இந்தப் போராட்டம் அதன் உச்சத்துக்குச் செல்வதற்கு முன்பிருந்த பண்டிகைக் கொண்டாட்ட சூழல் தினம் ஒன்றில், எனது வீட்டிலிருந்து தமுக்கத்துக்குச் செல்ல மதுரையின் முட்டுச் சந்துகள் அனைத்தையும் நான் தரிசிக்க வேண்டியிருந்தது. எல்லாச் சாலைகளையும் தமது கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அடைத்திருந்தனர் அந்தந்தப் பகுதி கிளர்ச்சியாளர்கள். புதிய விளையாட்டின் சுவாரசியத்தில் அவர்கள் இருந்தார்கள். வழி மறிக்கப்பட்டவர்களோ புகார்களின்றி புன்னகையோடு திரும்பிப் போனார்கள். பரிச்சயமற்ற கிளைச் சந்துகள் வழி நான் முன்னேறிக்கொண்டிருக்கையில், ஒரு ஒடுக்கமான சந்தில் எனக்கான பேராபத்து காத்திருந்தது. திடுமென ஐந்தாறு சிறுவர்கள் குறுக்கே. பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்ப் சகிதமாக அவர்கள் நின்றிருந்தார்கள். ஏழெட்டு வயதிருக்கும் அந்தப் பையன், தனது கையிலிருக்கும் ஸ்டெம்பை எனது முகத்துக்கு நேரே நீட்டி ‘‘வீ... வா...ன்ட் ஜ...ல்லிக்கட்டு” என்றான். நான் பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு “மாமாவும் அதுக்குத்தான் போறேன்” என்றேன். பிறகு, அந்தப் போராட்டக் குழு என்னை விடுவித்தது.
தமுக்கம் வந்தால் கரை புரளும் உற்சாகம். அவுட் போஸ்ட் பெரியார் சிலையிலிருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை வரை போராட்டக் களம் நீண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக வந்திருக்கிறார்கள். குழந்தைகளை வைத்துப் போராட்ட ரைம்ஸ் சொல்லச் சொல்லிப் பெருமிதம் கொள்கிறார்கள். தனித்தனியாக ஆங்காங்கே குழுமி தீவிரத்தன்மையோடு மாணவர்கள், இளைஞர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். கலவையாக இருக்கிறது களம். எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடைக்க முடியாத அழகியலோடு அந்தச் சித்திரம் திமிறிக்கொண்டிருக்கிறது.
எப்படிப் புரிந்துகொள்வது?
நான் காவலர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன். குழந்தைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கும் பெற்றோர்களின் முகபாவத்தில் நின்றார்கள். ஒரு போராட்டத்தை இவர்கள் இப்படிச் செல்லமாய் அணுகி நான் பார்த்ததில்லை. அளவு மாறினால் குணம் மாறும் என்று மார்க்ஸைத் துணைக்கழைத்து இதைப் புரிந்துகொள்வதா அல்லது அரசின் குணம் மாறியதால் இந்தப் போராட்ட அளவு மாறியதாகப் புரிந்துகொள்வதா? ஏனெனில், சில நாட்களுக்கு முன்பு ஆதாரமான மக்கள் பிரச்சினைகளைக் கவனப்படுத்தி அரசியலாக ஒன்றுதிரண்ட இளைஞர்களின் மண்டையைப் பிளந்தது இதே சீருடைதான். ஒருவேளை மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான அரசியல் சூதாட்ட மைதானமாக வாடிவாசல் உருக்கொண்டதோ என்றும் தோன்றியது. இந்தப் போராட்டத்தை அரசு ஆதரவுப் போராட்டம் என்று சுருக்குவது நியாயமில்லை என்றும் படுகிறது. பெருந்திரள் மக்களுக்கு எதிராய் பேசுவதற்கு முடியாமல், மத்திய அரசு பூர்ணம் விஸ்வநாதன் போல ஒரு குணச்சித்திர பாத்திரத்தையே எடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும், களத்தில் மோடி வில்லனாகவும் தமிழக பாஜகவினர் காமெடியன்களாகவுமே பார்க்கப்பட்டனர்.
மாணவர்களும் இளைஞர்களும் சன்னதம் வந்ததைப் போல் இரவு பகலாய் நகரின் தெருக்களில் திரிந்தார்கள். இன்னதெனத் துல்லியமாகச் சொல்லத் தெரியாத கோபத்தில், அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதுதான் பாலத்தின்மீது வந்துகொண்டிருந்த விரைவு ரயிலின் குறுக்கே அவர்களை நிறுத்துகிறது. துளி பயமில்லை. இவர்களுக்கு முன் அந்த உலோகக் காளை பணிந்து மண்டியிட்டது.
வடிவமற்ற போராட்டம்
ஒரு குறிப்பிட்ட வடிவமற்ற நீர்மையின் குணங்கொண்ட இந்தப் போராட்டத்தை அவரவர் பாத்திரத்தில் ஊற்றித் தன்னை, தனது கருத்தியலை, தனது அரசியலை அதனோடு அடையாளப்படுத்த முயன்றனர். “காந்தியின் கனவு பைசா சுத்தமாக பைசல் செய்யப்பட்டுவிட்டது’’, “கலாமின் ஆத்மா இனி ஓய்வெடுக்கலாம்”, “தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை உணர்ந்துவிட்டார்கள்”, “இங்கே குவேராக்கள் தயார்; அங்கே புரட்சி தயாரா?’’ - இப்படி அவரவர் சௌகர்யத்துக்கு வாக்கியங்களை உருவாக்கினாலும், உருவாக்கப்படும் எந்த ஒரு வாக்கியத்துக்கும் பிடிகொடுக்காத காளைகளாக அவர்கள் துள்ளிக்கொண்டிருக்கின்றனர்.
புழக்கத்திலிருக்கும் சகல அரசியல் கட்சிகளையும் அமைப்புகளையும் அவர்கள் முற்றாக நிராகரிக்கிறார்கள். ‘‘அரசியல் வேண்டாம்.. எங்களுக்கு அரசியல் வேண்டவே வேண்டாம்’’ என்று அவர்கள் முழங்குவதை தமுக்கத்தில் உறைந்துள்ள தமிழன்னை பதற்றமும் மகிழ்ச்சியும் பொங்கப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மொழிப் போரின் உக்கிரத்தைக் கூட்டி தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என முழங்கி நம்பிக்கையாக திராவிட அரசியல் மலர்ந்த இடம் இது. தமது சமூக நீதிப் போரில் படித்து, இடஒதுக்கீட்டில் வேலைக்குச் சென்று வளர்ந்த தலைமுறையினரின் குழந்தைகளே தங்களை நிராகரிப்பதைத் திராவிடக் கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முல்லைப் பெரியாறு, காவிரி, ஈழம், மீனவர் தாக்குதல் என ஒவ்வொரு பிரச்சினையிலும் தேசியக் கட்சிகளின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்கிவிட்டது. எனவேதான் எல்லோரையும் ஒரே தட்டில் வைத்து நிராகரிக்கிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் இவர்களது ஏமாற்று நாடகத்தைச் சகிப்பார்கள் என்று தமிழன்னை அருகே முறுவலோடு சங்கரதாஸ் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார்.
அரிய நிகழ்வு
தலித் அரசியல் தனது நியாயமான கேள்விகளோடு தள்ளி நிற்கிறது. தொப்புள் கொடி உறவுகளே எனத் தூக்கிக் கொஞ்ச வந்த தமிழ் தேசியர்களை “சீ யு அங்கிள்’’ என்று தள்ளி வைத்துவிட்டார்கள். இவர்களுக்கு என்னதான் வேண்டும்! “இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது’’, ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் இது” என்று வானியல் ஆய்வாளர்கள் சில நிகழ்வுகளுக்காகத் தங்கள் தொலைநோக்கிகளைத் துடைத்து வைத்துக்கொண்டு ஏங்கிக் காத்திருப்பது உண்டு. அந்த நிகழ்வுகளின்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் வசப்படும். அதேபோல் அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் நிகழ்ந்திருக்கிற அரிய நிகழ்வு இது.
இதிலிருந்து புதிய புரிதலுக்கான திறப்புகள் பொது வெளியில் இயங்குபவர்களுக்கு ஏராளம் இருக்கிறது. ஒன்றிரண்டை நாம் கவனப்படுத்தலாம். ஈழத்திலிருந்து கூடங்குளம் வரையிலான அரசுக்கு எதிரான எல்லாப் போராட்டங்களும் அறமற்ற கீழான சதிகளாலும், மூர்க்கமான அரச வன்முறையாலும் முடித்துவைக்கப்படுகின்றன. போராட்டங்கள் பயனற்றவை என்ற நீதிக் கதை, வருந்திப் போராடும் அமைப்புகளுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில்தான் கொண்டாட்டத்தைப் போராட்டத்தோடு இணைத்த இந்த உற்சவத்தை நாம் கவனப்படுத்த வேண்டியுள்ளது. மகிழ்ச்சியும் பயனுமற்ற ஒன்றைப் பெருந்திரள் சமூகம் கைக்கொள்ளாது என்பதை மாற்று அரசியல் சக்திகள் உணர்ந்து தங்களது உம்மணாமூஞ்சிப் போராட்ட வடிவங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
உலகைக் குலுக்கிய போராட்டமாக இதைச் சித்தரித்த நடுத்தர வர்க்க மிகையுணர்ச்சியை இந்தப் போராட்டத்தின் இறுதி நாள் கடுமையாகக் கேலிசெய்துவிட்டது. “பூச்சாண்டிகள் உள்ளே வந்துவிட்டார்கள்; குழந்தைகளே கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்” என்று தான் வேய்ந்த கொட்டகையைத் தானே பிரிக்க வந்தது அரசு. பேச்சைக் கேட்காமல் சற்று முரண்டு செய்த பிள்ளைகளிடம் அது எவ்வாறு நடந்துகொண்டது? தனது குட்டியைக் கவ்வுவதைப் போல் தங்களைப் பாந்தமாகத் தனது பற்களில் கவ்வியிருந்த காவல் பூனைகள், எலியைக் கவ்வும் வன்மத்துக்கு நொடியில் மாறிய அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னும் மீளவேயில்லை. இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஒரு நூறு வாக்கியங்களுக்கு நடுவே, போராட்டம் உண்மையில் அக்கணம்தான் துவங்கியது என்ற உண்மையை யாரேனும் சொல்லத்தான் வேண்டும்.
தெரிந்தோ தெரியாமலோ அசுர பலங்கொண்ட தகவல் தொழில்நுட்ப ஆயுதத்தை அரசு மக்களிடம் கையளித்துவிட்டது. அந்த ஆயுதம் தனக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் தருணங்களில் பதற்றமுறுகிறது. மெரினாவின் இரவை ஸ்மார்ட் போன்களின் வெளிச்சம்தான் கிழித்தது. தனக்குத் தானே தகடு(simcard) வைத்துக்கொண்டதோ அரசு! முதல் நாளில் எழுப்பிய முழக்கங்களுக்கும் பேசிய பேச்சுகளுக்கும் இப்போது அவர்கள் எழுப்புகிற முழக்கங்களுக்கும் அபிப்பிராயங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியலே வேண்டாம் என்கிற வாக்கியம் அரசியல் கட்சிகள் வேண்டாம் என்கிற அளவில் பக்குவப்பட்டிருக்கிறது. வீடு சொல்லித் தராத அரசியலை, கல்வி நிலையங்கள் சொல்லித் தராத சமூகவியலை ஒரு வாரத்துக்குள் தெரு போதித்திருக்கிறது. தெருவின் ருசிக்கு, கூடுகையின் ருசிக்கு இவர்கள் பழகியிருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட தமிழ், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், அடையாளம், கூட்டாட்சி, மாநில உரிமை, ஏகாதிபத்தியம், அந்நிய சதி போன்ற வார்த்தைகள் புழங்கு சொற்களாக அவர்களது நாவில் குடியேறிவிட்டன. இந்த இளைஞர்களின் மூளை மடிப்புகளில் இந்திய தேசிய வாயாடிகளைத் தொந்தரவுசெய்யும் ஒரு பண்பாட்டு மென்பொருள் வெற்றிகரமாக உள்ளீடு செய்யப்பட்டுவிட்டது!
- லிபி ஆரண்யா ‘உபரி வடைகளின் நகரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: ibiaranya@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago