நீதித் துறையில் ஊழலே இல்லை என்று யாராவது கூறினால், அவர் நேர்மையான பதிலைச் சொல்லவில்லை என்றே கூறுவேன்!

By அனுராதா ராமன்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தைச் சீரமைப்பது, மருத்துவக் கல்வி நிர்வாகத்தில் குளறுபடிகளைச் சீர்படுத்துவது, நீதித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் உள்ள உறவை எப்படிக் கையாள்வது என்று பல முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்திவருகிறார் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியான ராஜேந்திர மல் லோதா. ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார்.

தேசிய நீதித் துறை நியமன ஆணையம் (என்ஜேஏசி) அமைவதையும், உயர் நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளை நியமிப்பதில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் பொறுப்பு தரப்படுவதையும் நீங்கள் ஏற்கவில்லை; நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு வேண்டும் என்றே கால தாமதத்தை ஏற்படுத்தியதாகச் சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் குற்றஞ்சாட்டினார். இப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு என்ஜேஏசி செல்லாது என்று 2015 அக்டோபரில் தீர்ப்பளித்தது. நீங்கள் அனைவருமே இந்த விவகாரத்தில் நிர்வாகத் துறையுடன் மோதல் போக்கிலேயே இருக்கிறீர்களே ஏன்?

மோதல் போக்கு என்ற வார்த்தை பொருத்தமானதல்ல; நீதித் துறையின் சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் என் கருத்து. நாட்டின் தலைமை நீதிபதியாக நான் பதவியேற்றபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு பதவியில் இருந்தது. பிறகு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவிக்கு வந்தது. அரசு மாறியதால் நீதித் துறையின் சுதந்திரத் தன்மைக்கு ஆபத்து வந்துவிடாமல் காக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் பரிந்துரைத்தவர்களில் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாகச் சர்ச்சை ஏற்பட்டது. சட்டமியற்றும் நாடாளுமன்றம், நீதி வழங்கும் நீதித் துறை, நிர்வாகத்தை நடத்த வேண்டிய அதிகாரவர்க்கம் ஆகிய மூன்றும் அதனதற்கு உரிய வரம்புக்குள் செயல்பட வேண்டும். நிர்வாகத் துறையின் தலையீடுகள் இல்லாமல் நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் டி.எஸ்.தாக்கூர், கேஹர் சிங் ஆகியோரின் கவலையும். எனவே, நாங்கள் ஒரு நிறுவனமாகத்தான் இதில் செயல்பட்டிருக்கிறோமே தவிர, தனி நபர்களாக அல்ல.

நீதித் துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? என்ஜேஏசி மூலம் நீதித் துறையை அதிகாரவர்க்கம் தன்னுடைய பிடிக்குள் கொண்டுவரப் பார்க்கிறது என்கிறீர்களா?

உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங் களுக்கும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் நிர்வாகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையில் எப்போதும் மோதல் இருந்துவந்திருக்கிறது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான முதல் வழக்கு காலத்திலிருந்து தொடர்ந்து 35 ஆண்டுகளாக ‘கொலீஜியம்’ என்ற மூத்த நீதிபதிகள் குழுதான் நியமனங்களை மேற்கொண்டுவருகிறது. நிர்வாகத் துறைக்கு இதில் பங்கு உண்டு. ஆனால், அது வரம்புக்கு உட்பட்டது. 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த நியமன முறைகளை மாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். அதனால், என்ஜேஏசியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த நடைமுறை, அரசியல் சட்டம் நிர்ணயித்துள்ள வரைமுறைகளின்படி இல்லை. எனவே, இது சரியா என்று ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், இது செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆனால், இதில் ஒரு நல்லது நடந்தது. அரசு இதை ஏற்றுக்கொண்டதால், கொலீஜிய முறையே தொடர்கிறது.

உச்ச நீதிமன்றம் வரம்பு மீறுகிறதா? திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம், அதற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்கிறது; இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தை மாற்றி அமைக்கிறது; இந்திய மருத்துவ ஆணையத்தில் தலையிடுகிறது?

தேசிய கீத விவகாரத்தை எடுத்துக்கொண்டால், இதைத் தவிர்த்திருக்கலாம்; உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய விவகாரம் அல்ல இது. அதுவும் இது இடைக்கால உத்தரவுதான், உரிய நேரம் வரும்போது நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும். முக்கியமான அரசியல் சட்டப் பிரச்சினை இல்லாவிட்டால், இம்மாதிரியான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. அரசியல் சட்டப் பின்னணியில் ஆராயப்பட வேண்டிய விஷயம் என்றால் தீர ஆராய்ந்து, அரசியல் சட்டத்துக்கும் அதன் உணர்வுகளுக்கும் ஏற்ற தீர்ப்பை வழங்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் வழிதவறிச் சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைத் தண்டிக்கவும் கிரிக்கெட் நிர்வாகத்தில் அமைப்புரீதியிலான சீர்திருத்தங்களை செய்யவும் என்னுடைய தலைமையிலான குழு பணிக்கப்பட்டது. நல்ல தீர்வு கிட்ட வேண்டும் என்றால் நீதிபதிகள் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு, தங்களுடைய திறமைகளையெல்லாம் பயன்படுத்தி, அனைவருக் கும் பலன் அளிக்கும்படியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காகத்தான் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. கிரிக்கெட்தான் இந்தியாவில் மிகவும் நேசிக்கப்படும் - விவாதிக்கப்படும் விளையாட்டு என்பதால், அதன் நிர்வாக அமைப்பைச் சீர்படுத்துவது முக்கியமாகக் கருதப்பட்டது.

நீதித் துறையின் நடவடிக்கைகள் ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள்; இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) வரம்புக்குள் கொண்டுவரப்படுவது விரும்பத்தக்கது என்றும் பேசியிருக்கிறீர்கள். உச்ச நீதிமன்றத்தையும் அதேபோல தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கான காலம் கனிந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

ஒளிவுமறைவின்றிச் செயல்படுவதுதான் இனி எதிர்கால வழிமுறையாக இருக்க முடியும். தேசிய நீதித் துறை நியமன ஆணைய (என்ஜேஏசி) வழக்கை விசாரித்த அரசியல் சட்ட அமர்வும்கூட, நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் நடைமுறையை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் திருத்தி அமைக்குமாறு உத்தரவிட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை - அதிலும் நீதிபதிகளின் நியமனங்களில் - அவசியம். அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி, வெளிப்படைத்தன்மையுள்ள வழிமுறைகளை கொலீஜியம் ஏற்படுத்த வேண்டும். அதன்படிதான் இனி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மையைப் பல வழிகளில் கடைப்பிடிக்கலாம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட பரிசீலிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். அவர்களுடைய பெயரை ஏற்கவோ, மறுக்கவோ எது காரணமாக இருந்தது என்பதைப் பதிவுசெய்வது வெளிப்படைத்தன்மையில் அடுத்த கட்டமாக இருக்கும். இப்படிப் பல வழிகளில் கொலீஜியம் வெளிப்படையாகச் செயல்பட முடியும். இதில் முக்கியம் எதுவென்றால், இனி வெளிப்படைத் தன்மை நிலவும் என்பதை உறுதிப்படுத்துவதுதான். இதனால், நீதித் துறையில் இருப்பவர்களுக்கும் நீதித் துறைக்கு வெளியில் இருப்பவர்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடிய தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், எதனால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்பட்டோம் என்று புரியாமல் குழம்புகின்றனர்.

உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமான எண்ணிக்கையில் இல்லையே? பெண்கள் அப்பதவிக்கு வர முடியாமல் ஆண்களால் தடுக்கப்படுகின்றனரா?

உயர், உச்ச நீதிமன்றங்களில் பாலின பன்முகத் தன்மை நிலவ வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வுசெய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பின்போது ஆர்.பானுமதியைத் தேர்வுசெய்தேன். பிரச்சினை என்னவென்றால், போதிய எண்ணிக்கையில் தகுதி யுள்ள பெண்கள் இல்லை என்பதுதான். வேறு பல நாடுகளிலும் இதுதான் பிரச்சினை. இங்கிலாந்தின் தலைமை நீதிபதி நியூபெர்ஜர் பிரபுவைச் சந்தித்த போது, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்த தாங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் குறைந்தபட்சம் 30% பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று முயற்சிகளைத் தொடங்கினாலும் அப்படி நியமித்து முடிக்கப் பல ஆண்டுகள் பிடிக்கும். கீழமை நீதிமன்ற சேவையில் அதிக எண்ணிக்கையில் இப்போது பெண்கள் சேர்ந்துவருவதால் இன்னும் 15 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் பெண் நீதிபதிகள் உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவியில் இருப்பார்கள் என்று சொல்ல முடியும். பல மாநிலங்களில் நீதித் துறைச் சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோரில் 40% பெண்களாக இருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்கூட இது 30% ஆக இருக்கிறது. உச்ச, உயர் நீதிமன்றங்களில் 30% பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட நாம் இன்னும் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஆண்டின் 365 நாட்களிலும் நீங்கள் பணியாற்றுவதைப் போலத் தெரிகிறது. உச்ச நீதிமன்றமும் ஆண்டு முழுக்கச் செயல்பட வேண்டும் என்பது உங்களுடைய முக்கியமான ஆசை. இருப்பினும், உங்களுடைய பரிந்துரைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லையே ஏன்?

உச்ச நீதிமன்றம் ஒரு நாள்கூட விடுமுறை இல்லாமல் ஆண்டின் எல்லா நாட்களிலும் பணிபுரிய வேண்டும் என்று விரும்பினேன். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வழக்குகள் புதிதாகச் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. விசாரித்து முடிக்க வேண்டிய வழக்குகள் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் இருக்கின்றன. குடிநீர், மருத்துவமனை, மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் ஒரு நாளின் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் அனைவருக்கும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. நீதித் துறையிலும் இது சாத்தியம்தான். நீதிமன்றம் ஆண்டு முழுக்கச் செயல்படும்போது, மூத்த வழக்கறிஞர்கள் விடுப்பில் ஓய்வெடுத்தாலும் இளைய வழக்கறிஞர்களுக்கு வாதாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கோடை காலத்தில் நீதிமன்றங்களுக்கு ஆறு வாரங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையில் ஹோலிப் பண்டிகை விடுமுறை வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் கோடை விடுமுறை விடப்படுகிறது. பிறகு, கிறிஸ்துமஸ் விடுமுறை வந்துவிடுகிறது. இதுபோக வாரந்தோறும் சனி, ஞாயிறுகள் விடுமுறையாகிவிடுகிறது. ஆண்டு முழுக்க நீதிமன்றங்களைச் செயல்பட வைப்பதற்கான வசதிகள் இப்போது வந்துவிட்டன. நான் எவ்வளவோ முயன்றும் வழக்கறிஞர் சங்கம் இந்த யோசனையை நிராகரித்துவிட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இதர மூத்த நீதிபதிகளும் இந்த யோசனையை நன்கு ஆராய்ந்து, ஆண்டு முழுவதும் நீதிமன்றங்கள் செயல்பட வழிகாண வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பணிகளைச் செய்ய 4 உறுப்பினர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. கிரிக்கெட் வாரியத்தை எப்படிப் பொது அமைப்பாகக் கருத முடியும்?

சங்கங்கள் பதிவுச் சட்டப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிவுசெய்யப்பட்டி ருந்தாலும், பொது அமைப்பு என்ற வகையில்தான் அது தனது பணிகளைச் செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அது இந்தியா சார்பில் விளையாடுவதற்கான தேசிய அணியைத் தேர்வுசெய்கிறது. கிரிக்கெட் தொடர்பான எல்லாவற்றையும் அதுதான் நிர்வகிக்கிறது. பொது அமைப்பைப் போல அது செயல்படும்போது, நீதித் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டதுதான். நீதிமன்றம் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில்தான் உரிய ஆணையைப் பிறப்பித்திருக்கிறது.

கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசு தலையிடுவதற்கு வாய்ப்பாக, அதை பலவீனப்படுத்திவிட்டீர்களா.. ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்று?

கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்த ஒரு சிலருடைய தவறான பிரச்சாரம்தான் இந்தக் குற்றச்சாட்டு. இந்தியா பரந்து விரிந்த பெரிய நாடு. இந்நாட்டு மக்களை இணைக்கும் பல அம்சங்களில் கிரிக்கெட்டுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. தேசிய அணியைத் தேர்வுசெய்யும் வாரியத்தில் பல மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லாமல் இருப்பது சரியல்ல. அதனால்தான் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்று நிர்ணயித்தோம். ஒரே ஆள் பல பதவிகளை வகிப்பதும் சரியல்ல என்பதால், ஒருவருக்கு ஒரு சமயத்தில் ஒரு பதவி மட்டுமே என்று வகுத்தோம். இது ஒரு சிலரின் ஏகபோகத்தைத் தடுப்பதற்காகவும், அனைவரையும் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்க வைக்கவும் செய்யப்பட்டது. நாட்டில் இப்போது 29 மாநிலங்கள் இருக்கின்றன. கிரிக்கெட் வாரியத்தில் 10 மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவமே கிடையாது. மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லாமல் இருப்பது சரியா? மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குத் தலா மூன்று வாக்குகள் இருந்தன. அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கிளப் என்றொரு அமைப்பு, அப்புறம் படைப் பிரிவுகளுக்குப் பிரதிநிதித்துவம். இதில் பத்து பேர்தான் வாரியத்தின் எல்லா குழுக்களிலும் முக்கிய இடங்களைக் கைப்பற்றி வைத்துள்ளனர்.

இந்த அமைப்புகள் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டின் புரவலர்கள் அல்லவா?

உண்மைதான், நாங்கள் அவை வெளியேற வேண்டும் என்று கூறவில்லையே? முழு நேர உறுப்பினர்கள் என்ற நிலையிலிருந்து அவர்களை இணை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொண்டி ருக்கிறோம். அவர்கள் விவாதத்தில் பங்கெடுக்கலாம். ஆனால், வாக்குரிமை கிடையாது. கிரிக்கெட் போர்டின் எல்லா விவகாரங்களிலும் எல்லா மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவாதித்து வாக்களிக்க வேண்டும் என்று வகுத்திருக்கிறோம்.

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான கூட்டை முறிக்க முயற்சி மேற்கொண்டீர்கள். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் உங்களால் ஒதுக்க முடிந்தது. ஆனால், அரசியல்வாதிகள் இன்னமும் உள்ளே இருக்கின்றனரே? இதற்கு என்ன விளக்கம் சொல்வீர்கள்?

அரசியல்வாதிகள் என்பதாலேயே கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து விலக்கிவிட முடியாது. அரசு நிர்வாகத்தில் பதவியில் இருந்தால்தான் விலக்க முடியும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. அரசில் நீங்கள் அதிகாரியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் அந்தப் பணிக்கு உங்களுடைய முழு நேரக் கவனிப்பு அவசியம். கிரிக்கெட் வாரியப் பணிக்கும் நிறைய நேரம் தேவைப்படும். எங்களுக்குத் தரப்பட்ட தரவு ஒன்றில் படித்தோம். கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த என்.கே.பி.சால்வே, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். கிரிக்கெட் வாரியத் தலைவராக இருப்பதால், சால்வேயால் அமைச்சகப் பணிக்கு முழு நேரத்தையும் ஒதுக்க முடிவதில்லை என்று பிரதமரிடமே கூறப்பட்டது. அவர் சால்வேயை அழைத்து, உண்மையா என்று கேட்டார். கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் பங்கேற்பதில் தனக்கு விருப்பம் அதிகம்தான் என்று சால்வே ஒப்புக்கொண்டார். அமைச்சர்களும் அதிகாரிகளும் தாங்கள் வகிக்கும் பதவிக்குரிய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அவர்கள் மூக்கை நுழைக்கக் கூடாது. அரசியல்வாதி யார் என்று தெரியாமல் போய்விடாது. கிரிக்கெட் சங்கத்தில் பதவியில் இருந்தவர்களே தொடர்ந்து நீடித்தால் ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்பதால்தான் பதவி வகிப்பதற்கு மூன்று ஆண்டு கால இடைவெளி அவசியம் என்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதிகளுக்கு கிரிக்கெட்டைப் பற்றியும் அதன் நிர்வாகத்தைப் பற்றியும் என்ன தெரியும் என்ற விமர்சனங்களுக்கு என்ன பதில்?

கிரிக்கெட் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பல மேட்சுகளை நேரில் பார்த்திருக்கிறேன். நான் மாணவனாக இருந்தபோது, என்னுடைய உறவினர் கொல்கத்தாவில் வசித்தார். 1972-73-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது ரசிகர்கள் பலத்த குரலெழுப்பி கேட்டால், சலீம் துரானி உடனே ஒரு சிக்சர் அடிப்பார். கிரிக்கெட் நிர்வாகத்தைச் சீரமைத்ததற்காக ஆண்டின் சிறந்த மனிதராக ‘விஸ்டன்-2017’ என்னைத் தேர்வுசெய்திருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தைச் சீரமைக்க எங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறோம். இந்தப் பணி எப்படிப்பட்டது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கிரிக்கெட் நிர்வாகத்துக்காக நாங்கள் உருவாக்கியுள்ள மாதிரி நிர்வாக முறை, பிற விளையாட்டுகளுக்கும்கூட முன் மாதிரியாகத் திகழ முடியும். எங்களுடைய பரிந்துரைகள் நல்ல நிர்வாகத் துக்கான, அனைவருக்கும் தெரிந்த நடைமுறை கள்தாம். வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்புத் தன்மை, வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டாத நடுநிலைத் தன்மை, ஆதிக்கமற்ற போக்கு ஆகியவை சங்க நிர்வாகத்தில் அவசியம் என்று கூறியிருக்கிறோம்.

நீதித் துறை, மற்றவர்களுக்கு எதைப் பரிந்துரைக்கிறதோ அதைத் தன்னளவில் கடைப்பிடிக்காமல் விலக்கி வைக்கிறது என்ற விமர்சனத்துக்கு உங்களுடைய பதில் என்ன?

இந்தக் குறைகள் நீதித் துறையில் இல்லவே இல்லை என்று கூற மாட்டேன்; நீதித் துறையில் ஊழலே இல்லை என்று யாராவது கூறினால், அவர் நேர்மையான பதிலைச் சொல்லவில்லை என்பேன். நீதித் துறையில், வேண்டியவர்களுக்கு அறவே சலுகை காட்டப்படுவதில்லை என்று யாராவது கூறினால், அவர் நேர்மையற்றவர் என்றே கூறுவேன். ஆனால், பிற அமைப்புகளில் உள்ளதைவிட நீதித் துறையில் இவையெல்லாம் குறைவு என்று கூறுவேன்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,
‘தி இந்து’ ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்