உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், நாட்டின் கவனம் முழுக்க இப்போது உத்தரப் பிரதேசம் நோக்கி தான் இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இரு பிராந்தியக் கட்சிகளுடன் தேசியக் கட்சி களான பாஜக, காங்கிரஸும் அணிவகுத்து நிற்கும் களம் இது. நிலைமை எப்படி இருக்கிறது? ஒரு கழுகுப் பார்வை!
பலம்
2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை வென்றது பாஜக. சட்டமன்றத் தொகுதிகள் என்று இந்த வெற்றியைப் பகுத்தால், கிட்டத்தட்ட 328 தொகுதி களில் வென்றதற்குச் சமம் இந்த வெற்றி. ஆகையால், நமக்குத்தான் வெற்றி எனும் மனநிலையிலேயே இருக் கிறது பாஜக. குறைந்தது 265 இடங்களை வெல்லும் கனவுடன் ‘மிஷன் 265’ எனும் திட்டத்தையும் அறிவித்திருக் கிறது. மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச பிரச்சாரங்களை நேரடியாக மேற்கொண்ட அனுபவம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு உள்ளது என்பது கூடுதல் பலம். எல்லாவற்றுக்கும் மேல் மாநிலத்தில் 22%-க்கும் அதிகமாக உள்ள மேல்தட்டு சாதிகளிடம் பாஜக செல்வாக்கு அதிகம்.
பலவீனம்
உத்தரப் பிரதேசத் தேர்தலையும் மனதில் கொண்டுதான் ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கை’யை மோடி எடுத்தார். ஆனால், அரசாங்கம் எதிர்பார்த்ததற்கு நேர் எதிர் விளைவு களே இப்போது ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் கடும் அவதிக் குள்ளாகியிருப்பது பெரும் பின்னடவை உருவாக்கலாம் என்ற அச்சம் கட்சியினர் இடையே ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்தின் பெரும் ஓட்டு வங்கியான பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ஈர்க்க விரும்புகிறது கட்சி. ஆனால், உத்தரப் பிரதேச பாஜகவில் உயர் சாதியினர் ஆதிக்கம் அதிகம். அவர்களை மீறி பெரிய மாற்றங்கள் எதையும் செய்ய முடியவில்லை. மோடியைத் தாண்டி, மாநில அளவில் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் தலைவர்கள் யாரும் இங்கு இல்லை. தேர்தல் நெருங்க நெருங்க இதன் சுமையை பாஜக உணருகிறது.
வியூகம்
உத்தரப் பிரதேச மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் இரு பகுதியினராக உள்ள முஸ்லிம்கள், தலித்துகளின் வாக்குகள் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மூன்று கட்சிகளாலும் பங்கிடப்படுவதால், மேல்தட்டு சாதிசார் அரசியல் கணக்குகளிலேயே கவனம் செலுத்துகிறது பாஜக. பிராமணர்கள், தாக்கூர்கள், பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளைக் கவரும் முயற்சியில் மோடி இறங்கியிருக்கிறார். எதிர்க்கட்சிகளில், குறிப்பாக சமாஜ்வாதியில் நிலவும் குழப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக முனைப்பு காட்டுகிறது.
பலம்
காங்கிரஸுக்கு இங்கு பொதுவில் 10% வரையிலான வாக்கு வங்கி உண்டு. கடந்த செப்டம்பரில் தேவரியாவிலிருந்து டெல்லி வரை ராகுல் காந்தி நடத்திய விவசாயிகள் பேரணி அக்கட்சிக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது. விவசாயக் கடன் தள்ளுபடி, கிராமப்புறங்களில் மின் வசதி, பயிர்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றுத் தருவது போன்ற வாக்குறுதிகள் மூலம் வாக்காளர்களைக் கவரத் தொடங்கியது காங்கிரஸ். உத்தரப் பிரதேசத்தின் கிராமங்களில் ராகுல் காந்தி நடத்திய ‘கட்டில் சபை’ கூட்டங்கள் கவனம் ஈர்த்தன. அத்துடன், விவசாயக் கடன் தள்ளுபடி கேட்டு காங்கிரஸ் கொண்டுவந்த கோரிக்கை மனுவில் இரண்டு கோடி விவசாயிகள் கையெழுத்திட்டதும் பேச வைத்திருக்கிறது.
பலவீனம்
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் மெல்ல எழுந்திருக்கிறது காங்கிரஸ். ஆனால், ஆட்சியை நோக்கி நகருவதற்கான 30% ஓட்டுகளை ஈர்ப்பது என்பது இன்றைய நிலையில் சாத்தியமே இல்லாதது என்பதை காங்கிரஸ் உணர்ந்திருக்கிறது. மாநிலத்தில் ஈர்க்கத்தக்க தலைமை இல்லை. கட்சியின் அடுத்தடுத்த மட்டங்களிலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை. அரசியலிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வுபெற்றுவிட்ட ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராகக் கூட்டிவந்தும் பலனில்லை. மோடி, நிதிஷ் ஆகியோரின் தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்த பிரசாந்த் கிஷோர் இங்கு காங்கிரஸுக்கு உதவ வந்தார். ஆனால், அவராலும் ஒன்றும் முடியவில்லை. கடைசியில் உத்தராகாண்ட் பக்கம் போய்விட்டார்.
வியூகம்
இப்போது தன்னுடைய வெற்றியைவிட பாஜகவின் வெற்றியைத் தடுப்பதே பிரதான நோக்கம் எனும் வியூகத்துக்கு நகர்ந்திருக்கிறது காங்கிரஸ். மதச்சார்பின்மைச் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் எனும் குரல்கள் ஒலிக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியைவிடவும் ஆளும்கட்சியான சமாஜ்வாதி கட்சியே கூட்டணிக்கு உகந்தது என்று நினைக்கிறார் ராகுல். மாயாவதியைவிட அகிலேஷ் நம்பகத்தன்மை மிக்கவர் என்கிறார்கள் உள்ளூர் காங்கிரஸார். “முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் அகிலேஷ்தான்” என்று ஓரிரு நாட்கள் முன் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான ஷீலா தீட்சித் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பலம்
2012 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பின் கடந்த ஆண்டில் மீண்டெழத் தொடங்கியது பகுஜன் சமாஜ் கட்சி. மாட்டுக்கறி அரசியல், ரோஹித் வெமூலா விவகாரம், உனாவில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததாகக் குற்றம்சாட்டி தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என்று தலித்துகள் எழுச்சிக்கு வித்திட்ட அத்தனை நிகழ்வுகளும் உத்தரப் பிரதேசத்தில் இவற்றுக்கெல்லாம் கடும் எதிர்வினையாற்றிய மாயாவதியின் செல்வாக்கை மீண்டும் உயர்த்தின. உச்சகட்டமாக, மாயாவதியைப் பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் தயாசங்கர் சிங் பேசியதற்குப் பின் பெண்கள் மத்தி யிலும் அவருக்கு ஒரு பரிவு உண்டானது. ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு இயல்பான மாற்று, மாநிலத்தில் இன்றைய சூழலில் அகிலேஷை எதிர்த்து நிற்கவல்ல ஒரே செல்வாக்குள்ள தலைவர் என்கிற பலத்தில் நிற்கிறார் மாயாவதி.
பலவீனம்
தலித்துகளின் கட்சி என்று அழைக்கப்பட்டாலும்கூட, தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் கட்சியில் குறைந்துவருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயல்பான இடஒதுக்கீட்டைக் காட்டிலும் சில இடங்களை மட்டுமே கூடுதலாக மாயாவதி ஒதுக்கியிருப்பது தலித் துகள் மத்தியிலேயே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக் கிறது. உட்கட்சிக் குழப்பங்கள் காரணமாக ஸ்வாமி பிரசாத் மெளரியா, ஆர்.கே.சவுத்ரி போன்ற தலைவர்கள் வெளியேறிவிட்டது ஒரு பின்னடைவு. வேட்பாளர்களுக்கு இடங்களை ஒதுக்குவதற்குப் பணம் வசூலிப்பதாக மாயாவதியின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு மேலும் ஒரு அடி.
வியூகம்
இம்முறை தலித்துகள் + மேல்தட்டு சாதிகள் + முஸ்லிம்கள் வியூகத்தில் கவனம் செலுத்துகிறார் மாயாவதி. சரிபாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளை மேல்தட்டு சாதிகளுக்கு ஒதுக்கி யிருக்கும் மாயாவதி, மறுபாதித் தொகுதிகளை முஸ்லிம் களுக்கும் தலித்துகளுக்கும் என்று பிரித்திருக்கிறார்.
பலம்
வளர்ச்சித் திட்டங்கள் அகிலேஷ் யாதவுக்கு இதுவரை நற்பெயரை வாங்கித் தந்திருக்கின்றன. 2012 தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார் அகிலேஷ். இது இளம் வாக்காளர்களிடம் அவருக்குச் செல்வாக்கை ஏற்படுத்தியது. அத்துடன் ‘சமாஜ்வாதி ஓய்வூதியத் திட்டம்’, பாசன வசதிக்கு இலவசக் குடிநீர், இலவச மின்சாரம், மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை போன்றவை அகிலேஷுக்குப் பலம் சேர்க்கும் வாக்குறுதிகள். கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் நிலவும் பூசல்கள் ஒரு பக்கம் சமாஜ்வாதி கட்சிக்குப் பலவீனமாகப் பார்க்கப்பட்டாலும் மறுபக்கம், தந்தை முலாயம் சிங்கையும் தாண்டி, கட்சியில் தனது செல்வாக்கை, பலத்தை நிரூபித்திருக்கிறார் அகிலேஷ். முதல்வர் வேட்பாளர் என்ற வகையில் முதலிடத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உடையவராக அகிலேஷே இருக்கிறார்.
பலவீனம்
பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இயக்கமாக அறியப்பட்ட கட்சி ஒருகட்டத்தில் யாதவர்கள் ஆதிக்கக் கட்சியாக மாறியிருப்பது. குடும்ப அரசியல் புற்றுநோய்போலக் கட்சியை அரித்துக்கொண்டிருப்பது. பொதுவெளியில் எல்லா அசிங்கங்களையும் அரங்கேற்றிக்கொண்டிருப்பது. “அகிலேஷ் ஆட்சியில் நான்கு முதல்வர்கள்” என்று மக்கள் பேசும் அளவுக்கு ஆட்சிக் காலகட்டம் இருந்தது. அப்பா முலாயம் ஒருபுறம், சித்தி சாதனா ஒருபுறம், சித்தப்பா ஷிவ்பால் ஒருபுறம் என்று அகிலேஷுக்கு எதிராக அரசு இயந்திரத்தை ஆளாளுக்கு இழுத்துக்கொண்டிருந்தார்கள். இதனாலேயே கட்சி உடைந்துவிட்டது. முலாயம், சாதனா, ஷிவ்பால் யாதவ் தரப்பு ஒருபுறமும் அகிலேஷ் மறுபுறமும் எனக் கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிளைக் கேட்டுத் தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறார்கள்.
வியூகம்
கட்சியின் பிளவுக்குப் பின் அகிலேஷ் மீது ஒரு பரிவும் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. “இவ்வளவு நாளாக அவரைச் சீரழித்தவர்கள் ஒழிந்தார்கள்” என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பெரும் தோல்வியைத் தழுவிய மக்களவைத் தேர்தலிலேயே 22% வாக்குகளை வாங்கியிருந்தது கட்சி. காங்கிரஸின் வாக்கு வங்கி சேர்ந்தால், ஆட்சியைத் தக்கவைப்பதற்கான 30% வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார் அகிலேஷ்!
வெ.சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago