உத்தர பிரதேச சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி மிகச் சிறப்பானது. 1991-ல் அத்வானி தலைமையில் ராமஜன்ம பூமிக்கான ரத யாத்திரை நடந்தபோது நாடு முழுக்க அது பேசப்பட்டாலும், கட்சிக்கு இந்த அளவுக்கு அலையலையாக வெற்றி கிட்டியதில்லை. அதிலும் உத்தரப் பிரதேசத்தில் கிடைத்துள்ள இப்போதைய வெற்றி குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி எதைக் குறிக்கிறது?
நரேந்திர மோடியின் நாவன்மையும் மக்களிடம் பேசி அவர்களுடைய மனங்களைக் கவரும் ஆற்றலும் துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.
கடந்த நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தபோது, “கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் இதைச் செய்கிறேன். இதனால் சில மாதங்களுக்கு நீங்கள் கடுமையான சித்ரவதையை அனுபவிக்க நேரும். எதிர்காலச் சந்ததிக்கு நல்ல நிர்வாகத்தையும் வளமான எதிர்காலத்தையும் விட்டுச் செல்ல இந்நடவடிக்கை அவசியம்” என்றார். வியாபாரிகளின் கட்சி, மேல் சாதிக்காரர்களின் கட்சி என்று மட்டுமே அறியப்பட்டிருந்த கட்சியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சொந்தம் என்று கொண்டுசென்றிருக்கிறார். இத்தேர்தல் முடிவு சாதிகளைக் கடந்த, வர்க்கங்களைக் கடந்த, மதங்களைக் கடந்த அரசியல் தீர்ப்பாக வெளிப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னுடைய தொகுதியில் கடைசி மூன்று நாட்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக அக்கறை காட்ட வேண்டும் என்று கட்சித் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். பிரதமர் மோடியும் அதை மீறாமல் கடைப்பிடித்தார். வாரணாசியில் கடைசி மூன்று நாட்கள் முகாமிட்டார்.
மக்களிடம் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்ற நயம் தெரிந்தவர் மோடி. அவருடைய அரசியல் தெளிவும் வாக்காளர்களுடன் அவர் கொண்டிருக்கும் நெருக்கமும் மீண்டும் ஒரு முறை சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்த வெற்றி மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேல் சாதிக்காரர்களின் கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட கட்சியை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தங்களுடைய கட்சியாகக் கருதும் அளவுக்கு மாற்றிவிட்டார். கிராமப்புற வாக்காளர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள்களும் அவர்களிடையே அவர் செய்த பிரச்சாரமும்தான் இந்த அபார தேர்தல் வெற்றிக்குப் பின்னணியாகத் திகழ்கின்றன. 2016-ல் கட்சியின் தேசிய நிர்வாகிகளிடையே பேசியபோது, கறுப்புப் பணக்காரர்களைத் தான் வேட்டையாடப் போவதாகக் கூறினார் மோடி. அதற்காக உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிப்பார் என்று கட்சிக்காரர்களே நினைக்கவில்லை. அது மக்களிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும் மேற்கொண்டார்.
கட்சித் தலைவர் அமித் ஷா, நரேந்திர மோடிக்கு ஏற்ப கட்சி நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். உத்தர பிரதேச பாஜக தலைவராக யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான கேசவ பிரசாத் மெளரியாவை நியமித்த அமித் ஷா, இதுவரை போதிய பிரதிநிதித்துவம் கிட்டாத இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் போட்டியிட 150 பேரவைத் தொகுதிகளை ஒதுக்கினார்.
வாக்காளர்களைக் கவர்வதில் மோடியும், கட்சித் தொண்டர்களின் மதிப்பைப் பெற்று நன்கு வேலை வாங்குவதில் அமித் ஷாவும் இணையற்றவர்களாகத் திகழ்கிறார்கள். இவ்விருவருக்கு இடையிலான பரஸ்பர புரிதலும் நட்புணர்வும் வெற்றிக் கூட்டணியாகத் திகழ்கிறது.
நரேந்திர மோடி
இந்தியாவின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் எனும் இடத்தை, உத்தர பிரதேச தேர்தல் வெற்றியின் மூலம் உறுதியாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போலவே மக்களிடம் நேரடியாக உரையாடுவதில் மோடியும் சிறந்தவர். வெகுஜன மக்களின் சிந்தனையைப் பிரதிபலிப்பதிலும் தேர்ந்தவர். வளர்ச்சி, இந்து தேசியவாதம் ஆகியவற்றின் கலவையான தனது அரசியல் பாணி மூலம் வாக்காளர்களை ஈர்த்துவரும் மோடி, பிரிவினை அரசியல் செய்கிறார் என்று தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எதிர்க்கட்சிகளை நோக்கித் திருப்பிவிட்டிருக்கிறார். அரசியலைப் பொறுத்தவரை ஒருவாரம் என்பதே நீண்டகாலம் எனும் நிலையில், 2019 மக்களவைத் தேர்தல் வரை தனது இடத்தை உறுதியாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.
கேப்டன் அமரிந்தர் சிங்
பல பின்னடைவுகளுக்கு மத்தியில் பஞ்சாப் வெற்றி, காங்கிரஸுக்கு நம்பிக்கை வெளிச்சத்தைத் தந்திருக் கிறது. பெரிதாக அலட்டிக்கொள்ளாத தலைவர் எனும் பிம்பத்தை விட்டுவிட்டு, இதுதான் தனது கடைசித் தேர்தல் என்று சொல்லிக் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார் அமரிந்தர் சிங். ஜனவரி இறுதி யில்தான் அவர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்றாலும் இந்தக் குறுகியகால இடைவெளியில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். கட்சித் தலைமைக்கு விசுவாசமான அவர், கட்சிக்குள் இருக்கும் எதிரிகளைத் தூர வைப்பதிலும் வெற்றிகண்டிருக்கிறார்.
அமித் ஷா
2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப் பெரும் வெற்றியைத் தேடித் தந்ததால், கட்சியின் தேசியத் தலைவர் பதவி அமித் ஷாவைத் தேடி வந்தது. நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மட்டும் செல்வாக்கு கொண்ட கட்சியாக பாஜக கருதப்பட்டுவந்த நிலையில், பல்வேறு சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவருக்குப் பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. யாதவ்கள் அல்லாத பிற்படுத்தப்பட்ட மக்கள் பாஜக பின்னே அணிவகுத்திருக்கிறார்கள். உயர் சாதியினரின் வாக்குகளுடன் கணிசமான தலித் மக்களின் வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. இந்த வெற்றி கட்சியின் தேசியத் தலைவராக அவரது இடத்தை மேலும் உறுதிசெய்திருப்பதுடன், அவரது நடவடிக்கைகளுக்கு இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு முழுச் சுதந்திரம் தருவதற்கு மோடிக்கு மேலும் வழிவகுத்திருக்கிறது.
ராகுல் காந்தி
2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களையே வென்று வரலாற்றுத் தோல்வியடைந்த நாள் முதல் இன்றுவரை தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார் ராகுல். பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளில், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோத்து நாடாளுமன்றத்தையே முடக்கினாலும், காங்கிரஸின் செல்வாக்கை வளர்ப்பதில் அவரால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. மாநிலக் கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்த அவரது வியூகம் தோல்வியடைந்துவிட்டது. பஞ்சாபில் கிடைத்திருக்கும் வெற்றி மோசமான சரிவிலிருந்து காங்கிரஸைக் காப்பாற்றியிருந்தாலும், கடைசி வரை கடும் போட்டியைத் தந்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை நிம்மதியிழக்கச் செய்தது மறுக்க முடியாதது.
அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடனான சமாஜ்வாதி கட்சியின் கூட்டணிக் கொள்கை முடிவாக இல்லாமல் தேவையின் அடிப்படையிலேயே அமைந்தது. இந்தக் கூட்டணி முடிவு புத்திசாலித்தனமானதாகத் தோன்றினாலும் இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு அத்தனை நெருக்கமானதாக இல்லை. தனது பிம்பத்தை மறுகட்டமைக்க அகிலேஷ் முயன்றாலும், சமாஜ்வாதி ஆட்சி மீதான அதிருப்தி அதிகம் என்பது தோல்விக்குக் காரணம். அத்துடன் காங்கிரஸ் ஒரு பெரும் சுமையாக இருந்ததும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கட்சிக்குள் தனது செல்வாக்கை உயர்த்திக்கொண்டார். எனினும், அரசியலைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பதைவிட எதிர்க்கட்சியாக இருப்பதுதான் கடினமான விஷயம்.
பிரகாஷ் சிங் பாதல்
அகாலிதளத்தின் மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதலுக்கு இதுவே கடைசி சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலாகக் கூட இருக்கலாம். 90 வயதை நெருங்கிவிட்ட அவர், முதுமை காரணமாக இனிவரும் தேர்தல்களில் போட்டியிட இயலாமல் போகலாம். தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக இருந்த அவருடைய கட்சி படுமோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது. வேண்டியவர்களுக்குச் சலுகை, எல்லா துறைகளிலும் ஊழல், ஆணவம் என்று துணை முதல்வரும் மகனுமான சுக்வீர் சிங் பாதல் செயல்பட்டதால், சிரோமணி அகாலி தளத்துக்கு இப்படியொரு படுதோல்வி வாய்த்துவிட்டது. அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ‘இடையில் வந்து கலைந்துவிடும் மழை மேகமாகவே’ இருக்க வேண்டும், வழக்கம்போல காங்கிரஸ் அதற்கு மாற்று சிரோமணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.) என எதிர்காலத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் மூத்த பாதலின் பிரார்த்தனையாக இருக்க முடியும். (பாதல் என்றால் மேகம்).
அர்விந்த் கேஜ்ரிவால்
நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு மாற்றாக, தேசிய அரசியல் அரங்கில் தலைவராகிவிட வேண்டும் என்று அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட ஆசைக்குப் பெரிய அடி விழுந்திருக்கிறது. பஞ்சாபின் கிராமப்புற சீக்கியர்களையும் புரட்சிகர எண்ணம் கொண்ட இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்க்க அவர் செய்த முயற்சி, அவருக்கே எதிராகத் திரும்பிவிட்டது. இப்போது டெல்லிக்குத் திரும்பி, அடுத்து நடைபெறவிருக்கும் முனிசிபல் தேர்தலில், புத்துணர்வு பெற்ற பாஜகவை எதிர்கொள்ள வேண்டும். ஏழைகளின் நலனுக்காகத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்ற பாஜகவின் பிரச்சாரம் எடுபட்டிருப்பதால், டெல்லியில் அவர்களின் ஆதரவைப் பெற பாஜக தீவிரமாகக் களத்தில் இறங்கும். மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிதான் டெல்லி என்று தெரிந்தே போட்டியிட்டு பதவியைப் பெற்றுவிட்டு, மோடி - துணை நிலை ஆளுநர் ஆகியோரைத் தொடர்ந்து வசைபாடுவதை வாக்காளர்கள் இனியும் ஏற்க மாட்டார்கள் என்பதை கேஜ்ரிவால் உணர வேண்டும்.
ஹரீஷ் ராவத்
சட்டப் பேரவை உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதையடுத்து, முதலமைச்சர் பதவியிலிருந்து ஹரீஷ் ராவத்தை நீக்கினார் உத்தராகண்ட் ஆளுநர். ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு ராவத்தை மீண்டும் பதவியில் அமர்த்தியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உதவிகூட அவருக்கு பொதுத் தேர்தலில் சாதகமான முடிவைப் பெற்றுத் தரவில்லை. அதுமட்டுமின்றி, போட்டியிட்ட இரண்டு பேரவைத் தொகுதிகளிலும் தோற்றுவிட்டார். இவ்வளவுக்குப் பிறகும் உத்தராகண்டில் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்தக்கூடிய தலைவராக ராவத் மட்டுமே திகழ்கிறார்.
மாயாவதி
சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து முஸ்லிம் வாக்குகளைக் கவர்ந்துவிட வேண்டும் என்பதற்காக 99 முஸ்லிம் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கினார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. முஸ்லிம் வாக்குகளை காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணியும் தீவிரமாகக் குறிவைத்தன. இப்படி இருவரும் முஸ்லிம் வாக்குகளைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டது பாஜகவுக்கே சாதகமாக முடிந்துவிட்டது. சட்டம் - ஒழுங்கு நிலைமை அகிலேஷ் ஆட்சியில் சரியாக இல்லாததால், மக்கள் மீண்டும் தன்னிடம்தான் வருவார்கள் என்று மாயாவதி கருதியதும் நடக்கவில்லை.
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago