தமிழர்கள் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்த பிஜி தீவின் கரும்புத் தோட்டங்களைத் துன்பக்கேணி என்று உருவகப்படுத் தினார் பாரதியார். அதே வார்த்தை களைக் கொண்டு புதுமைப் பித்தனும் இலங்கை தேயிலைத் தோட்டங் களில் தமிழர்கள் படும் துயரங் களை விவரித்தார். வெளி நாட்டுக்குச் சென்று வேலை பார்ப்பவர் களின் நிலையைக் குறிப்பதற்கு இன்றைக்கும்கூட அந்த வார்த்தை பொருந்திப்போவது கொடுமையிலும் கொடுமை.
ஒருவர் வெளிநாடு சென்று வேலை பார்த்தால், அதனால் அவருக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் வருமானம் கிடைக்கிறது. ஒருவேளை, அவர் அந்த முயற்சியில் தோல்வியுற்று நொடித்து நின்றால், அந்தச் சுமையை அவர் மட்டுமே சுமந்தாக வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமே ஏறக்குறைய இதுதான் நிலை என்பதைத் தற்போது வெளிவந்துள்ள 'தமிழ்நாடு இடப்பெயர்ச்சிக் கணக்கெடுப்பு- 2015' எடுத்துக்காட்டியிருக்கிறது. எஸ்.இருதயராஜன், பெர்னார்ட் டி சாமி, எஸ்.சாமுவேல் ஆசிர் ராஜ் ஆகிய மூன்று ஆய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட இந்த மாதிரி கணக்கெடுப்பின் முடிவுகளை ‘எகானமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி’ (மே-27, 2017) வெளியிட்டுள்ளது.
இடம்பெயரும் சமூகம்
கணக்கெடுப்பை மேற்கொண்ட ஆய்வாளர்கள், தமிழ்ச்சமூகத்தை ஓர் இடம்பெயரும் சமூகமாகவேக் கருது கிறார்கள். வேலை தேடி இடம்பெயரும் நீண்டதொரு வரலாறு தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டினர் உலகெங்கும் விரவியுள்ளன, குறிப்பாக 17 நாடுகளில் அதிகளவில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். எனினும் இடம்பெயர்பவர்கள் பற்றிய ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. இந்தவகையில் ‘தமிழ்நாடு இடப்பெயர்ச்சிக் கணக்கெடுப்பு-2015’ ஒரு முன்னோடி முயற்சி. மாதிரிக் கணக்கெடுப்புதான் என்றாலும் அதிலிருந்து கிடைக்கும் அவதானிப்புகளும் எச்சரிக்கைகளும் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொறியியல் பட்டதாரிகள். இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கடுத்த நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடலுழைப்புத் தொழிலாளர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாயிலாக வாய்ப்புகளை அறிந்து, வெளிநாடு செல்பவர்களே அதிகம். அதற்கு அடுத்தபடியாக, முகவர்களின் உதவியோடு வெளிநாடு செல்பவர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். உரிமம் பெறாத முகவர்கள், துணை முகவர்களின் வலைப்பின்னல் ஆகியவற்றால் தொழிலாளர்கள் பாதிப்புக் குள்ளாவதும் தொடரவே செய்கிறது.
விசா கட்டணம் மற்றும் விமான பயணச்சீட்டுச் செலவுகளுக்குச் சில லட்சங்கள் தேவைப்படுகிறது. சேமிப்பு மட்டுமே செலவுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. கடன் வாங்கியே பலரும் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். சென்ற நாட்டில் வேலை இழந்தாலும்கூட, கடனை அடைப்பதற்காகவே எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆளாகிறார்கள்.
வெளிநாட்டு வேலைக்குச் சென்று தமிழ்நாடு திரும்பியவர்களின் எண்ணிக்கையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தினர் அதிகளவில் இருக்கின்றனர். நிலைபெற்ற வறட்சியின் காரணமாகவே வெளிநாடு சென்றவர்கள் அவர்கள். சொந்த ஊருக்குத் திரும்பிவந்தாலும் மீண்டும் அவர்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கோ அல்லது பக்கத்து மாநிலங்களுக்கோ வேலை தேடி செல்லத்தான் வேண்டும். தற்போது காவிரி நதியில் நீர்வரத்து குறைந்த பிறகு, பெரம்பலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் இடம்பெயர ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஈர்க்கும் சிங்கப்பூர்
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களில் ஐந்தில் ஒருவர் சிங்கப்பூருக்குச் செல்கிறார். 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பு ஒரு முக்கியக் காரணம். மேலும் இவ்விரு நாடுகளிலும் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிகம் பேர் செல்கின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி பெற்று தொழில்திறன் அதிகமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, எண்ணெய் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக குறைந்த தொழில்திறன் கொண்ட தொழிலாளர்களே தேவைப்படுகின்றனர்.
கேரளத்தோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்பவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகக் கேரளத்திலிருந்து செல்கின்றனர்.
பெண் தொழிலாளர்கள்
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு களுக்குப் பணிபுரியச் செல்பவர்களில் ஏறக்குறைய 15% பெண்கள். மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் உயர்கல்வி பெற்று அதிக தொழில்திறன் கொண்ட வேலைகளுக்குச் செல்கின்றனர். மற்ற பெண்கள் அரபு மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் வீட்டு வேலைகள் பார்ப்பதற்காகவே செல்கின்றனர்.
பெண் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் திருப்பூர், நாமக்கல், கோயம் புத்தூர் முதலிய தொழிற்சாலைகள் மிகுந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஏற்கெனவே சுமங்கலி திட்டத்தின் கீழ், இளம் வயதிலேயே விசைத்தறி முதலாளிகளால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான அந்தப் பெண்களுக்கு, இத்தகைய கடின வேலைகள் பழகிப்போனவையாக இருக்கின்றன. வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி பெற்றவர்கள்.
ஆனால் அதே நேரத்தில் அவர்களில் ஏறக்குறைய 20% பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்வியறிவின்மையால் வேலை பார்க்கும் வீடுகளில் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும்போது உதவி கோரி இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவர் களுக்கு முறையான பயிற்சியும் விழிப் புணர்வும் அளிக்க வேண்டியது அவசியம்.
கேரளம் ஒரு முன்மாதிரி
வெளிநாட்டில் பணிபுரிந்து, தமிழகம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 லட்சமாக இருக்கலாம் என்று இந்த மாதிரி கணக்கெடுப்பு மதிப்பிடுகிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் அனுபவம், புதிய தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கிறது, சர்வதேசச் சூழலுக்கேற்ப பணிபுரிகிற திறமையையும் வளர்த்தெடுக்கிறது. ஆனால், வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு தமிழகம் திரும்பியவர்களின் அறிவும் அனுபவமும் இங்கு கண்டுகொள்ளப்படுவதும் இல்லை, பயன்படுத்தப்படுவதும் இல்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் வெளிநாட்டு வேலைகளுக்கு அதிகளவில் செல்கின்றனர்.
ஆனால் வெளி நாட்டிலிருந்து திரும்பியவர்கள்அங்கு சங்கங்களாகத் திரண்டிருக் கிறார்கள். அரசியல்ரீதியில் வலுவான வாக்கு வங்கியாகவும் தங்களை வலுப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். வெளி நாட்டில் பணிபுரிந்து திரும்பியவர்கள் சட்டசபை உறுப்பினர்களாகவும் இருக் கிறார்கள் என்கிறது இந்த மாதிரி கணக் கெடுப்பின் ஒப்பீட்டு ஆய்வு. சங்கம் வைத்து அரசியலுக்கு அணிசேர்க்க வேண் டாம், வெளிநாடுகளில் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி வழிகாட்டுவதற்காவது இத்தகைய சங்கங்கள் தமிழ்நாட்டிற்கு அவசியம்.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago