மோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை

By சமஸ்

இந்தச் சுற்றுப்பயணத்தில் நாடு முழுவதும் நான் மக்களிடம் அதிகம் கேட்ட மூன்று வார்த்தைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஒதுக்கலாம் என்று நினைக்கிறேன்: மோடி - வளர்ச்சி - குஜராத்.

வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்

இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?

முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.

நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?

மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?

மோடி செய்ததும் செய்யாததும்

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?

குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டுவந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.

சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

உண்மையின் கதவுகள்

ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணிநகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”

அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”

எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.

அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”

கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ‘மோடி - வளர்ச்சி - குஜராத்' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவ மனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவுகூர்வதில்லை!”

- சமஸ்
தொடர்புக்கு:samas@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்