சுமார் 35 ஆண்டுகளாக நீதித் துறையை அரசாங்கங்கள் ஏய்த்துக்கொண்டிருக்கும் வரலாறு இது. ராணுவம் என்பது ஒரு நாட்டில் பகைவரைக் கொல்வதற்காகவே உருவாக்கிப் பேணப்படும் அமைப்பு. நம்மைப் பாதுகாக்க வேறு யாரையோ கொல்வதுதான் அவர்கள் தொழில்.
ஆனால், காவல் துறை என்பதன் வேலை நமது அன்றாட வாழ்க்கை சீராகச் செல்வதற்காக விதிகளைச் செயல்படுத்து வதும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதும், மீறி நடந்தால் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதும்தான். வெளிநாடுகளில் வேறு எந்த அரசு அலுவலரையும்விட காவலர்களுக்கே மக்கள் அதிக மரியாதை தருகின்றனர். நம் சமூகத்திலோ கொலைத் தொழிலில் இருப்போருக்குக் கொடுக்கும் மதிப்பில் கால் பங்குகூட காவல் தொழிலில் இருப்போருக்குத் தரப்படுவதில்லை. இங்குள்ள மாறான நிலைமைக்குக் காரணம் என்ன? அந்நிய ஆட்சிக் காலம் முதல் இன்று வரை, ஆட்சியாளர்களின் அடியாள் படையாக, மக்களை அச்சுறுத்திக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும் படையாகவே காவல் துறை பயன்படுத்தப்பட்டுவருவது.
இது மாற்றப்பட வேண்டும் என்பதும் அப்படி மாற்றுவதற்குக் காவல் துறைக்கும் அதைக் கண்காணிக்கும் அமைப்புக்கும் சுயாட்சி தர வேண்டும். அதைத்தான் திட்டமிட்டு இழுத்தடித்து, ஏமாற்றுகின்றன அரசாங்கங்கள்.
இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை ஆட்சியின்போது நாடெங்கும் நடந்த காவல் துறை அத்துமீறல்கள் அம்பலமானதும், பின்னர் அமைந்த ஜனதா ஆட்சி தேசியக் காவல் ஆணையத்தை நியமித்தது. காவல் துறையைச் சீர்திருத்தவும் புதிய காவல் சட்டம் கொண்டுவரவும் இந்த ஆணையம் கோரப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் இந்த ஆணையம் வெவ்வேறு தலைப்புகளில் விரிவான, ஆழமான எட்டு அறிக்கைகளை அரசுக்குக் கொடுத்தது. ஆனால், 1980ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்ததும், ஆணையம் காலாவதியாயிற்று. அறிக்கைகள் மூலையில் வீசப்பட்டன. 16 வருடங்கள் கழித்து 1996-ல் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் பிரகாஷ் சிங், என்.கே. சிங் இருவரும் “இந்த அறிக்கைகளை அரசு செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இரண்டு வருடங்கள் கழித்து காவல் அதிகாரி ரிபெய்ரோ தலைமையில் ஒரு குழுவை அமைத்தது நீதிமன்றம். அது அறிக்கை கொடுத்தது. மறுபடியும் 2000-ல் பத்மநாபய்யா குழு அமைக்கப்பட்டது. அடுத்து 2006-ல் சொலி சொராப்ஜி குழு அமைக்கப்பட்டது. எல்லாக் குழுக்களும், அறிக்கைகளும் பரிந்துரைகளும் கொடுத்தன. எதையும் அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.
கடைசியில், 2006-ல் உச்ச நீதிமன்றம் ஏழு கட்டளைகளை அறிவித்து அவற்றை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இவைதான் அந்த ஏழு கட்டளைகள் : 1. மாநிலப் பாதுகாப்பு ஆணையம் அமைத்து, அரசு காவல் துறை மீது செல்வாக்கும் நிர்ப்பந்தமும் செலுத்தாமல் பார்க்க வேண்டும். 2. தலைமைப் பதவியான டி.ஜி.பி. நியமனம் வெளிப்படையானதாகவும் பதவிக் காலம் குறைந்தபட்சம் இரு வருடங்களாகவும் இருக்க வேண்டும். 3. எல்லா உயர் அதிகாரிகளும், காவல் நிலைய அதிகாரிகளும் குறைந்தது இரு வருடம் பொறுப்பில் இருக்க வேண்டும். 4. சட்டம் - ஒழுங்கு பொறுப்பையும் குற்றப் புலனாய்வுப் பொறுப்பையும் தனித் தனிப் பிரிவுகளாக்க வேண்டும். 5. காவலர்கள் அனைவரின் நியமனம், இட மாற்றம், பதவி உயர்வு, இதர நடவடிக்கைகள் அனைத்தையும் சுயேச்சையான காவல் நிர்வாக வாரியம் அமைத்து மேற்கொள்ள வேண்டும். 6. காவலர்கள் யார் மீதான புகார்களானாலும், அவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநில, மாவட்ட அளவிலான புகார் ஆணையங்களை ஏற்படுத்த வேண்டும். 7. மாநில அரசுகளைப் போலவே மத்திய அரசு கீழ் இருக்கும் காவல் பிரிவுகளுக்கும் சுயேச்சையான தேசியப் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் - இந்த ஒவ்வொரு கட்டளையையும் எப்படிச் செயல்படுத்த வேண்டும், யாரை உறுப்பினராக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஓரளவு விரிவாகவே சொல்லியிருக்கிறது.
ஒரு வருடம் கழித்து நிலைமை என்னவென்று நீதிமன்றம் கேட்டால், பல மாநிலங்கள் பதிலே தரவில்லை. சில அரசுகள் அவகாசம் கேட்டன. சில அரசுகள் சொன்னபடி செய்துவிட்டதாக, சில நீர்த்துப்போன அரசாணைகளை வெளியிட்டன. நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக குஜராத், தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் மீது மனுதாரர் பிரகாஷ் சிங் வழக்குத் தொடுத்தார். தொடர்ந்து, அரசுகள் கால அவகாசம் கேட்டன. 2008-ல் நீதிமன்றம் மாநில அரசுகள் செய்த நடவடிக்கை என்ன என்று ஆராய கண்காணிப்புக் குழுவை நியமித்தது. அடுத்த ஐந்தாண்டுகளும் கண்காணிப்புக் குழு அறிக்கைகள், மாநில அரசு பதில்கள், ஆட்சேபங்கள் என்று கதை தொடர்கிறது.
தமிழகத்தில் 2008-ல் அன்றைய தி.மு.க. ஆட்சி சட்ட முன்வரைவைப் பேரவையில் கொண்டுவந்தது; துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழு ஆய்வுக்கு 2009ல் அனுப்பப்பட்டது. அடுத்து ஆட்சி மாறியதும் அந்த முன்வரைவு காலாவதியாகி விட்டது.
கடைசியாக, இந்த வருடம் மே மாதம் உச்ச நீதிமன்றம் வழக்குகளை விசாரித்தது. எந்தெந்த மாநிலங்கள் எந்த அளவுக்குத் தன் ஏழு கட்டளைகளைச் செயல்படுத்தியுள்ளன என்பதையும், தன் தீர்ப்புக்குப் பின்னர் போடப்பட்ட சட்டங்கள் செல்லுமா என்றும் நீதிமன்றம் விசாரித்துவருகிறது.
அடுத்த விசாரணை வரவுள்ள நிலையில்தான், தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அவசரச் சட்டத்தின் மூலம் சில கட்டளைகள் தொடர்பான சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. இந்த அவசரச் சட்ட முன்வடிவு சென்ற வாரம் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. பல சட்ட முன்வடிவுகளைப் போல, இதுவும் போதுமான விவாதம் இல்லாமல் பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (அக்டோபர் 30) நிறைவேறிவிடும் வாய்ப்பே அதிகம். இது ஆபத்தானது. மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக் கூடிய காவல் துறை தொடர்பான சீர்திருத்தங்கள் மக்களால் விவாதிக்கப்படவேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் ஏழு கட்டளைகளின் சாராம்சமே, காவல் துறையை அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் பிடியிலி ருந்து விடுவித்து தன்னாட்சி தருவதும், அப்படித் தன்னாட்சி பெறும் அமைப்பைக் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்த தன்னாட்சி பெற்ற இன்னோர் அமைப்பை உருவாக்குவதுமே ஆகும். ஆனால், தமிழக அரசு கொண்டுவரும் சீர்திருத்தச் சட்டம் இந்தக் கோட்பாட்டை நீர்க்கச் செய்கிறது. மாநில காவல் துறைத் தலைவரையோ இதர அதிகாரிகளையோ பதவி நீக்க எழுத்துப்பூர்வ மான நிர்வாகக் காரணம் போதும் என்ற தமிழக அரசின் விதி உச்ச நீதிமன்றக் கட்டளையில் கிடையாது. காவல் துறை நிர்வாக வாரியங்களுக்கும் அமைப்புகளுக்கும் உறுப்பினர்களின் அதிகாரம் என்ன என்பதை அரசே தீர்மானிக்கும் என்கிறது சட்டம். உச்ச நீதிமன்றம் இப்படிச் சொல்லவில்லை. எல்லாவற்றையும் அதிகாரிகளைக்கொண்டே நிரப்பி, காவல் துறை மீதான அரசின், நிர்வாகத்தின் பிடியை அப்படியே வைக்கப்பார்க்கிறது அரசு.
இந்த முக்கியமான பிரச்சினைபற்றி சில மனித உரிமை அமைப்புகள் மட்டுமே ஆய்வுசெய்து, விவாதிக்கின்றன. பெருவாரியான மக்கள் மத்தியில் செயல்படும் ஊடகங்களோ, இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், பஸ்ஸில் இரட்டை இலைச் சின்னம், பொங்கல் பையில் உதயசூரியன் சின்னம் போன்ற விவகாரங்களில் சக்தியை வீணடித்துக்கொண்டிருக்கின்றன. அற்ப விஷயங்களில் நம் சக்தியைத் திசை திருப்பிவிடுவதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம் என்பதை நாம் உணர வேண்டும்!
ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: gnanisankaran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago