ஓராண்டுக்கு முன் என்னுடைய நண்பர் ஒருவர் டெல்லி சென்றிருந்தார். காலை ஒன்பது மணியளவில் அவர் கைபேசியில் அழைத்து, உணர்ச்சிவசப்பட்டுப் பகிர்ந்துகொண்ட செய்தி இன்னமும் எனக்கு அதே உணர்வெழுச்சியுடன் மனதில் இருக்கிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் குடியரசு மாளிகையின் பாதுகாப்பு வீரர்கள் பணி மாற்றிக்கொள்ளும் சடங்கு வெகு விமர்சையாக நடைபெறும். அன்று சனிக்கிழமை. அதை வேடிக்கை பார்க்க நண்பர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது, பத்துப் பதினைந்து பெண்கள் அங்கு கூடி, நாட்டையே உலுக்கிய நிர்பயாவின் வழக்கில் நீதி வழங்கக் கோரி முழக்கமிடத் துவங்கியிருக்கிறார்கள். முதலில் யார் காதிலும் விழாத அளவுக்கு அந்தப் பெண்களின் முழக்கம் இருந்திருக்கிறது. விநாடிகள் கடக்கக் கடக்க… பத்து நூறாகவும் நூறு ஆயிரமாகவும் ஆயிரம் பல ஆயிரங்களாகவும் மாறி, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் அங்கு கூடிவிட்டார்கள். எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று யூகிக்கவே முடியாமல் சில நிமிடங்களுக்குள் அந்தப் பெண்கள் கூட்டம் கூடியிருந்தது.
எந்த அரசியல் தலைவராலும், அமைப்பாலும், அரசாலும் திரட்டப்படாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தன்னெழுச்சியுடன் ஒன்றுதிரண்ட இளம் பெண்களின் கூட்டம் அது. அவர்கள் இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டார்கள். பீய்ச்சியடிக்கப்பட்ட தண்ணீரும் வீசப்பட்ட கண்ணீர் குண்டுகளும் அவர்கள் முன் செயலிழந்து நின்றன. பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான கடுமையான வாசகங்கள்கொண்ட அவர்களின் ஆடைகள், ஊடகக்காரர்களையே மிரட்டின. நீதி கேட்டு ஒன்றுதிரண்ட பெண்களின் பேரெழுச்சியைக் கண்டு அரசு அதிர்ந்தது. வெற்றுக் கூச்சல்களுக்காக வழக்கமாக உள்ளே முடங்கிப்போகும் நாடாளுமன்றம், அன்று ஒரு நியாயமான எழுச்சிக்காக வெளியே முடங்கியது.
நாட்டின் தலைநகரத்தில், போதிய பாதுகாப்பில்லாததால் ஒரு மருத்துவ மாணவி, அவளுடைய நண்பருடன் இருக்கும்போதே வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்பது சர்வதேச அளவில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை உண்டாக்கிய சம்பவம். இச்சம்பவம் தொடர்பாக சரியான முன்னெடுப்புகளைச் செய்த ஊடகங்களும், அப்படியான ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கிய பெண்களின் போராட்டங்களும் இந்த வழக்கை விரைந்து முடிக்க உதவின.
சரியான நீதி என்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடையாது. அதுவும் இழப்பு உயிராக இருக்கும்பட்சத்தில்.
டெல்லி காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் காரைக்காலில் 15 பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. உணவுக்காக வேட்டையாடும் மிருகங்கள்கூட இப்படிப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதில்லை. மனிதர்கள் என்ற போர்வையில் பெண்ணை வேட்டையாடும் மிருகங்களை என்ன செய்வது?
குலைநடுங்கச் செய்யும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், ‘கருத்து கந்தசாமிகள்’ தங்கள் திருவாய் களைத் திறந்து உளறும் வார்த்தைகள் இன்னும் நாற்றமெடுத்தவை. “நிர்பயா, நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் தன் ஆண் நண்பரோடு ஆபாசமாக இருந்ததே அவள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கான காரணம்” என்று ஓர் அறிஞர் தன் தீவிரக் கண்டுபிடிப்பைச் சொல்லியிருந்தார். இப்போது, “காரைக்காலில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு விலை மாது” என்று தன் ஆராய்ச்சிக்கு நடுவே கருத்துத் தெரிவித்த ஒருவர், வந்த எதிர்ப்புகளைப் பார்த்து, அது தன் கருத்தல்ல என திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.
பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போதெல்லாம் அவற்றுக் கான காரணங்களைப் பெண்கள் மேலேயே திருப்புவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அரைகுறை ஆடையோடு இருந்தாள். ஆண் நண்பரோடு ஆபாசமாக இருந்தாள். தனியாக இருந்தாள். அழகாக இருந்தாள். நிறைய ஆண்களோடு தொடர்புடன் இருந்தாள். பாலியல் தொழிலாளி. அவள் தோற்றமே தவறு செய்யத் தூண்டியது… இவையெல்லாம் காரணங்களாகக் கற்பிக்கப்படுபவையே. உண்மையில், அவள் பெண்ணாக இருப்பதே காரணம்.
பாலியல் வன்முறைக்கு ஒரு பெண் உள்ளாக்கப்பட்ட பிறகு, அதன் மீதான சட்ட நடவடிக்கைகளில் எவ்வளவு அரசியல்? பாதிக்கப்பட்ட பெண்ணின் இனம், சாதி; குற்றவாளியின் இனம், சாதி, அரசியல் பின்னணி, காவல் துறை, அதிகாரிகள், குற்றம் நடந்த இடம் இவையெல்லாம்கூடப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதன் பின்னணியாகச் செயல்படுகின்றன. நிர்பயாவுக்கு கொடுமை நடந்த இடம் தலைநகரம். உலக நாடுகளின் கேமரா லென்ஸ்கள் ஒளிரும் இடம், ஊடகங்கள் உருவாக்கிய உணர்வெழுச்சி, மாண வர்கள் ஒன்றுதிரண்டது… எல்லாம் வழக்கை ஓராண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவர உதவின. அதே காலகட்டத்தில், தூத்துக் குடியிலும் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நடந்தது. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால், அது எல்லோருக்கும் ஒரே வேகத்தில் இல்லை.
15 பேர் சேர்ந்து ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது என்ற கொடுமையைக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்த சமூகத்தின் மீது காறி உமிழத் தோன்றவில்லையா? அந்தப் பெண் என்ன தவறு செய்தாள்? அவளின் தோற்றமும் நடவடிக்கையும் ஒழுக்கமும் அவள் சுதந்திரம் சம்பந்தப்பட்டது இல்லையா? ஒரு பெண்ணின் தோற்றமும் ஆடையும் அவள் தனிமையும் ஓர் ஆணை வக்கிரத்தை நோக்கித் தள்ளும் என்றால், அவன் மனிதன்தானா?
ஒரு பெண்ணின் உடலை வன்முறைக்கு உள்ளாக்குவது என்பது, அவள் உடல் மீதான அத்துமீறல். அந்த வன்முறையச் செய்ய - கணவன் உள்பட - எந்த ஓர் ஆணுக்கும் உரிமை இல்லை, அதிகாரம் இல்லை என்று சட்டங்கள் சொல்கின்றன. ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களே பல நேரங்களில் இந்த வன்முறைகளைப் பெண்ணின் தனிப்பட்ட ஒழுக்க விதிகளோடு பொறுத்திப் பார்த்து, பாதிக்கப்பட்ட பெண் தாக்கப்பட்டது நியாயமே என்று வாதிடுவது இன்னும் 1,000 வருடங்களுக்கு இந்தச் சமூகம் திருந்தவே திருந்தாதா என்று அயர்ச்சியைத் தருகிறது. ஒரு பெண் பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்போது, பல நூறு பெண்களின் கால்கள் மீண்டும் வீட்டுக்குள் இழுக்கப்பட்டு, இன்னும் பல கனமான சங்கிலிகளால் பிணைக்கப்படுகின்றன!
- அ.வெண்ணிலா, கட்டுரையாளர், கல்வியாளர். தொடர்புக்கு: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago