுகுறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டவுடன் ஆளும் காங்கிரஸ் கட்சி, "ஆம், அவை உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும்" எனக் கேட்டிருப்பது, பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு மட்டுமல்ல; நிலைநிறுத்திக்கொள்வதற்கும் மக்கள் தொடர்ந்து போராட வேண்டி இருப்பதையே காட்டுகிறது.
தேர்தல்களை ஒட்டி நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக வைக்கப்படும் மூன்று முக்கியமான வாதங்கள்: ஒன்று, இவை அறிவியல்பூர்வமற்றவை. இரண்டு, இவற்றை நடத்தும் நிறுவனங்கள் நேர்மையற்று கணிப்புகளைத் தங்கள் வசதிக்கேற்றவாறு திணிக்கின்றன. மூன்று, வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாக இந்தக் கணிப்புகள் காட்டும் கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களைத் திருப்புகின்றன. இவை மூன்றும் அட்சர சுத்தமான உண்மைகளாக இருந்தாலுமே கருத்துக் கணிப்புகளைத் தடைசெய்வதை ஏற்க முடியாது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றச்சாட்டுகளில் கொஞ்சம் உண்மை இருக்கிறது; முதல் குற்றச்சாட்டைப் பொருத்தவரை அறிவியல் என்றால் என்ன என்ற வரையறைக்கு ஒருவர் அளிக்கும் பதிலைப் பொறுத்து, அதில் ஓரளவேனும் உண்மையிருக்கிறதா இல்லையா என்ற கருத்தில் மாறுபாடு வரும். இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கருத்துக் கணிப்பைத் தடைசெய்வது என்றால், நாம் எவற்றையெல்லாம் தடைசெய்ய வேண்டிவரும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
இந்தியா போன்ற மத, இன, மொழி, சாதி வேற்றுமைகள் நிறைந்த 120 கோடி பேரைக் கொண்ட ஒரு நாட்டில், சில ஆயிரம் பேருடைய கருத்தறிந்து வெளியிடப்படும் கணிப்புகள் தவறாகப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியிருந்தும் ஏறக்குறைய 50% நேரங்களில் இந்தக் கணிப்புகள் ஏறக்குறைய துல்லியமாக இருந்திருக்கின்றன. கணிதம், இயற்பியல், அல்லது வேதியியல் போன்றதொரு துல்லியமான அறிவியல் அல்ல; கருத்துக் கணிப்பில் பின்பற்றப்படும் ஆய்வு முறைமை. ஆனால், அது அறிவியல் முறைமையில் அமைந்தது என்பதை மறுக்க முடியாது.
வாதத்துக்காக, கருத்துக்கணிப்பு அறிவியல்பூர்வமற்றது ஆகவே, தடை செய்யப்பட வேண்டும் என்று ஏற்றுக்கொண்டால், அறிவியல்பூர்வமற்ற மற்றும் அறிவியலுக்கு எதிரான சோதிடம், வாஸ்து, ஹோமியோபதி, பல சாமியார்களின் பிரச்சாரங்கள் மற்றும் மத மூட நம்பிக்கைகளைத் தடைசெய்தாக வேண்டும். இன்னும் சொல்வதென்றால், இறை நம்பிக்கையையே தடைசெய்ய வேண்டிவரும். அறிவியல் உணர்வை உருவாக்குவது என்பது ஒவ்வோர் இந்தியரின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசியல் சட்டத்தின் 51(கி) பிரிவு. ஆனாலும், தனி மனிதர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பெரும் தீங்குகள் விளைவிக்காத வரை அறிவியலுக்கு எதிரான விஷயங்களைத் தடைசெய்ய வேண்டியதில்லை.
தேர்தல் கணிப்புகளை நடத்தும் நிறுவனங்கள் நேர்மையற்று நடந்துகொள்கின்றன என்ற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது. அப்படி நடந்துகொள்கிற நிறுவனங்கள் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து, நாளடைவில் அவை மக்களால் புறக்கணிக்கப்படும். கணிப்புகளை நடத்தும் நிறுவனங்களை அவை பின்பற்றிய ஆய்வுமுறையை முழுமையாக வெளியிட வேண்டும் என்பதையும் தங்கள் நம்பகத்தன்மைக்குக் குறைவு வராத வகையில், முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் அவை நடந்துகொள்ள வேண்டும் என்றும் கட்டாயமாக்குவது இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வழி. மாறாக, தடைசெய்வது அல்ல.
பேச்சுக்காக நேர்மையின்மை என்ற காரணத்துக்காகத் தடைசெய்வது என்றால், பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும், பல தலைவர்களின் பேச்சுகளையும் தடைசெய்ய வேண்டிவரும். ஆனால், அரசு செய்வதில்லை. செய்யவும் கூடாது. காரணம், இந்த விஷயங்களில் முடிவெடுக்க வேண்டியவர்கள் மக்கள்; எந்தக் கட்சி சரி அல்லது தவறு என்பதை மக்கள் தங்கள் பகுத்தறிவுக்கேற்பத் தீர்மானிப்பதைப் போலவே கருத்துக் கணிப்பு விஷயத்திலும் அவர்கள் தீர்மானிப்பர்.
கருத்துக் கணிப்புகளால் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாகக் காட்டப்படும் கட்சிக்குச் சாதகமாக பொதுமக்களின் கருத்தை உருவாக்குவதன் மூலம் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடப்பதற்கு இவை ஊறு விளைவிக்கின்றன என்று சொல்வதன் மூலம், பெரும்பாலான மக்கள் ஆட்டுமந்தைகள் என்று குற்றம்சாட்டுபவர்கள் கருதுவது தெரிகிறது. தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்பது என்ற நிலையை மேற்கொள்பவர்கள் உண்டு. ஆனால், இவர்கள் மிகமிகச் சொற்பம். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் எனப் பல நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் ஒருங்கே கூறுகிறபோது, அந்தக் கட்சிக்குச் சாதகமான சூழல் உருவாக வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால், பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளியிடும் உரிமையையோ அல்லது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு தனி மனிதன் ஊடகங்கள் வாயிலாக அறிவதற்கான உரிமையையோ பறிப்பதற்கு அரசுக்கோ, தேர்தல் ஆணையத்துக்கோ உரிமையில்லை. பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அடிப்படையானவை மட்டுமல்ல, உயிர் வாழ்வதற்கான உரிமையைப் போலவே இவையும் மனிதர்களிடமிருந்து பறிக்கப்பட முடியாத, அவர்களே விரும்பினாலும் விட்டுத்தர முடியாத இயற்கை உரிமைகள் அல்லது பிரிக்கப்பட முடியாத உண்மைகள். கொள்கைகளின் அடிப்படையில் பேசுவது, நடப்பது என்பது இன்றைய இந்திய அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் அறியாத ஒன்று.
ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, எதிர்க் கட்சியாக இருந்தால் அதற்கு எதிர் நிலை என்பதே அரசியல் கட்சிகளின் மாறாத நிலை. ஒருக்கால், இப்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து கருத்துக் கணிப்புகள் அதற்கு எதிராக அமைந்திருந்தால், இப்போது காங்கிரஸ் நடந்துகொள்வதைப் போலவே பா.ஜ.க-வும் நடந்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாகவே, மிகச் சர்வாதிகாரமாக நடந்துகொள்ளும் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதாகக் கோபப்பட்டிருக்கிறார் (சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஆட்சியை விமர்சித்தார் என்பதற்காக ஆசிஷ் நந்தி மீது கிரிமினல் வழக்கு தொடுத்தவர் மோடி). தங்களால் முடியும் என்றால், பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் காங்கிரஸ் தடைசெய்யும் என்று அரசியல் விமர்சகர் மற்றும் தேர்தல் கணிப்பு நிபுணருமான யோகேந்திர யாதவ் குறிப்பிட்டது, காங்கிரஸுக்கு மாற்றாகக் காட்டிக்கொள்ளும் பா.ஜ.க-வுக்குப் பொருந்தும். மக்கள்தான் எப்போதும் தங்கள் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
க.திருநாவுக்கரசு, எழுத்தாளர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
47 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago