கூலிப் படைகளை ஒடுக்குவது தொடர்பாக எல்லா அரசியல்வாதிகளும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். உண்மையில், கூலிப் படைகளை ஒழிக்க வேண்டும் என்றால், அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் இது தொடர்பாக ஆத்ம சுத்தியுடன் உறுதி எடுத்துக்கொள்வதிலிருந்தே அந்த வேலையைத் தொடங்க வேண்டும். ஏனென்றால், பெரும்பாலான கூலிப் படையினர் அரசியல் பின்புலத்துடனேயே செயல்படுகிறார்கள். முன்னாள் கூலிப்படைத் தலைவர்கள் பலரைப் பாதுகாப்பதே அரசியல்வாதிகள் எனும் கவசங்கள்தான்.
சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயக்குமார், மதுரையில் தா.கிருட்டிணன், பொட்டு சுரேஷ், நாகையில் பூண்டி கலைச்செல்வன், நெல்லையில் ஆலடி அருணா, ஆலங்குடியில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், சிவகங்கையில் நகராட்சி சேர்மன் முருகன், திருச்சியில் ராமஜெயம் இவர்கள் எல்லாம் எப்படிக் கொல்லப்பட்டார்கள்? இவர்கள் ஒவ்வொருவரின் கொலைக்கான பின்னணியிலும் கூலிப் படைகளை நோக்கிக் கை நீட்டியது காவல் துறை. அப்படிக் கை நீட்டப்பட்டவர்களில் பலர் மீது பெரிய அளவில் ஒடுக்கல் நடவடிக்கைகள் ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது போக, இவர்களுக்குப் பின்னே இருந்து இயக்கியவர்கள் யார்; அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.
ரௌடி கோஷ்டிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சாவதும், பழிக்குப் பழியாக தீர்த்துக்கட்டிக்கொள்வதும் பழங்கதை. ரியல் எஸ்டேட் மாபியாக்கள் தலைதூக்கிய, 1990-க்குப் பிறகு, கூலிப்படை கொலைகள் பெருக ஆரம்பித்தன.
1996-ல் அவை புதிய உச்சம் தொட்டன. காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1996-ல்தான் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. பணம் விளையாடும் உள்ளாட்சிப் பதவிகளைத் தட்டிப் பறிப்பதில் கூலிப் படைகள் பெரும் பங்கு வகித்தன. அதன் பின்பு இதுவே ஒரு தனித் துறைபோல வளர ஆரம்பித்தது. “இன்றைக்குக் கொலைத் தொழில் என்பது ஒரு தனித் தொழில். முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, உள்ளே கொண்டுவரப்பட்டு, சூட்சுமத்தோடு காய்களை நகர்த்தி, எந்த வளையத்திலும் சிக்காமல் பணம் பண்ணும் தொழில்” என்றார் வழக்கறிஞர் நண்பர்.
கூலிப் படைகளுக்கு எங்கிருந்து ஆட்கள் கிடைக்கிறார்கள், எப்படி அவர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள் என்று அவரிடம் கேட்டேன். “சமூகச் சூழல்தான் முதல் பிரச்சினை. கல்வி கைவிடும்போது, வேலைவாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்காமல் போகிறது. சின்னச் சின்ன குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அப்படியே குழுக்களை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள். குழுவில் ஒரு இளைஞர் புதிதாக இணைகிறார் என்றால், எடுத்த எடுப்பில் அவரை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட மாட்டார்கள். குழுவில் ஓரிருவர் தான் செய்கை (கொலை) செய்பவர்களாக இருப்பார்கள். பொடியன்களை இரண்டொரு சம்பவங்களுக்குத் துணைக்கு அழைத்துப்போவார்கள். ரத்தத்தைப் பார்த்து மிரள்கிறார்களா; கொலைக்கு இயன்றவரை உதவுகிறார்களா; ரகசியம் காக்கிறார்களா என்பதையெல்லாம் கவனிப்பார்கள். அதற்குப் பின்னரே அடுத்தடுத்த நிலை நோக்கி நகர்த்துவார்கள்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைக் கூலிப் படையில் வைத்திருப்பதில் என்ன வசதியென்றால், கொலையே செய்தாலும் சட்டத்தின் கருணைப் பார்வை இவர்களுக்குச் சாதகமாக இருக்கும். கூலிப் படையினருக்குச் சட்டத்தின் ஓட்டைகள் பெரிய பலம். கொலை வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், கொலையாளிகளுக்கு எளிதில் பிணை கிடைத்துவிடும். 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டாலும், ‘விசாரணைதான் முடிந்துவிட்டதே’ என்று சொல்லி நீதிமன்றமே பிணை கொடுத்துவிடும்” என்றார்.
காவல் துறைக்கு இவையெல்லாம் தெரியாதா என்ன? இதற்கேற்ப வியூகங்களை அது அமைத்துக்கொள்ள முடியாதா? அவரிடம் கேட்டேன். சிரித்துக்கொண்டே சொன்னார், “பலருக்குக் காவல் நிலையங்களும், சிறைகளும்தான் குழு சேரும் இடங்களாக அமைகின்றன. எல்லா கூலிக் கும்பல்களுக்கும் பின்னணியில் ஏதோ ஒரு வலுவான அரசியல் நிழல்; கூடவே சாதிசார் அல்லது மதம்சார் நிழல் இரண்டும் இருக்கின்றன. இவற்றை மீறி கூலிப் படைகளை ஒழிக்க ஒரு அரசுக்கு அரசியல் துணிவும் தொலைநோக்குத் திட்டமும் தேவைப்படுகிறது.”
இப்போது தமிழக அரசுக்குத் தேவை இவை இரண்டும்தான்! காவல் துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதைச் செய்ய வேண்டும்!
- தொடர்புக்கு:
shanmugasundaram.kl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago