விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சட்டத்துக்கு உட்பட்டு வளர்வதில்லை
ஒவ்வொரு பொருளின் சந்தையும் அதை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை, நுகர்வோரின் வாங்கும் திறனைப் பொறுத்து அமையும். இந்திய கார் சந்தையில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூபாய் 10 கோடி இருந்தால், அதை வாங்க ஒரு சிலரே இருப்பார். ஆனால், அந்த காரை விற்க வேண்டும் என்று அந்த கார்கள் விற்கும் வரை வேறு எந்த காரையும் விற்கவிடாமல் இருப்பது சாத்தியமா?
திரைப்படத் துறையில் இது சாத்தியம். ‘கபாலி’ போன்ற திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும்போது, அதை ஒரே வாரத்துக்குள் எல்லாத் திரையரங்குகளிலும் வெளியிட்டு, அதிகக் கட்டணம் வசூலித்து லாபம் பார்ப்பது ஒரு வியாபார உத்தியாகக் கையாளப்படுகிறது. ஆனால், தமிழ் சினிமாவின் சந்தை சிறியது. அதில் குறைந்த செலவுகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் வருகின்றன. அவையெல்லாம் ஒன்றோடொன்று போட்டி போட்டு வியாபாரம் செய்ய வேண்டும். இதுதான் தமிழ்த் திரைப்படச் சந்தைக்குச் சிறந்த வழி. பெரிய படம் என்பதாலேயே மற்ற படங்களைத் தவிர்த்துவிட்டு, இதை மட்டும் வியாபாரம் செய்வது சந்தை நியாயத்துக்கு எதிரானது என்று தெரியவில்லையா? ஒவ்வொரு சந்தைக்கும் கட்டுக்கோப்பான சில வரைமுறைகள் உண்டு. ஒரு நடிகரின் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதைக்கூடத் தடுத்த காலங்கள் உண்டு. இது போலவே, ஒரு சிலர் எல்லா திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, எந்தத் திரைப்படம், எப்போது, எதில் வெளிவர வேண்டும் என்று தீர்மானிப்பது திரைப்படச் சந்தையின் வளர்ச்சிக்கு எதிரானது.
ஏன் இந்தச் சிக்கல்?
ஒரு கார் தொழிற்சாலையை ரூ. 500 கோடி செலவில் நிர்மாணித்து, அதன் முதல் மாதத்திலேயே பல நூறு கார்களை விற்று லாபம் பார்க்க முடியாது. அந்த கம்பெனி லாபம் பார்க்கச் சில ஆண்டுகள் ஆகும். ஆனால், திரைப்படத் துறை அவ்வாறு இல்லை. ஒரு திரைப்படத்தின் தயாரிப்புச் செலவு முழுவதையும் ஒரு சில வாரங்களில் சம்பாதிக்க எண்ணுகின்றனர். ஏனெனில், திரைப்படங்கள் வெளியான ஒரு சில நாட்களிலேயே சி.டி.யாகவும், தொலைக்காட்சியிலும் வெளியாகிவிடுகின்றன.
இந்தியாவில் 10 லட்சம் மக்கள்தொகைக்கு 7 திரைகள் உள்ளன. அமெரிக்காவில் 125 திரைகள் உள்ளன. சீனா ஒரு மாதத்துக்கு 18 திரைகளைக் கூட்டிக்கொண்டே இருக்கிறது. ஒரே நேரத்தில், திரையரங்கிலும் சி.டி.யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிடக்கூடிய வகையில்தான் திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் எவ்வளவு வருவாய் வரும் என்று கணக்கிட்டு, அதற்கேற்பத் திரைப்படத் தயாரிப்புச் செலவு இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை மதிக்காத சட்டம் மீறப்படும். ஏனெனில், விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் சட்டத்துக்கு உட்பட்டு வளர்வதில்லை. சட்டம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஆக, ரூ. 10-க்கு ஒரு சி.டி. வாங்கித் திரைப்படம் பார்க்க முடியும் என்றால், அதில் பெறப்படும் லாபத்தைக் கணக்கில் கொண்டுதான் திரைப்பட உற்பத்திச் செலவு இருக்க வேண்டும். இதற்கு மாறாக, சி.டி.யில், தொலைக்காட்சியில் திரைப்படங்களை வெளியிடுவதைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தினாலும், அதை நடைமுறைப் படுத்த முடியாத நிலைதான் உலக அளவிலும் உள்ளது.
சி.டி. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு இசைக் கலைஞர்கள் கிராமபோன் தட்டு விற்பனையில் தங்கள் வருவாயைத் தேடினர். பின்பு, ஆடியோ டேப், சி.டி. வந்த பிறகு, இசை சி.டி. விற்பனையின் ராயல்டி தொகை ஒன்றும் பெரிதாக வருவதில்லை. இசைக் கலைஞர்கள், இசை நிகழ்ச்சிகள் மூலமே வருமானம் தேடும் உத்தியை உலகம் முழுதும் கையாளுகின்றனர்.
சவால்களை எதிர்கொள்வது எப்படி?
தமிழ்த் திரைப்படத் துறை பொருளியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சவால் இது.. ஒரு திரைப்படம் என்பது திரையரங்கில் மட்டும் பார்க்கப்பட வேண்டியது அல்ல. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், சி.டி., இணையதளப் பதிவிறக்கம், இணையதளத்தில் பார்ப்பது, தொலைக்காட்சியில் பார்ப்பது என்று பல விதங்களில் வெளிவருவது அவசியம். எனவே, இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடுவது அல்லது திரையரங்கில் வெளிவந்த சில நாட்களில் மற்ற தளங்களில் வெளியிடுவது பற்றி ஆலோசித்துச் செயல்படுவது அவசியம்.
ஒரு காலத்தில் திரையரங்கம் என்பது சமூக சமன் செய்யும் இடமாகப் பார்க்கப்பட்டது. பணக்காரரும் ஏழையும் ஒரே அரங்கில் திரைப்படம் பார்த்தனர். ஆனால், இன்று பொருளாதார நிலைக்கு ஏற்பப் பலவிதத் திரையரங்குகள் வந்துள்ளன. கட்டணங்களை உயர்த்தி பணக்காரர்கள் மட்டும் பார்க்க வேண்டிய திரைப்படமாக ஒன்றை மாற்றும்போது, சட்ட மீறல்கள் ஏற்படுவதைத் தடுப்பது கடினம். மாறிவரும் தொழில்நுட்பம், உற்பத்திப் பொருளியல் அறிந்து, திரைப்படச் சந்தை குறித்து விவாதித்து வழிநடத்த வேண்டிய கடமை முன்னணி நடிகர்களுக்கும் உண்டு. சந்தையின் போக்கைப் பற்றிய நடுநிலையான விமர்சனத்தை திரைத் துறையில் உள்ள அனைவரும் விவாதிக்க வேண்டும்.
- இராம.சீனுவாசன், பேராசிரியர்.
தொடர்புக்கு: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago