நிலுவையிலுள்ள திட்டங்கள்: சில உண்மைகள்

By எஸ்.வி.ராஜதுரை

பெருநிறுவனங்களுக்கு உழைப்பையும் நிலங்களையும் மலிவாக வழங்குவதே பாஜக-வின் நோக்கம்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-க்கான திருத்த சட்டமுன் வரைவை நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்வதை ஒரு வார காலத்துக்கு தள்ளிவைத்துள்ளது மத்திய அரசாங்கம். இந்த முடிவுக்குப் பல்வேறு காரணங்கள் பல்வேறு தரப்பினரால் சொல்லப்படுகின்றன. நாம் வேறு சில தகவல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

1990-களில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கைகள், 2015 வாக்கில் ஏறத்தாழ 4 கோடி இந்திய மக்கள் வேளாண் துறையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்தன. 2008-ம் ஆண்டு அது வெளியிட்ட ‘வளர்ச்சி குறித்த உலக அளவிலான அறிக்கை’ (வேர்ல்டு டெவலப்மெண்ட் ரிப்போர்ட்), நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், தொழில்துறை வேலைகளுக்குத் தகுதியுடையவர்களாக்குவதற்காகக் கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களை நாடு முழுவதிலும் அமைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. அதாவது, வேளாண் துறைக்கு மிக அதிக மானியங்கள் கொடுக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன், வேளாண் உற்பத்திப் பொருட்களை மிக மலிவான விலைக்கு ஏற்றுமதி செய்யும் ராட்சத அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவுவதும், வளர்முக மற்றும் வறிய நாடுகளின் வேளாண் துறையை நிர்மூலமாக்குவதும்தான் உலக வங்கியின் குறிக்கோள். மேலும், அமெரிக்க மக்களின் உடல்நலத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை என்னும் காரணம் காட்டி பிற நாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்குக் கடுமையான வரம்புகளை விதித்துள்ளது அமெரிக்க அரசாங்கம். இந்தியாவோ, வேளாண் பொருட்களுக்கான சந்தையைத் திறந்து விட்டுள்ளதுடன் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டுவந்த மானியங்களை மிக வேகமாக ரத்துசெய்துவருகிறது.

இந்திய விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர் களையும் கிராமங்களிலிருந்து வெளியேற்றி, அரசாங்கத் தால் கையகப்படுத்தப்படும் நிலங்களில் நிறுவப்படும் கார்ப்பரேட் தொழிலுற்பத்தி மற்றும் பண்ணைகளுக்கு மலிவான உழைப்பை வழங்குவதுதான் மத்திய அரசாங்கம் நிறைவேற்ற முனையும் சட்டத் திருத்தத்தின் நோக்கம். இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப் படாததால், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், இதனால் பரந்துபட்ட இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பொருளாதார நிலைமைபற்றி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதையேதான் கடந்த சில வாரங்களாக பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

நிலுவையில் உள்ள 804 திட்டங்கள்

கிடப்பில் போடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள்தாம் என்ன என்பதை அறிந்துகொள்ள டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயக், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து அண்மையில் சேகரித்த தகவலின்படி, பிப்ரவரி 2015 வரை, பல்வேறு காரணங் களால் இந்தியாவின் 24 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தாமல் போயிருந்த ‘வளர்ச்சித் திட்டங்க’ளின் எண்ணிக்கை 804. (மகாராஷ்டிராவில் 125; குஜராத்தில் 63; மேற்கு வங்காளத்தில் 55, கர்நாடகத்தில் 52, தெலங்கானாவில் 52; மற்றவை நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்தவை). மொத்த 804 திட்டங்களில் 66 (8%) மட்டுமே நிலம் கையகப்படுத்த முடியாததால் நிலுவையில் இருப்பவை. இந்த 66 திட்டங்களில், சமுதாயத்தின் நலிந்த அல்லது வசதி குறைந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களான குடிசைப் பகுதி மக்களுக்கான மாற்று வாழ்விடத் திட்டங்கள், வீட்டு வசதித் திட்டங்கள், பேருந்து நிலையங்கள் அமைத்தல் (இவற்றால் வசதி படைத்த பிரிவினருக்கு எந்தப் பயனும் இல்லை) ஆகியவற்றின் எண்ணிக்கை 11 மட்டுமே (1.36%).

மொத்தம் 804 திட்டங்களில் 78% தனியார் துறைத் திட்டங்களாகும். மத்திய, மாநில அரசாங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் 22% மட்டுமே.

குறைந்தது 145 திட்டங்கள் (18%), ஷாப்பிங் மால்கள், நட்சத்திர ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், மல்டிப்ளெக்ஸுகள், மேட்டுக்குடியினருக்கான சொகுசு வீடுகள், கோல்ஃப் மைதானங்கள், கார் ரேஸ் பாதைகள் ஆகியவற்றை அமைக்கும் திட்டங்கள் ஆகும். 25 திட்டங்கள் புதிய நகரியங்கள் அமைப்பதற் கானவை. இவற்றில் எந்தெந்த சமூகப் பிரிவினர் குடியேறுவார்கள் என்பதை நிதி அமைச்சகத் தகவல்கள் தெளிவுபடுத்தவில்லை.

மொத்த 804 வளர்ச்சித் திட்டங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுதல், புதிய விமான நிலையங்கள் கட்டுதல் அல்லது ஏற்கெனவே இருப்பனவற்றை விரிவுபடுத்துதல், சாலைகள், ரயில் பாதைகள் ஆகியவற்றை விரிவுபடுத்துதல், மருந்து, ஜவுளி, மென்பொருள் உற்பதி நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நிலக்கரி, யுரேனியம் சுரங்கத் திட்டங்கள் ஆகியனவும் அடங்கும்.

153 (19%) திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாததற்கு ‘இதர காரணங்கள்’ உள்ளன என்று கூறும் நிதி அமைச்சகம், 121 திட்டங்கள் (15%) நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

8.8% திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப் பதற்குக் காரணம், சாதகமற்ற சந்தை நிலவரங்கள், நிதி இல்லாமை, திட்ட மேம்பாட்டாளர்களின் (புரமோட்டர்ஸ்) ஆர்வக் குறைவு, கச்சாப் பொருட்கள், மின்சாரம் அல்லது எரிபொருள்கள் வழங்கப்படுவதில் உள்ள சிக்கல்கள் ஆகியனவே. இந்தத் திட்டங்களில் பல, இந்தியாவிலுள்ள பெரும் தொழில், வர்த்தக இல்லங்களுக்கும் ஒருசில வெளிநாட்டு நிறுவனங் களுக்கும் சொந்தமானவை.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் விதிகளின்படியோ மாநில அரசாங்கங்களின் ஒழுங்காற்று விதிகளின்படியோ அனுமதி வழங்கப்படாததால் நிலுவையிலுள்ள திட்டங்கள் 16% மட்டுமே.

நம்பகத்தன்மை இல்லாத தகவல்கள்

இந்த 804 வளர்ச்சித் திட்டங்கள் எத்தனை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன, அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளன, நடைமுறைப்படுத்த முடியாத திட்டங்கள் இன்னும் கூடுதலாக உள்ளனவா என்பன பற்றிய தகவலை நிதி அமைச்சகம் வழங்கவில்லை. மேலும், இந்த 804 திட்டங்கள் பற்றிய தகவல்களும்கூட நிதி அமைச்சகம் தானாகத் திரட்டியவை அல்ல; மாறாக, வர்த்தக, தொழில் சம்பந்தமான தகவலைத் திரட்டும் தனியார் நிறுவனமொன்றால் (சென்ட்டர் ஃபார் மானிட்டரிங் இண்டியன் எகானமி லிமிட்டட்) வழங்கப்பட்டவை. ஏறத்தாழ 35% திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கான காரணங்களை மேற்சொன்ன நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆக, இந்தியாவில் பொருளாதார நிலை பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கை, நம்பகத்தன்மை உறுதி செய்யப் படாத தகவல்களைத்தான் கொண்டிருந்தது.

ஆக, ‘மக்களுக்கான’ வளர்ச்சித் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்தத்துக்கான எதிர்ப்புதான் காரணம் என்று பாஜகவினர் கூறுவதற்கு ஆதாரம் இல்லை.

நலிவடைந்து மூடப்பட்டுள்ள ஆலை வளாகங் களிலுள்ள நிலங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென கடந்த இருபதாண்டுகளாக மத்திய, மாநில அரசாங்கங்களால் ஏற்கெனவே கையகப்படுத்தப் பட்டுப் பயன்படுத்தப்படாமல் உள்ள லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் ‘வளர்ச்சித் திட்டங்களுக்கு’ ஒதுக்காமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்க முனைவது ஏன்?

- எஸ்.வி. ராஜதுரை,

மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், இவரது மொழிபெயர்ப்பில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. தொடர்புக்கு: sagumano@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்