நொந்து நூடுல்ஸ் ஆன நூலகங்கள்

“சம்ஸ்கிரிய அறக்கட்டளை” என்ற அமைப்பு சென்ற வாரம் சில அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கியது. அங்கு படிக்கும் பெரும்பான்மையான ஏழை மாணவர்களுடைய வாசிக்கும் திறனை வளர்க்கும் விதமாக Read-a-Way என்ற திட்டத்தையும் துவக்கியது. அறக்கட்டளையின் அறங்காவலர் சந்தியா திட்டத்தை மாணவர்களிடம் விளக்கினார். பள்ளி நூலகங்களுக்கு இலவசமாக தரப்பட்ட இந்த புத்தகங்களை மாணவர்கள் படிப்பதற்கும், வீட்டிற்கு எடுத்துச்செல்லவும், பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது ஒரு நல்ல முயற்சி.

இந்த வருடம் தமிழக அரசு 92 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளது. மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடையவேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே படிக்கிறார்கள். பொது வாசிப்புத் திறன் குறைந்துள்ளது. அறிவுசார் முறையில் தம்மை வளர்த்துக் கொள்ளுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைப்பதில் தேக்கம் உள்ளது. பள்ளி மாணவர்களின் மொழி பேசும் திறனை வளர்க்கக்கூடிய மென் பொருட்கள் மற்றும் ஒளி, ஒலி நாடாக்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனாலும் அவை பள்ளி நூலகங்களுக்கு வழங்கப்படுவதில்லை.

பள்ளி நூலகங்கள் மட்டுமல்ல, பொது நூலகங்களின் செயல்பாடே சந்தி சிரிக்கிறது. மக்களிடம் வாங்கப்படும் சொத்து வரியில் ஒரு பகுதியாக கல்விச் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. நூலகச் சேவைக்கும் தொகை ஒதுக்கப்படுகிறது. நூலகங்களை நிர்வகிக்க நூலக ஆணைக்குழு (Local Library Authority) உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நூலகங்கள், பொது நூலக இயக்குநர் தலைமையில் செயல்படுகின்றன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக, நூலக அறிவியல் பட்டம் பெற்ற அதிகாரி எவரையும் நூலக இயக்குநராக நியமிக்காததைப் பற்றி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தமிழக அரசைக் கண்டித்தது. தகுதியில்லா பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் ஓய்வு பெறுமுன், ஊதிய உயர்வு மற்றும் அதிக ஓய்வூதியம் பெறும் வகையில் தள்ளப்படும் குப்பைக் கிடங்காக இயக்குநர் பதவி மாறி விட்டது.

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கான திறமையுள்ள தேர்வுக் குழுக்களை அமைப்பதில்லை. இயந்திர ரீதியில் உருவாக்கப்படும் காகிதக் கூழ் வெளியீடுகள், அட்டைகளைப் புதுப்பித்து புதுவெளியீடாக பவனி வரும் பழைய புத்தகங்கள்தாம் பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. கடந்த மூன்று வருடத்திற்கான புதுப்புத்தகங்களை வாங்குவதற்கான சீரிய முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. வாங்கப்படும் இதழ்களில் அரசு மையங்கள் பற்றிய விமர்சனங்கள் இருந்தால் அவற்றுக்கு உடனே தடா. “காலச்சுவடு” மாத இதழ் வெளியிட்ட அரசியல் விமர்சனத்திற்காக பொதுநூலகங்களில் அவற்றின் விநியோகம் நிறுத்தப்பட்டது. உயர்நீதிமன்றம் அச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து தடையை நீக்கியது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட அண்ணா நூலகத்தை அழிக்க முனைந்த அரசின் முயற்சி உயர்நீதிமன்ற தடையால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தடை விதித்தால் எமக்கென்ன? புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டு நூலகத்தை பகல் நேர ஓய்வுக்கூடமாக மாற்ற விழையும் அரசின் செயல்பாட்டை புத்தக விரும்பிகள் முறியடிக்க வேண்டும்.

ஒரு மொழியை, ஒரு கலாச்சாரத்தை முறியடிக்க வேண்டுமென்றால் நூலகங்களை மூடுங்கள்! நூல்களைக் கொளுத்துங்கள்!! என்று சொல்வார்கள். சிங்களக் காடையர்களால் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதற்கு உலகமெங்கும் கண்டனக்குரல் எழுப்பப்பட்டது. நாம் அந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்படுமுன் நமது நூலகங்களை முறையாக பேண முற்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்