நான் கடவுளா? நீ கடவுளா?

By செய்திப்பிரிவு

கடவுளும் நானும் ஒரு சாதி ஒரு சாதி...

அந்த கௌரவம் எனக்குச் சரிபாதி சரிபாதி...

அடிச்சாலும் புடிச்சாலும் அவனுக்குத்தானே வலிக்காது

வலிக்காது வலிக்காது

வ...லிக்கா…து

என்னை அடிச்சுப் பாருங்க புடிச்சுப் பாருங்க

நானும் அழுவது கிடையாது…

அழ மாட்டேன் அழ மாட்டேன்

அழ ... மாட்டேன்

- குளத்துமேடு குமார் எனும் ரிக்ஷாக்காரரின் கானா இது.

படிக்கத் தெரியாத மனிதர், எப்படித் தன்னைக் கடவுளாக உணர்ந்தார்?

இரண்டு ஞானிகள் மனிதனைக் கடவுள் என்கிறார்கள். ஒருவர் ஆதிசங்கரர்; இன்னொருவர் விவேகானந்தர். “கடவுளின் ஒரு பகுதிதான் மனிதன்” என்றார் ஆதி சங்கரர். விவேகானந்தர் மனிதனைப் பார்த்து ‘‘நீயே கடவுள்” என்றார். சொல்லும் முறையிலே ஏதோ வித்தியாசம் தெரியுதா? ஆமாம்.

ஆதிசங்கரரின் மனிதனும் விவேகானந்தரின் மனிதனும் வேறு.

ஒருமுறை ஆதிசங்கரர் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தார். எதிரே தீண்டத் தகாதவராகக் கருதப்பட்ட ஒருவர் வந்தார். “தூரப்போ” என அவரை விலக்கினார் சங்கரர். எதிரில் வந்தவரோ “ சங்கரா என்னை விலகச் சொல்கிறாயா ? எனது ஆத்மாவை விலகச் சொல்கிறாயா?” எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு எல்லா மனிதனும் கடவுள் அல்ல. சங்கரர் “நான் பிராணன் அல்ல. ஐந்து வாயுக்கள் அல்ல. ஏழு தாதுக்களும் அல்ல” என்று மனிதனைப் பற்றிய விஞ்ஞானப் புரிதல் முயற்சிகளை மறுத்தார். அறிவும் ஆனந்தமும் கொண்ட சிவமே நான். நான் ஈஸ்வரன். அழிக்க முடியாதவன். துக்கக் கடலை வற்றச் செய்யும் பெருந்தீ நான்” என்று உயர்ந்தபட்சத் தன்னம்பிக்கையிலும் அதன் ஆனந்த மயக்கத்திலும் மூழ்கினார்.

உலகம் கடவுளிடமிருந்து வந்துள்ளது. கடவுள் இல்லை என்றால், உலகமும் இல்லை. உண்மையாக இருப்பதைப் போலத் தோன்றுகிற ஒரு கனவுதான் உலகம் என்று, வெளியில் ஓர் உலகம் என்று இருப்பதையே மறுத்தார் சங்கரர்.

நான் கடவுள். நானே கடவுள் என்றால், அது பாசிஸ அத்வைதம். இந்தக் கருத்தால் பாதிக்கப்பட்ட பலர், இன்று நான் மட்டும்தான் கடவுள் என்று மளிகைக் கடைகளைப் போல மடங்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறார் விவேகானந்தர். ஆதிசங்கரரின் அத்வைதத்துக்குப் பலியான மனிதன், ஆன்மிக அடிமைத்தனத்திலும் அரசியல் அடிமைத்தனத்திலும் அழுந்திக் கிடந்தான். அவனைத் தூக்கி நிறுத்துவதே அவரின் நோக்கம். இந்த மாபெரும் உலகை வெறும் கனவு என்று முடிவுசெய்து, ஆதிசங்கரர் குளோஸ் செய்துவிட்ட ஃபைலை விவேகானந்தர் ஓப்பன் செய்தார். நோய்க்குக் காரணமான கிருமியை வைத்தே தடுப்பு மருந்தைத் தயாரிக்கிற மாதிரி அத்வைதத்தை வைத்தே அவர் தயாரித்த தடுப்பு மருந்துதான் நடைமுறை வேதாந்தம்.

அதை எடுத்துக்கொண்டு, பலவீனப்பட்டு இருக்கிற மனிதனிடம் போனார். “இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்… முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.

எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது” என்று அவன் கேள்விப்படாத ஒன்றைச் சொல்லி சத்தியம் செய்தார்.

அதற்குப் பிறகும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லையோ என நினைத்தாரோ தெரியவில்லை. பலமே வாழ்வு; பலவீனமே மரணம் என்றார்.

பலவீனத்துக்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக, வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். இந்தப் பயிற்சியை விவேகானந்தர் அளித்தார்.

“இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக்கொள்வதற்காக வந்திருக்கிறோம்’’ என்று உவமை சொன்னார். “நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால், பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்” என உற்சாகமூட்டினார். “மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல” என்று சொல்லி தலைவிதி தத்துவத்தை எதிர்த்தார். கடைசியில், அவனைப் பார்த்து “நீயே கடவுள்” என்றார். “நீயும் கடவுள் நானும் கடவுள்” என்றுகூட அவர் சொல்லவில்லை. தன்னுடைய கடவுள் தன்மையைக்கூட அவனுக்காகத் துறக்கத் தயாராக இருந்தாரோ?

தரித்திரத்தில் இருப்போரைத் தரித்திர நாராயணன் எனக் கடவுளாக்கினார். அத்தகைய மனிதர்களுக்குச் சேவை செய்வதே கடவுளுக்குச் செய்யும் வழிபாடு என்று வழிகாட்டினார். இது மனித நேய அத்வைதம். இந்துத்வா அல்ல. இந்து விடுதலை நெறி. இதுதான் விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா மூலம் பாரதியாரை ஆட்கொண்டது. அது தான் குளத்துமேடு குமாருக்குக் காற்றில் கலந்துபோய்விட்டது. அவனது துயரங்களை எல்லாம் தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலை அது தருகிறது. அவன் பாடுகிறான்:

“கடவுளும் நானும் ஒரு சாதி ஒரு சாதி...

அழ மாட்டேன் அழ மாட்டேன்

நான் அழ ...மாட்டேன் .”

நீதிராஜன்,

தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்